ஆபாச பாடல் வீடியோ வழக்கு... கைதாகிறார் அனிருத்?

சென்னை: ஆபாச பாடல் வீடியோ உருவாக்கியதற்காக பிரபல இசையமைப்பாளர் அனிருத் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

3 படத்தில் இடம்பெற்ற கொல வெறி பாடலுக்காக உலகப் புகழ் பெற்றவர் அனிருத். பெற்ற புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வந்தார்.

ஆபாச பாடல் வீடியோ வழக்கு... கைதாகிறார் அனிருத்?

நடிகை ஆண்ட்ரியாவை அவர் லிப் டு லிப் முத்தமிட்ட படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஒப்புக் கொண்ட படங்களை முடித்துத் தராததால் தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்திலும் மாட்டினார்.

இப்போது யூடியூப்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்ட்ருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இசை ஆல்பத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக அனிருத் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பாக அனிருத்தின் தந்தை அளித்த விளக்கத்தை போலீசார் ஏற்கவில்லை. எனவே அனிருத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் போலீசார்.

விரைவில் அனிருத்திடம், நேரில் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம், நிரூபிக்கப்பட்டால் அனிருத் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் மகன்தான் இந்த அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை! - சேகர் கம்முலா

சென்னை: தெலுங்கில் தான் இயக்கிய லீடர் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை என்றார் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா.

லீடர் படம் தெலுங்கில் பெரும் வெற்றியை ஈட்டிய படம். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால், அரசியல் சூழலே மாறும் என்று ஏற்கெனவே ஒரு விழாவில் சேகர் கம்முலா கூறியிருந்தார். அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் ரஜினி ஒருவர்தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

லீடர் படத்தில் ரஜினி நடித்தால் அதைவிட மகிழ்ச்சி வேறில்லை! - சேகர் கம்முலா

இந்த நிலையில் நீ எங்கே என் அன்பே படத்தின் செய்தியாளர் சந்திப்புக்காக நேற்று சென்னை வந்த சேகர் கம்முலாவிடம், ரஜினியை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்வது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேகர் கம்முலா, "இன்றைய இயக்குநர்கள் அத்தனைப் பேருக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவரை இயக்க விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா... அத்தனை சிறந்த கலைஞர், மனிதர் அவர்.

எனது லீடர் படத்தின் கதை அவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதுதான். அந்தப் படத்தை ரஜினி பார்க்க வேண்டும் என்று விரும்பி ஏவிஎம் சரவணனிடம் சொல்லி அனுப்பினேன் (லீடர் ஏவிஎம் தயாரிப்புதான்). ரஜினியும் படம் பார்த்தார். ஆனால் அவர் கருத்து என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

லீடர் பட ரீமேக்கில் ரஜினி நடித்தால் மிகப் பெரிய வெற்றி மட்டுமல்ல, அரசியல் சூழலே மாறிவிடும்.

இப்போதும் அவரை இயக்கும் பெரும் கனவு எனக்குள் இருக்கிறது. ஆனால் அவரை அணுக முடியவில்லை. உங்கள் மூலம் என் விருப்பம் அவருக்குத் தெரிய வரும் என நம்புகிறேன்," என்றார்.

சேகர் கம்முலா வெறும் பரபரப்புக்காகப் பேசுபவரில்லை. தெலுங்கு சினிமாவில் ராஜமவுலி மாதிரி மவுசு மிக்கவர். மிகச் சிறந்த படைப்பாளி. ரஜினியின் மிகத் தீவிர ரசிகரும்கூட. அவரைப் போன்ற ரசிகர்கள்தான் ரஜினியை உணர்ந்து அவருக்கேற்ற திரைக்கதையைப் படைப்பார்கள்.

சூப்பர் ஸ்டாரிடமிருந்து விரைவில் சேகர் கம்முலாவுக்கு அழைப்பு வரும் என நம்புவோமாக!

 

யு சான்று பெற்ற ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்

ஜெயம் ரவி நடிக்க சமுத்திரக்கனி இயக்கியுள்ள யு சான்று பெற்ற ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்

படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் சரத்குமார். முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் படப்பிடிப்பு, பின் தயாரிப்புப் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை போட்டிக் காட்டினர்.

யு சான்று பெற்ற ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்

படத்தைப் பார்த்த அனைவரும் எந்த கட்டும் சொல்லாமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைப்பது எளிதாகியுள்ளது.

 

டாக்டர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்!

சென்னை: மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஜீத் குமார்.

நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது அடிபட்டுக் கொள்கிறார்.

டாக்டர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்!

முன்பு ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில் டைவ் செய்யும்போது அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கியதில் காயம் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் ஷூட்டிங் முடிந்தபிறகு கடந்த செப்டம்பரில் ஆபரேஷன் செய்துகொள்வதாக கூறினார்.

படம் முடிந்தும் அவர் அறுவை கிச்சைக்குப் போகாமல், வீரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

அந்தப் படமும் வெளியாகிவிட்டது. அடுத்து கால் ஆபரேஷனுக்கு போக நினைத்த நேரத்தில்தான் இயக்குனர் கவுதம் மேனன் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.

ஏற்கனவே சூர்யாவை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை கவுதம் இயக்குவதாக இருந்து, கருத்துவேறுபாடு காரணமாக ரத்தானது.

ஒரு தர்மசங்கடமான சூழலில் தன்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகிய கவுதம் மேனனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜீத்.

இதனால் மறுபடியும் அஜீத்தின் ஆபரேஷன் திட்டம் தள்ளிப்போயுள்ளது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் அவர் பரிசோதனைக்காக டாக்டரை சந்தித்தார். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.

ஆனாலும் கவுதம் மேனனுக்கு கொடுத்த கால்ஷீட்டை தள்ளிப்போட அஜீத் விரும்பவில்லை. ஏற்கெனவே இருவரும் இணைவதாக இருந்து பின்னர் ரத்தானது. எனவே அந்த மாதிரியாகிவிடக் கூடாது என்பதால் கவுதம் மேனன் படத்தை முடித்துவிட்டு, வரும் செப்டம்பரில் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் அஜீத்.

 

கோச்சடையான் பாடல் வெளியீடு... இன்னும் உறுதிப்படுத்தாத தயாரிப்பாளர்கள்!

ரஜினியின் கோச்சடையான் பட வெளியீட்டை உறுதியாக அறிவித்த தயாரிப்பாளர்கள், பாடல் வெளியீட்டு விழா எப்போது என்பதை மட்டும் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

இவ்விழாவை பிப்ரவரி இறுதியில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இப்போது பாடல் வெளியீடு குறித்து உறுதியான தேதியை அறிவிக்காமல் மவுனம் காக்கின்றனர்.

கோச்சடையான் பாடல் வெளியீடு... இன்னும் உறுதிப்படுத்தாத தயாரிப்பாளர்கள்!

கடந்த மாதமே பாடல்களை விழா நடத்தி வெளியிடப் போவதாகக் கூறி வந்தவர்கள், எதற்காக இப்படி ஜவ்வாக இழுக்கிறார்கள் என ரசிகர்கள் சலிப்புடன் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

‘கோச்சடையான்' படம் ஏப்ரல் 11- ந்தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் மொத்தம் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒரு பாடலை ரஜினியே தமிழ், இந்தியில் பாடியுள்ளார்.