நடிப்பு: ஆதித், கொடுமுடி சுரேஷ், ரேஷ்மி, பிரபாகர், காளி, குணா
ஒளிப்பதிவு: மணவாளன்
இசை: எஸ்எஸ் குமரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: எஸ்எஸ் குமரன்
தயாரிப்பு: பீகாக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்எஸ் குமரன்
நம்பிக்கை தரும் இசையமைப்பாளராக அறியப்பட்ட எஸ் எஸ் குமரன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார் இந்த ‘தேநீர் விடுதி’ மூலம்.
ஒரு இசையமைப்பாளராக அவர் சம்பாதித்த பெயரை இந்த தேநீர் விடுதி காப்பாற்றியதா என்பதை கடைசியில் பார்க்கலாம்.
போடிநாயக்கனூரில் பந்தல் ராஜாக்களாக வலம் வருகிறார்கள் ஆதித்தும் கொடுமுடி சுரேஷும். வேலை கல்யாணம், காதுகுத்து, வயசுக்கு வரும் நிகழ்ச்சி என எல்லாவற்றுக்கும் பந்தல் – சீரியல் செட் போடுவதுதான் வேலை. டாஸ்மாக் பார் போனாலும், விசிட்டிங் கார்டை கொடுத்து பிஸினஸை டெவலப் பண்ணுவது இவர்கள் பாணி!
இந்த இருவரும் என்ன செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் அம்மா. (செத்தது போல நடித்து ஊரைக் கூட்டி தனக்கிருக்கும் ஆதரவைக் காட்டி தம்பியிடம் மகனுக்கு பெண் கேட்கும் அளவுக்கு பாசக்கார அம்மா!)
அந்த ஊர் பதிவாளரான நாச்சியப்பனை பிடிக்காத ஒரு கும்பல், அவர் வீட்டுப் பெண் வயசுக்கு வந்ததாக போன் செய்து பந்தல் போடச் சொல்ல, பந்தல் ராஜாக்களும் எதார்த்தமாய் அங்கே பந்தல் போட, நாச்சியப்பன் மகள் இதனால் ஆத்திரப்பட்டு சகோதரர்களில் இளையவரான ஆதித்தைத் துரத்துகிறார்.
இந்த துரத்தல் பின்னர் காதலாகிறது என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை!
இந்தக் காதலை அந்தஸ்து பார்க்கும் நாச்சியப்பன் ஏற்க மறுத்து அடம்பிடிக்க, அவரை வென்று காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார் எஸ்எஸ் குமரன்.
களவாணி படம் ரொம்பத்தான் பாதித்துவிட்டிருக்கிறது குமரனை! ஆனால் அதுகூட பரவாயில்லை… படத்தின் முக்கியப் பிரச்சினை, அழுத்தமில்லாத கதையும், அதைவிட அழுத்தமில்லாத காட்சிகளும்தான்.
காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்வது, பக்குவமற்ற படமாக்கம் போன்றவைதான் இந்த தேநீர் விடுதியின் குறைகள்.
ஆனாலும் சில விஷயங்கள் பார்ப்பவர்களை ஈர்க்கத்தான் செய்கின்றன.
குறிப்பாக ஹீரோயின் ரேஷ்மி. சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, உடல்மொழியிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்ல எதிர்காலமிருக்கிறது.
எப்போதும் சரக்கும் கையுமாகவே திரியும் பந்தல் ராஜாக்களைப் பார்க்கும்போது, படத்தின் தலைப்பை தப்பாக வைத்துவிட்டார்களோ என்ற நினைப்புதான் வருகிறது.
ஆனாலும் காதலியைப் பார்த்துக் கொண்டே இருப்பதற்காக ஒரு டீக்கடையையே உறிஞ்சும் ஆதித் கலகலப்பூட்டுகிறார். வயசுக்கு வந்ததற்கு ஆதாரம் கேட்கும் கொடு முடி சுரேஷுக்கு சின்னனூரில் கிடைக்கும் ட்ரீட்மெண்டும் சிரிப்பை வரவழைக்கிறது.
நாச்சியப்பனாக வரும் பிரபாகர் கலக்குகிறார். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் அவரது குணமும், பாடி லாங்குவேஜும் அடிக்கடி நிஜவாழ்க்கையில் நாம் பார்க்கும் பலரை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
க்ளைமாக்ஸில் அவர் சமாதானமாகும் விதம் குபீர் சிரிப்பு!
இடைவேளைக்குப் பின் சீரியல் மாதிரி சில இடங்களில் இழுப்பதையும் கட் பண்ணியிருக்கலாம்.
பாடல்களில் இன்னும் கூட கவனம் செலுத்தியிருக்கலாம் குமரன். ஆனாலும் ஒரு மாலை நேரம் பாடலும், சில இடங்களில் பின்னணி இசையும் கிராமத்து எஃபெக்டை தருகிறது.
ஒரு இயக்குநராக எஸ்எஸ் குமரன் ஜஸ்ட் பாஸ் செய்திருக்கிறார். ஆனால் கோலிவுட்டில் ஹிட்டடிக்க… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!