'ப்ப்பா... யார்ரா இந்தப் பொண்ணு... நயன்தாராவா ?!'

மேக்கப் இல்லாமல் சில நடிகைகளைப் பார்க்கும்போது, நடிகர் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் அடிக்கும் 'ப்ப்பா.. யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா?' என்ற கமெண்ட்தான் நினைவுக்கு வரும்.

சமீபத்தில் வெளியாகியுள்ள டாப் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் படங்களைப் பார்த்து, இணையத்தில் இப்படித்தான் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

What happened to Nayanthara?

இந்த ஸ்டில்கள் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் இறுதிநாளன்று எடுக்கப்பட்டவையாம்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோரோடு சேர்ந்து நயன்தாரா படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். இவற்றில் பொலிவிழந்த முகத்துடனும், உடல் மெலிந்த தோற்றத்துடனும் காட்சி தருகிறார் நயன்தாரா.

அவர் முன்பு படங்களில் மிகவும் பளிச்சென்று தோன்றிய படத்தையும், இந்த லேட்டஸ்ட் படத்தையும் இணைத்து, 'ப்ப்பா... யார்ரா இந்தப் பொண்ணு... நயன்தாராவா ?!' என்று சமூக வலைத் தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இரவு, பகல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துவிட்டாராம் நயன். எனவே விரைவில் கேரளாவுக்குப் போய் உழிச்சல்.. பிழிச்சல் வகை மூலிகை மசாஜ் செய்து பொலிவோடு திரும்பப் போகிறார் என்று கூடுதலாக தகவல்கள் உலா வருகின்றன.

 

ஐந்து நாளில் ஐந்து கோடி... இது காக்கா முட்டை சாதனை!

காக்கா முட்டை படத்தைத் தயாரிக்க மிஞ்சிப் போனால் ரூ 50 லட்சம் செலவழித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

அந்தப் படத்தை சர்வதேச திரைப்பட விழா எடுத்துச் செல்ல கொஞ்சம் செலவாகியிருந்தாலும், பல விழாக்களில் பரிசுகளை வென்று ஈடு கட்டிவிட்டது.

Kakka Muttai collects Rs 5 cr in 5 days

இப்போது திரையரங்குகள் மூலம் வசூல் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறதாம்.

வெளியாகி 5 நாட்களில் இந்தப் படம் ரூ 5 கோடியைக் குவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 109 திரையரங்குகளிலும், பிற பகுதிகளில் 170 திரையரங்குகளிலும் வெளியான இந்தப் படம் வெளியான வெள்ளிக்கிழமை 90 லட்சம் வசூலித்தது. சனிக்கிழமை - ரூ. 1.10 கோடி, ஞாயிறு - ரூ. 1.35 கோடி, திங்கள் - ரூ. 85 லட்சம், செவ்வாய் - ரூ. 82 லட்சம் என வசூலித்து சாதனை செய்துள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது பலரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து பல மல்டிபிளெக்ஸ்களில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டும், பெரிய திரையரங்குக்கு மாற்றப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

 

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.

மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை மைனா, கும்கி, கயல் தந்த இயக்குநர் பிரபு சாலமன் பிரம்மாண்டமாக இயக்குகிறார்.

Hollywood stunt director Roger Yuan in Dhanush Movie

எக்ஸ் மேன், ஷங்கய் நூன், பேட்மேன் பிகின்ஸ், ஜேம்ஸ் பாண்ட் சீரியஸின் ஸ்கைஃபால் போன்ற உலக புகழ் பெற்ற படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராக பணிபுரிந்த ரோஜர் யுவான் (Roger Yuan) இப்படத்தில் பிரம்மாண்டமான முக்கிய சண்டைக்காட்சிகளுக்கு பணிபுரிகிறார்.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் கம்ர்சியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகிறது.

இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் - டி.இமான் இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவு - வி. மகேந்திரன், படத்தொகுப்பு - தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு - ராகுல்.

இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

 

"சுதந்திரத்திற்காக" மோதும் ஆர்யா- விக்ரம்!

சென்னை: தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆகிடாதீங்க. பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு சில குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் தான் வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையால் பெரிய நடிகர்களின் படங்கள் அந்தத் தேதிகளில் மட்டுமே மோதுகின்றன.

பண்டிகை தினங்கள் அடிக்கடி வராது அல்லவா அதனால் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும் அந்த நாளில் இரண்டு நடிகர்களின் படங்கள் ஏன் சமயங்களில் மூன்று நடிகர்களின் படங்கள் கூட மோதுகின்றன.

Arya to Clash With Vikram

அந்த மோதலில் லேட்டஸ்ட் ஆக இணைந்து இருக்கின்றனர் நடிகர் ஆர்யாவும், விக்ரமும். ஆகஸ்ட் 15 அன்று வரும் சுதந்திர தினத்தன்று இருவரின் படங்களும் தியேட்டர்களில் வெளியாகின்றன. புறம்போக்கு என்னும் பொதுவுடமையைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. ஐ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் பத்து எண்றதுக்குள்ள.

இந்த இரண்டு படங்களும் சுதந்திர தினத்தன்று மோதவிருப்பதால் எந்தப் படம் வெற்றிபெறும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருவரின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னாவின் நடிப்பில் விஎஸ்ஓபி படம் காமெடி கலந்து படமாக்கப்பட்டுள்ளது. கோலிசோடா படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்- சமந்தா நடிப்பில் பத்து எண்றதுக்குள்ள படம் தயாராகி உள்ளது.

ஆர்யாவின் படத்தில் என்னதான் காமெடி தூக்கலாக இருந்தாலும், விக்ரமின் மிரட்டல் நடிப்பிற்கு முன் அதெல்லாம் ஒன்றுமில்லை, என்று ரசிகன் எண்ணிவிடும் அபாயமும் படத்திற்கு உள்ளது. சுதந்திர தினத்தன்று தெரிந்து விடும் யாருக்கு உண்மையான சுதந்திரம் சாரி வெற்றி என்று பார்க்கலாம்.

 

பலே பாலிமர்... தூக்கி நிறுத்தும் டப்பிங் சீரியல்கள்!

சென்னை: தமிழில் எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் நம் தாய்க்குலங்கள் விரும்பிப் பார்ப்பது ஒரு சில சேனல்களைத் தான். அதாவது நமது தாய்க்குலங்கள் மட்டுமல்ல தந்தைக் குலங்களும் விரும்பிப் பார்ப்பது சீரியல்களை மட்டும் தான். இதனை மனதில் வைத்து நேற்று வந்த புதிய சேனல்கள் கூட நல்லா கண்ணீர் விட்டு அழற மாதிரி சீரியல்களை எடுத்து காசு பார்த்து வருகின்றனர்.

Polimer Tv Introducing New Serials

காலம் காலமாக குடும்பங்களை அழவைத்து வந்த தமிழ் சீரியல்களுக்குப் போட்டியாக வடஇந்திய சீரியல்களை டப்செய்து வெளியிட்டன சில சேனல்கள். விளம்பர இடைவேளைகளில் டப்பிங் சீரியல்களை பார்த்த குடும்பத் தலைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது ஒரு டப்பிங் சீரியலையும் விடாமல் பார்த்து சாதனை புரிந்து வருகின்றனர். இந்த சாதனை எந்த அளவுக்கு சென்றது என்றால் டப்பிங் சீரியல்களை தடை செய்யுங்கள் என்று நமது சின்னத் திரை கலைஞர்கள் போராடும் அளவிற்கு, இந்த சீரியல்களுக்கு தங்கத் தமிழ்நாட்டில் வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் பாலிமர் என்ற பெயரில் ஒரு சேனல் உள்ளது எல்லோருக்கும் தெரியும் தானே அந்த சேனலைத் தூக்கி நிறுத்துவதே இந்த டப்பிங் சீரியல்கள் தான், சேனல் ஆரம்பித்து 2, 3 வருடங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பாலிமர் ஒளிபரப்பிய சில டப்பிங் சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற இப்போது அந்த சேனலை வாழ வைத்துக் கொண்டிருப்பதே இந்த சீரியல்கள்தான்.

மொத்த சீரியல்களின் எண்ணிக்கை 10 ஐ கூடத் தாண்டாது, ஆனால் ஏராளமான ரசிக, ரசிகைகள் இந்த சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். தற்போது பாலிமரில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல்களான புதுபுது அர்த்தங்கள், உறவே உயிரே, இருமலர்கள் ஆகிய மூன்று சீரியல்களும் இளம்பெண்களையும் கவரும் விதத்தில் உள்ளதால், சேனலின் டி.ஆர்.பி ரேட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

பாலிவுட் நடிகர்களுக்கு பாதுகாப்பைக் குறைக்கும் மும்பை போலீஸ்!

மும்பை: மும்பை மாநகரத்திற்கும் தாதாக்கள் உருவாவதற்கும் என்ன ஒரு ராசியோ அதே ராசிதான், தாதாக்களுக்கும் இந்தி நடிகர்களுக்கும்.

இந்திய அளவில் பல நிழல் உலக தாதாக்கள் மும்பையில் உருவாகி இன்றளவும் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அனைத்துப் போலீசாலும் தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராகிம் தனது காலத்தில் மும்பை பிரபலங்களை ஒரு ஆட்டு ஆட்டி வைத்தார்.

Mumbai crime branch to strip Bollywood celebrities of extra security cover?

தற்போது அதே போன்று தாதா ரவி புஜாரிக்குப் பயந்து மும்பை பிரபலங்களின் பாதுகாப்பை அதிகப் படுத்தியுள்ளது மும்பை காவல்துறை. நடிகர் சல்மான் கான், ஷாரூக்கான், பரா கான் மற்றும் விது வினோத் சோப்ரா ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தித் தயாரிப்பாளர் அலி மொரானியின் வீட்டைச் சுற்றி ரவி புஜாரி மற்றும் அவனது ஆட்களின் துப்பாக்கிச்சூடு நடந்தது.

அதிலிருந்தே மும்பையில் பல பிரபலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது, எனினும் தற்போது பாதுகாப்பைக் குறைக்க போலீிஸார் முடிவு செய்துள்ளனராம். இதனால் பாலிவுட் பிரபலங்களுக்கு நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் அதிகரிக்கலாம் என்று திரையுலகினர் அச்சத்தில் உள்ளனர்.

தாதா ரவி புஜாரியின் கூட்டாளிகள் பலரைப் பிடித்து விட்டதால் மிரட்டல் படிப்படியாக குறையும் என்பது போலீஸ் கணக்கு.

 

திருப்பதியில் “மங்களகரமாக” வெளியாகும் பாகுபலி பாடல்கள்!

ஹைதராபாத்: தெனாலி படத்தில் நடிகர் கமல் சொல்வாரே பயம் பயம் நின்றாலும் பயம் அமர்ந்தாலும் பயம் எங்கு திரும்பினாலும் பயம் என்று, அதைப்போன்று தற்போது இந்திய சினிமா முழுதும் பாகுபலி, பாகுபலி என்றே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது.

யாராவது தும்மினால் கூட நேற்று பாகுபலி படப்பிடிப்பில் இவர் தும்மினார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடக் கூடிய அளவிற்கு நாளுக்கு நாள் பாகுபலியின் மீதுள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Rajamouli's 'Baahubali' Audio Release june 13th in Tirupati

பாகுபலியின் சமீப செய்தி படத்தின் பாடல்களை திருப்பதியில் மங்களகரமாக வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர் படக் குழுவினர். கடந்த மே மாதம் வெளியிட வேண்டிய பாடல்கள் இன்னும் வெளியாகாமல் தள்ளிக் கொண்டே செல்கிறது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக படத்தின் பாடல் வெளியீடு திருப்பதியில் நடைபெறும் என்று படத்தின் தயாரிப்புத் தரப்பில் இருந்து செய்தி வந்திருக்கிறது.

வரும் 13 ம் தேதி ஏழுமலையானுக்கு உகந்த தினமான சனிக் கிழமையன்று பாடல்களை திருப்பதியில் வெளியிடப் போகிறாராம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

மின்னுவதெல்லாம் பெண்ணல்ல.. இதான் 'ஜிகினா'வின் கதை!

சென்னை: ஜிகினா படத்தோட பேரே கதைய சொல்லிடும், அதாவது ஜிகினா அப்படின்னா பளபளப்பான ஒரு பொருள்னு அர்த்தம்.

அதையே தனது படத்துக்கு பேரா வச்சிருக்காரு படத்தோட இயக்குனர் நந்தா பெரியசாமி. கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லாம நிறைய பேரு படம் எடுக்கிறப்ப, படத்தோட கதைக்கு ஏத்த மாதிரி ஒரு தலைப்பை வச்சதுக்காக அவரைப் பாராட்டலாம்.

Jigina Movie- Story

நாம அதிகளவில பயன்படுத்தும் சமூக வலைதளங்கள்ள நிறைய பேரு போலி முகவரியில்தான் உலாத்தறாங்க. பேஸ்புக் மற்றும் போலி முகவரி இந்த இரண்டும்தான் படத்தோட கரு.

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல"அப்படிங்கிற பழமொழிய மாத்தி "மின்னுவதெல்லாம் பெண்ணல்லன்னு" ஒரு துணைத் தலைப்போட ஜிகினா படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் நந்தா பெரியசாமி.

பேஸ்புக்ல இருக்கற பாதிபேர் உண்மைய பேசுறதில்ல, உண்மைய மறைக்கக் கூடிய ஒரு இடம்தான் பேஸ்புக் அப்படின்னு ஒரு நிலைமை இங்க எல்லோருக்கும் வந்திடுச்சி.

இதையே படத்தோட நாயகன் விஜய் வசந்த்தும் செய்றார். பேஸ்புக்ல போலி ஐடி பயன்படுத்தற பண்ற விஜய் வசந்த், அதனால சந்திக்கிற பிரச்சினைகள் தான் படத்தோட கதை.

முழுப்படத்தையும் பார்த்த லிங்குசாமி நந்தாவைப் பாராட்டியதோடு தனது திருப்பதி பிரதர்ஸ் மூலமா படத்தை வாங்கி வெளியிடவும் செய்றார்.

 

கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸானது...!

சென்னை: கோ படம் வெளியாகி நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குநர் கே.வி. ஆனந்திற்கும் நாயகன் ஜீவாவிற்கும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது கோ படம். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாக அறிமுகமான முதல் படமும் இதுதான்.

KO 2 First Look Poster Released

15 கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 2011 ல் வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்நாடு எங்கும் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து சுமார் 50 கோடி வசூலைக் குவித்த மெகா வெற்றிப்படம் தான் கோ.

கோவின் தெலுங்கு பதிப்பான ரங்கம் ஆந்திராவில் 100 நாட்களைக் கடந்தது. இவ்வளவு பெரிய வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பாபி சிம்ஹா மற்றும் டார்லிங் படப்புகழ் நிக்கி கல்ராணி நடிப்பில் தயாராகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் மட்டும் மீண்டும் படத்தில் இடம்பெற்றிருக்கிறார், படத்தை இயக்குவது இயக்குநர் விஷ்ணுவர்தனின் உதவியாளர் சரத். இந்தப் படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. புதிய நடிகர்களுடன் தயாராகும் கோ 2 வில் பாபி சிம்ஹா மீண்டும் ஒரு அதிரடியான தாதாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

"கோ" வை மிஞ்சுமா கோ 2 பார்க்கலாம்...

 

குஷ்பு தயாரிக்கிறார்... வைபவம் நடிக்கிறார்... விரைவில் ஒரு ஜாலி படம்!

சென்னை: நடிகை குஷ்பூ வைபவ்- ஐஸ்வர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை தனது அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கிறார்.

வழக்கம் போல இந்தப் படத்தை இயக்குவது அவரது கணவர் சுந்தர்.சி அல்ல, மாறாக புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கலாம் என்று ஒரு பேச்சு தற்போது கோடம்பாக்கத்தில் அடிபடுகிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த வைபவ், மங்காத்தா படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

Actress Kushboo  To Produce A New Movie

மங்காத்தா படத்தின் மூலம் வெறும் பெயர் மட்டும்தான் கிடைத்தது, புதிய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பின் சோலோ ஹீரோவாக வைபவ் நடித்து வெளிவந்த கப்பல் திரைப்படத்தைப் பார்த்த, இயக்குநர் ஷங்கர் கப்பல் படத்தால் கவரப்பட்டு இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டார். கப்பல் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

கப்பல் படத்திற்குப் பின் குஷ்பூ தயாரிக்கும் புதிய படத்தில் வைபவிற்கு வாய்ப்பு வந்தது, எனினும் அது தள்ளிப் போனதால் வைபவ் சுந்தர்.சியின் ஆம்பள படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார். இதில் கவரப்பட்ட குஷ்பூ தற்போது தனது அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வைபவை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

ஏற்கனவே தனது நிறுவனம் சார்பில் கிரி, ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, நகரம் மறுபக்கம் போன்ற படங்களைத் தயாரித்த குஷ்பூ வளர்ந்து வரும் ஹீரோவை வைத்து ஒரு படம் தயாரிப்பது இதுவே முதல்முறை.

இந்தப் படத்தில் வைபவிற்கு ஜோடியாக ரம்மி படப் புகழ் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்த பின்னர் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகுமாம்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் குஷ்பூவுக்கு கெஸ்ட்ரோல் இருக்குமா...!

 

புலிக்கு பின் விடுப்பு.. குடும்பத்தோடு லண்டன் பறக்க உள்ளார் இளைய தளபதி!

சென்னை: நடிகர் விஜய் தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தாரோடு, லண்டனிலுள்ள மாமியார் வீட்டுக்கு விடுமுறையை செலவிட செல்ல உள்ளாராம்.

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Actor Vijay is planing to go to London

நடிகர் விஜய் இப்படத்திற்கான டப்பிங் பேசுவது, பாடல் பாடுவது என அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டதால், குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

விஜய், மாமியார் வீடு லண்டனில் உள்ளது. எனவே, குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க, விஜய் அங்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் மகன் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார்.

அந்த பள்ளிக்கு கோடை விடுமுறை ஜூன் 30வரை உள்ளது. எனவே, அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் லண்டனில் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோடை விடுமுறையை முடித்துவிட்டு ராஜா ராணி திரைப்பட புகழ், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன், விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜய் லண்டனிலிருந்து திரும்பி வந்தபிறகு இதற்கான வேலைகள் நடைபெறும்.

 

தயாரிப்பு மட்டுமல்ல... தியேட்டர்களையும் குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா

சென்னை: நடிகர் சூர்யா, கார்த்தியின் படங்களை மட்டுமே தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கப் போகிறாராம். முன்பு மாதிரி தமிழ் சினிமாவின் நிலை தற்போது இல்லை, படம் தயாரிப்பதில் ஆரம்பித்து வெளியிடும் வரை தயாரிப்பாளரின் நிலை கத்தி மீது நடப்பது போன்று உள்ளது.

Producer Ganavelraja To Take Theaters In Lease

மாறிவரும் உலகில் ஒரு படம் இரண்டு வாரம் ஓடினாலே பெரிய வெற்றிப்படம் என்று விளம்பரப் படுத்தும் நிலையில் தான் தற்போதைய தமிழ் சினிமா உள்ளது. பல பிரச்சினைகளையும் தாண்டி படத்தை வெளியிடும் போது போதுமான அளவு தியேட்டர்கள் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் தியேட்டர் உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டமாக உள்ளது.

பல சமயங்களில் இதனால் நல்ல தரமான படங்கள் கூட தியேட்டரை விட்டு விரைவிலே எடுக்கப் பட்டு விடுகின்றன. இந்த நிலை தொடர்வதை பலபேரும் விரும்பவில்லை என்றாலும், யாரும் இதற்குத் தீர்வு காணாத நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இதற்கு முடிவு காணும் விதமாக தியேட்டர்களை தற்போது குத்தகைக்கு எடுக்க உள்ளார்.

வாரத்துக்கு ஒருபடம் வீதம் தனது படங்களை வெளியிட உள்ளார், இதனைத் தவிர மற்றவர்களின் தயாரிப்பில் வெளிவரும் சிறந்த படங்களையும் வாங்கி தனது பேனரில் சொந்தமாக வெளியிடப் போகிறாராம்.

 

சண்டை போடாதீர்கள் – ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட சல்மான்!

மும்பை: சர்ச்சைகளுக்கு மட்டுமே சொந்தக் காரரான சல்மான் திடீரென்று எடுத்த ஒரு நடவடிக்கை காரணமாக, இந்தித் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இனிமேல் சண்டையிடக் கூடாது என்று அன்புக் கட்டளையை தனது ரசிகர்களுக்கு இட்டுள்ளார்.

நான் ஷாரூக் மற்றும் அமீரை எனது நண்பர்களாகத் தான் பார்க்கிறேன், அவர்களும் அப்படித்தான் என்மீது பாசம் காட்டுகின்றனர். எங்கள் மூவரின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும், சமூக வலைதளங்களின் மூலம் சண்டை போடுவதையும் நிறுத்த வேண்டும். சமூக வலைதளங்களின் மூலம் என்னைத் தொடர முடியாத அளவுக்கு நீங்கள் உங்கள் வேளைகளில் பிஸியாக இருந்தால் எனக்கும் சந்தோஷமே என்று கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் மூவரும் நண்பர்கள் எனும்போது இந்த 1,2,3 என்ற விளையாட்டு, நீங்கள் அடித்துக் கொள்வதை எனது நண்பர்களான அமீர் மற்றும் ஷாரூக் கூடஇதனை விரும்புவதில்லை. இதனைப் புரிந்து கொண்டு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் தினசரி சமூக வலைதளங்கள் மூல அடித்துக் கொள்வதும், இந்த சண்டைகளை இந்திய அளவில் முன்னிறுத்துவதும் தினசரி நடக்கிறது. சல்மான் போல அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தங்கள் ரசிகர்களை மாற்ற முயல்வார்களா என்ற கேள்வி தற்போது தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.

 

ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு... நம்பிக்கையுடன் காத்திருக்கும் த்ரிஷா!

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை. திருமணத்துக்கு முன் எப்படியாவது சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிடுவேன் என்று சபதமே போட்டிருந்தார்.

ஆனால் அந்த சபதம் நிறைவேறும் முன்பே அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. காலத்தின் முடிவை யாரால்தான் முன்கூட்டி கணிக்க முடியும். அந்த திருமணம் நின்றே போனது.

Trisha hopefully waits for a call from Rajini

ஆக ரஜினியுடன் த்ரிஷா ஜோடி சேரும் வாய்ப்பு இன்னும் அருகிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது.

இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் ரசிகர்கள் இணையதளம் மூலம் கேட்டிருந்தனர்.

எந்த நடிகருடன் நடிக்காததற்காக வருந்துகிறீர்கள்? - இது ரசிகர்கள் கேள்வி.

அதற்கு பதிலளித்த த்ரிஷா, "ரஜினி ஜோடியாக நடிக்காததற்காக வருத்தப்படுகிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறேன். மற்ற யாரையும்விட அவருடைய அதி தீவிர விசிறியான எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிட்டாததை ஏற்க முடியவில்லை," என்றார்.

ரஜினியின் புதிய படத்துக்கு இன்னும் யார் ஹீரோயின் என்று அறிவிக்காமல் உள்ளனர். த்ரிஷாவின் கோரிக்கை தயாரிப்பாளர், இயக்குநர் காதுகளில் விழுமா?

 

சரத்குமாருக்கு கண்டனம்... நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து விலகினார் வாகை சந்திரசேகர்!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என சங்கத்தின் பொருளாளர் வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக தற்போது சங்க பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:‘

Chandrasekar condemns Sarathkumar and quits Nadigar Sangam election

‘ஒவ்வொரு நடிகருக்கும் நடிகர் சங்கம் தாய் வீடு. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. நடிகருக்கு அரசியல் என்பது அவருடைய சுதந்திரம். நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளை கேட்க உரிமை உண்டு. ஆனால், அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

சங்கத்தின் தலைவரான சரத்குமார், ஜெயலலிதாவின் அரசியலை புகழ்ந்து தள்ளினார். துதி பாடினார். அதோடு நிற்கவில்லை. சட்டப் பேரவையிலும், பொதுக் கூட்டங்களிலும் கருணாநிதியைத் தாக்கிப் பேசினார்.

நான் கருணாநிதியிடம் வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் இவற்றை சீண்டிப் பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. எனவே நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.''

இவ்வாறு அந்த அறிக்கையில் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

 

நானும் ரவுடிதான்

சென்னை: தனுஷ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வந்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது பலருக்கும் உள்ள கேள்வி.

‘Naanum Rowdy Dhaan’ shooting completed

காரணம் ரொம்ப சிம்பிள்... நயன்தாரா!

அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அந்தப் படம் அதிக கவனம் பெற்றுவிடும். அதுவும் சாதாரண படத்தில் ஒப்பந்தமாகிறார் என்றால் கூடுதல் கவனம் கிடைக்கும்.

ராஜா ராணி படம் நினைவிருக்கிறதா.. ஒரு புதுமுக இயக்குநரின் படம் அது. ஆர்யா ஹீரோ என்பதைத் தவிர எந்த முக்கியத்துவமும் இல்லாத அந்தப் படத்துக்கு, நயன்தாராதான் முக்கிய பப்ளிசிட்டியாக அமைந்தார். ஆர்யாவுடன் காதல், கல்யாணம் என இயக்குநரே கதை கட்டி செய்தி அனுப்ப, அனைத்தையும் அனுமதித்தார் நயன்.

இதுதான் நானும் ரவுடிதான் படத்திலும் நடந்தது. நயன்தாராவுக்கும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக எழுந்த வதந்திகளே படத்துக்கு இலவச விளம்பரமாக அமைந்தது.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று இயக்குநர் விக்னேஷைக் கட்டிப்பிடித்தபடி போஸ்கொடுத்து நயன்தாரா எடுத்து வெளியிட்ட படங்கள் இன்னும் பரபரப்பைக் கிளப்பின.

ஆரம்பத்தில் நயன்தாரா இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் மீடியாக்களின் கவனத்தைக் கவரவில்லை. ஆனால் விக்னேஷும், நயனும் காதலிக்கிறார்கள் என்று எழுந்த செய்தியால் நாள்தோறும் செய்திகளில் படத்தின் ஏதாவது ஒரு செய்தி வெளியானது. இது உண்மையில் திட்டமிட்டு செய்த செயலா அல்லது படத்திற்கான விளம்பரமா என்பது தெரியவில்லை.

பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனுஷுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பாக படத்தைத் தயாரித்துள்ளார். படத்தில் ராதிகா, பார்த்திபன் மற்றும் ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

காதல் மற்றும் காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படப்பிடிப்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆங்.. படத்துல ஹீரோ விஜய் சேதுபதிங்க. நயன் கிளப்பிய விளம்பரப் புயலில் பாவம் அவரு காணாம போயிட்டாரு!

 

'உன் அம்மா, சகோதரி, மனைவி, தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் இருக்கு!' - விசாகாவின் பதிலடி

பேஸ்புக்கில் தன்னுடைய மார்பழகை வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார் நடிகை விசாகா சிங். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் இருக்கு என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் நாயகியாக நடித்தவர் விசாகா சிங். இப்போது ‘வாலிப ராஜா' படத்தில் நடித்து வருகிறார்.

Vishaka Singh's bold comment goes viral in FB

இந்நிலையில், விசாகா சிங், சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் உள்ள வாசகத்தை அந்த புகைப்படத்துக்கு கமெண்டாக போட்டிருந்தார்.

இந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவர் கூறிய வாசகத்தை பாராட்டி கமெண்டை வெளியிட்டு வந்தனர். அப்போது, ஒரு ரசிகர் அவரது மார்பு அழகாக இருப்பதாக கமெண்ட் போட்டிருந்தார்.

இதைப் பார்த்ததும் கொதித்துப்போன விசாகா சிங், அவருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டார்.

Vishaka Singh's bold comment goes viral in FB

அதில், "உன்னுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை புகைப்படத்தை முதலில் நீக்கு. தைரியம் இருந்தால் உன்னுடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் போட்டு, இந்த மாதிரி கருத்துக்களைப் பதிவிடு. என்னுடைய மார்பு அழகுதான். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி கமெண்ட் அடிப்பாயா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசு. இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்," என்று அதிரடியாகக் கூறியிருந்தார்.

இந்த பதிவு போட்ட சில மணி நேரங்களிலேயே இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் தொடங்கிவிட்டது. உடனே, தன்னுடைய புகைப்படத்தையும், அந்த கருத்தையும் விசாகா சிங், வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

"இது தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதற்காக அந்த பதிவை நீக்கிவிட்டதாக" அவரே தெரிவித்துள்ளார்.

விசாகா சிங்கின் கருத்துக்கு இணைய உலகில் ஏக வரவேற்பு.

 

விவாகரத்து கேட்கிறார் 'வெயில்' நாயகி பிரியங்கா.. குடும்ப நல நீதிமன்றத்தில் மனு!

திருவனந்தபுரம்: கணவரிடம் விவாகரத்து கேட்டு நடிகை ப்ரியங்கா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் தனது இணையதளப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சைபர் க்ரைம் வழக்கு ஒன்றையும் கணவர் மீது தொடர்ந்துள்ளார்.

மிகப் பெரிய வெற்றி பெற்ற வெயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து தொலைபேசி, செங்காத்து பூமியிலே போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தார்.

Veyil heroine Priyanka Nair files divorce papers

மலையாளத்தில் இவர் நடித்த "விலாபங்கள்க்கு அப்புறம்" என்ற படம் இவருக்கு 2008-ம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை தேடித்தந்தது.

ஜெயராமுக்கு ஜோடியாக "நமஸ்த கேரளம் பி.ஓ" மற்றும் மோகன்லாலுடன் கதாநாயகியாக "இவிடம் சொர்க்கமானு" என்ற படத்திலும் நடித்து புகழ் பெற்றார். 2012-ம் ஆண்டு மே23-ந் தேதி தமிழ் பட இயக்குனர் லாரன்சுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடந்தது. இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற 3 வயது மகன் உள்ளார்.

நடிகை பிரியங்காவுக்கு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்கு அவரது கணவர் லாரன்ஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நடத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா தற்போது கணவரை பிரிந்து, மகனுடன் சொந்த ஊரான வாமனாபுரத்தில் குடும்ப வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இப்போது ஜாலம், கும்பசாரம் ஆகிய இரு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விவாகரத்து கேட்டு நடிகை பிரியங்கா, திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் தனது இணையதளப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக கணவர் லாரன்ஸ் மீது ஐ.டி சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுமங்காடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

சான் ஓசேயில் நடக்கும் ஃபெட்னா தமிழ் விழாவில் மாதவன் - எமி ஜாக்ஸன்!

சான் பிரான்சிஸ்கோ: ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 2015-ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் நடிகர் மாதவன்.

கனடா மற்றும் வட அமெரிக்காவில் செயல்படும் தமிழ் சங்கங்களின் தலைமை அமைப்பாகத் திகழ்வது ஃபெட்னா.

Madhavan, Amy Jackson in Fetna 2015

ஆண்டுதோறும் இந்த அமைப்பின் சார்பில் அமெரிக்கா அல்லது கனடாவில் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவில் தமிழ் சமூகத்தின் ஆளுமைகள் பலரும் பங்கேற்பார்கள். இலக்கிய, நாடக, இசை, சினிமா உலகைச் சேர்ந்த பலரும் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக தமிழரின் நாட்டுப் புறக் கலைகள், தொன்மையான பறை இசை போன்றவற்றுக்கு இந்த விழாவில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இந்த ஆண்டு ஃபெட்னா விழா கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் ஆடிட்டோரியத்தில் பிரமாண்டமாய் நடக்கிறது.

ஜூலை 2-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவின் முக்கிய விருந்தினராக, இலங்கையின் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொள்கிறார். திரையுலகிலிருந்து நடிகர் மாதவன், நடிகை எமி ஜாக்ஸன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்க, நடிகை ஜெயஸ்ரீ, பாடகி மகிழினி மணிமாறன், பாடகர்கள் ஆலாப் ராஜு, ஹரிசரண் உள்ளிட்டோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தவிர, பல்வேறு தமிழறிஞர்கள், சிறப்புத் திறனாளர்கள் சொற்பொழிவாற்றவிருக்கிறார்கள்.

ஃபெட்னா தமிழ்விழா தொடர்பான பல்வேறு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துடன் தொடர்பிலிருங்கள்.

 

சந்தானத்துக்கு கடைசி நேரத்தில் கை கொடுத்த உதயநிதி

சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தை கடைசி நேரத்தில் தனது பேனரில் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சந்தானமும்-உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள். உதயநிதி அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி'யிலிருந்து, இப்போது வெளிவந்த ‘நண்பேன்டா' படம் வரை உதயநிதியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் சந்தானம்.

Udhayanidhi to release Inimey Ippadithaan

அந்த நன்றிக்கு கைமாறு செய்யும் வகையில் உதயநிதி தற்போது சந்தானத்துக்கு கைகொடுத்து உதவியுள்ளார்.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்' படம் இந்த வாரம் வெளியாகிறது. இந்தப் படத்தை சந்தானம் தனது சொந்த நிறுவனமான ஹேன்ட் மேட் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வராத நிலையில், சந்தானமே வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார் சந்தானம்.

இந்நிலையில், ‘இனிமே இப்படித்தான்' படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறார்.

சொந்தப் படம் எடுத்தாலும், அதை தனியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் புரிந்து, தன் கட்டுப்பாட்டில் உள்ள அரங்குகளில் படத்தை வெளியிட்டு உதவுகிறார் உதயநிதி.

 

சார்மிக்கு வீட்டை விற்ற பிறகுதான் ஆர்த்திக்கு சரிவுகாலம் தொடங்கியதா?

ஹைதராபாத்: சமீபத்தில் மறைந்த தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கியுள்ளார் நடிகை சார்மி.

பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்த ஆர்த்தி, அதற்கு முன்பே தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார்.

Charmi reveals unknown moments with aarthi agarwal

அந்த வீடு அதிர்ஷ்டத்தின் வாசலாக அமைந்தது ஆர்த்திக்கு. வீட்டின் ராசியோ என்னவோ தொடர்ந்து பல பெரிய படங்கள் வந்து குவிந்தது அவருக்கு. முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஆர்த்தி என்ன காரணத்தினாலோ அந்த வீட்டை நடிகை சார்மிக்கு விற்றுவிட்டார்.

அதை வாங்கிய பிறகுதான் நடிகை சார்மி முன்னணி நடிகையாக மாறினாராம்.

டோலிவுட்டின் பிஸியான நடிகையாக இப்போதும் திகழ்கிறார் சார்மி. தொடர்ந்து பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கின் மிகப்பெரிய இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலட்சுமி என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், அதில் சார்மியின் முக்கியத்துவமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எல்லாம் இந்த வீட்டை வாங்கிய ராசிதான் என்றும் கிசுகிசுக்கிறார்கள் தெலுங்கு படவுலகில்.

ஆனால் இந்த வீட்டை விற்ற ராசிதான், படங்கள் சரிந்ததில் தொடங்கி மரணம் வரை ஆர்த்தியை விரட்டிவிட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது டோலிவுட்டில்!

 

தலைவன் இருக்கிறான்... கமலின் புதிய படத் தலைப்பு

தூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் தயாரித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு தலைவன் இருக்கிறான் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இந்தி பதிப்புக்கு அமர் ஹைன் என்று தலைப்பிட்டுள்ளார்.

கமல் தற்போது ‘தூங்காவனம்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Kamal's new movie title Thalaivan Irukkiran

இப்படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம் தமிழ், இந்தியில் உருவாகிறது. தமிழ்ப் படத்துக்கு ‘தலைவன் இருக்கிறான்' என்ற தலைப்பையும், இந்தி வடிவத்துக்கு ‘அமர் ஹைன்' என்ற தலைப்பையும் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.