சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஆங் லீ, தனது புதிய படமான லைஃப் ஆஃப் பை எனும் படத்தை புதுவையில் படமாக்கினார்.
‘ப்ரோக் பேக் மவுன்டன்,' ‘குரோச்சிங் டைகர் ஹிடென் டிராகன்' உள்பட பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை இயக்கி, ‘ஆஸ்கார்' விருது பெற்றவர், ஆங்லீ.
‘3டி'யில் உருவான இந்த படத்தின் டிரைலர் மற்றும் முன்னோட்ட காட்சிகளை, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நிருபர்களுக்கு திரையிட்டு காட்டினார் ஆங்லீ.
படம் குறித்து அவர் கூறுகையில், "யேன் மார்ட்டல் என்ற கனடா எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதை முழுக்க புதுச்சேரியில் நடப்பது போல் அமைந்துள்ளது. அதனால் படத்தின் பெரும்பகுதி காட்சிகளை புதுச்சேரியிலேயே படமாக்கினேன். சில காட்சிகள் மூணாறில் படமாக்கப்பட்டன.
கடந்த மூன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். 3 ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். புதுச்சேரியில் தங்கியிருந்தபோது தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பார்த்து வியந்தேன். தமிழர்கள், வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள்.
இந்த படத்துக்காக, தைவான் நாட்டில் பயன்படுத்தப்படாத ஒரு விமான நிலையத்தை வாடகைக்கு எடுத்து, அதில் பசிபிக் கடல் போன்ற அரங்கை அமைத்தேன். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் ஒரு புலி உருவாக்கப்பட்டது. அது, கம்ப்யூட்டர் புலி என்றால் நம்ப முடியாத அளவுக்கு படத்தில் வருகிறது.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஒரு சிறுவனுக்காக 3 ஆயிரம் பேர்களை பார்த்து, சூரஜ் சர்மா என்ற இந்திய சிறுவனை தேர்வு செய்தேன். இவனுக்கு தாயாக தபு நடித்து இருக்கிறார். கதாநாயகனாக இர்ஃபான்கான் நடித்து இருக்கிறார்.
‘லைப் ஆப் பை' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் தயாராகியிருக்கிறது,'' என்றார்.
ச்சே... என்ன இயக்குநரப்பா இவரு... நம்ம தமிழ் சினிமா டைரக்டர்கள் மாதிரி, இது என் சொந்தக் கதை... வேற எதப்பத்தியும் கேக்காதீங்க... மத்ததெல்லாம் படத்துல பாருங்க.. பிரமிச்சுப் போய் நிப்பீங்க.. என்றெல்லாம் அடித்து விடாமல், அப்புராணியா எல்லாத்தையும் சொல்லிப்புட்டாரே!