படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த பத்து நிமிடத்திலேயே தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் செந்தமிழன் அனுமதி கொடுத்து விட்டார். அதிமுக ஆட்சியில், துரித கதியில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று பாராட்டு தெரிவித்துள்ளார் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர்.
டாக்டர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா புதிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தயாரிப்பதும் ராஜசேகர் தம்பதிதான். இப்படத்தில் ராஜசேகர் ஹீரோவாக நடிக்கிறார். இதுதாண்டா போலீஸ் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது.
சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது சண்டைக் காட்சியின்போது ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை மனைவியுடன் சந்தித்தார் ராஜசேகர். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலம் ஆக்குவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார். கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகவும், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றி வருவதற்காகவும் அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில், முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன. இதுதான்டா போலீஸ் பாகம் 2 படப்பிடிப்புக்கு அனுமதி கோரி, தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தமிழனை சந்தித்து மனு கொடுத்தோம். பத்தே நிமிடத்தில் அனுமதி வழங்கி விட்டார். அ.தி.மு.க. ஆட்சி மீது, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
இதுதான்டா போலீஸ் படத்தை வெளியிடுவதற்கு முன்பும் இதேபோல் எனக்கு விபத்து ஏற்பட்டது. இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போது, அதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிடும் சூழ்நிலையில், மீண்டும் அதேபோன்ற விபத்தில் சிக்கியிருக்கிறேன். இந்த விபத்திலும் அதே இடது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது என்றார் அவர்.
அன்னா, ராம்தேவுக்கு ஆதரவு
ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே, ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டங்களுக்கு டாக்டர் ராஜசேகர் தனது ஆதரவைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், லஞ்சம் ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். படப்பிடிப்பு காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை.
எனக்கு கால் முறிவு ஏற்படாதிருந்தால், பாபா ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருப்பேன். அவருடைய உண்ணாவிரதத்துக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.