உத்தம வில்லன்... இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

உத்தம வில்லன் படத்துக்காக கமல் மற்றும் குழுவினர் ஆஸ்திரேலியா செல்கின்றனர், துருக்கி செல்கின்றனர் என வெவ்வேறு தகவல்கள் வந்த நிலையில்.. இப்போது ஷூட்டிங் சென்னையிலேயே நடக்கிறது.

கமல் ஹாஸன் திரைக்கதை எழுதி, நடிக்க அவரது நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படம் உத்தமவில்லன். கமலுக்கு இதில் இரண்டு ஜோடிகள். பூஜா குமார், ஆன்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர். கூடவே பார்வதியும் உண்டு.

உத்தம வில்லன்...  இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடந்து முடிந்தது. 21-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை பெங்களூரில் படமாக்கினர்.

உத்தம வில்லன்...  இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

அடுத்து 8-ம் நூற்றாண்டின் தெய்யம் கலைஞராக கமல் வரும் காட்சிகளை ஆஸ்திரேலியா அல்லது துருக்கியில் படமாக்கவிருந்தனர்.

ஆனால் அந்த படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்வதென மாற்றிக் கொண்டார்களாம்.

அதன்படி உத்தம வில்லன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடக்கிறது.

உத்தம வில்லன்...  இப்ப சென்னையிலேயே ஷூட்டிங்!

கேன்ஸ் விழாவுக்குப் போன கமல், கடந்த ஞாயிறன்று சென்னை திரும்பினார். இப்போது உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

 

அமெரிக்காவில் 250-க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான்.. 100 அரங்குகளில் இன்று சிறப்புக்காட்சி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 250க்கும் அதிகமான அரங்குகளில் ரஜினியின் கோச்சடையான் படம் நாளை வெளியாகிறது.

இவற்றில் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ஒரு நாள் முன்பாக, இன்று இரவே சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் 250-க்கும் அதிகமான அரங்குகளில் கோச்சடையான்.. 100 அரங்குகளில் இன்று சிறப்புக்காட்சி!  

இதுவரை எந்த வெளிநாட்டு பிறமொழிப் படங்களும் அமெரிக்காவில் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை என்று கோச்சடையானை வெளியிடும் அட்மஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த 9-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டபோது கோச்சடையான் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளுக்கு 200 திரையரங்குகள் வரை ஒதுக்கியிருந்தனர்.

ரிலீஸ் தேதி தள்ளிப் போய், நாளை வெளியாகும் கோச்சடையானுக்கு கூடுதல் அரங்குகள் கிடைத்துள்ளன பல நாடுகளில். குறிப்பாக நாளை எக்ஸ் மேன் ஹாலிவுட் படம் வெளியாக உள்ளநிலையில் இவ்வளவு கூடுதல் அரங்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு வெளிநாட்டுப் படத்துக்கு 200 தியேட்டர்கள் கிடைத்ததே அதிகம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 250-ஐத் தாண்டியிருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

 

அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக சிவகார்த்திகேயனுக்கு சம்மன்

சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச்சண்டைப் போட்டியை அவதூறாகச் சித்தரித்ததாகக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாடுகள், விதிமுறைகள், மரபுகளைப் பின்பற்றித்தான் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவதூறு வழக்கு.. நேரில் ஆஜராக சிவகார்த்திகேயனுக்கு சம்மன்

அண்மையில் வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அதில், இந்த கவுரவமிக்க குத்துச்சண்டைப் போட்டியை கேலி செய்யும் விதமாக படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வருகின்றன.

அதில், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்றால், உன் தோழியை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போல காட்சியும் இடம் பெற்றுள்ளன.

அதேபோல சர்வதேச அளவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பவர் போதை மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் உள்ளன.

ஆனால், இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் போட்டியையே மிக மோசமாகச் சித்தரித்துள்ளனர்.

எனவே, இந்த படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வருகிற 30-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகயேன், திருகுமரன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

 

கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்!

ஒருவழியாக ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கோச்சடையான் இன்றே உலகமெங்கும் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நாளை வெளியாகிறது.

கோச்சடையான் படத்தை இன்று காலையில் பார்த்த மலேசிய ரசிகர்கள், படம் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்!  

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இன்றே படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவில் 250 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது. இவற்றில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் இன்றே கோச்சடையான் சிறப்புக்காட்சி திரையிடப்படுகிறது.

பிரிட்டனில் 40 அரங்குகளில் கோச்சடையான் தமிழும், 15 அரங்குகளில் இந்திப் பதிப்பும் வெளியாகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில், இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இந்த நாடுகளிலும் கோச்சடையான் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.

இலங்கையில் 10 அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இங்கு மட்டும் அனைத்து அரங்குகளுக்கும் பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் 20-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகிறது. டிஜிட்டலில் திரையிடப்படும் அனைத்து நாடுகளுக்கும் கேடிஎம் எனும் 'சாவி' அனுப்பப்பட்டுவிட்டது.

பெரும்பாலான நாடுகளில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படுவதால், கோச்சடையான் ரிசல்ட் இன்றே வெளியாகிவிடும்.

இதுவரை வந்துள்ள கருத்துக்கள்படி கோச்சடையான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாகவும், விஎப்எக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மகன் நடிக்கும் படத்தின் இயக்குனரை பாடாய் படுத்தும் கட்சி தலைவர்

சென்னை: இளைய மகனை ஹீரோவாக போட்டு படம் தயாரிக்கும் கட்சி தலைவர் இயக்குனரை பாடாய் படுத்துகிறாராம்.

ஹீரோவாக இருந்து அரசியல் கட்சி துவங்கிய அவர் தனது இளைய மகனை ஹீரோவாக போட்டு படம் தயாரித்து வருகிறார். படத்திற்கு மும்பையில் இருந்து நாயகியையும் கொண்டு வந்துள்ளனர்.

தேர்தல் முடிவு வந்தபோது கூட அவர் மகனின் படப்பிடிப்பில் தான் இருந்தார். இந்நிலையில் அவர் படத்தின் இயக்குனரை பாடாய் படுத்துகிறாராம். கதையை முடித்த பிறகு கட்சி தலைவர் தானும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கதையை தனக்கேற்றது போன்று மாற்றுமாறு தெரிவித்துள்ளாராம்.

கதையை எல்லாம் கேட்டுவிட்டு இப்படி கடைசி நேரத்தில் மறுபடியும் முதலில் இருந்தா என்று இயக்குனர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

 

இந்த படத்தை வாங்கினால் தான் அந்த படம்: ஸ்டைல் நடிகரின் 'சூப்பர்' டீல்

சென்னை: பொம்மை படமே இன்னும் வெளிவராத நிலையில் ஸ்டைல் நடிகர் அவசர அவசரமாக புதுப்படத்தில் நடிக்கத் துவங்கியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

ஸ்டைல் நடிகரை வைத்து அவரது இளைய மகள் எடுத்த பொம்மை படம் இந்தா அந்தா என்று ஒருவழியாக வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.  அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தபோதே நடிகர் தனது அடுத்த பட வேலையை அவசர அவசரமாக துவங்கினார்.

படத்தின் வேலைகள் சத்தமில்லாமல் துவங்கியது. புதுமுக ஹீரோக்கள் நடிக்கும் படத்தின் துவக்க விழா கூட பிரமாண்டமாக நடக்கையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஸ்டைல் நடிகரின் பட துவக்க விழா கமுக்கமாக நடந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்நிலையில் பொம்மை படத்தின் சரிவை சரிகட்டத் தான் நடிகர் அடுத்த பட வேலைகளை அவ்வளவு அவசரமாக துவங்கினார் என்று கூறப்படுகிறது. மேலும் பொம்மை படத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே ஸ்டைல் நடிகர் தற்போது நடிக்கும் படம் கொடுக்கப்படும் என்று கூறுகிறார்களாம்.

முன்னதாக ஸ்டைல் நடிகர் இந்த மாத துவக்கத்தில் ட்விட்டரில் சேர்ந்தது கூட பொம்மை படத்தை விளம்பரப்படுத்த தான் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ 1.2 கோடியைத் திருடிய வேலைக்காரர் கைது

நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ 1.2 கோடியைத் திருடிய வேலைக்காரர் கைது

மும்பை: இந்திப்பட நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் திருடிய வேலைக்கார வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

மும்பையை சேர்ந்தவர் சதிஷ் கவுசிக். இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான இவர் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்து வருபவர் சஜன்குமார்(வயது22).

சம்பவத்தன்று, சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வசூல் தொகையான ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை ஒரு பையில் போட்டு, சதிஷ் கவுசிக் தனது படுக்கை அறையில் வைத்துள்ளார். அவசர வேலை காரணமாக பணத்தை பீரோ அல்லது லாக்கரில் வைக்காமல், நமது வீடு தானே என்ற எண்ணத்தில் அப்படியே வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார் சதிஷ்.

சிறிது நேரம் கழித்து பணத்தை பத்திரமாக எடுத்து வைக்கலாம் என சதிஷ் கவுசிக்கின் மனைவி அறைக்குள் சென்று தேடி இருக்கிறார். ஆனால், பணம் இருந்த பையை அங்கு காணவில்லை. இதற்கிடையே வீட்டு வேலைக்காரர் சஜன்குமார்(22) திடீரென மாயமானாதும் தெரிய வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த சதிஷ் கவுசிக்கின் மனைவி வெர்சோவா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சஜன்குமார், செம்பூர் வாஷிநாக்கா பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் சஜன்குமாரைக் கைது செய்து அவர் திருடிச் சென்ற பணத்தை மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சஜன்குமார், வரும் 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட உள்ளார்.

 

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்... அட, தமிழ் சினிமா தலைப்புதாங்க!!

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது.

வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்... அட, தமிழ் சினிமா தலைப்புதாங்க!!

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப் படம் குறித்து இயக்குனர் பிரகாஷ் நம்மிடம் கூறியதாவது:

"பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதுதான் படத்தின் கதை. இன்று நாம் முழுக்க முழுக்க தகவல் தொடர்பை மட்டும்தான் நம்பியுள்ளனர். அது எப்படி நம்மை பாதிக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன்.

கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ், நகுல் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா கொல்கத்தாவைச் சேர்ந்த புதுமுகம். எதிர்நீச்சலில் சிவகார்த்தியேன் நண்பனாக வரும் சதீஷ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து கலவைகளும் படத்தில் உள்ளது.

ஆனாலும் மற்ற கமர்சியல் படங்களை போல் அல்லாது இப்படம் சிறிது வித்தியாசப்படும்.

இந்தப் படத்தில் எனக்கு சவாலாக இருந்ததே, இரண்டு நாயகர்களைச் சேர்த்து படம் பண்ணுவதுதான். இந்த மாதிரி படம் பண்ணும்போது இவர் இருந்தால் அவர் இல்லை, அவர் இருந்தால் இவர் இல்லை என்று சிக்கலாகப் போய்விடும்.

பல ஹீரோக்களிடம் பேசி, கடைசியில் நகுலும் தினேஷூம் செட் ஆனார்கள். தினேஷ் இந்தப் படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். காரணம், இந்த ஷூட்டிங்கின்போதுதான் அவர் காலில் அடிபட்டு பத்து நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வந்தது", என்றார்.