சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் முதல் நாயகி நான்தான். ஆனால் என்னை விட ஓவியாவுக்கு அதிக முக்கியத்துவம் தராங்க... என்னைவிட அப்படி என்ன இருக்கு அவரிடம்?, என்று காட்டமாகக் கேட்டுள்ளார் நடிகை தீபா ஷா.
விமல், ஓவியா, தீபாஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சில்லுன்னு ஒரு சந்திப்பு. படம் பெரிதாக எடுபடவில்லை.
ஆனால் படம் தொடர்பான ஹீரோயின்கள் இருவரும் மோதிக் கொண்டிருப்பதுதான் பளிச்சென்று தெரிந்துள்ளது.
இந்தப் படப்பிடிப்பின்போதே ஓவியாவுக்கும் தீபா ஷாவுக்கும் மோதல் மூண்டது. இருவருக்கும் ஒரே கேரவன் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருநாள் தீபா ஷா உள்ளே இருந்தபோது, ஓவியா நுழைந்துவிட்டாராம். உடனே அவரை வெளியே போ என்று கூறியிருக்கிறார் தீபா ஷா. இதனால் கோபமடைந்த ஓவியா, ஸ்பாட்டிலேயே அவரை வெளுத்து வாங்க, இயக்குநர் வந்து சமாதானப்படுத்தினாராம்.
படம் வெளியான பிறகு, விளம்பரங்களில் தன்னைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் தீபா ஷா.
அவர் கூறுகையில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தின் புரமோஷனுக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் என்னை கூப்பிடவே இல்லை. ஓவியாவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தனர்.
போஸ்டர்கள், விளம்பரங்களில் கூட என்னைப் புறக்கணித்துவிட்டார்கள். என்னிடம் இல்லாதது அப்படியென்ன ஓவியாவிடம் உள்ளது... என்னைப் புறக்கணிப்பதன் காரணத்தை நான் புரிந்து கொண்டேன்," என்றார்.