ஷஞ்சனா சினி ஆர்ட்ஸ் சார்பில் ஏ.ஷஞ்சய் பிரகாஷ் தயாரிக்கும் படம், 'நீங்காத எண்ணம்'. பானுசந்தர் மகன் ஜெயந்த் ஹீரோ. அங்கீதா ஹீரோயின். ஒளிப்பதிவு, மோகனராமன். இசை, இமானுவேல் சதீஷ். பாடல்கள், நா.முத்துக்குமார். எழுதி, இயக்கும் எம்.எஸ்.எஸ் கூறும்போது, ''இளமைப்பருவத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் முதுமை வரை நிலைத்து நிற்கும். விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை. காதல் புனிதமானது, ஜாலியானது அல்ல என்பது போன்ற கருத்துகளை இப்படம் சொல்கிறது. புதுக்கோட்டையில் ஷூட்டிங் நடக்கிறது'' என்றார்.
ஒரே படத்தில் 5 வகையான இசை
'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படத்துக்கு 5 வகையான இசை அமைத்திருக்கிறார் தாஜ் நூர். இதுகுறித்து அவர் கூறியதாவது: இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து இசை அமைக்கிறேன். எனது முதல் படமாக 'வம்சம்' வெளிவந்தாலும் என்னை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியது, 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' படம்தான். அதனால் எனது முழு திறமையையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். படத்தின் கதை தமிழகத்தின் புவியியல் அமைப்பான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை 5 நிலங்களில் நடக்கிறது. எனவே இந்த நிலங்களுக்கே உரித்தான தனித்தனி பின்னணி இசையை கொடுத்திருக்கிறேன். அந்ததந்த பகுதியில் பயன்படுத்தும் இசைக் கருவிகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அதோடு மேற்கத்திய இசையை கொண்டு தமிழ் கலாசாரத்தை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
நீலாம்பரியாக கஞ்சா கருப்பு
ஏஞ்சல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அம்பிகா சிவா தயாரிக்கும் படம், 'கீரிப்புள்ள'. யுவன் ஹீரோ. திஷா பாண்டே, ஹாசிகா ஹீரோயின்கள். ஒளிப்பதிவு, மோகனராமன். இசை, ஜப்ரி. பாடல்கள்: யுகபாரதி, ருசினா, தென்றல் செந்தில். பெரோஸ்கான் இயக்குகிறார். இதில் பெண் வேடத்தில் நடிக்கும் கஞ்சா கருப்பு கூறும்போது, ''படையப்பா'வில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடம் எப்படி பரபரப்பாகப் பேசப்பட்டதோ அதுபோல், 'கீரிப்புள்ள'யில் நான் ஏற்றுள்ள நீலாம்பரி வேடம் பேசப்படும். இதன் கதையும், என் வேடமும் பிடித்து இருந்ததால் நீலாம்பரியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார்.
தர்மேந்திராவுக்கு பத்மபூஷண்
தர்மேந்திரா, ஷபனா ஆஸ்மிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: பத்ம விருது பெற்றவர்களில் சிலர் என்னைவிட மூத்தவர்கள். அவர்கள் எல்லோரும் நான் நேசிப்பவர்கள். மற்றவர்கள் எனது நண்பர்கள். அவர்களை பற்றி நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. எனது அன்புக்குரியவர்களில் தர்மேந்திராவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் உள்பட விருது பெறும் சினிமா நண்பர்கள் அனைவருமே தங்களது தொழிலை மிக நேர்த்தியாக செய்தவர்கள். அதை ஏற்கும் விதமாக அரசு அவர்களுக்கு விருதுகள் அறிவித்திருப்பது சந்தோஷம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
இசையை உருவாக்குவது கதை களம்தான்: இளையராஜா
டூயட் மூவீஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கும் படம், 'டோனி'. இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதன் முறையாக இளையராஜா படத்தின் பாடல்களை மேடையில் பாடினார். பின்னர் நிருபர்களிடம் இளையராஜா கூறும்போது, ''ஒரு படத்தின் இசையை உருவாக்குவது கதை களம்தான். 'டோனி' படம் நடுத்தர இந்திய குடிமகனின் வாழ்க்கை. இந்த நாட்டில் நாம் இப்போது கடைப்பிடித்து வரும் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை பற்றி நிறைய கேள்விகளை படம் எழுப்புகிறது. அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை படம் ஏற்படுத்தும்'' என்றார்.
பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இது கல்வி தொடர்பான படம். தேசம் முழுமைக்குமான படம். தந்தை மகன் உறவைச் சொல்லும் படம். பிரபல எழுத்தாளர் ஹயாஸ் மஞ்ரேக்கரின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதற்கான உரிமையை வாங்கி அதில் நான் சொல்ல வேண்டியதையும் சேர்த்து இதை இயக்கி உள்ளேன். இளையராஜா இதில் லைவ் மியூசிக் கொடுத்திருக்கிறார். என் பங்கு 20 சதவிகிதம்தான். அவரது பங்கு 80 சதவிகிதம். பிப்ரவரி 10ம் தேதி படம் வெளிவருகிறது'' என்றார்.
பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இது கல்வி தொடர்பான படம். தேசம் முழுமைக்குமான படம். தந்தை மகன் உறவைச் சொல்லும் படம். பிரபல எழுத்தாளர் ஹயாஸ் மஞ்ரேக்கரின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதற்கான உரிமையை வாங்கி அதில் நான் சொல்ல வேண்டியதையும் சேர்த்து இதை இயக்கி உள்ளேன். இளையராஜா இதில் லைவ் மியூசிக் கொடுத்திருக்கிறார். என் பங்கு 20 சதவிகிதம்தான். அவரது பங்கு 80 சதவிகிதம். பிப்ரவரி 10ம் தேதி படம் வெளிவருகிறது'' என்றார்.
முயல் படத்துக்கு ஐயாயிரம் தயாரிப்பாளர்கள்
தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் இணைந்து பி அண்ட் வி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி, 'முயல்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். முரளி, சரண்யா நாக் நடிக்கிறார்கள். ஜே.வி இசை. எம்.ஆர்.சரவணகுமார் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன் கூறியதாவது: சுமார் 5 ஆயிரம் பேர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தியாவிலேயே இது முதல் முயற்சியாகும். வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் சந்திக்காத மூன்று இளைஞர்கள் திடீரென்று ஒரு கொடூரத்தை சந்திக்க நேரிடுகிறது. அதனால் பாதிக்கப்படும் அவர்கள், இனி அந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்பது கதை. 'முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்பதுதான் படத்தின் கரு. 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' என்ற படத்தை ஸ்டில் கேமராவிலேயே படமாக்கினேன். இந்தப் படத்தையும் அதுபோலவே உருவாக்குகிறேன். டெக்னீஷியன்கள் தயாரிக்கும் படம் என்பதால் டெக்னிக்கலாக பல விஷயங்கள் இருக்கும். மெசேஜும் இருக்கும்.
ஒரு நடிகையின் வாக்குமூலத்துக்கு எதிர்ப்பா?
சோனியா அகர்வால் நடித்துள்ள படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. இதை எஸ்.ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், புன்னகைப்பூ கீதா தயாரித்து, நடித்துள்ளார். எவ்வளவு சோதனைகளைக் கடந்து, ஒரு பெண் ஹீரோயினாக மாறுகிறாள் என்பது கதை. படத்தைப் பார்த்த சென்சார் குழு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. சோனியா அகர்வால் கேரக்டர் பரபரப்பாக விவாதிக்கப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், திரையுலகினர் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் வரும் என்று தெரிகிறது. இதுகுறித்து கீதா கூறியதாவது: எந்தவொரு தொழி லிலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதுபோலத்தான் சினிமா உலகிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கும். இப்படத்தில் அதைத்தான் பதிவு செய்திருக்கிறோம். இதற்குமுன் எனது தயாரிப்பில் வந்த 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'குண்டக்க மண்டக்க', 'நர்த்தகி' படங்களில், தவறான கருத்துகளைப் பதிவு செய்யவில்லை. நானும் பெண் என்பதால், கவர்ச்சியின் எல்லை எது? ஆபாசம் எது என்று தெரியும். அதைமீறி படம் தயாரிக்க மாட்டேன். இந்த வருடத்தில் மேலும் 3 படங்கள் தயாரிக்க உள்ளேன்.
புயல் பாதித்த பகுதியில் கம்பன் கழகம் ஷூட்டிங்
புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி, கிருத்திகா, ஸ்வப்னா நடிக்கும் படம், 'கம்பன் கழகம்'. படத்தை தயாரித்து, இயக்கும் அசோகன் கூறியதாவது: ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவன் என்பதால், படத்தை அவருக்கு திரையிட்டேன். ஒவ்வொரு காட்சியும் உருக்கமாக இருப்பதாகப் பாராட்டினார். இதன் கதைக்களம் முழுவதும் பாண்டிச்சேரி. ஷூட்டிங் முடிந்த சில நாட்களில், தானே புயல் பாண்டிச்சேரியை புரட்டிப் போட்டு விட்டது. படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது, பாண்டிச்சேரியின் தற்போதைய நிலை பரிதாபமாக இருந்தது. படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள். இதில் ஷாம் கனடாவிலும், பிரவீன் அமெரிக்காவிலும் வசிப்பதால், பாடல்கள் கலிபோர்னியா ஸ்டுடியோ வெஸ்ட் சான்டிகோவில் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.