விஸ்வரூபம் - நீக்கப்படும் காட்சிகள் விவரம்!

Viswaroopam Scenes Be Deleted

சென்னை: விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார். அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார்.

இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.

* படத்தின் தொடக்கத்தில், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை," என டைட்டில் போடப்படும்.

* படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.

* திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.

* அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமல்ஹாசன் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.

* முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

* நடிகர் நாசர் ஒரு காட்சியில், "முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை'' என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.

* ஆப்கன் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விளையாடுவது போல காட்டப்பட்டுள்ளதும் நீக்கப்படும்.

 

ஹீரோயினை சும்மா உதைக்கச் சொன்னா நிஜமாவே உதைத்த தனுஷ்

Dhanush Kicks Parvathi Menon   

சென்னை: மரியான் பட ஷூட்டிங்கில் ஹீரோயின் பார்வதியை உதைக்கிற மாதிரி நடிக்கச் சொல்ல தனுஷோ நிஜமாகவே உதைத்துள்ளார்.

பூ படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன். அவர் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் நடிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கடந்த 7 ஆண்டுகளில் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அவையும் மலையாளம் மற்றும் பிற மொழிப் படங்கள். இத்தனை ஆண்டுகளில் வெறும் 7 படங்களில் மட்டுமே ஏன் நடித்தாய் என்று நண்பர்கள் பலர் கண்டித்தனர். வாய்ப்பு வரும்போதே அனைத்து படங்களிலும் நடிப்பது எனக்கு சரி என்று படவில்லை.

நல்ல படம், கதைக்காக காத்திருப்பதில் தப்பில்லை. இயக்குநர்களை பொறுத்தே படத்தை தேர்வு செய்கிறேன். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் வளரலாம். ஆனால் திருப்தி என்பது மிகவும் முக்கியம். நடித்துவிட்டு சென்றால் இரவில் நிம்மதியாக தூங்க முடிய வேண்டும். எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்து அது என் படத்தைப் பார்த்துவிட்டு பெருமைப்பட வேண்டும். மாறாக என்னம்மா இந்த படத்தில் நடித்திருக்கிறியே என்று என்னை திட்டக் கூடாது.

பூ படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் உயிர்ப்புள்ளது. அதன் பிறகு தற்போது மரியான் படத்தில் வரும் பனிமலர் கதாபாத்திரம் சவாலாக உள்ளது. கமர்ஷியல் படத்தில் நடிக்க மாட்டேன் என்றில்லை. கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் நிச்சயம் நடிப்பேன்.

மரியான் ஷூட்டிங்கில் தனுஷ் என்னை உதைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தனுஷ் நிஜமாகவே என்னை உதைத்துவிட்டார். ஒரு குடும்பமாக உழைக்கையில் அவர் உதைத்தது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் அந்த காட்சி நன்றாக வந்துள்ளதை அறிந்தபோது சந்தோஷப்பட்டேன் என்றார்.

 

கடல் படத்தில் ஏசு படத்துக்கு அவமரியாதை - மணிரத்னம் மீது போலீசில் புகார்!

Complaint Lodged Against Manirathnam

சென்னை: கடல் படத்தில் இயேசு பிரானின் படத்தை போட்டு உடைப்பது போல காட்சி வைத்ததற்காக இயக்குநர் மணிரத்னம் மீது இன்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் இயேசுமூர்த்தி.

இதுகுறித்து இன்று அவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் அளித்துள்ள புகார்:

மணிரத்னம் இயக்கிய கடல் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. பைபிள் கல்லூரியில் அரவிந்தசாமியும், அர்ஜுனும் மாணவர்களாக சேர்கின்றனர். அப்போது அண்ணனை சாத்தான் என்றும் தம்பியை ஏசு என்றும் சொல்வது போல் வசனம் உள்ளது.

இன்னொரு காட்சியில் நாயகன் பிரசவம் பார்க்கிறான். அப்போது கையில் படும் ரத்தத்தை ஏசுவின் ரத்தம் என்கிறார். இவை கிறிஸ்தவர்களை நோகடிப்பவை ஆகும். அர்ஜுன் தன்னை சாத்தான் என கூறிக்கொள்கிறார். அவரது பெயர் பெர்க்மான்ஸ் என குறிப்பிடப்படுகிறது. பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ பாடகர் ஆவார்.

ஏசுவின் படத்தை நாயகன் உடைப்பது போன்றும் காட்சி உள்ளது. கிளைமாக்சில் சாத்தான் ஜெயித்து விட்டது என்ற வசனம் வருகிறது. ஆண்டவர் மீது சத்தியம் என்ற வசனம் உள்ளது. கிறிஸ்தவர்களை புண்படுத்தும் இத்தகைய 6 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

நடிகர் சங்கத் தலைவர் தன் அப்பா சரத்குமார்தான் என்பது வரலட்சுமிக்குத் தெரியாதோ!!

Varalakshmi Question Artiste Association Viswaroopam   

விஸ்வரூபம் படத்துக்கு இவ்வளவு சிக்கல் இருக்கிறது.. இந்த நடிகர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது.... - இதுதான் நடிகை வரலட்சுமி எழுப்பிய கேள்வி.

சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்திருந்த வரலட்சுமி, "விஸ்வரூபம் பிரச்சனையில் இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை, நடப்பதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் இன்னும் ஏன் மெளனமாக உள்ளது? என்றும் நான் உங்களுக்கு ஆதராவாக இருப்பேன் கமல் சார்," என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார்.

வரலட்சுமியின் அப்பா சரத்குமார்தான் நடிகர் சங்கத்தின் தலைவர் என்பதும், அவர் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ. என்பதும் வரலட்சுமிக்கு தெரியாதா... போய் தன் அப்பாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை ட்விட்டரி்ல் கேட்டுக் கொண்டிக்கிறாரே என்று கமெண்ட்கள் பறக்கின்றன கோலிவுட்டில்.

இன்னொரு பக்கம், இதே கேள்வியைத்தான் விஷாலும் கேட்டிருந்தார். அவரை சங்கத்திலிருந்தே விலக்கும் அளவுக்கு காரசாரமாக விவாதிக்கும் நடிகர் சங்கம், சங்க தலைவர் மகளை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?

Vishwaroopam Be Shown Dth On Feb 15

சென்னை: கமலின் விஸ்வரூபம் பட பிரச்சனை தீர்ந்துள்ளதையடுத்து படம் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கமலின் விஸ்வரூபம் படம் முதலில் டிடிஎச்சில் தான் ரிலீஸாவதாக இருந்தது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியதால் முதலில் தியேட்டரிலும், அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிடிஎச்சிலும் ரிலீஸ் செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களிலும், பிப்ரவரி 2ல் டிடிஎச்சிலும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தமிழக அரசும், முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்தன.

இந்நிலையில் கமல் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசித் தீர்த்துள்ளன. தமிழக அரசும் தடையை வாபஸ் பெற்றதால் படம் வரும் 7ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஒரு வாரம் கழித்து வரும் 15ம் தேதி டிடிஎச்சில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து கமல் டிடிஎச் நிறுவனத்துடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கக்கூடும்.

 

குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்றோம்... நீயா நானாவில் அழுத பெற்றோர்

Neeya Naana Parents Vs Children

குழந்தைகளுடன் நட்பு பாரட்டுவது என்பது எல்லோருக்கும் கைவந்துவிடாது. அது ஒரு விதமான அனுபவம். கடந்த காலங்களில் குட்டிப்பிள்ளைகளுக்கு கதை சொல்லவும், அவர்களின் மொழிகளை புரிந்து கொண்டு உரையாடவும், தாத்தா பாட்டிகள் இருந்தனர். ஆனால் இன்றைக்கு பெற்றோர்களும் வேலைக்கு போய்விடுகின்றனர். தாத்தா பாட்டிகளும் உடன் இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தனித்து விடப்பட்டு தொலைக்காட்சிகளும், கணினியுமே அவர்களின் பொழுதுபோக்கு சாதனங்களாகிவிட்டது.

இதனால் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிறது. பிள்ளைகளின் உலகத்தை புரிந்து கொள்ள முடியாத பெற்றோர்களும், பெற்றோர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத பிள்ளைகளும்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களின் கருத்துக்களை பரிமாறியது இந்த வார விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி.

பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சில விசயங்களை டிவி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர் குட்டீஸ்கள். அப்பா குறட்டை விட்டா பிடிக்காது. வீடு கூட்ட பிடிக்காது என்றனர் பிஞ்சு குழந்தைகள். எனக்கு இருட்டு என்றால் பயம் என்றது ஒரு வாண்டு.

அதேபோல் குழந்தைகள் எதற்கு எல்லாம் தங்களை கடுப்பேத்துவார்கள் என்று பகிர்ந்து கொண்டனர் பெற்றோர். அதில் சில பெற்றோர்கள் தங்களில் பிள்ளைகளுக்குக் கொடுத்த தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

வேலைக்குப் போவதனால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் இருப்பதாக சில பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அதேபோல் ஆத்திரத்தில் அடித்துவிட்டு பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட வலிக்காக அழுத கதைகளை சில பெற்றோர்கள் கூறினார்கள்.

வேலை ஓட்டத்தில், அவசர கதியில் இருக்கும் போது சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை நாங்கள் அடித்துதானே ஆகவேண்டும் என்று கேட்டனர் பெற்றோர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் இளங்கோ கல்லானை பிள்ளைகளின் உலகத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

இன்றைக்கு குழந்தைகளுக்கான இசையோ, பாடலோ இல்லை, கதைகளும் கூட புனையப்படுவதில்லை. கார்டூன் உலகத்தில் கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஆதங்கப்பட்டார் அவர்.

அதேசமயம் மற்றொரு சிறப்பு விருந்தினரான மோகன், குழந்தைகளை அவர்களுக்கான உலகம் என்று பிரித்து பார்க்கத் தேவையில்லை, அவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை புரிந்து கொண்டு அவர்களை டியூன் செய்யவேண்டும் என்று கூறினார்.

எது எப்படி என்றாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பது தாத்தா பாட்டிகள்தான் அந்த மூத்த குடிமக்கள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மைதான்.

இந்த வாரம் குழந்தைகளின் உலகத்தை புரிய வைத்த விஜய் டிவி இனி வரும் வாரத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உளவியல் ரீதியிலான சிக்கல்களையும் சில உண்மைகளை புரிந்து கொள்ள முடியும் என்று கூறலாம்.

 

விஸ்வரூபத்துக்கு சிக்கல் தீர்ந்தது.. ஆனால்.. விஷாலுக்கு புது நெருக்கடி!

Vishal Big Trouble

சென்னை: விஸ்வரூபத்தை சிக்கலிலிருந்து காப்பாற்ற நடிகர் சங்கம் குரல் கொடுக்கவில்லையே என்று ட்விட்டரில் குறைகூறிய விஷாலுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது நடிகர் சங்கம்.

அவரை சங்கத்திலிருந்து ஏன் விலக்கக் கூடாது என்று சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கார சார விவாதம் நடந்துள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கோபமாகக் கேட்டிருந்தாராம் விஷால்.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தை இழிவுபடுத்திய விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினர். இதையடுத்து விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, "விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் சங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது. விஷால் பேஸ்புக்கில் நடிகர் சங்கத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடிகர் சங்க செயற்குழுவிலும் இது குறித்து பேசப்பட்டது.

விஷால் இதுவரை நடிகர் சங்கம் கூட்டிய பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றது இல்லை. ஆனாலும் அவரது பிரச்சினைகளை சங்கம் தீர்த்து வைத்துள்ளது. லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உருவான போது நடிகர் சங்கம் தலையிட்டது.

விஷாலுக்கு பக்கபலமாக நின்று உதவியது. நானும் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் போன்றோரும் 250 படங்களுக்கு மேல் நடித்தவர்கள். பொதுக்குழுவுக்கே வராத விஷாலுக்கு எங்களை பார்த்து கேள்வி கேட்க தகுதி இல்லை.

விஷாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். 15 நாட்களுக்குள் அவர் பதில் சொல்ல வேண்டும். விளக்கம் அளித்த பிறகு ஏற்க கூடியதாக இருந்தால் ஏற்போம். பதில் ஏற்கும்படி இல்லா விட்டால் நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி முடிவு செய்யப்படும்," என்றார்

தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தொடர்பாக ஏற்கெனவே சங்கத்தின் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உள்ளது.

மேலும் சரத் மகள் வரலட்சுமி - விஷால் தொடர்பு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. மதகஜராஜாவில் விஷாலுக்கு ஒரு ஜோடியாக சரத் மகள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

என் சீனை படத்திலிருந்து தூக்கிட்டாங்களே... வேதனையில் தூக்கில் தொங்கிய இளம் நடிகர்!

சென்னை: நீதானே என் பொன்வசந்தம், சென்னையில் ஒரு நாள் படங்களில் தான் நடித்த படத்தின் காட்சிகளைத் தூக்கிவிட்டார்களே என்ற வேதனையில் ஒரு இளம் நடிகர் தூக்கில் தொங்கிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அதன் விவரம்:

ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட சீனிவாசராவ்-ராஜேஸ்வரி தம்பதி திருச்செங்கோட்டிபல் வேலை நிமித்தம் செட்டிலாகிவிட்டனர். இவர்களுக்கு சந்திரசேகரராவ் (25), பவன்குமார் (20) என்ற இருமகன்கள்

சந்திரசேகரராவ் ஈரோட்டில் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தார். நல்ல அழகாக இருப்பார். படிப்பில் மட்டுமல்லாது கல்லூரி கலை விழாக்களில் நடிப்பிலும் அசத்திய சந்திரசேகரராவுக்கு சினிமா ஆசை துளிர்த்தது.

நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் படிப்பு முடிந்ததும் சினிமா காதலியை தேடி சென்னைக்கு சென்றார்.

3 ஆண்டுகள் அலையாய் அலைந்த பிறகு அவருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிறு வேடம்தான். சந்திரசேகராவுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

அடுத்து 'சென்னையில் ஒரு நாள்' என்ற படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. 3 வருட அலைச்சலுக்கு பலன் கிடைத்ததாக தன் நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.

இந்த இரு படங்களும் வெளியான பிறகு தியேட்டருக்கு நண்பக்களுடன் போய் பார்த்தார். இன்னும் ஊரிலிருக்கும் நண்பர்களுக்கும் சொல்லிவிட்டார்.

ஆனால் படத்தைப் பார்த்தால் பயங்கர ஏமாற்றம் சந்திரசேகருக்கு. அவர் நடித்த எந்தக் காட்சிகளும் இந்தப் படங்களில் இல்லை.

இரண்டு படங்களிலும் தனது காட்சிகள் இடம் பெறாததால் சந்திரசேகரராவ் நொறுங்கி போனார். நண்பர்களும் பெற்றோரும் எவ்வளவோ சொன்னாலும் அவரால் சமாதானம் அடைய முடியவில்லை.

நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சந்திரசேகரராவின் பெற்றோர் ஹைதராபாத் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகரராவ் ஒரு நைலான் கயிற்றில் முடிச்சு போட்டு தன் கதையை முடித்து கொண்டார்.

நேற்று போனில் தொடர்பு கொண்ட பலர் சந்திரசேகரராவ் போனை எடுக்காததால் அவரது தம்பிக்கு போன் செய்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரசேகரராவ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

எடிட்டிங் டேபிளைக் கடந்து வந்த பிறகுதான் ஒரு சினிமாவில் யார் யார் நடித்த காட்சிகள் உள்ளன என்பதே தெரியும் என்ற உண்மை தெரியாமல் ஒரு இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டது பலரையும் அதிர வைத்துவிட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களிடம் கருத்துக் கேட்க தொடர்பு கொண்டோம். வேணாம்... எங்களை இதில் இழுத்துவிட்றாதீங்க என்றார்கள்.

 

விஸ்வரூபம் ரிலீஸ் தேதி: இன்று அறிவிக்கிறார் கமல் ஹாசன்

Kamal Haasan Announce New Date Vishwaroopam

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளிடம் உறுதியளித்தபடி, 7 காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்கியபிறகு இந்த வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் கமல்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை:

Viswaroopam from Feb 7th in Tamil Nadu

Viswaroopam from Feb 7th in Tamil Nadu

தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது.

நீதி சற்று நின்று வந்தாலும், அன்றே எனக்கு ஆவணவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு முதற்கண் நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக இந்திய மக்களுக்கும், தாமாகவே என்னைத் தேடி வந்து ஆறுதல் கூறிய தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், எனக்குத் தெரியாமலே எனக்காகப் போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.

என் உரிமையை தமதெனக் கருதி பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்துக்கும் ஒரு இந்தியனாக என் ஆழ்மனதிலிருந்து நன்றி.

எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை எதிர்கொண்ட நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து காதலாகி கண்ணீர் மல்க நிற்கிறேன்.

என் தமிழக மக்கள் காசோலைகளையும் பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, 'யாமிருக்க பயமேன்" என்ற அர்த்தத்துடன் கடிதங்களை இணைத்து அனுப்பி வைத்தனர். நெஞ்சம் விம்மி கண்ணீர் காட்சியை மறைக்க மனது 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்,' என கேவிக் கேவி பாடியது.

என் கலையையும், அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் தவிர வேறொன்றும் செய்வதறியேன்.

காசோலைகளையும் பணத்தையும் அன்புடன் திருப்பியனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும் அரசியலும் என்னை வறியவனாக்கினாலும், உண்பதற்கும் ஒதுங்குவதற்கும் பல அரிய விலாசங்கள் என் கைவசம் உள்ளன என்ற தைரியத்தில் இதைச் செய்கிறேன்.

நான் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.

பொறுமை காத்த என் இனிய நற்பணியாளர்களுக்கு பெரு வணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர்க் காரணத்தை செயலாக்கிக் காட்டி ரௌத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும்.

வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக் காட்டிய, என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை காணிக்கையாக்குகிறேன்.

வாழிய செந்தமிழ்.. வாழிய நற்றமிழர்... வாழிய பாரத மணித்திருநாடு!

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பகுத்தறிவுப் பாதைக்கு மாறிய 14 வயது… கமலின் டைரிக் குறிப்பு

Sun Music Program Kollywood Diaries

பதின்ம வயதுகளில் எத்தனையோ விசயங்களை கற்றுக்கொண்டிருப்போம். ஒருவிதமான புதிரான வயது அது. அந்த நேரத்தில் சரியான வழிகாட்டுதல் இருந்தால் வாழ்க்கையில் அனைவராலும் ஜெயிக்க முடியும். அப்படிப்பட்ட 14 வயதில் பகுத்தறிவுப் பாதைக்குச் சென்றதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சன் மியூசிக் சேனலில் இந்த வாரம் சனி, ஞாயிறு இரவு கோலிவுட் டயரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது டயரி பக்கங்களை புரட்டிப் பார்த்தார்.

சிறுவயதில் தான் படித்த போது செய்த சேட்டைகள். பள்ளியில் விழுந்து அடிபட்டது. படிப்பில் ஆர்வமில்லாமல் நடனம் கற்றுக்கொண்டது என சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டு வந்தார்.

ஏழு முதல் 14 வயதுவரை தன் வாழ்க்கையில் நடந்ந விசயங்களை கூறிய கமல், பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தன்னுடைய அப்பா அழைத்துச் சென்றபோது, அவர் செல்லமாக தன்னை ‘கூத்தாடி' என்று கூப்பிடுவதை நினைவு கூர்ந்தார். காமராஜரின் வாக்கு இன்றைக்கு வரைக்கும் பலித்துக் கொண்டிருக்கிறது என்றார்.

தன்னுடைய 14 வயதில்தான் ஆன்மீகப் பாதையில் இருந்து பகுத்தறிவுப் பாதைக்கு மாறும் சம்பவம் நடைபெற்றது என்று கூறினார். தந்தைப் பெரியாரின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற நண்பர்கள் மூலம் தன் வாழ்க்கைப் பயணம் வேறு பக்கம் திரும்பியது என்றார்.

தன்னுடைய 16 வயதில் அப்பாவிடம் போய் எப்போ எனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறீங்க என்று கேட்டதாகவும், அதற்கு அவர் ஆச்சரியப்பட்டதாகவும் கூறிய கமல், பேசாமல் கல்யாணம் ஆகாமலேயே இருந்திருக்கலாம் என்றார்.

ரோட்டோரத்தில் நின்று சைட் அடிப்பது பிடிக்காது என்று கூறிய கமல் காதல் என்ற உணர்வு நம்மை தாக்கும் போது நமக்கானவரை நாம் சைட் அடிக்கலாம் என்றார்.

சிறுவயது முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வாழ்க்கையில் நடந்த விசயங்களை சுவாரஸ்யமாக தெரிவித்த கமல் ஹாசனை பேட்டி கட்ட தொகுப்பாளினிக்குதான் சுவாரஸ்யமாக கேள்விகளைக் கேட்கத் தெரியவில்லை.

நடனம் பயின்று வெளிமாநிலங்களுக்கு நடனமாடப் போனபோது கால் ஒடிந்த கதையை கமல் கூறும் போது எந்த வித எக்ஸ்ப்ரசனும் அந்த தொகுப்பாளினியிடம் வெளிப்படவில்லை. அனைத்து சம்பவத்திற்கும் அவர் ஒகே என்று மட்டுமே கூறிக்கொண்டிருந்தது நிகழ்ச்சிக்கு திருஸ்டி பரிகாரமாக இருந்தது என்றே கூறவேண்டும்.

 

'சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

Muslims Depicted As Pirates Surya Singam 2

சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்- 2' என்ற திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என தோழமையுணர்வுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், 'சிங்கம்- 2' மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்காக வரும்போது மத நம்பிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு எதிராகவோ, இனங்களுக்கு எதிராகவோ சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பின் தணிக்கை குழு கவனத்துடன் செயல்பட்டு உரிய வகையில் அக்காட்சிகளை நீக்கிய பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்.

திரைப்படம் என்பது மக்களை வெகு விரைவில் சென்று சேரும் வெகுஜன சாதனம். அதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் திரைப்படங்களை எடுக்க வேண்டிய சமூக அக்கறையும், பொறுப்புணர்வும் திரைக் கலைஞர்களுக்கு உண்டு. அதேபோல, தணிக்கை குழுவிற்கு இந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தாண்டிய கடமையும் உண்டு.

அதனால் தங்கள் கடமையை சரிவர செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் திரைப் படங்கள் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தணிக்கை குழு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

 

தயாரிப்பாளர்களுக்குள் மோதல்: சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்குத் தடை!

Ban On Goutham Menon Surya Movie

தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை 8-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், "போட்டோன் பேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களது நிறுவனத்துடன் 27.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் சிம்பு கதாநாயகனான நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்து தருவதாக கூறி ரூ.4.25 கோடியை முன்தொகையாக என்னிடம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை.

இதற்கிடையில் பி.மதன் தனியாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற கம்பெனி தொடங்கி, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதேபோல, கவுதம் வாசுதேவ மேனன், நடிகர் சூர்யாவை வைத்து ‘துப்பறியும் ஆனந்தன்' என்ற படத்தை இயக்கப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இவர்கள் 2 பேரும் தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும். இதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்று கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "கவுதம் வாசுதேவ மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

விஸ்வரூபத்திற்கு தடை நீங்கியது: வழக்கை வாபஸ் பெற்றார் கமல்

Vishwaroopam Kamal Haasan Withdraw Petition Against Ban

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கை கமல் ஹாசன் இன்று வாபஸ் பெற்றார்.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் 2 வார தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் தடையை நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தபோது 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கும், படத்திற்கும் தடை விதித்தது. இதையடுத்து பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா கமலும், முஸ்லிம் அமைப்புகளும் உட்கார்ந்து பேசி தீர்வு காண முன்வந்தால் அதற்கு தமிழக அரசு உதவும் என்றார். இதையடுத்து கமல் ஹாசன் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசி சுமூகத் தீர்வு கண்டுள்ளார்கள். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக் கொண்டதையடுத்து தமிழக அரசு தான் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

இந்த பேச்சுவார்த்தை அரசின் உள்துறை செயலாளர் ராஜகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து உடன்பாட்டில் இருதரப்பும் கையெழுத்திட்டது. இதனால் கமல் அரசின் தடை உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பு வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தது. அதில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகத் தீர்வு காணப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இதையடுத்து விஸ்வரூபம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

  Read in English: How Hamal soved Vishwaroopam row in TN
 

சீன அரசியலில் குதித்தார் ஜாக்கி சான்... அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்!

Jackie Chan Dons New Role Appointed Delegate

பெய்ஜிங்: சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜாக்கி சான்.

இதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக குதித்துவிட்டார் அவர்.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற மார்ச் மாதம் புதிய அதிபராக இவர் பதவி ஏற்கிறார்.

இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய அதிபராகப் போகும் ஜின்பிங். சீன பாராளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன.

இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகி இருந்தது. அதை எதிர்த்து ஜாக்கிசான் கடுமையாக சாடினார். உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான் என கருத்து தெரிவித்து இருந்தார். சீன தலைவர்களை வானளாவ புகழ்ந்திருந்தார்.

ஜாக்கியின் இந்த அமோக ஆதரவுக்காகத்தான் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விஸ்வரூபம் தணிக்கையில் மோசடி பேச்சு: தமிழக அரசு வக்கீல் மன்னிப்பு கேட்க வேண்டும்- சென்சார் போர்டு

Apologise Censor Board Tells Top Govt Lawyer

மும்பை: விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று கூறிய தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

விஸ்வரூபம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கமலின் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மத்திய திரைப்பட தணிக்கை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சட்ட விதிமுறைகளின்படி திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலேயே விஸ்வரூபமும் மற்ற திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் முன் வைக்க மத்திய திரைப்பட தணிக்கை துறை விரும்புகிறது.

திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதில் 1951ம் ஆண்டிலிருந்து சட்டப்படி மத்தியத் திரைப்பட தணிக்கை துறை செயல்பட்டு வருகிறது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை பொறுப்பற்றவை ஆகும்.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நவநீத கிருஷ்ணன் கூறுகையில்,

நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து மூன்றாவது பார்ட்டிக்கு விளக்கம் அளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று நான் கூறியதில் பொய்யில்லை. நான் கூறியது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் மோசடி நடந்திருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்றார்.