விஸ்வரூபம்... சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்?

Kamal Ready Remove Controversial Portions

சென்னை: விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபித்துள்ள சில காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் தரப்பு சம்மதம் தெரிவிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இதுகுறித்து நாளைய கோர்ட் விசாரணையின்போதுதான் உறுதியாக எதுவும் தெரிய வரும்.

விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்த பல காட்சிகளுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன. இப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் கொச்சைப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து அப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கமல்ஹாசன். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வெங்கட்ராமன் நேற்று படத்தைப் பார்த்தார். நாளை தனது உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்து நாளை கோர்ட்டில் முறைப்படி கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒருவேளை சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல்ஹாசன் முன்வரும் பட்சத்தில் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று தெரிகிறது. இதனால் தமிழகத்திலும், புதுவையிலும் விஸ்வரூபம் படத்தைத் திரையிட வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதுவாக இருந்தாலும் நாளைதான் தெரியும்.

 

விஸ்வரூபத்தை திரையிடக் கோரி பெங்களூரில் கமல் ரசிகர்கள் ரத்ததானம்

Kamal Fans Donate Blood Bangalore Seeking Vishwaroopam

பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டரில் விஸ்வரூபத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ரத்ததானம் செய்து வருகின்றனர்.

பெங்களூர் லால்பாக் ரோட்டில் உள்ள ஊர்வசி தியேட்டரில் நேற்று காலை விஸ்வரூபம் திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மதியக் காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் போலீசார் படத்தை ரத்து செய்யுமாறு கூறியதுடன் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியும் பலர் படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறி அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். படம் இன்று திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நாளை தான் திரையிடப்படும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபத்தை உடனே திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ஊர்வசி தியேட்டர் முன்பு ரத்த தானம் அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.

 

அஜீத்திடம் கதை சொல்ல டென்ஷனான முருகதாஸ்

Murugadoss Nervous Narrate Story Ajith

சென்னை: அஜீத்திடம் தீனா கதை சொல்ல அப்போது புதுமுக இயக்குனரான முருகதாஸ் டென்ஷனாகியுள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டில் வெளியான ஷங்கரின் முதல்வன் படத்தில் அர்ஜுன் முதல்வரான ரகுவரனை பேட்டி காணும் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருந்தது. ரகுவரனை பேட்டி காணும் முன்பு படபடப்பாக காணப்படும் அர்ஜுன் கழிவறைக்கு சென்றும், வாழைப்பழம் உண்டும் டென்ஷனைக் குறைப்பார். அதே போன்ற படபடப்பு அஜீத் குமாரிடம் தீனா கதை சொல்லும்போது தனக்கு இருந்ததாக ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முருகதாஸ் கூறுகையில்,

முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரனை பேட்டி காணும் முன்பு டென்ஷனைக் குறைக்க என்னவெல்லாம் செய்தாரோ அதையே நான் அஜீத் குமாரிடம் தீனா கதை சொல்லும் முன்பு செய்தேன். ஒரு வேளை ஷங்கருக்கும் ஆரம்ப காலத்தில் இது போன்ற படபடப்பு வந்திருக்குமோ, அதனால் தான் அதை தனது படத்தில் காட்சியாக்கியுள்ளாரோ என்றார்.

தீனா கதை சொல்லும்போது அஜீத் முன்னணி நடிகர், முருகதாஸுக்கு அது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இஸ்லாமியர்களுடன் மீண்டும் பேச நான் தயார் ... கமல்ஹாசன்

I Am Ready Talk Muslims Says Kamal

லாஸ் ஏஞ்சலெஸ்: நான் ஒரு மனிதன். அரசாங்கம் அல்ல. விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்கனவே இஸ்லாமியர்களுடன் பேசியுள்ளேன். மீண்டும் பேச வேண்டும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் கமல்ஹாசன். அங்கு ஹாலிவுட்டில் தனது விஸ்வரூபம் படத்தைத் திரையிட்டு வருகிறார். லாஸ் ஏஞ்சலெஸ் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், என் நாட்டில், நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாளன் என்று பேசப்பட்டு இருக்கிறேன். அவர்களை என் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறு கூட்டம், எதை சொன்னாலும் அதை மாற்று கருத்தாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

நான், தனி மனிதன். அரசாங்கம் அல்ல. விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம்களுடன் பேசியிருக்கிறேன். மீண்டும் அவர்களுடன் பேச தயாராக இருக்கிறேன் என்றார் கமல்ஹாசன்.

 

2011-2012ல் ரூ.202.83 கோடி சம்பாதித்த ஷாருக்கான்: விளம்பரங்கள் மூலம் மட்டும் ரூ.149.50 கோடி

Forbes India Celebrity 100 Shah Rukh Earned 202 Cr

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி சம்பாத்தித்துள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். ஹிட் மேல் ஹிட் கொடுக்கும் சல்மானுக்கு இரண்டாவது இடம் தான்.

முதல் பத்து இடத்தைப் பிடித்தவர்கள் மற்றும் அவர்களின் வருவாய்(2011-2012):

ஷாருக்கான் - ரூ.202.83 கோடி

சல்மான் கான் - ரூ.144.2 கோடி

டோணி - ரூ.135.16 கோடி

அக்ஷய் குமார் - ரூ.179.85 கோடி

அமிதாப் பச்சன் - ரூ.116.3 கோடி

சச்சின் டெண்டுல்கர் - ரூ.97.46 கோடி

கரீனா கபூர் - ரூ.73.46 கோடி

வீரேந்தர் ஷேவாக் - ரூ.27.73 கோடி

விராத் கோஹ்லி - ரூ.47.26 கோடி

கத்ரீனா கைப் - ரூ.65.25 கோடி

ஒவ்வொரு துறையிலும் முதலிடத்தைப் பிடித்தவர்கள்:

நடிகர்களில் முதலிடம்: ஷாருக்கான்

விளையாட்டு வீரர்களில் முதலிடம்: டோணி

இசை துறையில் முதலிடம்: ஏ.ஆர். ரஹ்மான்

டிவி பிரபலங்களில் முதலிடம்: மலாய்கா அரோரா கான்

இயக்குனர்களில் முதலிடம்: கரண் ஜோஹார்

எழுத்தாளர்களில் முதலிடம்: சேத்தன் பகத்

விளம்பரங்களில் அதிக பணம் சம்பாதித்த 10 பேர்:

ஷாருக்கான் - ரூ.149.50 கோடி

டோணி - ரூ.124.80 கோடி

சச்சின் டெண்டுல்கர் - ரூ.90.30 கோடி

சல்மான் கான் - ரூ.84.00 கோடி

அக்ஷய் குமார் - ரூ.70.85 கோடி

அமிதாப் பச்சன் - ரூ.67.50 கோடி

கத்ரீனா கைப் - ரூ.61.50 கோடி

கரீனா கபூர் - ரூ.57.80 கோடி

ரித்திக் ரோஷன் - ரூ.49.50 கோடி

சைப் அலி கான் - ரூ.35.00 கோடி

 

கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்... விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?

Kamal S Name Removed From Padma Award

டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது. விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன.

விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கமல்ஹாஸனின் கருத்துத் தீவிரவாதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது! - தமுமுக

Tmmk Strongly Condemns Kamal Comment On Muslims

நட்புடன் கைகுலுக்கியவர்கள் முதுகில் குத்திவிட்டார்கள் என்ற கமலின் கருத்துக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

இஸ்லாமியர் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்துவிட்டது தமிழக அரசு. இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல், "நட்புடன் கைகுலுக்கியவர்கள் முதுகில் குத்திவிட்டார்கள்," என்றார்.

இதனை கடுமையாகக் கண்டித்துள்ள தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிட்ட கண்டன அறிக்கை:

விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார். முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார். இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார், தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்க்கிறோம். படத்தைப் பார்க்க காலத்தை நீட்டித்தார். படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம். அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளில் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.

படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.

எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விஸ்வரூபம் பிரச்சினை - கமலுக்கு இயக்குநர் பார்த்திபன் ஆதரவு

Parthiban Supports Kamal Viswaroopam Issue

சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் நடிகர் கமல்ஹாஸனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான ஆர் பார்த்திபன்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை
-சுதந்திரம்!

அரூபமாகவே இருந்தால்
விஸ்வரூபம் எடுப்பது எப்போது?

படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் இடையே சென்சார் பொது/போதுமானது.

சென்-சார்பாக ஆறு பேர் எப்படி முடிவெடுப்பது என மடக்கு வாதம் செய்வதானால்,100 கோடி மக்கள் சார்பாக 100 பேர் முடக்கு'வாதம் செய்வதும் தீவிரவாதமே!

பத்திரிக்கைகளில் வரும் உண்மை செய்திகளை பற்றி (இப்போது)பார்பர் கடைகளில் கூட விவாதிப்பதில்லை ஆனால் படத்தில் வரும்'முன் காக்க படை திரண்டு வருகிறோம். நீதிமன்றத்தில் நாளை தடையை நீக்கிவிட்டால் அது யார் குற்றம்? நீதியின் குற்றமோ?

மக்கள் சக்தி மாபெரும் சக்தி. குற்றம் என தெரிந்தால் கொந்தளித்து விடுவார்கள். எனவே எதையுமே அவர்கள் பார்வைக்கு ரிலீஸ் செய்வோம், அவர்கள் சிறந்த தீர்ப்பளிப்பார்கள். சினிமாவை பொருத்தவரை கண்டு'காமல் விட்டாலே தண்டனைதான்.

கமல் சாருக்கு ஏற்படும் நஷ்டம் மறைமுகமாக சினிமாவுக்கே. ஒரு தனி மனிதனுக்காக ஒரு இனத்தின் சினத்தை பயன் படுத்த வேண்டாமென்பதே என் மென் கோரிக்கை.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்... '- பாரதி.
'ஒவ்வொரு கோதுமையிலும் உரியவன் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது'-நபிகள்.
யாருடைய வயிரையோ/மனதையோ நாம் புண் படுத்த வேண்டாமே!

சுதந்திரம் இல்லா வர்க்கத்தின் குடியரசு தின வாழ்த்துக்கள், ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து நண்பர்களுக்கும்...

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

கமல் செய்தது ஏமாற்று வேலை.. அவரால் என் படம் பாதிக்கப்பட்டுவிட்டது! - முக்தா சீனிவாசன் பாய்ச்சல்

Kamal Cheats Film Goers Says Muktha Srinivasan

சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதாகக் கூறி ரசிகர்களிடம் பணம் வசூலித்த கமல், சொன்னபடி படத்தை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததோடு, அவர்களின் பணமும் திருப்பித் தரப்படவில்லை. இது ஒரு ஏமாற்று வேலைதான். அது எங்கள் படத்தையும் பாதிக்கிறது," என்று குற்றம்சாட்டினார் முக்தா சீனிவாசன்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறியதாவது:

ஒரு படத்தின் ரிலீசுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் செய்வது வழக்கம்.

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போது ரசிகர்கள் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த யோசனை இப்போது மற்ற படங்களின் வசூலை பாதிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு ரசிகர் ஒரு படத்தை பார்க்க முன்பதிவு செய்கிறார் என்றால் அவருக்கு சொன்ன தேதியில் அந்தப் படத்தை போட்டுக்காட்டி விட வேண்டும். அப்படிச் செய்யமுடியவில்லை என்றால் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு முழுப் பணத்தையும் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

ஆனால் விஸ்வரூபம் படத்தை பொருத்தவரை முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு இதுவரை பணம் திருப்பிக் கொடுக்கப்படவே இல்லை. இதனால் ஒரே ஒரு படத்துக்காக முன்பதிவு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் மட்டும் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது ரசிகர்களை ஏமாற்றும் வேலை.

அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்தால் அந்த ரசிகர் ரிலீஸாகியிருக்கும் மற்ற படங்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் படங்களின் வசூலும் பாதிக்கப்படாமல் இருக்கும். அதனால் மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படாமல் இருக்க விஸ்வரூபம் படத்துக்காக ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்ட முன்பதிவு பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்தா சீனிவாசன் தயாரிக்க, அவர் மகன் இயக்கத்தில் நேற்று பத்தாயிரம் கோடி என்ற படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குதான் வசூல் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் முக்தா. ஏற்கெனவே நாயகன் படம் தொடர்பான கமல் பேட்டி குறித்து முக்தா கடும் கண்டனம் தெரிவித்து, மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம்.

 

நீதிபதிகளுக்கு பிரசாத் லேபில் இன்று விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ!!

Justice Venkatraman Watch Viswaroopam Today

சென்னை: பெரும் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ள கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று சென்னை பிரசாத் லேபில் நீதிபதிகளுக்கு திரையிடப்பட்டது.


விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய சமூகத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரினர். அதை ஏற்று, இரண்டு வாரங்கள் படத்துக்கு தடை விதித்தது தமிழக அரசு.

இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் கமல். தமிழக அரசின் தடைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, நாளை மறுதினம் வரை தடை தொடரும் என அறிவித்துவிட்டார். மேலும் படத்தைப் பார்த்த பிறகுதான் தடையை விலக்குவதா இல்லையா என முடிவு செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.

அதன்படி இன்று நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பிற நீதிபதிகளுக்கு இந்தப் படம் சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டுள்ளது.

படம் பார்த்த பிறகு, தடையை நீக்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதால் அனைத்து தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

Islamic Organisations Decide Approach Supreme Court

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.

இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

நடுநிலையுடன் பாரதிராஜா சிந்தித்துப் பார்க்க வேண்டும்- தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

Tntj Comments On Bharathiraja Opinion On Viswaroopam

சென்னை: தங்க ஊசி என்பதற்காக அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா.. எனவே விஸ்வரூபம் படம் தொடர்பாக நடுநிலையுடன் இயக்குநர் பாரதிராஜா பேச வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சையத் இக்பால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படம் தொழில்நுட்பத்திலும், கதை சொல்லும் விதத்திலும் சிறப்பாக இருப்பதால் அதனை வெளியிட வேண்டும் என்று பாரதிராஜா சொல்கிறார். கமல் திறமையான கலைஞர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?

காவல்துறையும், அரசையும்விட முஸ்லிம்களை தவறாக அடையாளப்படுத்திப் பார்த்தவர்கள் திரைத்துறையினர்தான். கமல் என்கிற தனிமனிதன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் தயாரித்திருக்கின்ற படத்தின் காட்சி அமைப்புகளும், கதை சொல்லும் பாணியும்தான் எங்களை அவருக்கு எதிராக அணி திரள வைத்திருக்கிறது. பாரதிராஜா அவர்களே நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

கமல்ஹாசன் அடாவடியான ஆள் கிடையாது... இப்படியும் பேசினார் முக்தா சீனிவாசன்!

Mukhta Srinivasan Hails Kamal Haasan

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், கமல்ஹாசனை சாடிப் பேசியதோடு பாராட்டும்படியாகவும் பேசினார்.

அதாவது அவர் கூறுகையில், விஸ்வரூபம் படம் ரிலீஸாகாமல் தடை செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்களுக்கு ரிசர்வேஷன் பணம் திருப்பித் தரப்படவில்லை. இது கமல்ஹாசனின் ஏமாற்று வேலை என்றெல்லாம் பேசினார். ஆனால் அதே வாய் கமல்ஹாசனை வேறு மாதிரியாகவும் பேசியது.

அந்தப் பேச்சு...

கமல்ஹாசன் என் நண்பர். அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. என்றாலும், விஸ்வரூபம் பட பிரச்சினை பற்றிய என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

கமல், அடாவடியான ஆள் கிடையாது. அவரை, 7 வயதில் இருந்தே எனக்கு தெரியும். சினிமா ஒன்றுதான் சாதி-மதத்துக்கு அப்பாற்பட்டது. அதற்குள் சாதி-மத பிரச்சினையை கொண்டுவரக்கூடாது. விஸ்வரூபம் பட பிரச்சினையில், கமல்ஹாசனும், முஸ்லிம்களும் மீண்டும் ஒரு முறை சந்தித்துப்பேசி, ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கி, சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரிசர்வேஷன் செய்த பணத்தை உடனே திரும்ப கொடுத்துவிட வேண்டும். சினிமாவில் பணம் ஒரே இடத்தில் முடங்கக்கூடாது. அப்படி முடங்கினால், அது மற்ற படங்களை பாதிக்கும்.

நான், சினிமாவுக்கு வந்து 66 வருடங்கள் ஆகிறது. 45 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த வகையில், இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறேன் என்றார் முக்தா.

 

உயர்நீதிமன்ற நீதிபதி உள்பட 50 பேர் விஸ்வரூபம் பார்த்தனர்... நாளை தடை நீங்குமா?

Madras Hc Pronounce Verdict On Viswaroopam Tomorrow

சென்னை: சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் நேற்று பார்வையிட்டனர். நாளை இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது தடையை நீக்கி நீதிபதி உத்தரவிடுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. இதனால் விஸ்வரூபம் படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வரவில்லை. அதேபோல புதுவையிலும் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

அதன்படி நேற்று நீதிபதிக்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் காட்சியில் நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தனர். உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர், ஐந்து பதிவாளர்கள், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ஐந்து அரசு வக்கீல்கள், கமல்ஹாசன் தரப்பு வக்கீல் ராமன், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இஸ்லாமிய அமைப்பினரின் வக்கீல்களான சங்கரசுப்பு, ரமேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் இதில்அடக்கம்.

படம் பார்த்து முடித்ததைத் தொடர்ந்து நாளை வரும் விசாரணையின்போது நீதிபதி வெங்கடராமன் தனது உத்தரவை வழங்கவுள்ளார். அப்போது தடை நீக்கப்படுமா என்பது குறித்துத் தெரிய வரும்.

 

ஏன் இந்த வி்ஷ்வரூபம்...?

Hasan Mohammed Jinnah S Explanation Over Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்த தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள திமுகவைச் சேர்ந்த ஹசன் முகம்மது ஜின்னா, விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்து அதை வெளியிட அனுமதித்த தணிக்கைக் குழு உறுப்பினர்களில் ஒருவர் ஹசன் முகம்மது ஜின்னா. இவர் திமுகவைச் சேர்ந்தவர். கடந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர்.

இந்த நிலையில் விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி சட்டசபை உறுப்பினரான ஜவாஹிருல்லா, விஸ்வரூபம் படத்தை தணிக்கையின்போது அனுமதித்து ஆதரித்த ஜின்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜின்னா ஏன் இந்த விஷ்வரூபம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாமல் அதை அணைப்பதற்குத் தண்ணீர் குடம் ஏந்தும் கைகள் தேவைப்படுகின்றன. விஸ்வரூபம் படம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்கள், கண்டனங்கள் அதன் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள தடை இவற்றின் காரணமாக, அந்தப் படத்தைத் தணிக்கை செய்த உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை பற்றிய விமர்சனங்கள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன.

தடையை நீக்கக்கோரும் வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாலும், அது போலவே, சென்சார் விதிமுறைகளின்படியும், படத் தணிக்கையில் ஈடுபட்டவர்கள் தணிக்கையின் போது நடந்த விவாதத்தையோ அல்லது படம் குறித்த விமர்சனத்தையோ தெரிவிக்கக்க்கூடாது என்பதாலும் நான் சட்டவிதிகளுக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டே கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

என்னைப் பற்றி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரும் மூத்த சகோகதரராக நான் மதிப்பவருமான பெருந்தகையாளர், ஊடகங்களின் வாயிலாக என்மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவித்திருப்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நானும் என் தரப்பு விளக்கங்களைத் தர வேண்டியிருக்கிறது.

மூத்த சகோதரரராக நான் மதிக்கும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் நிறைய படித்தவர். சமுதாய நலனில் அக்கறை கொண்டு நலப்பணிகள் பலவற்றை முன்னின்று மேற்கொள்பவர். மார்க்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். எளிய நிலையிலிருந்து தன் அறிவாலும் ஆற்றலாலும் உழைப்பாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருப்பவர்.

அவருடைய அமைப்பின் சார்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நானும் ஒரு காரணமாக உதவியிருக்கிறேன் என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். அந்த அடிப்படையில், அவர் மீது வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் எந்தளவிலும் எனக்குக் குறையவேயில்லை. யாரோ சிலரை திருபதிப்படுதவதற்காகவோ, யாருடைய தூண்டுதலின் பேரிலோ என்னை விமர்சிக்கவில்லை என்றே இன்னும் நம்புகின்றேன்.

இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த நான் பெரிதும் மதிக்கின்ற தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அனைவரின் கருத்துகளையும் நான் மதிக்கிறேன்.

தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத் துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதேநேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.

வழிகாட்டும் முறைகள் (guidelines) ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.

விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல்வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது.

படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.

அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு படமும் தணிக்கை செய்யப்படுகிறது. விஸ்வரூபத்திற்கு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த சகோதரர்களில் யாரேனும் ஒருவர் தணிக்கைத் துறை உறுப்பினராக இருந்து இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.

அன்பை போதிக்கும் உயர்ந்த மார்க்கம் இஸ்லாம். அது ஒருபோதும் வன்முறையை வளர்க்கவோ ஆதரிக்கவோ செய்வதில்லை.

தாலிபான், அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும். இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.

விஸ்வரூபம் படம் தற்போது உலகின் பல நாடுகளிலும், தணிக்கை செய்தபிறகே வெளியாகியுள்ளது. இஸ்லாமிய நாடான மலேசியாவிலும் இப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியிடப்பட்டுள்ளது.

நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, என் மனதுக்கு சரியென்று படுவதை எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுத்துவேன். எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம் கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம், அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான-உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.

அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன். நான் ஏற்கனவே கூறியதுபோல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இருப்பினும், இடைப்பட்ட நேரத்திலான செயல்பாடுகளுக்காக நான் விமர்சனத்திற்குப் பயன்படுகிறேன் என்றால் அதையும்கூட என் தனிப்பட்ட மனவலியாகத்தான் கருதுகிறேனே தவிர, ஏதேனும் ஒரு வகையில் அவருடைய வளர்ச்சிக்குப் பயன்படுகிறேன் என்ற அளவில் மனநிறைவும் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜின்னா.

 

பெங்களூரில் விஸ்வரூபம் ரத்து: தமிழகத்தில் இருந்து சென்ற ரசிகர்கள் ஏமாற்றம்

Tn Fans Return From Bangalore Without Watching

பெங்களூர்: விஸ்வரூபம் படத்தைப் பார்க்க தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் விஸ்வரூபம் ரிலீஸானது. இதையடுத்து படத்தைப் பார்க்க தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊர்களில் வசிக்கும் ரசிகர்கள் கேரளா சென்றனர். இதே போன்று ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ரசிகர்கள் படம் பார்க்க பெங்களூர் சென்றனர்.

ஆனால் நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பத்ரவாதியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தியேட்டருக்குள் புகுந்து கைகலப்பாகிவிட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்நிலையில் பெங்களூரில் விஸ்வரூம் திரையிடப்படவிருந்த ஊர்வசி தியேட்டரில் படம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் படம் பார்க்க தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.