சென்னை: விஜய் - மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.
முருகா படத்தை இயக்கிய நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சூப்பர் குட் பிலிம்ஸுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. விஜய் படங்களை அதிகம் தயாரித்தவர் என்ற பெருமையும் ஆர்பி சௌத்ரிக்கு உண்டு.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, ஷாஜகான், திருப்பாச்சி என அத்தனை படங்களும் வெற்றிப் படங்களே.
இப்போது வெள்ளிவிழா காணும் சூப்பர் குட் பிலிம்ஸுக்காக ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய். அவருடன் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். ஏற்கெனவே சூப்பர் குட் பிலிம்ஸின் அரண், கீர்த்தி சக்ரா போன்ற படங்களில் நடித்தவர் மோகன்லால்.
விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மகத், தம்பி ராமையா, பரோட்ட சூரி நடிக்கும் இந்தப் படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.
டி இமான் இசையமைக்கிறார். ராஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் தொடக்கவிழா இன்று காலை சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் மே மாதம் ஆரம்பிக்கிறது.