தயாரிப்பு நிர்வாகி மீது ஹீரோயின் பாலியல் புகார்

மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புது ஹீரோயின் ஜோதி புகார் தெரிவித்துள்ளார்.

ஜெயராம் நடிக்கும் சர் சிபி என்ற மலையாளப் படத்தின் நாயகி ஜோதி கிருஷ்ணா. படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி, பலவந்தமாக அறைக்குள் வந்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பு நிர்வாகி மீது ஹீரோயின் பாலியல் புகார்

இது குறித்து மலையாள நடிகர்கள் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார் ஜோதி. இருவரிடமும் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். தனிப்பட்ட விரோதத்தை, பாலியல் பலாத்காரம் மூலம் தீர்த்துக் கொள்ள ஷாஜி முயன்றார் என்பது அம்பலமானது.

நடந்த சம்பவம் உண்மைதான் என்பது தெரிந்ததும், ஷாஜியை மலையாள சினிமாவிலிருந்து 6 மாதத்துக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தயாரிப்பு நிர்வாகி மீது ஹீரோயின் பாலியல் புகார்

இதற்கான நடவடிக்கையை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கேரள சினிமா தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உன் சமையலறையில்... - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், சினேகா, ஊர்வசி, தேஜூ, சம்யுக்தா, தம்பி ராமய்யா, குமாரவேல்

ஒளிப்பதிவு: ப்ரீதா

இசை: இளையராஜா

தயாரிப்பு: பிரகாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ்

திரைக்கதை, இயக்கம்: பிரகாஷ்ராஜ்

மலையாளத்தில் வந்த சால்ட் அன்ட் பெப்பரை தமிழில் உன் சமையலறையில் ஆக்கியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

திருமணப் பருவத்தைக் கடந்த சாப்பாட்டுப் பிரியரான பிரகாஷ் ராஜும், கிட்டத்தட்ட முதிர்கன்னி நிலையிலிருக்கும் சினேகாவும் ஒரு தவறான தொலைபேசி அழைப்பு மூலம் அறிமுகமாகிறார்கள்.. அதுவும் 'குட்டி தோசை' என்ற சாப்பாட்டு சமாச்சாரத்துக்காகத்தான்.

உன் சமையலறையில்...  - விமர்சனம்  

அடுத்தடுத்த அழைப்புகளில் ரசனைகளைப் பறிமாறிக் கொள்ள ஆரம்பிக்க, மெல்ல காதலில் விழுகிறார்கள். ஒரு நாள் நேரில் பார்க்க முடிவெடுத்து கிளம்பும்போது, இருவரையுமே அந்த வயதுக்கே உரிய தயக்கம் தடுக்கிறது.

பிரகாஷ் ராஜ் தன் உறவுக்காரப் பையன் தேஜஸையும், சினேகா தன்னுடன் தங்கியிருக்கும் இளம்பெண் சம்யுக்தாவையும் தங்களுக்கு பதில் அனுப்பி வைக்கிறார்கள், ஆள் எப்படி என்று பார்த்து வர. போன இடத்தில் இருவருக்கும் பற்றிக் கொள்கிறது. திரும்பி வந்த இருவரும் தங்கள் காதலை வளர்க்கும் ஆர்வத்தில், அனுப்பி வைத்த பிரகாஷ் ராஜ் - சினேகா காதலுக்கு வெந்நீர் ஊற்றிவிடுகிறார்கள்.

உன் சமையலறையில்...  - விமர்சனம்

அதன்பிறகு பிரகாஷ் ராஜும் சினேகாவும் பேசிக் கொள்ளாமல், உள்ளுக்குள் புழுங்குகிறார்கள். மீண்டும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

'இந்தப் பொறப்புதான் ருசி பாத்து சாப்பிடக் கிடைச்சது...' என்ற அருமையான பாடலுடன் ஆரம்பிக்கிறது படம். பாடலும் அதில் காட்டப்படும் உணவுகளும் தயாரிப்பு முறைகளும் இளையராஜாவின் அற்புதமான இசையும், நாவை ஊற வைக்கின்றன. 'படம் முடிந்ததும் ஏதாவது நல்ல ஹோட்டலா பாக்கணும்' என யோசிக்க வைக்கிறது.

ஆனால் அந்த சுவாரஸ்யத்தையும் ருசியான காட்சிகளையும் தொடர்ச்சியாக வைக்கத் தவறியதால் படம் ஆங்காங்கே தடுமாறுவதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை!

பிரகாஷ் ராஜ் மிக இயல்பாக, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். 40ஐத் தாண்டிய பிறகு, காதல், திருமணம் பற்றியெல்லாம் பேசினால் ஒரு மனிதன் எப்படித் தடுமாறுவான் என்பதைப் பார்க்க வேண்டுமென்றால்.. பிரகாஷ் ராஜைப் பார்க்கலாம்.

உன் சமையலறையில்...  - விமர்சனம்

சினேகாவும் அப்படித்தான். அழகு, ஆயாசம், வெறுமை, ஒரு துணைக்காக நெடுநாள் காத்திருப்பதன் வலி... இவற்றையெல்லாம் அத்தனை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு அவருக்கு சிறப்பான வேடம். வெல்டன் சினேகா!

தம்பி ராமய்யா, குமரவேல், தேஜஸ், சம்யுக்தா, ஐஸ்வர்யா (குரல் ரொம்ப கொடூரம்!), அந்த ஆதிவாசி எல்லோருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில்லாமல் பார்த்தால் இந்தப் படத்தில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது. அந்த ப்ரெஞ்சுப் புரட்சிகால போர்வீரன் - காதலி கேக் செய்யும் காட்சிக்கு ராஜா தந்திருக்கும் இசை, நம்மை அந்த காலகட்டத்துக்கே அழைத்துப் போவது போலிருந்தது. க்ளைமாக்ஸ் மொத்தமும் அரைபக்க வசனம்தான் இருக்கும். அந்தக் காட்சிகளை வசனங்களால் கடத்த முடியாது என்பது புரிந்துதான், ராஜாவிடம் ஒப்படைத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். அசத்தியிருக்கிறார் ராஜா!

உன் சமையலறையில்...  - விமர்சனம்

ஐந்து பாடல்களில், இந்த பொறப்புதான், ஈரமாய் ஈரமாய்... இரண்டும் காதை விட்டு அகலாதவை. ஆனால் 'காற்று வெளியில் உனை தேடியழைக்கிறேன்'... பாடலை ராஜா பாடும்போதும், அதுவே பின்னணி இசையாக வரும்போதும் மனசைப் பிசைகிறது.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவு கண்ணுக்கும், நாக்குக்கும் அத்தனை ருசியாக உள்ளது. ஒளிப்பதிவில் என்னய்யா ருசி என்பவர்கள் அந்த காட்சிகளை ஒரு முறை பார்க்க வேண்டும்.

உன் சமையலறையில்...  - விமர்சனம்

இயக்குநராக பிரகாஷ் ராஜ் கோட்டை விட்டது, அந்த ஆதிவாசி தொடர்பான காட்சிகள் மற்றும் சினேகாவுக்கு இந்திரா காந்தி, எம்ஜிஆர் குரல்களைப் போட்டுக் காட்டும் இடங்கள்... தேஜஸுக்கும் சம்யுக்தாவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மெயின் காதலை டல்லடிக்க வைப்பது... ஆகிய இடங்களில்தான். தகவல் தொடர்பு கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில், சினேகா - பிரகாஷ்ராஜ் மட்டும் 'காதல் கோட்டை' ரேஞ்சுக்கு ஏன் காதலிக்க வேண்டும் என அரங்கில் எழும் கிண்டலை ஒதுக்குவதற்கில்லை.. ஒரு 'செல்ஃபி' போதுமே இந்த சிக்கலைத் தீர்க்க!

நிற்க... ஒரு படைப்பு என்று வந்தால் குறைகள் இல்லாமல் இருக்குமா.. ஆனால் எப்போதும் நல்ல படம்... அதையும் விரசமோ வன்முறையோ இல்லாமல்தான் தருவேன் எனப் பிடிவாதமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் என்ற கலைஞனை கைவிட்டுவிடக் கூடாதல்லவா... இந்தப் படத்தை பார்த்து ருசியுங்கள், குறைகளை, பாயசத்தில் நிரடும் ஏலக்காய் மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள்!

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்!

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அசோக்குமார் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் உடல் நலம்பெற பிரார்த்திக்குமாறு அவர் மகன் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, முந்தானை முடிச்சு, வெற்றி விழா, நடிகன், ஜீன்ஸ் உள்பட ஏராளமான படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் அசோக்குமார். இந்தி, தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்!

தம்பிக்கு ஒரு பாட்டு, அன்று பெய்த மழையில், காமாக்னி, அபிநந்தனா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக இவர் உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் அசோக்குமார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார்... பிரார்த்திக்கக் கோரும் மகன்!

அவர் உடல்நிலை விரைந்து குணமடைய பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு திரையுலகினரையும் நண்பர்களையும் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் மகன் ஆகாஷ்.

"என் தந்தைக்கு சினிமாதான் முதல் குடும்பம், பிறகுதான் நாங்கள் எல்லாம். எனவே அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்..." என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார் ஆகாஷ்.

 

பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரசிகர்கள் ரெடி.. விஜய் தயாரா?

வரும் 22ஆம் தேதி விஜக்கு 40வது பிறந்தநாள். இந்த ஆண்டு கொண்டாடுவாரா அல்லது கடந்த ஆண்டைப் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்ற ஆண்டு விஜய் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்தனர் ரசிகர்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் எல்லாம் அமைத்தார்கள். ஆனால் பல அரசியல் காரணங்களால், ஏற்பாடு செய்த பிரம்மாண்ட கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டம்.. ரசிகர்கள் ரெடி.. விஜய் தயாரா?

கடுப்பான விஜய், தன் பிறந்தநாளன்று வழக்கமாக செய்யும் எந்த நற்பணிகளையும் செய்யாமல், அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஜில்லா ஷூட்டிங்கில் அனைவருக்கும் பிரியாணி பரிமாறிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து வந்த 'தலைவா' படப்பிரச்சனையாலும் பல மன உலைச்சல்களை அனுபவித்தார் விஜய். ஆனால், இந்த ஆண்டு அவர் ரசிகர்களுக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது. இப்போதே தோரணங்கள், மன்ற கொடிகள் என அசத்தத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். விஜய்யும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன சந்தோஷத்தில் இருக்கிறார்.

நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சியில் விஜய் தன் மனைவியோடு கலந்துகொண்டார்.

ரசிகர்கள் நடத்துக்கிற பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதான் அஜீத் - கவுதம் மேனன் படத்தின் கதையாமே!

அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் படத்தின் கதை இணைய தளத்தில் கசிந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அந்தக் கதை:

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்கும் அஜீத் மனைவி த்ரிஷாவை ரவுடிகள் வழிமறித்து கொன்றுவிடுகிறார்களாம். பிணத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிவிட, அந்தக் கொலை தமிழகத்தையே பரபரப்பாக்குகிறது.

இதான் அஜீத் - கவுதம் மேனன் படத்தின் கதையாமே!

கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பு காவல் துறை உயர் அதிகாரி அஜீத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு அனுஷ்கா உதவி செய்கிறார்.

இந்தக் கொலையின் பின்னணியில் பெரும் சதி இருப்பதும், பெரிய மனிதர்கள் பலர் இருப்பதும் தெரிய வருகிறது. எந்த நெருக்கடிக்கும் தலைவணங்காமல், அந்தப் பெரிய மனிதர்களை கூண்டிலேற்றுகிறாராம் அஜீத்.

-இதுதான் படத்தின் கதை என்கிறார்கள். விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் படக்குழுவினர். வெளியிட்டது யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறதாம்.

 

சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 58வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தப் படம் கற்பனை சரித்திரப் பின்னணியில் உருவாகிறது என்பது முதல் தகவல். அந்த வகையில் விஜய் நடிக்கும் முதல் சரித்திரப் படம் இது எனலாம்.

சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. இதில் ஒரு சமஸ்தானத்தின் ராணியாக வருகிறார் ஸ்ரீதேவி. அந்த சமஸ்தானம் ஆபத்தில் சிக்கும் தருணத்தில், காப்பாற்றும் வீரனாக வருகிறாராம் விஜய்.

இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பு நான் ஈ புகழ் கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில், அதாவது விஜய்யின் குருவாக நடிக்கிறாராம்.

நாயகியாக தீபிகா படுகோன், ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. யாரும் உறுதியாகவில்லை. இப்போது ஹன்சிகா நடிப்பார் என்று தெரிகிறது. ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார் ஹன்சிகா.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியன் கேமராவைக் கையாள்கிறார்.

படம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.

 

விளையாட்டாத்தான் சிம்புவை அப்படிச் சொன்னேன் - சவுந்தர்யா

கோச்சடையான் படம் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த நடிகர் சிம்பு, 'படம் நல்லாருக்கு.. தலைவர் பவர்புல்லா திரும்பியிருக்கார். ஆனால் கிராபிக்ஸ் சரியில்லை," என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக விஜய் டிவி நிகழ்ச்சியில், சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என சவுந்தர்யாவிடம் கேட்டபோது, 'சிம்பு, நீ (ங்க) பாடறதை நிறுத்திடேன்," என்று பதில் கருத்து கூறியிருந்தார்.

விளையாட்டாத்தான் சிம்புவை அப்படிச் சொன்னேன் - சவுந்தர்யா

இதற்கு சிம்பு ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட, அதற்கு சிம்பு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு, என்று கூறியிருந்தார்.

பின்னர் சவுந்தர்யா அளித்த விளக்கத்தில், 'சிம்புவை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். நான் விளையாட்டாகத்தான் சொன்னேன். எங்களுக்குள் எந்த மனக் கஷ்டமும் இல்லை,' என்று கூறியுள்ளார்.

 

காளி... கபாலி.. இப்போ மெட்ராஸ்!

கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு மெட்ராஸ் என்பது உறுதியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் நடக்கிறது.

பிரியாணி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் இந்த மெட்ராஸ்.

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு காளி என்று தலைப்பிட்டனர். ஆனால் அந்தத் தலைப்பு மிகவும் உக்கிரமாக இருப்பதாக, கார்த்தி குடும்பத்தினர் கருதியதால், கபாலி என்ற தலைப்பை இயக்குநர் பரிந்துரைத்தார்.

காளி... கபாலி.. இப்போ மெட்ராஸ்!

ஆனால் இப்போது மெட்ராஸ் என்ற தலைப்பைச் சூட்டியுள்ளனர். வட சென்னையை மையப்படுத்தி படத்தை எடுப்பதால் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கார்த்தியும் ஓகே சொல்லியுள்ளார்.

கார்த்திக்கு ஜோடியாக கேதரின் தெரசா என்ற தெலுங்கு நடிகை நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி படம் இயக்கிய ரஞ்சித், மெட்ராஸ் படத்தை இயக்குகிறார்.

படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகின்றன. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் தன் இடத்தை உறுதிப்படுத்தும் என நம்புகிறார் கார்த்தி.

 

ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் விரைவில் ஜப்பானில் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொன் நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.

ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்

இந்த படம் இந்தியாவில் இதுவரை அதிகமானோர் அறிந்திராத போட்டோ ரியாலிஸ்டிக் பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

ஹாலிவுட்டில் மோஷன் கேப்சரிங் பணியில் நிபுணத்துவம் மிக்க ஒரு ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்கள் கோச்சடையான் படத்தைப் பார்த்துள்ளனர். இந்தியாவில் தயாரான படமா? என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று கைத் தட்டிப் பாராட்டியுள்ளனர்.

உலகெங்கும் 3வது வாரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த படம், இப்போதும் தென்னிந்தியாவில் மட்டும் 350 திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.

ஜூன் இறுதியில் லண்டன் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டியூட்டில் கோச்சடையான் படத்தை திரையிடவிருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட திருவிழாக்களில் பங்கேற்பதற்கு கோச்சடையான் படத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

விரைவில், ஜப்பான் நாட்டில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு ஆயிரம் அரங்குகளில் கோச்சடையானை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.