செட்டியார்களை இழிவுபடுத்துகிறதா புலிவேஷம்?


செட்டியார்களை இழிபடுத்துவது போல புலிவேஷம் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் படத்தின் நாயகன் ஆர்கே.

சேலத்தில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மற்றும் அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், "புலிவேசம் படத்தில் செட்டியார் இன மக்களை இழிவுப்படுத்தி பேசும் காட்சிகளை உடனே நீக்க வேண்டும்" என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், "யாரையும் இழுவபடுத்தும் நோக்கமே நமக்கில்லை. படத்தில் கதைச் சூழலுக்கேற்பவே பாத்திரங்களும் வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஒரு சினிமாவாக மட்டும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
 

விறுவிறு மங்காத்தா புக்கிங்: திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி


மங்காத்தா முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் படுவேகத்தில் நடந்து வருகிறது.

அஜித்தின் 50வது படமான மங்காத்தா நாளை(31-ம் தேதி) ரிலீஸ் ஆகிறது. முதல் நாளே தல படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து திரையரங்கு உரிமையாளர்கள் பூரித்துப் போயுள்ளனர். அட ஆன்லைன் புக்கிங்கையும் தல ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. அங்கும் செம் புக்கிங் தான்.

ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியாவுடன் சேர்ந்து சன் பிக்சர்ஸ் மங்காத்தாவை வினியோகம் செய்துள்ளது. நாளை தமிழகத்தில் 300 திரையரங்குகளில் மங்காத்தா திரையிடப்படுகிறது. நாளை ரம்ஜான், மறுநாள் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் வருவதால் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆன்ட்ரியா, அஞ்சலி, லக்ஷ்மி ராய், பிரேம்ஜி அமரன், வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இருப்பினும் தல தான் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து கலக்கவிருக்கிறார்.
 

ஜெய்ப்பூரில் ஒட்டக சவாரி செய்த அசின்!


இந்திப் படப்பிடிப்பின்போது ஜெய்ப்பூரில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்துள்ளார் நடிகை அசின்.

இந்தியாவின் பிங்க் சிட்டி என்று புகழப்படும் ஜெய்ப்பூருக்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் அசின். போல்பச்சன் எனும் இந்திப் படத்துக்காக அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில், ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஒட்டக சவாரியை அனுபவித்தார்.

இந்த அனுபவம் குறித்து பின்னர் அசின் பேசுகையில், "படப்பிடிப்புக்காகத்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இயக்குனர் ரோகித்ஷெட்டி, ஜெயப்பூர் பகுதியைச் சுற்றி பார்க்க வருமாறு அழைத்தார். எனக்கும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

பல்வேறு பகுதிகளுக்குச் சென்றேன். ஒட்டகம் மற்றும் யானையில் சவாரி செய்தும் இடங்களை சுற்றி பார்த்தேன். யானையை விட ஒட்டக சவாரி வித்தியாச அனுபவமாக இருந்தது. ஜெய்ப்பூரில் ஷாப்பிங் செய்ய எக்கச்சக்கமாக உள்ளது," என்றார்.

விட்டால் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பிஆர்ஓ ஆகிவிடுவார் போலிருக்கிறது
 

ஓவர் ஆக்டிங் கொடுக்கிறார் அசின்-ஜெனிலியா கடுப்புத் தாக்குதல்!


காக்க காக்க தெலுங்கு ரீமேக்கில் அசின் ஓவர் ஆக்டிங் செய்து கெடுத்திருக்கிறார் என்று இந்தி காக்க காக்கவில் நடித்த ஜெனிலியா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடித்துள்ளனர். தெலுங்கு ரீமேக்கில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அசின் நடித்துள்ளார்.

அன்மையில் இந்தி காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாடல் சிடி வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த அசின் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஜெனிலியாவின் நடிப்பை தாக்கிப் பேசினார்.

நான் தெலுங்கில் கஷ்டப்பட்டு நடித்தேன். கதாபாத்திரமாகவே வாழ்ந்த உணர்வு இருந்தது. ஆனால் ஜெனிலியா உயிரின் உயிரே பாடல் காட்சியை சொதப்பியுள்ளார். பாடலை கொலை செய்வது போல நடித்து கெடுத்துள்ளார் என்றார் அசின்.

அப்படியா சங்கதி இதோ வாரேன் என்று வரிஞ்சுக் கட்டிக் கொண்டு வந்த ஜெனிலியா கூறியதாவது,

தமிழ் காக்க காக்க படத்தில் ஜோதிகா அபாரமாக நடித்திருந்தார். அதில் அவர் ரொம்ப அழகாக இருந்தார். ஆனால் அதன் தெலுங்கு ரீமேக்கில் அசின் ஒரே சொதப்பல். ஓவர் ஆக்டிங் பண்ணி கதாபாத்திரத்தையே கெடுத்துவிட்டார். ஜோதிகா நடிப்பை காப்பியடித்து நடித்திருக்கிறார்.

ஆனால் நான் இந்தியில் எனக்கே உரிய ஸ்டைலில் நடித்துள்ளேன். யாரையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார்.

இதைப் பார்த்தா ஏதோ குழாயடியில உக்காந்து காபி சாப்டுக்கிட்டே அடிதடியைப் பார்த்த 'எபக்ட்' கிடைக்குதுல்ல?!

Actress Asin and Genelia finds fault of one another's acting in the remake of Tamil film Kakka Kakka. Asin did the lead role in telugu remake while Genelia in Hindi.
 

புலிவேஷம் - திரைப்பட விமர்சனம்


நடிப்பு: ஆர்கே, கார்த்திக், சதா, திவ்யா பத்மினி, கஞ்சா கருப்பு, இளவரசு
ஒளிப்பதிவு: கருணாமூர்த்தி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பிஆர்ஓ: ஜான்
இயக்கம்: பி வாசு
தயாரிப்பு: ஆர் கே வேர்ல்ட்ஸ்

எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களுக்குப் பிறகு ஆர்கே நாயகனாக நடித்து வந்துள்ள படம் புலிவேஷம். பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆரம்ப காட்சிகள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தன என்றால் மிகையல்ல. குறிப்பாக அந்த 5 நிமிட டைட்டில்.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பளிச் பிளாஷ்பேக் என்ற வித்தியாசமான படமாக்கலைப் பயன்படுத்தியிருக்கிறார் வாசு.

முதலாளி இளவரசுவின் மகள் திவ்யாவை உயிராக மதிக்கும் வேலைக்காரன் முனியன் (ஆர்கே). திவ்யாவைத் தொடும் கைகள் அவரது தந்தையுடையது என்றாலும் மறித்து திருப்பியடிக்கத் தயங்காதவன். அதேநேரம் இது உண்மையான பாசம், காதலில்லை.

ஆனால் இதை தவறாக சித்தரித்து முனியனை வீட்டைவிட்டே விரட்டக் காரணமாகிறாள் இளவரசுவின் வைப்பாட்டி. ஊரைவிட்டே செல்லும் முனியனுடன், அவனுக்கே தெரியாமல் பஸ் ஏறி விடுகிறாள் திவ்யா. பஸ் சென்னைக்கு வந்த பிறகுதான் திவ்யாவும் வந்திருப்பது முனியனுக்கு தெரிகிறது. பதறிப் போய் அவளை மீண்டும் கிராமத்தில் கொண்டுவிட முடிவு செய்கிறான் முனியன். அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது.

பெரிய விஐபிக்களுக்காக பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் எம்எஸ் பாஸ்கர், மன்சூரலிகான் கும்பல் திவ்யாவையும் கடத்தப்பார்க்கிறது. ஆனால் அந்த நேரம் திவ்யா விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவள் என்பதால் காரிலிருந்தே உருட்டிவிட்டுவிடுகிறார்கள். இதில் தலையில் அடிபட்டு நினைவிழக்கிறாள் திவ்யா. அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான் முனியன். சிகிச்சைக்கு லட்ச லட்சமாய் பணம் தேவைப்பட, வேறு வழியின்றி அடியாளாக மாறுகிறான் முனியன்.

திவ்யா பிழைத்தாளா... முனியன் அவளை கிராமத்துக்கு கொண்டு போய் விட்டானா? என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் பாதியை வித்தியாசமான அமைத்த இயக்குநர் வாசு, இரண்டாம் பாதியில் தனது சின்னத்தம்பி, காக்கைச் சிறகினிலே பாணிக்குத் தாவிவிட்டார். ஆனாலும் சுவாரஸ்யமாகவே கொண்டுபோகிறார்.

எல்லாம் அவன் செயல், அழகர் மலைக்குப் பிறகு ஆர்கே முழு நீள நாயகனாக வந்திருக்கும் படம் இது. முதல் இரு படங்களை விட நடிப்பில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ள படம் இது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது சண்டைகள் நம்பும்படி அமைக்கப்பட்டுள்ளன.

நடு இரவில் மரத்தின் மேல் நடக்கும் அந்த சண்டைக்காட்சி அசத்தல். படத்தில் இரு நாயகிகள் என்றாலும், அதிக ரொமான்ஸ் காட்சிகளை வைத்து சங்கடப்படுத்தாதது ஆறுதல்.

ஒரு பக்கம் கூட்டாளிகள் கொல்லப்பட, இந்தப் பக்கம் திவ்யாவை பத்திரமாக அப்பாவுடன் சேர்க்க வேண்டிய இக்கட்டான சூழலை உணர்ந்து ஆர்கே கண்ணீர் வடிக்கும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

சதா நாயகி என்றாலும் பெரிய வேலையில்லை. படத்தில் அவர் ரகசிய போலீசாய் வந்து ஆர்கேயின் ரகசியங்களை வேவு பார்க்கிறார். தோற்றம், நடிப்பு இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

திவ்யா பத்மினியின் தோற்றம், நடிப்பு இரண்டுமே ஓகே.

போலீஸ் ஆபீஸராக வரும் கார்த்திக் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால், அவர் இந்த ரவுடிகளை நீங்கதான் முடிச்சுக் கொடுக்கணும் என ஆர்கேவிடம் சரணடைவது வேடிக்கை.

இளவரசு கஞ்சா கருப்பு, ஆசிஷ் வித்யார்த்தி என அனைவரும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. குறிப்பாக அந்த வாரேன் வாரேன் பாடல் உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது.

கருணாமூர்த்தியின் ஒளிப்பதிவு அருமை. ஸ்டன்ட், எடிட்டிங் இரண்டுமே குறிப்பிட்டுச் சொல்லப்படும் அளவுக்கு உள்ளன.

பல காட்சிகளில் வாசுவின் அனுபவ முத்திரை தெரிகிறது. ஆனால் இத்தனை நீளமாக படத்தை இழுக்காமல், இன்னும் நச்சென்று, வேகமான படமாகக் கொடுத்திருந்தால் புலிவேஷம் ரேஞ்ச் வேறுமாதிரி இருந்திருக்கும்.

ஆனாலும் இப்பொழுது வருகிற காமா சோமா படங்களுக்கு இந்த புலிவேசம் எவ்வளவோ பரவாயில்லை. ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்!
 

3 பேர் உயிரை காப்பாற்ற பெண் வக்கீல்கள் 4வது நாளாக உண்ணாவிரதம்- டி.ராஜேந்தர், பாரதிராஜா நேரில் ஆதரவு


சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நதிமன்ற பெண் வக்கீல்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இவர்களின் இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நடிகர் டி.ராஜேந்தர், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரது தண்டனையை குறைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற பெண் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் கடந்த 26-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று அவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. கடந்த 3 நாட்களில் தண்ணீர் மட்டும் அருந்துவதால் அவர்கள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டனர். உட்கார முடியாமல் படுத்தபடி இருந்தனர். அவர்களின் உண்ணாவிரதத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலை லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் மன்சூர் அலிகான், கருணாஸ், பாடலாசிரியர் முத்துக்குமார், குன்னங்குடி அனிபா ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

நேற்று மாலையில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் போராட்டம் வெற்றிபெற வாழ்த்தினர்.

பாரதிராஜா நேரில் ஆதரவு:

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை எப்போதும் தீர்வாகாது. தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டம் தொடரட்டும், வெற்றி பெறட்டும் என்றார்.

மேலும், உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். தமிழக அரசை வலியுறுத்தியும், 3 பேர்களை காப்பாற்றக்கோரி இறந்த செங்கொடியின் கனவை நனவாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியும், தூக்கு கயிற்றின் முன்னால் நின்றும் போராட்டங்களை நடத்தினர்.
 

சாமி கும்பிடறேன்... டிஸ்டர்ப் பண்ணாதீங்க! - ஸ்ரேயா


திருமலையில் சாமி கும்பிட வந்த தன்னை ரசிகர்கள் சூழந்து கொண்டதால் டென்ஷனான ஸ்ரேயா, சாமி கும்பிட வந்த என்னை ரசிகர்கள் தொந்தரவு செய்யலாமா என்று கேட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா தனது தாயாருடன் திருமலைக்கு சாமிகும்பிட வந்தார். ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்ற அவர், பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அவருக்கு தீர்த்த பிரசாதமும், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரேயா வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். அவரிடம் கைகுலுக்க முயன்றனர். உடனே ரசிகர்களைப் பார்த்து ஸ்ரேயா கும்பிட்டார். கைகளை உற்சாகத்துடன் ஆட்டினார். ஆனாலும் ரசிகர்கள் நெருக்கியடித்தனர்.

உடனே, "திருப்பதி கோவிலுக்கு வந்தால் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. வருடத்துக்கு 2 அல்லது 3 முறை இங்கு வருவேன். அமைதியாக சாமி கும்பிட வந்துள்ளேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்," என்று கேட்டுக் கொண்டார்.
 

கொரிய திரைப்பட விழாவில் பார்த்திபன் படம் மேல் விலாசம்!


புகழ்பெற்ற கொரிய திரைப்பட விழாவில் திரையிட பார்த்திபன் நடித்த மேல் விலாசம் படம் தேர்வாகியுள்ளது.

இயக்குநர் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ள படம் மேல் விலாசம். மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.

கொரியாவில் ஆண்டுதோறும் பூசோன் நகரில் சர்வதேச திரைப்பட நடக்கிறது. இந்த விழாவில் சிறப்புத் திரையிடலுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'எ விண்டோ ஆன் ஆசியன் சினிமா' என்ற பிரிவில் இந்தப்படம் திரையிடப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து வரும் திரைப்பட கலைஞர்கள் இந்தப் படத்தை பார்வையிடுகின்றனர்.

பூசோன் திரைப்பட விழாவில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண கூட்டம் குவிந்ததில் டிக்கெட்டுகள் தீர்ந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போது அடுத்த தமிழ்ப் படமாக மேல் விலாசம் தேர்வாகியுள்ளது.
 

நயன்தாரா - பிரபு தேவா மும்பையில் ரகசிய திருமணமா?


நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்துவிட்டதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

நயன்தாராவை மணப்பதற்காகவே முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. சிலர் இந்தத் திருமணம் கொச்சியில் நடப்பதாகக் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால், ரம்லத்துக்கும் தனக்கும் பிறந்த மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக பிரபுதேவாவுக்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
 

பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்: வைரமுத்து வேண்டுகோள்


பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கு டெல்லிக்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, தூக்கு மேடையின் விளிம்பில் நிற்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று தமிழர்களுக்காக உணர்வுள்ள உலக தமிழகர்கள் இதயம் உடைந்தும் கண்கலங்கியும் நிற்கிறார்கள்.

உலக தமிழர்களின் மனிதாபிமான தவிப்பையும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைக்கால அளவையும் கருத்தில் கொண்டால், இந்திய குடியரசுத் தலைவர் இன்று கூட கருணை காட்டலாம்.

அரசியல் என்ற வட்டம் தாண்டி மனிதாபிமானம் என்ற பெருவெளியில் நின்று இதை அணுக வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பிட்ட இந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், மரண தண்டனை என்ற சட்டக்கொலையையே உலகமெங்கும் நிராகரிக்க வேண்டும்; நீக்கிவிட வேண்டும் என்பதைத்தான் நாகரீக சமுதாயம் விரும்புகிறது.

சட்டரீதியாக இயலாதென்றால் தார்மீக அடிப்படையில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மூவருக்குமான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய மூவருக்கும் மின் செய்திகள் அனுப்புமாறு வெற்றி தமிழர் பேரவையின் தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இதயமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் இதே வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

போராட்ட உணர்வு இன்னும் அற்றுவிடவில்லை; நம்பிக்கையின் கடைசித்துளி இன்னும் வற்றிவிடவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

சம்பளப் பிரச்சினை: சினிமா படப்பிடிப்பு ரத்து; சென்னை திரும்பிய நடிகர் நடிகைகள்


சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்.

சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே 'மாக்கான்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, 'மாயவரம்' என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார்.

ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் திடீர் 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர்.

'எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,' என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர்.

இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.