சென்னை: இது மார்கழி மாதம். சென்னையின் சபாக்கள் செம பிஸியாக சங்கீத நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவற்றை ரசிக்கும் பாக்கியம் சென்னைக்குள் வசிப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் சாத்தியமாகிறது.
சென்னைக்கு வெளியே உள்ளவர்களுக்கு? ரொம்ப கஷ்டம். அந்த மாலை நேர நெரிசலில் வாகன வெள்ளத்தில் நீந்தி வருவது அத்தனை கஷ்டம்.
இந்தக் குறையைப் போக்கும் வகையில், இசை ரசிகர்களுக்கு விருப்பமான இசைக் கலைஞர்களை அழைத்து புறநகர்ப் பகுதிகளில் கச்சேரிகளை நடத்துகிறது ஐபால் ஈவன்ட்ஸ் நிறுவனம்.
சென்னை சங்கீத யாத்திரை என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் சாருலதா மணி, ராஜேஷ்க்ஷ் வைத்யா, நித்யா மகாதேவன், கத்ரி கோபால்நாத், கடம் கார்த்திக், சைந்தவி, சுசித்ரா சுப்பிரமணியன் போன்ற பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
எந்தெந்தப் பகுதிகளில்..?
தாம்பரம், நங்கநல்லூர், வளசரவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் டிசம்பர் 19, 2012 முதல் டிசம்பர் 23, 2012 வரை சங்கீத யாத்திரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குளிர்சாதன அரங்குகளில் நடைபெற உள்ள இந்த புகழ்பெற்ற கலைஞர்களின் இசைக் கச்சேரிகளை இசை ஆர்வலர்கள் கண்டும் கேட்டும் மகிழலாம்.
தாம்பரத்தில் நேஷனல் தியேட்டர் எதிரில் அமைந்துள்ள டிஜிபி கல்யாண மண்டபத்தில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வளசரவாக்கத்தில் கல்யாணி மண்டபத்திலும், அம்பத்தூரில் மகாலட்சுமி கல்யாண மண்டபத்திலும், நங்கநல்லூரில் ஹரிஹரன் ஹாலிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்த சங்கீத யாத்திரை குறித்து கருத்து தெரிவித்த ஐபால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல், "சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வருவதுடன் சமீபத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. ஏராளமான தொழில், சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாகவும் இனி சென்னை என்பது மயிலாப்பூர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளுடன் அடங்கிப் போய்விடாது.
மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், சிங்கிள் பிராண்ட் ஷோரூம்கள், சூப்பர் மற்றும் ஹைபர் மார்க்கெட்கள் என நவீன வளர்ச்சிகளை அப்பகுதி மக்களும் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் புறநகர் பகுதிகளுக்கு குடியேறிவிட்ட இவர்கள் சங்கீத சீசனில் காணப்படும் சுற்றுச் சூழலை தவறவிடுவதாக உணர்கின்றனர். இப்போது 4 புறநகர்ப் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் 13 இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை 12 ஆயிரம் ரசிகர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சென்னை சங்கீத யாத்திரை வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கும் சென்று ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக அமையும்," என்றார்.
நிகழ்ச்சிகள் மற்றும் டிக்கெட் குறித்து விசாரிக்க- 95000 03196, 87545 96152