சென்னை: இசைக்குடும்பத்தில் இருந்து வந்த அந்த இயக்குநர் சமீபத்தில் அடுத்தடுத்து 2 தோல்விப் படங்களைக் கொடுத்ததால், இயக்குனரின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளராக யாரும் முன்வரவில்லையாம்.
இதனால் தானே தயாரிப்பாளர் ஆகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து தனது திறமையை நிரூபித்த இயக்குநர் கோட் நடிகரின் படத்திற்குப் பின் ஆளே மாறிவிட்டார்.
கோட் நடிகரை வைத்து இயக்கிய உள்ளே வெளியே படம் நன்றாக ஓடியதில் அடுத்து பருத்தி வீரனை வைத்து பிரியாணி கிண்டினார், பிரியாணி வேகாமல் போய்விட்டது.
சற்றும் மனம் தளராமல் அடுத்த படத்தில் சூர்யமான நடிகரை வைத்து பேய்படத்தை இயக்கினார், பேரை மாற்றி விளையாடியவர் திரைக்கதையில் கோட்டை விட்டதில் மாஸான அந்தப் படம் தூசியாகி விட்டது.
மாஸான படம் எதிர்பார்த்த அளவு ஓடாததில் இவரை விடவும் சூரிய நடிகருக்கு தான் பலத்த அடி, படம் வெளிவந்து நடிகரின் ஒட்டு மொத்த மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது.
சரி மீண்டும் கோட் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்குவோம் என்று நடிகருக்கு கதை சொல்லியிருக்கிறார், நடிகர் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து போய்விட்டாராம்.
மேலும் ஒரு காலத்தில் இயக்குனருக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது இயக்குனரின் தலையைக் கண்டாலே தெறித்து ஓடி விடுகின்றனராம்.
இதனால் வெறுத்துப் போன இயக்குநர் இறுதியாக தான் இயக்கும் அடுத்த படத்தை, சொந்தப் பணத்தில் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
சொந்தப் படமும் பணமும் இயக்குனருக்கு கை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஒட்டு மொத்தத் திரையுலகினரும் அது சரி.