கன்னட 'தாதா' படத்தில் பார்த்திபன்

பெங்களூர்: தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.பார்த்திபன், 'தாதா' என்ற கன்னட திரைப்படத்தில் நடிப்பதன் மூலமாக சாண்டல்வுட்டில் கால்பதிக்கிறார்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்ற பெயர் கொண்ட தமிழ் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் ரசிகர்களுக்கு மற்றொரு நற்செய்தியும் உள்ளது.

கன்னட 'தாதா' படத்தில் பார்த்திபன்

அதாவது கன்னட திரைப்பட உலகிலும் பார்த்திபன் கால் வைக்கப்போகிறார் என்பதுதான் அந்த செய்தி. இயக்குநர் சந்தோஷின், 'தாதா' என்ற படத்தில் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

சாண்டல்வுட் என்று அழைக்கப்படும் கன்னட திரையுலகிலும் பார்த்திபன் காலடி எடுத்து வைப்பது அவர் ரசிகர்களுக்கு கட்டாயம் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும்.

பார்த்திபன் நடிக்கும் அல்லது இயக்கும் தமிழ் படங்களை பார்க்க கன்னட மக்களை ஈர்க்கவே கன்னட படத்தில் நடிக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளதாக காந்திநகர் (நம்மூரில் கோடம்பாக்கம் மாதிரி) வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்திராகாந்தி படுகொலை படத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு சிஇஓ

மும்பை: லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மும்பை சென்சார் போர்டு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார், சர்ச்சைக்குரிய இந்திராகாந்தி படுகொலை தொடர்பான படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் அலுவலகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்திராகாந்தி படுகொலை படத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு சிஇஓ

சான்றிதழ் வழங்க லஞ்சம்

இந்தி படம் ஒன்றை தணிக்கை செய்து சட்டீஸ்கரில் வெளியிடுவதற்காக ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சென்சார் ஆலோசனைக்குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால், அதிகாரபூர்வ முகவர் ஸ்ரீபட்டி மிஸ்ரா ஆகியோர் மும்பையில், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிக்கு தொடர்பு

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், லஞ்ச பணத்தில் மத்திய தணிக்கை வாரிய முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமாருக்கும் பங்கு கொடுத்தது தெரியவந்தது.

சிஇஒ கைது

இதனை தொடர்ந்து முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டார். திரைப்படங்களை விரைவாக சென்சார் செய்ய ரூ.10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கலெக்சன் ஏஜென்ட்

ராகேஷ் குமாரின் அதிகார பூர்வ ஏஜென்டாக கிருஷ்ண பள்ளி என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் ராகேஷ் குமாருக்காக லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளார்.

லஞ்சப்பணத்தில் சொத்து

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராகேஷ் குமார் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. லஞ்ச பணத்தில் ராகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மற்றும் பீகாரில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிபிஐ ரெய்டு

மும்பையில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி ரூ.10 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர்.

ரூ.1 லட்சம் லஞ்சம்

இதனிடையே இந்திராகாந்தி படுகொலை சம்பவம் பற்றிய சர்ச்சைக்குரிய திரைப்படமான காம் தே ஹீரே திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக ராகேஸ்குமார் ரூ.1லட்சம் லஞ்சப்பணம் பெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்படம் நாளை வெளியாக உள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம்

ராகேஷ் குமார் 1997 மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ரயில்வே தனிச்சேவை அதிகாரியாக தேர்வானவர். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்சார் போர்டின் முதன்மை செயல் அலுவலராக பணியில் சேர்ந்தார். இவர் வகிக்கும் பதவி மத்திய தணிக்கை துறை தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு வளையத்திற்குள்

சினிமாக்களை தணிக்கை செய்து வெளியிட சென்சார் போர்டு அதிகாரி லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் போர்டு அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

ரூ 50 லட்சம் செக் மோசடி... இயக்குநர் சரண் கைது

ரூ 50 லட்சம் செக் மோசடி... இயக்குநர் சரண் கைது

சென்னை: ரூ 50 லட்சம் செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் சரண் இன்று கைது செய்யப்பட்டார்.

காதல் மன்னன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், வட்டாரம் உள்பட பல்வேறு படங்களை இயக்கினார்.

தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து வருகிறது.

இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார் சரண்.

அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். உடனே படப்பிடிப்பை நிறுத்திய சரண், போலீசாரிடம் விளக்கம் கேட்டார்.

ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் சிவகாசி கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்துள்ளதையும், இந்த வழக்கில் ஆஜர்படுத்த கைது செய்வதாகவும் போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சிவகாசி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

 

கத்தியிலிருந்து லைகாவைக் கழற்றிவிட விஜய், முருகதாஸ் முடிவு!

சென்னை: கத்தி படத்துக்கு தமிழுணர்வாளர்கள், ஈழ ஆதரவு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பெரும் எதிர்ப்பு காரணமாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தை கழற்றிவிட இயக்குநர் முருகதாஸும், நடிகர் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பை பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கத்தியிலிருந்து லைகாவைக் கழற்றிவிட விஜய், முருகதாஸ் முடிவு!

கத்தி படத்தை முதலில் அய்ங்கரன் நிறுவனம்தான் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அய்ங்கரன் வழிகாட்டுதலோடு லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவித்தார்கள். அப்போதிலிருந்து எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்தது.

லைகா நிறுவனம், அதன் பின்னணி, இலங்கை அரசில் இந்த நிறுவனத்துக்கு உள்ள செல்வாக்கு, ராஜபக்சே குடும்பத்துடன் லாகாவுக்கு உள்ள தொழில் முறை உறவுகள்.. என அனைத்தையும் ஆதாரங்களோடு முன் வைத்தது மீடியா.

ஆனால், இதனை பலமாக மறுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ், லைகா நிறுவனத்துக்கு பெரும் ஆதரவு அளித்து வந்தார். அந்த நிறுவனத்துக்கு படம் இயக்குமாறு வேறு இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் கத்தி படத்துக்கு எதிராக 65 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் நிர்வாகிகளும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என முதல்வருக்கு கோரிக்கையும் வைத்தனர்.

இப்படி ஒரு பலமான எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்ப்பாராத படக்குழுவினர் திகைத்து நிற்கின்றனர். இப்போது படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து லைகாவை விலக்கிவிட முருகதாஸும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு பதில் ஏற்கெனவே முருகதாஸின் கூட்டாளிகளான பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

 

நிர்வாண போஸ்டர்.. ஆமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜபல்பூர்: நிர்வாண போஸ்டர் விவகாரத்தில் நடிகர் ஆமீர் கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது ஜபல்பூர் நீதிமன்றம்.

நடிகர் ஆமீர்கான ‘பிகே' என்ற இந்திப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

நிர்வாண போஸ்டர்.. ஆமீர்கான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ரயில் தண்டவாளத்தில் நின்றபடி பழைய டேப் ரிக்கார்டரை கையில் பிடித்துக் கொண்டு ஆமீர்கான் நிர்வாணமாக இருப்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெரு நகரங்களில் பொது இடங்களிலெல்லாம் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இணைய தளங்களிலும் இந்த போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் நாடு முழுவதிலும் பரபரப்பைக் கிளப்பின. அத்துடன் இது ஆமீர் கானின் சொந்த சரக்கல்ல, ஒரு போர்ச்சுகல் இசையமைப்பாளர் எழுபதுகளில் தனது ஆல்பத்துக்கு வடிவமைத்ததை காப்பியடித்துவிட்டார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.

இந்தப் படத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ‘பிகே' பட நிர்வாண போஸ்டர் தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நடிகர் ஆமீர்கான், படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டி அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆமீர்கான் உள்பட 10 பேர் மீதும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமணம்.. திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது!

திருவனந்தபுரம்: முன்னணி நடிகை நஸ்ரியா நஸீம் - நடிகர் பகத் ஃபாஸில் திருமணம் இன்று காலை திருவனந்தபுரத்தில் நடந்தது.

நேரம், நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் பிரபல இயக்குநர் பாஸில் மகனும் நடிகருமான பகத் ஃபாஸிலுடன் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்தார். அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமணம்.. திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது!

(நஸ்ரியா திருமண கேலரி)

இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டதால், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆகஸ்டு 21-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அவர்கள் திருமணம் இன்று திருவனந்தபுரம் கழக் கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

இருவருமே இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நஸ்ரியா - பகத் ஃபாஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) ஆலப்புழாவில் நடக்கிறது.

 

இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் களஞ்சியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி

பிரபு நடித்த ‘மிட்டா மிராசு', முரளி-தேவயானி நடித்த ‘பூமணி' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக ‘கருங்காலி' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.

‘ஊர்சுற்றிப்புராணம்' என்ற படத்தை இயக்கி வந்தார் களஞ்சியம். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம் மீதும் தனது சித்தி மீதும் புகார் கூறி அப்படத்தில் இருந்து பாதியில் விலகினார். இதனால் இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக களஞ்சியம் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டார். அவருடன் மேலும் 2 பேரும் அந்த காரில் பயணம் செய்தனர்.

அவரது கார் ஆந்திர மாநிலம் ஓங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில், காரில் பயணம் செய்த இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்தது அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரில் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அருண் என்பவர் இறந்துவிட்டதாகவும், களஞ்சியம் மற்றும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

நடிகர் சென்ராயன் தன் காதலியை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி திருமணம் செய்கிறார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பிரதான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன்.

இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.