இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் பாத்தா அசந்துடுவீங்க! - சௌந்தர்யா ரஜினி

சென்னை: நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.

இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் பாத்தா அசந்துடுவீங்க! - சௌந்தர்யா ரஜினி  

இது டீசர்தான்... அதுவும் ரஜினி வாய்ஸ் கூட கிடையாது. மெயின் ட்ரைலர் கலக்கலாக வரும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தெரிவித்திருந்தார்.

தான் சொன்னபடியே ட்ரைலரில் அசத்தியிருந்தார் சவுந்தர்யா. கோச்சடையான், ராணா என இரண்டு பாத்திரங்களையுமே வித்தியாசப்படுத்திக் காட்டியிருந்த சவுந்தர்யா, இளம் ரஜினியை வியப்பூட்டும் வகையில் வடிவமைத்திருந்தார்.

சண்டைக் காட்சிகளும், ரஜினியின் குரலும் அந்த ட்ரைலரின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.

அடுத்து ரஜினியின் ருத்ரதாண்டவக் காட்சியை மட்டும் தனியாக போட்டுக் காட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் பிரமித்துப் போனார்கள். அனிமேஷனில் இத்தனை கச்சிதமாக ருத்ரதாண்டவ காட்சிகளை வடிவமைத்த சவுந்தர்யாவைப் பாராட்டினார்கள்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, 'இதுதான் அனிமேஷன் சாதனை. இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இதுபோன்ற பர்பெக்ட்னஸ் வர வேண்டும் என்பதுதான். நீங்கள் ட்ரைலர்தான் பார்த்திருக்கிறீர்கள். மெயின் பிக்சர் பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள்," என்றார்.

 

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'தலைவா'.. அவருக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்!- ஷாரூக்

சென்னை: தமிழில் எனக்குத் தெரிந்த வார்த்தை 'தலைவா' மட்டும்தான். அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன், என்றார் ஷாரூக்கான்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், "25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன்.

அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.

தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'தலைவா'.. அவருக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்!- ஷாரூக்

ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்.

பிற்பகல் 3 மணி. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். ஆனால் இவர் மட்டும் தன் பிராக்டிஸை விடாமலிருந்தார். வெற்றிபெற கடின உழைப்பு தேவை என்பதை இந்த மனிதரைப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன்.

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் படங்களை அந்த அளவுக்கு ரசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார்.

தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை தலைவா. அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இன்று நான் சென்னை வந்திருக்கிறேன்.

தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன. இந்த விழாவுக்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களுடன் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இங்கு வந்தால் எனது சொந்த வீட்டுக்கு வந்த மாதிரிதான் இருக்கிறது," என்றார்.

 

ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி!

சென்னை: கோச்சடையான் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் விழாவாக நடத்தப் போவதாகவும், அதில் தான் நிறைய பேசப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுவதற்கு முன் பேசிய இயக்குநர் எஸ் பி முத்துராமன், நடிகர் சரத்குமார் ஆகியோர், ரசிகர்களுக்காக ஒரு மாநில மாநாட்டை ரஜினி நடத்த வேண்டும் என்றும், அதில் தாங்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி!

ரஜினி பேசும் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அவர் கூறுகையில், கோச்சடையான் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும், அந்த வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் கூறினார்.

எந்திரன் படம் தொடங்கும் முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்தார். அதன் பிறகு தன் பிறந்த நாளையொட்டி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பெரிய மாநாடு போல நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அடுத்து கோச்சடையான் விழாவையே ரசிகர் மன்ற மாநாடாக நடத்தப் போவதாக அறிவித்துள்ளதால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

 

தேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா...? - ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி

சென்னை: வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா ஆம் ஆத்மிக்கா என ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே சில முறை சில கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.

தேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா...? - ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி

கடந்த தேர்தலில் பத்திரிகையாளர் முன்னிலையில் வாக்களித்து, தனது ஆதரவு யாருக்கு என்பதையும் காட்டினார். இப்போது அவர் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் ஒரேயடியாக அவர் சொல்லிவிடவில்லை.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் இப்போதும் வற்புறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி காஞ்சிபுரத்தில் வேள்வி யாகம் நடத்தியது நினைவிருக்கலாம். சில மாவட்ட நிர்வாகிகள், ரகசிய கூட்டங்கள் நடத்தி, அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நரேந்திர மோடி, பொன் ராதா கிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி ரஜினி ஆதரவு எங்களுக்குத்தான் என்று கூறி வருகின்றனர்.

இன்னொரு கட்சியான ஆம் ஆத்மி, ரஜினியின் நண்பர்களில் ஒருவர் மூலம் ரஜினி ஆதரவைப் பெற முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு வெளியில் வந்த ரஜினியிடம், இந்த தேர்தலில் அவரது ஆதரவு குறித்து கேட்டனர் நிருபர்கள்.

பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிரித்துக் கொண்டே, 'அரசியலே வேண்டாம்,' என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினார்.

 

அமெரிக்காவில் காதலருடன் சுற்றும் சர்ச்சை நாயகி

சென்னை: சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டில் ஆன 4 எழுத்து நடிகை அமெரிக்காவில் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

ஆந்திராவில் இருந்து வந்த 4 எழுத்து நடிகைக்கும், அவரது சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து தலைமறைவாகி காவல் நிலையத்தில் ஆஜரான நடிகை ஆந்திராவிலேயே செட்டிலானார்.

அமெரிக்காவில் காதலருடன் சுற்றும் சர்ச்சை நாயகி

கோலிவுட் படங்களில் நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் அவர் காதலருடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அங்கு அவர் உடல் எடையை குறைக்கவிருக்கிறாராம். மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கவிருக்கிறாராம்.

அமெரிக்காவில் இருந்து ஸ்லிம்மாக திரும்பி வந்து படங்களில் நடிப்பாராம். அதன் பிறகு தனக்காக பணத்தை தண்ணீராக செலவு செய்யும் தெலுங்கு தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்.

 

ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா...? - சலசலப்பு கிளப்பிய வைரமுத்து பேச்சு

சென்னை: கோச்சடையான் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா என்ற அடையாளச் சிக்கலை என் பாடல் தீர்த்து வைத்தது என்று பேசி சலசலப்பு கிளப்பினார்.

கோச்சடையான் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு சிறப்பாக அமைந்திருந்தாலும், சில விஷயங்கள் பொருத்தமற்றதாக அமைந்துவிட்டது.

அவரது பேச்சு...

இந்தப் படத்தில் நான் பணியாற்ற முக்கிய காரணம், அதை ரஜினி தூக்கிச் சுமக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல, படத்தின் தலைப்பான கோச்சடையான் மீதிருந்த ஈர்ப்புதான். பழமையும் அழுத்தமும் இணைந்த தலைப்பு இது.

ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா...? - சலசலப்பு கிளப்பிய வைரமுத்து பேச்சு

கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு.

இந்தப் படத்தில் பல புதுமைகள் இடம்பெற்றுள்ளன. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 ஆண்டுகள் யாராலும் நகர்த்த முடியாத சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அதுதான் அவரது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயதுக்காரர்களும் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு அவரது உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல மனசும் நல்ல எண்ணமும்தான் காரணம். ரஜினி தன் உழைப்பால் வீடு கட்டினார். நல்ல எண்ணங்களால் அதைச் சுற்றி சுவர் எழுப்பினார். அந்த சுவர் அவரைக் காக்கிறது.

‘படையப்பா' படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா' படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளம் தெரிந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் வெளிப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே? இதுதான் அந்த கேள்வி. அவர் நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. மனிதர் என்ன பதில் கூறப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ரஜினி சொன்னார்: 'சரியான கருத்துதானே, ஒரு நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லாமல், தமிழன்தான் முதல்வராக வரவேண்டும் என்றுதானே சொல்கிறார்கள்,' என்றார். ஆஹா.. இந்த மனுசன் மகா புத்திசாலி எனப் புரிந்து வியந்தேன்.

இயக்குநர் ரவிக்குமார் எனக்கு ஒரு பெரிய புகழாரம் சூட்டினார். என்னை ஒரு கணம் அதிர வைத்த புகழாரம். அதை சற்றே நாணத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ் மக்கள் நெஞ்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடியேற என் வரிகளும் உதவின என்ற அந்த புகழாரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அமரர் எம்ஜிஆருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஒரு அடையாளச் சிக்கல் இருந்தது.

எம்ஜிஆர் மலையாளி என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால் இங்கே தமிழராகவே அவர் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு கண்ணதாசன் தன் பாடல் வரிகள் மூலம் இப்படி பதில் அளித்தார்...

பாடுவது கவியா
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா... - என்று எழுதினார். எம்ஜிஆர் தமிழர் என்று அழுத்தமாகப் பதிய அந்த வரிகள் உதவின.

அப்படி ஒரு அடையாளச் சிக்கல் ரஜினிக்கும் வந்தது. அவர் மராட்டியரா, கன்னடரா, தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது,

அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு...
என்னை வாழ வைத்தது தமிழ்ப் பாலு... - என்றெழுதினேன்.

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு
கொடுத்தது தமிழலல்லவா
என் உடல் பொருள் ஆவியை
தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா...

-என நான் எழுதியவை ரஜினியின் அடையாளப் பிரச்சினை தீர உதவியதில் மகிழ்ச்சிதான்.

ரஜினி இன்னும் இருபது ஆண்டுகள் நடிக்க வேண்டும். அதற்கான உடல் வலுவும் மன வலிமையும் அவருக்கு உள்ளது.

ரஜினி தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது ‘கோச்சடையான்' பெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

 

ரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ் முத்துராமன்

சென்னை: ரஜினியை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு முறை மாநில அளவில் ரசிகர்கள் மாநாடு நடத்த வேண்டும், என இயக்குநர் எஸ் பி முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

நேற்று சென்னையில் நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ் பி முத்துராமன் பேசியதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினியோடு அதிக நேரம் இருந்தவன் நான்தான். அவருக்கு திருமணம் நடந்தது எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான். அவருக்கு குழந்தைகள் பிறந்ததும் எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான்...

ரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ் முத்துராமன்

எனக்கு பெங்களூரில் அண்ணன் சத்யநாராயணா இருக்கிறார், இங்கே சென்னையில் என் உடன் பிறக்காத அண்ணனாக எஸ்பி முத்துராமன் இருக்கிறார் என்று என்னை கவுரவப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ரசிகர்களை அவர் சார்பில் இன்றைக்கும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் சார்பில் பல ஊர்களுக்கும் போய் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பவன் நான்தான். ரசிகர்கள் அத்தனை பேரும் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என துடிக்கிறார்கள்.

எவ்ளோ நாளைக்குதான் உங்களையே பார்ப்பது.. ரஜினி சாரை வரச் சொல்லுங்க என்று என்னிடம் கேட்கிறார்கள். இப்போது அவர்கள் சார்பாக நான் ரஜினியிடம் கேட்பது இதுதான்.. ஒரு முறை மிகப் பெரிய அளவில் ஒரு மாநில மாநாடு மாதிரி ரசிகர்கள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்," என்றார்.

ரஜினியும் சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய சரத்குமாரும் இதே கோரிக்கையை ரஜினியிடம் வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி சார்.. நீங்க எப்போதும் தமிழர்தான்..! - வைரமுத்துவுக்கு சரத்குமார் பதில்

சென்னை: ரஜினி ஒரு தமிழர்... அவரைப் பற்றி இனி இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.

நேற்று கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, திடீரென பழைய விஷயங்களைக் கிளற ஆரம்பித்தார்.

ரஜினி சார்.. நீங்க எப்போதும் தமிழர்தான்..! - வைரமுத்துவுக்கு சரத்குமார் பதில்

ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது, தனது பாடல் எப்படி அதற்கு பதிலாக அமைந்தது என்றெல்லாம் விலாவாரியாகக் கூறினார்.

அடுத்து பேச வந்த நடிகர் சரத்குமார், எடுத்த எடுப்பிலேயே கேட்டார் இந்தப் பேச்சு இப்போது எதற்கு வந்தது? என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "வைரமுத்து பேசியதையெல்லாம் கேட்டதும், யாராவது ரஜினி சாரைப் பார்த்து தமிழரா இல்லையான்னு இப்போ கேட்டுட்டாங்களோன்னு தோணிடுச்சி.

இந்த மாதிரியெல்லாம் இனியும் கேட்க வேண்டியதில்லை. அவர் எப்போதோ தமிழராகிவிட்டவர். எப்போதுமே தமிழர்தான். ரஜினி சார்.. யு ஆர் எ தமிழன்..!

ரஜினி சார் மாதிரி ஒரு அற்புதமான மனிதரைப் பார்க்க முடியாது. ஒரு நாள் என்னை அழைத்து, சரத், ஒரு கதை இருக்கு... கேளுங்க.. நாம சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.

அவர் சொன்னால் நான் எந்த வேடத்திலும் நடிப்பேன்.

கோச்சடையான் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. சவுந்தர்யா என்னை நடத்திய விதம்.. அந்த பண்பு.. அதெல்லாம் எங்கிருந்து வந்தவை என்பதை சொல்லத் தேவையில்லை.

அசாத்திய திறமைசாலியான சவுந்தர்யா இந்தப் படத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்.

கோச்சடையான் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை சினிமாவில் ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள், 'நாம் பார்ப்பது மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படத்தை' என்ற மனநிலையோடு செல்ல வேண்டும். அதுதான் படத்தை பெரிய வெற்றி பெற வைக்கும்.

எஸ்பி முத்துராமன் அவர்கள் சொன்னதுபோல, சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ரசிகர்களுக்காக ஒரு பெரிய மாநாடு நடத்த வேண்டும். அவர் ரசிகன் என்ற முறையில் இதை நானும் ரஜினி சாரிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் பிறந்த நாள் விழா கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து கவுரவம் தந்தீர்கள். அதேபோல இந்த ரசிகர்கள் மாநாட்டுக்கும் அழைக்க வேண்டும். அங்கும் வந்து நான் பேசுவேன்," என்றார்.

 

விஜய் சேதுபதி நடிக்கும் ‘வசந்த குமாரன்’... இயக்குநர் பாலா தயாரிக்கிறார்!

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான வசந்த குமாரனை தயாரிக்கிறார் இயக்குநர் பாலா.

இயக்குனர் பாலா - பி ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘வசந்த குமாரன்’... இயக்குநர் பாலா தயாரிக்கிறார்!

விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா - விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது.

சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை', ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளதாக இயக்குநர் ஆனந்த் குமரேசன் தெரிவித்துள்ளார்.