விஜய்யின் ஜோடியாகிறார் ஏஞ்சலா ஜான்சன்!


விஜய்யின் அடுத்தபடம் நிச்சயம் சீமானுக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்து அவர் நடிக்கப் போவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில்தான்.

இந்தப் படத்துக்கான ஹீரோயின் வேட்டையை இப்போதே தொடங்கிவிட்டனர் படக்குழுவினர்.

இப்போதைய நிலவரப்படி, இந்தாண்டு கிங்ஃபிஷர் காலண்டரை அலங்கரிக்கும் மாடல் அழகியான ஏஞ்சலா ஜான்சன் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர். தாயார் ஐஸ்லாந்துக்காரர்.

ஏற்கெனவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேசியுள்ளனர். ஆனால் படம் தொடங்கும் முன்ேப இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இந்திப் படத்தில் அறிமுகமாகும் முன்பே இவர் தமிழில் அறிமுகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Kollywood sources say that Angela Johnson, a 20 years old model from Mumbai is going to be paired up with Vijay in his forthcoming film directed by Murugadass.
 

தொடங்கியது கமல்ஹாசனின் விஸ்வரூபம்- ஜோர்டனில் ஷூட்டிங்!


கமலின் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. முதல் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் முடித்துள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜோர்டனில் நடைபெறவுள்ளது.இதற்காக கமல் உள்ளிட்ட படக் குழுவினர் ஜோர்டன் கிளம்புகின்றனர். நாயகி அனுஷ்காவும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்.

விஸ்வரூபம் முதற்கட்ட படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் பகுதியில் சமீபத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கிறது. ஆரம்பத்தில் பிரிட்டன், கனடா, அமெரிக்கா என பல நாடுகளை யோசித்த கமல், இப்போது ஜோர்டனில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதலில் ஜோர்டன் புறப்படுகின்றனர். அவர்களுடன் அனுஷ்காவும் இணைகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.பிரான்ஸிலும் சில காட்சிகள் படமாகும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக தனி சாப்ட்வேர் நிபுணர் குழுவையே வைத்துள்ளாராம் கமல். படமாக்கப்படும் காட்சிகள் உடனுக்குடன் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு வருகிறதாம்.
 

அனுஷ்காவுடன் தகராறு...? - மறுக்கும் லாரன்ஸ்


அனுஷ்காவுடன் எனக்கு தகராறு எதுவும் இல்லை. ஆனாலும் என்படத்தில் அவர் இல்லை என்கிறார் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா படத்துக்குப் பிறகு இயக்குநராகவும் ஹீரோவாகவும் லாரன்ஸின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இன்று தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அவர் தெலுங்கில் இயக்கும் அடுத்த படமான 'ரிபெல்'லில் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தமானதாக செய்தி வெளியானது.

ஏற்கெனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிக்கவிருந்து, பின்னர் திடீரென லட்சுமி ராய் நடித்தார். இப்போது ரிபெல் படத்திலும் இதே நிலை என்பதால், லாரன்ஸுக்கும் அனுஷ்காவுக்கும் தகராறு என பேச்சு பரவியது.

இதுகுறித்து லாரன்சிடம் கேட்டபோது, "அனுஷ்காவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சண்டை போடவும் இல்லை.

ரிபெல் படத்தில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனது எதிர்பாராமல் நடந்தது. அதேபோல இந்தப் படத்தில் தமன்னா நடிப்பதாக வந்த செய்தியிலும் உண்மையில்லை. இன்னும் நான் யாரையும் நாயகியாக முடிவு செய்யவில்லை," என்றார்.
 

சல்மான் கான் நடித்த 'பாடிகார்ட்'-ஒரே நாளில் ரூ. 22 கோடி வசூல்!


சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள பாடிகார்ட் படம் திரையிட்ட முதல் நாளிலேயே ரூ. 22 கோடியை வாரியுள்ளது. இதுவரை இந்தித் திரையுலகில் படைக்கப்பட்டிருந்த முதல் நாள் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது பாடிகார்ட்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படம் பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்போது இது இந்திக்கும் அதே பெயரில் போயுள்ளது. இந்தியில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ளனர்.

ரம்ஜான் பண்டிகையின்போது திரைக்கு வந்த பாடிகார்ட் வசூலில் சாதனை படைக்க ஆரம்பித்துள்ளதாம். படம் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் சல்மான் கான் குஷியாகியுள்ளார். அவரது குஷிக்கு எக்ஸ்டிரா காரணமும் உண்டு. கடந்த 2009ல் ரம்ஜான் பண்டிகையின்போது அவர் நடித்த வான்டட் படம் வெளியாகி ஹிட் ஆனது. 2010ல் தபங் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதுவும் ரம்ஜானுக்குத்தான் வெளியானது. இப்போது தொடர்ச்சியாக 3வது முறையாக ரம்ஜான் பண்டிகையன்று வெளியான பாடிகார்ட் பெரும் வசூலை வார ஆரம்பித்திருப்பதால் சல்மான் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ரூ. 22 கோடி என்பது உள்ளூர் வசூல் மட்டுமே. உலகளாவிய வசூல் இன்னும் கணக்கிடப்படவில்லை.

பாடிகார்ட் குறித்து ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ப்ரீத்தி சஹானி கூறுகையில், மிகப் பிரமாதமான வரவேற்பு படத்துக்குக் கிடைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 20 கோடி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கூடுதலாகவே கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றார்.

ரூ. 60 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 2600 பிரின்டுகளும், வெளிநாடுகளில் 325 பிரிண்ட்களும் போட்டுள்ளனர்.

மலையாள பாடிகார்டை இயக்கிய சித்திக் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சல்மான் கானின் மைத்துனர் அதுல் அக்னிஹோத்ரி தயாரித்துள்ளார். முதல் வாரத்தில் பாடிகார்ட் ரூ. 100 கோடி வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் பாடிகார்ட் படம் சுமாராகத்தான் போனது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழிலிலும், இந்தியிலும் இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது ஆச்சரியமானது.
 

ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் மோகன்பாபு மகள்!


தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு பாலிவுட்டில் நாயகி அவதாரம் எடுக்கிறார். ஹீரோயின்களை குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்ட வைப்பவர் என்ற பெயரெடுத்த ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட் படத்தின் மூலம் இந்தி நாயகியாக பட்டையைக் கிளப்ப கிளம்பியுள்ளார் லட்சுமி மஞ்சு.

லட்சுமி மஞ்சு, அமெரிக்காவில் நடிப்பு குறித்துப் படித்தவர். தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டிபார்ட்மென்ட் மூலம் இந்தி நடிகையாகிறார்.

இதுகுறித்து லட்சுமி கூறுகையில், டிபார்ட்மென்ட் படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார் ராமு. எனக்கு பெரும் சந்தோஷம். உடனே ஓ.கே. சொல்லி விட்டேன் என்றார்.

முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க முடிவாகியிருந்தவர் கங்கனா ரனவத். என்ன நடந்ததோ தெரியவில்லை. கங்கனாவை விட்டு விட்டு இப்போது லட்சுமிக்கு வந்துள்ளார் ராம் கோபால் வர்மா. இப்படத்தில் சஞ்சய் தத்தின் மனைவி வேடம்தான் லட்சுமி மஞ்சுக்கு. இதுவும் உடனே ஓ.கே. சொல்ல லட்சுமிக்கு ஒரு காரணமாம்.

இப்படத்தில் தெலுங்கு ஹீரோ ராணா டகுபதியும் இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி கூறுகையில், ராணாவும், நானும் நல்ல நண்பர்கள். அவருடன் படத்தில் இடம் பிடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

தற்போது தனது சகோதரர்களான மனோஜ் மஞ்சு மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து ஊ கொடதாரா உலிக்கி படதாரா என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்து நாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் மஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது.

ராமு இயக்கத்தில் மஞ்சு நடிப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே தெலுங்கில் ராமு இயக்கிய டொங்கலா முத்தா என்ற படத்தில் நடித்திருந்தார் லட்சுமி மஞ்சு.

டிபார்ட்மென்ட் படத்தின் கதை இதுதான். இப்படத்தில் அமிதாப் பச்சன் அரசியல்வாதியாக மாறிய தாதா கும்பலின் தலைவராக நடிக்கிறார். சஞ்சய் தத்தும், ராணா டகுபதியும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகளாக வருகிறார்கள்.
 

காஜலைத் தேடி வரும் பலான மலையாள பட வாய்ப்புகள்


காஜல் அகர்வாலுக்கு தற்போது கேரள நாட்டில் இருந்து பட வாய்ப்புகள் குவிகிறதாம். ஆனால் அவை எல்லாம் ஒருமார்க்கமான படங்கள்.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழிலும் அவ்வப்போது வந்து நடித்துவிட்டு போவார். அண்மையில் இந்தியில் சிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படி அவர் ஆக்டிங் கெரியர் மேலே போய் கொண்டிருக்கையில் அவர் செய்த ஒரு காரியம் பெரிய பிரச்சனையாகியுள்ளது.

எப்ஹெச்எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார். நான் அப்படியெல்லாம் போஸ் கொடுக்கவில்லை என்று முதலில் மறுத்த அவர் பின்பு அமைதியாகிவிட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி தந்துள்ளார் காஜல்.

பாலிவுட்டில் சான்ஸ் கிடைக்கத் தான் காஜல் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறார் என்று அங்குள்ளவர்கள் கிண்டல் செய்கிறார்களாம். அவர் பாலிவுட் வாய்ப்பை எதிர்பார்த்து இப்படி செய்தாரா, இல்லையா என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அவருக்கு மாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவையெல்லாம் பலான பட வாய்ப்புகளாம்.

இதனால் காஜல் தரப்பு அதிர்ச்சியாகியுள்ளதாம். எதையோ நினைத்து போஸ் கொடுத்தால் எதுவெல்லாமோ கிளம்பி வருகிறதே என்று அங்கலாய்க்கிறார்களாம்.

எல்லாம் அந்த டாப்லெஸ் போஸால் வந்த வினை...!
 

முப்பொழுதும் உன் கற்பனைகள் என்னை மேலும் உயரத்திற்கு உயர்த்தும்- அமலா பால்


மைனா படத்தில் கிடைத்த புகழை விட, முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் என்னை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் 'ஹாட் கேக்' அமலா பால்.

மைனா படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் வசீகரித்தவர் அமலா பால். தற்போது பார்த்துப் பார்த்து கதைகளைத் தேர்வு செய்து நிதானமாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தெய்வத் திருமகளுடன் விக்ரமுடன் இணைந்து நடித்தார். தற்போது முரளி மகன் அதர்வாவுடன் இணைந்து முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்து வருகிறார். இதில் அமெரிக்காவிலிருந்து திரும்பி பெங்களூரில் வசிக்கும் பெண்ணாக வருகிறார்.

இப்படம் குறித்து அமலாவிடம் கேட்டபோது, இது என்னை மைனாவை விட மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும். இப்படத்தின் கதாபாத்திரம், கிட்டத்தட்ட எனது கனவுக் கதாபாத்திரம் ஆகும். இதனால் ரசித்து நடித்து வருகிறேன். இப்படத்தில் நடிப்பது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்றார் அமலா.
 

டெர்மினேட்டர் புகழ் அர்னால்டு ஸ்வார்ஸினேகர் மீண்டும் நடிக்க முடிவு


மெக்சிகோ: ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிப்போர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸினேகர், திரும்பவும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.

டெர்மினேட்டர் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் அப்பதவியில் இருந்து அர்னால்டு ஓய்வுப் பெற்றார். தற்போது, அப்பதவியில் ஜெர்ரி பிரவுன் என்பவர் உள்ளார்.

இதற்கிடையே, வெளிநாட்டு செய்தி நிறுவனமான நியூ-புளுட்டனில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, பிரபல நடிகர் அர்னால்டு அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். லாஸ்ட் ஸ்டென்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) துவங்க உள்ளது.

நிவாடா அடுத்த லாஸ் வேகஸ் சிறையி்ல் இருந்து தப்பி, மெக்சிகோ எல்லையை கடக்கும் சிலரை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட உள்ளது, என தெரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் தனது நடிப்பு அறிவிப்பை வெளியிட்ட நடிகர் அர்னால்டின் அடுத்த படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 

ஆலப்புழையில் விபத்து-மம்முட்டி கார் மீது பஸ் மோதியது-தப்பினார் மம்முட்டி


ஆலப்புழை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பயணம் செய்த காரின் பின்புறம் வேகமாக வந்த தனியார்ப் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவசமாக மம்முட்டி உயிர் தப்பினார். மம்முட்டியிடம் கார் டிரைவர் மன்னிப்பு கேட்டதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.

வெனிஸில் வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தின் ஷூட்டிங் ஆலப்புழையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குக் கிளம்பினார் மம்முட்டி. எர்ணாகுளத்தில் அவரது கார் போய்க் கொண்டிருந்தபோது அரூர் கோவில் சந்திப்புப் பகுதியில் கார் மீது பின்னால் வந்த தனியார்ப் பேருந்து பலத்த சப்தத்துடன் மோதியது.

இதில் காரின் பின்பகுதி நொறுங்கிப் போனது. இதைப் பார்த்த பொதுமக்கள் வேகமாக காரை நோக்கி ஓடி வந்தனர். உள்ளே பார்த்தபோது அங்கு மம்முட்டி சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர். உடனடியாக மம்முட்டியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக மம்முட்டிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பின்னர் விரைந்து வந்த போலீஸார் பஸ்சை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியைச் சந்தித்த பஸ் டிரைவர் விபத்து ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவரை மன்னிப்பதாக மம்முட்டியும் கூறி போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. எச்சரித்து டிரைவரை அனுப்பி விட்டனர்.
 

பெப்சி தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டாம்! - தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்


சென்னை: பேச்சுவார்த்தை முடிவடையும் வரை, பெப்சி தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டாம், என திரைப்பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில், வெளியிடப்பட்ட அறிக்கை:

"திரைப்பட தயாரிப்பாளர்களின் அமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, ஊழியர்களுக்கான ஊதிய விகிதத்தை முடிவு செய்வது வழக்கம்.

அந்த வழக்கத்தையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

4 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை சம்பள உயர்வு தருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சில தொழிற்சங்க பிரிவினர் 50 முதல் 75 சதவீதம் வரை சம்பள உயர்வு வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

இன்று திரையுலகம் நலிந்த சூழ்நிலையில் உள்ளது. 50 முதல் 75 சதவீத ஊதிய உயர்வை எந்த தயாரிப்பாளரும் தர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். பெரிய பட தயாரிப்பாளர்களின் நிலையே இதுவென்றால், சிறு பட தயாரிப்பாளர்களால் இந்த சுமையை எப்படி தாங்க முடியும்?

கர்நாடகாவில் 20 முதல் 30 சதவீத சம்பள உயர்வு என்று முடிவெடுக்கப்பட்டு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளனர் என்பதையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று பல தமிழ் படப்பிடிப்புகள், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பட தயாரிப்பாளர்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கூட்டப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்குப்பின், பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு முடிவு வரும்வரை, தொழிலாளர்கள் இப்போதுள்ள சம்பள விகிதத்தை ஒப்புக்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.

நிலைமை எல்லை மீறினால் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணும்படி, தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற கூட்டு கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் கே.முரளிதரன், பொறுப்பு செயலாளர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், இப்போதைய துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் எல்.சுரேஷ், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.
 

சன் பிக்சர்ஸ் சிஓஓவாக செம்பியன் நியமனம்!


சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா பல்வேறு சட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழலில், நிறுவனத்தை புதிய வேகத்துடன் நடத்த புதிய சிஓஓவாக செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம்.

பிரபல தயாரிப்பாளரும்புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவருமான கோவை செழியனின் மகன் செம்பியன் சிவகுமார். சன் குழுமத்தின் மலையாள சேனல் சூர்யா டிவி, எஸ்சிவி மற்றும் சூரியன் எப்எம் ஆகியவற்றை நிர்வகித்து வந்தார்.

இப்போது, சன் பிக்சர்ஸ் நெருக்கடியான சூழலில் இருப்பதால், சக்சேனாவுக்கு பதிலாக அந்தப் பொறுப்பில் செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம்.

தனது நியமனம் குறித்து செம்பியன் கூறுகையில், "மீண்டும் பழைய உத்வேகத்தோடு களமிறங்குகிறோம். வருகின்ற நாட்களெல்லாம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான நாட்களாக அமையப் போகின்றன. இப்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அடுத்து சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். இன்னும் நிறைய பெரிய படங்கள் சன் வசம் வருகின்றன," என்றார்.
 

யுவன் சங்கர் ராஜா - ஷில்பா காதல் திருமணம்... இளையராஜா முன்னிலையில் திருப்பதியில் நடந்தது!


இசைஞானி இளையராஜாவின் இளையமகன் மகன் யுவன் சங்கர் ராஜா, தனது காதலி ஷில்பாவை திருப்பதியில் திருமணம் செய்தார். இளையராஜா மற்றும் உறவினர்-நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் 2-வது மகன் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் இப்போதைய நம்பர் ஒன் இசையமைப்பாளர் இவர். ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி சுஜயாவுக்கும் யுவனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து நடந்தது. சுஜையாவுக்கு வேறு திருமணமும் நடந்துவிட்டது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஷில்பா என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷில்பா பி.பார்ம். படித்தவர். ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக இருக்கும் மோகன்-மைதிலி தம்பதியரின் மகள்.

யுவனும் ஷில்பாவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்திற்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா - ஷில்பா திருமணம் திருப்பதியில் நேற்று காலை 10.20 மணிக்கு நடந்தது.

திருமணத்தில் இளையராஜா, அவருடைய மனைவி ஜீவா, மணமகளின் பெற்றோர் மோகன்-மைதிலி, இசையமைப்பாளரும், யுவன் சங்கர் ராஜாவின் அண்ணனுமான கார்த்திக் ராஜா, சித்தப்பா கங்கை அமரன், அவருடைய மகன்கள் டைரக்டர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி, பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர், வாசுகி பாஸ்கர், பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், சுப்பு பஞ்சு, இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் கிருஷ்ணா, சிவா, வைபவ், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 

செப்டம்பர் 16க்கு தள்ளிப் போன எங்கேயும் எப்போதும்!


ஏஆர் முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் எங்கேயும் எப்போதும் படம் இரண்டு வாரங்கள் தள்ளிப் போனது. செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், வரும் செப்டம்பர் 16-ம்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா நடித்த இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கியுள்ளார். சென்னை மற்றும் திருச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இந்தப் படம்.

ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம் இது என்பதால், இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சென்டிமெண்டாக விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தினர். ஆனால் மங்காத்தா வெளியீடு தங்கள் படத்தின் ஆரம்ப காட்சிகளை பாதிக்கும் என்பதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளனர்.