கத்தி படம் குறித்துப் பேசினாலே சீறிப் பாய்கிறார் சீமான், கேள்வி எழுப்புவர்கள் மீது.
விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க... கத்தி படத்தை எதிர்க்க முடியாது... என்னய்யா செய்வ.. என்று கடுங் கோபத்துடன் கேட்கிறார் தன் முன்னால் நின்று கேள்வி எழுப்பும் நிருபர்களிடம்.
லைகா மொபைல் ராஜபக்சே கூட்டாளியாச்சே என்று கேட்டால், 'லைகா மொபைல் இங்கயா இருக்கு? லண்டனிலும் ஐரோப்பாவிலும்தான் இருக்கு. ஒருவேளை ராஜபக்சே மருமகன்கூட அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருந்தா, அங்குள்ள தமிழர்கள் அந்த சேவையைப் பயன்படுத்தறாங்களே... அவங்களைப் போராடச் சொல்லுங்க.. எதுக்காக என்னை சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறீர்கள்? லைகாவுக்கு இந்தியாவில் அலுவலகமே இல்லையே' என்கிறார்.
உண்மையில் இந்தியாவில் தமிழகத்தில் லைகா நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக அலுவலகம் உள்ளது. சென்னை அசோக் நகரில், 9வது அவென்யூவில் அமைந்துள்ளது அந்த அலுவகம் (லைக்காவின் இந்தியப் பிரிவுக்கான இணைய தளம் லைகாடெலிகாம்.இன்). இதை எடுத்துச் சொன்னபோது, 'இப்போதானே சொல்றீங்க.. சுபாஸ்கரன் கிட்ட விளக்கம் கேட்டிருக்கோம். அவர் சொன்னபிறகு முடிவு செய்வோம்' என்கிறார்.
லைகா நிறுவனத்துக்காக சீமான் கூட படம் பண்ணப் போகிறார் என்ற தகவலை அறிவித்தவர் யாரோ ஒருவர் அல்ல. சீமான் அங்கத்தினராக உள்ள இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும், நிர்வாகி ஆர்கே செல்வமணியும்தான். அதுவும் சாதாரணமாக சொல்லவில்லை.. நூறு மீடியாக்காரர்களைக் கூட்டி வைத்து அறிவித்தார்கள். அதனை அப்போது மறுக்கவில்லை சீமான். இப்போது மறுக்க ஆரம்பித்துள்ளார். என் படம் பற்றி அவர்கள் எப்படி அறிவிக்கலாம் என்று இப்போதுதான் கேட்கிறார், விமர்சனங்கள் படு காட்டமாக வரத் தொடங்கியபிறகு.
'எல்லாத்துக்கும் இந்த சீமான்தான் போராடணுமா... எனக்காக ஏன் காத்திருக்கணும்... இறங்கிப் போராடுங்க.. ஆனா கத்தி படத்துக்காக நான் போராட மாட்டேன்.. லட்சம் பிரச்சினையை வச்சிக்கிட்டு போராடிக்கிட்டிருக்கேன், வந்துட்டாங்க கத்தி சுத்தின்னு..', என்று அடித்துச் சொல்கிறார் சீமான்.
சரி, அப்ப அடுத்த படத்தை நீங்க லைகாவுக்கு பண்ணலையா? என்றால்...
நான் ஏன் அந்த நிறுவனத்துக்கு பண்ணப் போறேன். கலைப்புலி தாணு அண்ணன் இரண்டு ஆண்டுகளாக தன் நிறுவனத்துக்கு படம் பண்ணக் கோரி வருகிறார். சொந்த நிறுவனம் இருக்கும்போது நான் எதற்கு இன்னொரு நிறுவனத்துக்கு படம் பண்ணப் போறேன்?, என்று திருப்பிக் கேட்கிறார்.
இந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம்: தாணு தயாரிக்கும் எல்லாப் படங்களும் அவர் சொந்தப் படங்கள் அல்ல. உதாரணத்துக்கு துப்பாக்கி. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனமும் எஸ்ஏ சந்திரசேகரனும்தான். அவர்களுக்காக தன் பேனரில் படத்தைத் தயாரித்துக் கொடுத்தவர்தான் தாணு!
அப்படி எதுவும் நடக்காமல், தாணுவே நேரடியாகத் தயாரித்தால் சீமானின் தம்பிகள், சொந்தங்கள் அனைவருமே சந்தோஷப்படுவார்கள்!