சென்னை: கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது இருப்பதால் தற்போது அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழே கைது செய்ய போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியும், புவனேஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த 2002ம் ஆண்டும் இப்படித்தான் அல்லோகல்லப்பட்டார் புவனேஸ்வரி. அப்போது அவரை விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட் வாசலில் வைத்து சாமியாடுவது போல பேசினார் அப்போது புவனேஸ்வரி. அப்போது இணை கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். அவர்தான் தற்போது கமிஷனராக இருக்கிறார். இந்த நிலையில்தான் தியேட்டரில் வம்பு வளர்த்து சண்டைக்குப் போய் போலீஸாரையே அடித்து துவைத்தெடுத்ததாக கூறி கைதாகியுள்ளார் புவனேஸ்வரி.
புவனேஸ்ரி மீது கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு பக்கா அக்மார்க் கிரிமினல் போல புவனேஸ்வரி மீது சகலவிதமான வழக்குகளும் உள்ளதால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ்ழ் கைது செய்து ஒரு வருடத்திற்கு உள்ளேயே தங்க வைக்க காவல்துறையினர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் வளாகத்தில் புவனேஸ்வரி நடந்து கொண்டவிதம் குறித்து பரபரப்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவம் நடந்த அன்று புவனேஸ்வரிதான் காரை ஓட்டி வந்தாராம். தியேட்டருக்குள் நுழையும்போதே தொடர்ந்து ஹார்ன் அடித்தபடி பேய் போல வந்தாராம் புவனேஸ்வரி.மேலும் கார்நகர முடியாமல் நீண்ட கியூ இருந்ததால் கோபமும் ஆத்திரமுமாக காணப்பட்டாராம்.
அவரது கார் முன்னால் நின்றிருந்த கால் டாக்சி மீது மோதவே அதன் டிரைவரான குமார் இறங்கி வந்தபோது ஒரு டிரைவர் உனக்கு கோபம் வருதா என்று கோபத்துடன் கேட்டாராம்.
மேலும் குமாரின் கார்சாவியை எடுத்து தனது ஜாக்கெட்டில் போட்டுக் கொண்டாராம் புவனேஸ்வரி. அதை குமார் கேட்கவே ஏதோ ஒரு மாதிரியாகப் பேசி பலமாக சிரித்தாராம் புவனேஸ்வரி.
மேலும் டிரைவர் குமாரை, புவனேஸ்வரியுடன் வந்தவர்கள் அடித்து துவைக்கவே அவர் தப்பி ஓடியுள்ளார். அதையடுத்து குமார் மறுபடியும் வர வேண்டும், வரும் வரை போக மாட்டோம் என்று கூறி புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் தியேட்டர் வாசலிலேயே ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்டார்களாம்.
தகவல் அறிந்து வந்த போலீஸாரையும் புவனேஸ்வரியி்ன் ஆட்கள் அடித்துத் துவைத்து விட்டார்களாம்.
இப்படி படு மோசமாக நடந்து கொண்டதால்தான் புவனேஸ்வரி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு படு தீவிரமாக தேடிப் பிடித்து கைது செய்ததாம் போலீஸ்.