40 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தானில் முதல் முறையாக உறுமிய "கப்பர் சிங்"!

கராச்சி: இந்தியாவில் ரிலீசாகி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பிறகு, தற்போது பாகிஸ்தானில் முதல் முறையாக ஷோலே படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ஹேமமாலினி, சஞ்சீவ்குமார் இணைந்து நடித்த இந்திப் படம் ‘ஷோலே'. கடந்த 1975-ல் ரிலீசான இந்தப் படத்தை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை புரிந்தது இப்படம். இப்படம் அப்போது பாகிஸ்தானில் வெளியாகவில்லை. ஆனால், பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் திருட்டு விசிடி மூலம் இப்படத்தைப் பார்த்தனர்.

40 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தானில் முதல் முறையாக உறுமிய

இந்நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு தற்போது இப்படம் பாகிஸ்தானில் ரிலீஸ் செய்யப் பட்டுள்ளது. கராச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் பாகிஸ்தான் விநியோகஸ்தரான நதீம் கூறும் போது, ‘ஷோலே' படம் பாகிஸ்தானில் நல்ல வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன், தர்மேந்திரா ஆகியோர் பழுத்த தாத்தாக்களாகி விட்டனர். ஹேமமாலினி அழகான பாட்டியாகி விட்டார். சஞ்சீவ் குமார் இறந்து போய் விட்டார். வில்லனாக வெளுத்துக் கட்டிய அம்ஜத் கான் இறந்து போய் விட்டார் இந்த நிலையில் இப்போதுதான் இந்தப் படம் பாகிஸ்தானை எட்டிப் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் "தாயாக" தயாராகிறார் ஏஞ்சலீனா...!

லண்டன்: பிரபல ஹாலிவுட் ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் இருவரும், தற்போது நான்காவது குழந்தையை சிரியாவில் இருந்து தத்தெடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் ஜோடிக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ஒரு குழந்தை பெற்றெடுத்தது. மற்ற 3 குழந்தைகள் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டவை ஆகும்.

இந்நிலையில், அகதிகளுக்கான ஐ.நா-வின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஞ்சலினா, உள்நாட்டு போரில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு பலமுறை பயணம் மேற்கொண்டார்.

மீண்டும்

அப்போது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்தினார் ஏஞ்சலினா. அக்குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் தன்னாலான உதவியை செய்ய நினைத்தார். அதன்படி, தற்போது சிரியாவைச் சேர்ந்த பெண் குழந்தையை தனது 7வது குழந்தையாக தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தகவலை ஏஜ்சலினா - பிராட் பிட் ஜோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

புற்று நோய் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்க தனது இரண்டு மார்பகங்களையும் அகற்றிவிட்ட ஏஞ்சலினா, இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள போவது இல்லை எனவும் முன்பே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிந்தது.. ஜூலையில் வெளியாகிறது!

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிந்தது. வரும் ஜூலையில் படம் வெளியாகிறது.

காக்கி சட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிந்தது.. ஜூலையில் வெளியாகிறது!

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி - சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கின்றனர் இந்தப் படத்தை.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் இசையை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடவுள்ளனர். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் வெளியிடுகிறது.

 

சோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்!

சென்னை: படம் இயக்குவதற்காக பெற்ற ரூ. 1 கோடியை இயக்குநர் வெங்கட் பிரபு நடிகை சோனாவிடம் திருப்பி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

‘குசேலன்', ‘பத்து பத்து', ‘சோக்காலி' உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சோனா. இவர் யுனிக் புரொடக்‌ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் படம் தயாரிக்க ஆரம்பித்தார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு, சோனா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இதையடுத்து சோனா, வெங்கட் பிரபுவுக்கு சம்பளம் பேசி, ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்!

ஆனால், சொல்லியபடி வெங்கட் பிரபு சோனாவுக்கு படம் இயக்கிக் கொடுக்கவில்லை. இதனால் தான் கொடுத்த பணத்தை சோனா திருப்பிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெங்கட் பிரபு மீது சோனா புகார் அளித்தார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், வெங்கட் பிரபு, சோனா மற்றும் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ‘சோனாவுக்கு படம் இயக்காத வெங்கட் பிரபு, அவரிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயில், மே மாதத்துக்குள் ஒரு கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். வெங்கட் பிரபுவும் பொருத்தமான முறையில் அதை ஈடு கட்டுவதாக உறுதியளித்ததாக சொல்கிறார்கள்.

எனவே சோனா, வெங்கட்பிரபு பஞ்சாயத்து கூடிய சீக்கிரமே சமரசமாக முடியும் என்று நம்பப்படுகிறது.