இந்தி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் தனுஷ்

மும்பை: ஆர். பால்கியின் இயக்கத்தில் இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வருகிறார்.

ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ். அவரது முதல் இந்தி படமே ரூ 100 கோடி வசூல் செய்தது. மேலும் அந்த படத்திற்காக தனுஷுக்கு பல விருதுகள் கிடைத்தது.

இந்தி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் தனுஷ்

இந்நிலையில் அவர் ஆர். பால்கியின் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. படத்தில் துணை நடிகராக வரும் தனுஷுக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காதாம். இது தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் ஆகும்.

ராஞ்ஹனாவை போன்று இந்த படத்திலும் தனுஷ் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார் என்று பாலிவுட் எதிர்பார்க்கிறது.

 

ரஜினியை அடுத்து மோடிக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

சென்னை: பிரதமராக பதவியேற்கும் மோடியை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு இசை ஆல்பத்தை தயார் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி "மீண்டும் ஒரு சுதந்திரம்" என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார்.

ரஜினியை அடுத்து மோடிக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில்,

இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் "செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கம் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது தான் வழக்கமாக இருந்தது.

இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்தவர் நரேந்திர மோடி. நாம் இனி சுட்டிக் காட்டக் கூடிய தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி இதற்காகத் தான் இந்த இசை ஆல்பம்.

நான் எந்த ஒரு செயல்களை செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத் தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்றார்.

 

வடிவேலு மீது சுந்தர் சிக்கு அப்படி என்ன கோபமோ?

மறக்கமுடியாத காமெடிக் காட்சிகள் நிறைந்த படங்கள் என ஒரு பட்டியல் போட்டால், அதில் வின்னர், கிரி, தலைநகரம் என சுந்தர் சி இயக்கிய படங்கள் நிச்சயம் இடம்பெறும்.

என்றைக்குப் பார்த்தாலும் சிரிப்பாய் சிரித்து வயிற்றைப் புண்ணாக்கிவிடும் படங்கள் இவை. இவற்றில் காமெடி நாயகனாக கொடி கட்டிப் பறந்தவர் வடிவேலுதான்.

வடிவேலு மீது சுந்தர் சிக்கு அப்படி என்ன கோபமோ?

இந்த இருவரின் கூட்டணியை மீண்டும் எப்போது திரையில் பார்க்க முடியும் என பலரும் ஏங்கிக் கொண்டிருக்க, 'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்கிறார் சுந்தர் சி.

காரணத்தை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாகக் குறிப்பிடத் தவறவில்லை சுந்தர் சி.

அது.. வடிவேலு கேட்கும் அசாதாரண சம்பளம். ஆனால் இப்போது சுந்தருடன் கூட்டணி சேர்ந்திருக்கும் சந்தானமோ, அப்படியெல்லாம் சம்பளம் கேட்பதில்லையாம்.

"என் படங்களில் நடிக்க இதுவரை இந்தத் தொகைதான் வேண்டும் என ஒரு நாளும் அடம் பிடித்ததில்லை சந்தானம். என்ன தருகிறேனோ அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வார். அதற்காக அவர் சம்பளத்தை அநியாயத்துக்கு குறைத்தும் தர மாட்டேன். இந்த பண்புதான், அவருடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் செய்யத் தூண்டுகிறது," என்றார் சுந்தர் சி, சமீபத்தில் நடந்த அரண்மனை பட பிரஸ் மீட்டில்.

வேறு தயாரிப்பாளர் படம் என்றால் சுந்தர் சி இந்த அளவு சம்பளக் கணக்குப் பார்க்க மாட்டார். இப்போது அவர் எடுப்பதெல்லாம் சொந்தப் படமல்லவா.. அதனால்தான் வடிவேலுவின் சம்பளம் பெரிய தடையாக இருக்கிறது, இருவரும் இணைய!

 

கதாநாயகன் மட்டுமல்ல.. காமெடியையும் தொடர்வேன்! - சந்தானம் கற்றுக் கொண்ட பாடம்

சந்தானத்தின் போக்கில் திடீர் மாற்றம்.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்குக் கிடைத்த 'வரவேற்பு', நடித்தால் இனி ஹீரோதான் என்ற அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

ஆம்.. இனி வழக்கம்போல, ஹீரோக்களின் காதலுக்கு துணை போகும் காமெடியன் வேஷத்தையும் தொடரப் போகிறாராம்.

கதாநாயகன் மட்டுமல்ல.. காமெடியையும் தொடர்வேன்! - சந்தானம் கற்றுக் கொண்ட பாடம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆடியோ விழாவில், என்னை நம்பித்தான் நான் இருக்கிறேன். எத்தனை நாள்தான் ஹீரோக்களுக்கு நண்பனாகவே வருவது. இனி நானே ஹீரோவாக நடிக்கப் போகிறேன், என்றெல்லாம் பேசினார்.

ஆனால் படம் வெளியான பிறகு, எதிர்ப்பார்த்த பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுமார்தான் என்று விமர்சனங்கள் வெளியானதால், அவரும் படக்குழுவினரும் ஒவ்வொரு ஊராகப் போய், அரங்குகளில் தோன்றி, மக்களை படம் பார்க்க ஈர்த்து வருகின்றனர்.

சமீபத்தில் கோவையில் திரையரங்குகளுக்கு விசிட் செய்த சந்தானத்திடம், கதாநாயகன் ஆகிவிட்டதால் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தீர்களே... என்று கேட்கப்பட்டது.

உடனே, "கண்டிப்பாக காமெடி கதாபாத்திரத்திலும் நடிப்பேன். எனக்கு ஏற்ற நல்ல கதை வந்தால் அதில் கதாநாயகனாகவும் நடிப்பேன், என்றார்.

மேலும் நான் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் வாழ்த்துச் சொன்னதாகவும் கூறினார்.

 

தமிழில் வருகிறது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆதாமிண்டே மகன் அபூ!

பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மிஸ்வாக் குச்சி, தஸ்பீஹ் மணிகள், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் ஒரு கனவு

தன் 65 வயதான மனைவியை அழைத்துக் கொண்டு எப்படியாவது ஹஜ் பயணம் சென்றுவிட வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.. ஆசை.

தமிழில் வருகிறது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆதாமிண்டே மகன் அபூ!

'இறைவா நான் உன் அடிமை' என இருவரும் பலமுறை உரக்க கூவ வேண்டும். புனித அப்துல்லாஹ்வை போற்றி வழிபட வேண்டும் என்று நெஞ்சிலும், வழிகளிலும் நீண்டும் நிறைந்த ஆசை.

கனவு காணும் அந்த எளிய வியாபாரிக்கு வெளிநாட்டில் நல்ல ஊதியம் பெறும் ஒரு மகன். அவனுக்கோ பெற்றோர்களைப் பற்றிய ஒரு சிந்தனையும் இல்லை.

இந்த முதிய தம்பதிகள் தங்களுக்கு சொந்தமான சிறிய தோட்டத்தின் பலா மரத்தையும், பசுமாட்டையும் அதன் கன்றையும், வீட்டிலிருக்கும் மூன்று பவுன் தோடுகளையும் விற்று ஹஜ் பயண கட்டணத்தை செலுத்துகிறார்கள். ஆனால் ஹஜ் பயணம் அவ்வளவு எளிதில் அமைந்து விடுமா...

எத்தனையோ போராட்டங்கள், பிரச்சனைகள்... இந்த முஸ்லிம் தம்பதிகள் பாஸ்போர்ட் பெற உறுதுணையாக இருக்கிறார் இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாஸ்டர்.

அவரின் உடைமையான பலா மரத்தை பெறுகிறார் ஜான்சன் என்ற கிறிஸ்துவ மர வியாபாரி.

பற்றாக்குறை பணத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்கிறார் ஹ்ஜ் டிராவல்ஸ் மேலாளர்.

இவ்வளவு நடந்தும் ஹஜ் பயணம் நடை பெறாமலேயே போகிறது அந்த தம்பதிகளுக்கு.... இவ்வளவும் நடந்த நிலையில் ஊரில் உள்ள பள்ளி வாசலில் ஹஜ் பெருநாளை வரவேற்கும் தக்பீர் முழங்குகிறது.

தக்பீர் முழக்கம் முதியவர் அபூவின் இதயத்தில் சில உண்மைகளை உரக்கச் சொல்கிறது. இந்த உண்மைகள் எல்லாம் இன்னொரு "குரான்" ஆகவே இருக்கிறது. இப்படி முடிகிறது படம்.

இதைக் காட்சிகளாகப் பார்க்கும் பொழுது திரைப்பட அரங்கமே விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விடுகிறது. படத்துக்குப் பெயர் ஆதாமிண்டே மகன் அபூ.

ஆஸ்கர் விருதுக்கு

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே மலையாள திரைப்படம் இது. சிறந்த திரைப்படத்துக்கான கேரள அரசு விருதையும், இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் ஏற்கனவே பெற்றுவிட்டது ஆதாமிண்டே மகன் அபூ.

சலீம் அகமது

இயக்குநர் சலீம் அகமதுக்கு இது ஒரு புதிய அனுபவக்களம். இந்தப் படத்தை உருவாக்க பத்தாண்டுதவம் இருந்திருக்கிறார். இவர் ஒரு மேடை நாடகக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கியவர். 'டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த அனுபவமே இந்தக் கதைக் களத்தை உருவாக்கித் தந்தது' என்கிறார் சலீம் அகமது.

சலீம் குமார்

கதை நாயகனாக வரும் சலீம் குமார் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார். இவருக்கு ஜோடியாக ஜரினா வஹாப், ஒரு நிஜமான மலபார் முஸ்லீம் குடும்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதை என்றால் மிகையல்ல.. அதற்கு மது அம்பட்டின் சிறப்பான ஒளிப்பதிவும், நேர்த்தியான பின்னணி இசையும் பெரும் துணையாய் நின்றுள்ளன.

அழுத்தமான திரைக்கதை

அபூவாக நடித்த சலீம் குமார், "அச்சனுறங்காத வீடு" "கிராமபோன்", "பெரு மழக்காலம்" போன்ற படங்களில் காட்டிய நடிப்பை எல்லாம், இதில் அபூ வாக வாழ்ந்து மிஞ்சிவிட்டார், ஜரினா வஹாப், கலாபவன்மணி, சூரஜ் வென்ஜராமுடு, முகேஷ், நெடுமுடி வேணு, சசி கலிங்கா, கோபகுமார் போன்ற நட்சத்திரங்களும் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.

மண்ணையும், மண் சார்ந்த உயிரினங்களையும் நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் வலிமையான இந்திய ஒருமைப்பாட்டையும் அனைவர் மனதிலும் அழுந்தச் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

30 விருதுகள்

"அதாமிண்ட மகன் அபூ" திரைப்படத்தை எழுதி இயக்கி இணைத் தயாரிப்பாளராகவும் பங்கெடுத்துள்ளார் இயக்குனர் சலீம் அஹமது. சிறந்த படம். நடிகர், ஒளிப்பதிவு, பின்னணி, இசைக்கு என 4 தேசிய விருதுகளையும், 4 கேரள அரசு விருதுகளையும் பெற்ற இப்படம் பல்வேறு அமைப்புகள் விமர்சகர்களின் விருதுகள் என சுமார் 30 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ்வளவு பெருமைகள், சிறப்புகள் பெற்ற "ஆதாமிண்ட மகன் அபூ" படத்தை "ஆதாமின் மகன் அபூ" என்ற பெயரில் தமிழில் ஹனிபா மூவீஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளனர்.

 

சிவப்புநிற காஞ்சிப்பட்டுப் புடவையில் மணப்பெண்ணாக ஜொலிக்கப்போகும் அமலாபால்

சென்னை: திருமணதினத்தன்று மணப்பெண் அமலாபால் சிவப்புநிற காஞ்சிப்பட்டுடுத்தி இந்துமுறைப்படி தாலி கட்டிக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களில் அடிபடும் லேட்டஸ்ட் செய்தி நடிகை அமலாபால் இயக்குநர் விஜய் திருமணம்தான்

திருமண அழைப்பிதழ் கொடுப்பது தொடங்கி நிச்சயம், மணநாளிற்குத்தேவையான ஆடைகள், நகைகள் வாங்குவதுவரைக்கும் புதுஜோடிகள் பயங்கர பிஸியாக நகரை வலம் வருகின்றனர்.

சிவப்புநிற காஞ்சிப்பட்டுப் புடவையில் மணப்பெண்ணாக ஜொலிக்கப்போகும் அமலாபால்

இவர்களின் திருமணம் 12-ந்தேதி சென்னை சாந்தோமில் உள்ள ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக 7-ந்தேதி கொச்சியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

கிருஸ்துவமுறைப்படி நிச்சயம்

விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதம், எனவே இரண்டு மத முறைப்படியும் திருமண சடங்குகளை நடத்த உள்ளனர். நிச்சயதார்த்தத்தை கிறிஸ்தவ முறையில் நடத்துகிறார்கள்.

வெந்நிற தேவதையாய்

இது குறித்து அமலாபால் தாய் கூறும்போது, கிறிஸ்தவ பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தத்தில் அமலாபால் வெள்ளை நிற கவுன் அணிவார்.

சங்கு கழுத்துக்கு வைர நெக்லஸ்

இந்த கவுனை டிசைனர் அனிதா தயார் செய்துள்ளார். அத்துடன் வைர நெக்லசும் அணிந்து கொள்ள இருக்கிறார்.

சிவப்பு காஞ்சிப்பட்டுப்புடவை

திருமணம் இந்து பாரம்பரிய முறையில் அதுவும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பாணியில் நடைபெறுகிறது. இதில் அமலாபால் சிவப்பு நிற காஞ்சீபுரம் பட்டுபுடவை அணிந்து கொள்கிறார்.

சிறப்பு அலங்காரம்

மணநாளில் தேவதையாய் ஜொலிக்க அமலாபால் தனிகவனம் செலுத்தி வருகிறாராம். ரிசப்சனுக்கு என்னமாதிரியான ஆடை அணிவது எப்படி அலங்காரம் செய்வது என்று மாப்பிள்ளை விஜயுடன் ஆலோசனை செய்து வருகிறாராம்.

தனித்தனி நகைகள்

இந்த மூன்று விசேசத்திற்காகவும் ஆடைகள் நகைகள் வாங்கும் பணியில் அமலாபால் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் திருமண வரவேற்புக்கு என தனித்தனி நகை மற்றும் ஆடைகள் வாங்குகிறார் என்றார் அமலாவின் தாயார்.

அமலாவின் கடைசி படம்

அமலாபால் கைவசம் மிலி என்ற மலையாள படம் மட்டுமே உள்ளது. இதை திருமணத்துக்கு முன்னதாக முடித்து கொடுத்து விடுகிறார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

அழைப்பிதழ் கொடுத்த அமலா

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் அமலாபால், விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

ரஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்..

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

மே 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும் இந்த ஓட்டத்தில் ரஜினியின் ரசிகர்கள் திரளாகப் பங்கெடுத்துள்ளனர்.

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

புவியைக் காக்க மரங்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த தொடர் ஓட்டம் நடக்கிறது.

'மரங்களை நடுவோம்.. இயற்கையைப் பராமரிப்போம்' என்ற கோஷத்தை முழக்கியபடி இந்த ஓட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள்.

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

கோச்சடையான் வரும் மே 23-ம் தேதி உலகெங்கும் 6000 அரங்குகளில் வெளியாகிறது. ஒரு பக்கம் சமூக விழிப்புணர்வு, இன்னொரு பக்கம் படத்துக்கான விளம்பரம் என்பதால், இந்த பசுமைத் தொடர் ஓட்டத்தை சீரியசாக நடத்துகிறது ஈராஸ் நிறுவனம்.

 

ஹாரிஸ் வேணாம்... அனிருத்தை அழைக்கலாம்! - உதயநிதி முடிவு

இசைஞானி இளையராஜா இசை இல்லாவிட்டால் நான் சினிமாவே எடுக்கமாட்டேன் என்று தொண்ணூறுகளில் ஒரு பேட்டி தந்திருந்தார் கமல்ஹாஸன். கட் பண்ணால்... ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான்!

இப்படி பழைய உதாரணங்கள் நிறையவே சொல்லலாம்.

ஹாரிஸ் வேணாம்... அனிருத்தை அழைக்கலாம்! - உதயநிதி முடிவு

இப்போது புதிய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் உதயநிதி - ஹாரிஸ் ஜெயராஜ்!

உதயநிதிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை மீது அத்தனைப் பிரியம். இவர் தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்திருக்கிறார்.

முதல் முதலாக ஹீரோவாக அறிமுகமான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்தப் படத்துக்கும் ஹாரிஸ்தான் இசை. அடுத்த படம் இது கதிர்வேலன் காதல். அந்தப் படம் தொடங்கும் முன்பு, என் படங்களுக்கு ஹாரிஸ்தான் இசை அமைக்க வேண்டும். அதற்காக எத்தனை நாளானும் காத்திருப்பேன் என்றார்.

அடுத்த படமான நண்பேன்டா படத்துக்கும் ஹாரிஸ்தான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், நண்பேன்டா படத்துக்குப் பிறகு அகமது இயக்கும் புதிய படத்தை, தயாரித்து நடிக்கிறார் உதயநிதி. இந்தப் படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லை. இத்தனைக்கும் அகமதுவின் முந்தைய படமான என்றென்றும் புன்னகைக்கு இசை ஹாரிஸ்தான்.

அனிருத்தை இசையமைக்க அழைத்திருக்கிறார்களாம் உதயநிதியும் அகமதுவும். காரணம்... ஹாரிஸ் இசைக்காக காத்திருக்க அசாதாரண பொறுமை வேண்டும் என்பதுதானாம்!

 

'ரஜினி சார்... இதோ என் கால்ஷீட்.. லிங்காவில் நடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்!' - சந்தானம்

சென்னை: லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைகிறார் சந்தானம். இதனை அவரே ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஜினி இருவேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் படம் லிங்கா. ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கிறார்கள். நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்.

'ரஜினி சார்... இதோ என் கால்ஷீட்.. லிங்காவில் நடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்!' - சந்தானம்

இந்தப் படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ளது. படம் இருவேறு காலகட்டங்களில் நடக்கிறது. அதில் மூத்த ரஜினியுடன் காமெடி செய்ய வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என தகவல் வெளியானது. வடிவேலும் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்தார்.

இன்னொரு பக்கம் இளவயது ரஜினியுடன் சந்தானம் நடிப்பார் என்று கூறப்பட்டது. இதனை இப்போது சந்தானமே உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஜினியின் லிங்கா படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி விசாரித்ததில், ரஜினி சார்பில் சந்தானத்திடம் பேசிய போது, 'நிச்சயம் நடிக்கிறேன் சார். அவர் படத்தில் நடிக்க குடுத்து வெச்சிருக்கணுமே," என்றாராம் சந்தானம்.

ஏற்கெனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார் சந்தானம். அந்தப் படத்தில் அவர் நடித்து மூன்று வருடங்களாகிவிட்டன. அன்று வளரும் நடிகராக இருந்த சந்தானம், இன்று தமிழின் முன்னணி நடிகராகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

துபாயில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமாருக்கு சிறப்பு வரவேற்பு!!

துபாய்: துபாயில் கலை நிகழ்ச்சி நடத்த இடம் தேர்வு செய்ய சென்றிருந்த தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழக ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆர்.வி. உதயகுமாருக்கு கடந்த 11ம் தேதி ஞாயிறு மாலை 6:00 மணிக்கு துபாய் ராயல் ஆஸ்காட் ஹோட்டலில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாய் ராயல் ஆஸ்காட் ஹோட்டலில் துபாய் முத்தமிழ்ச் சங்கம் சார்பாக மோகன், அனிஸ், ராமச்சந்திரன், ஷாஃபிக், சிகாமணி, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றனர்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கிழக்கு வாசல், சிங்காரவேலன், எஜமான், சின்னகவுண்டர், ராஜகுமாரன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு பாடல்கள் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.