அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் நயன்தாரா!

நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. காதல், கவர்ச்சி, அழுத்தமான நடிப்பு என பல பரிமாணங்களைக் காட்டிய அவர், அடுத்து அதிரடி நாயகியாக நடிக்கிறார்.

ஆந்திராவில் அதிரடிப் படங்களில் நடித்துக் கலக்கினார் விஜயசாந்தி. அந்த மாதிரி அடிதடி சண்டைப் படங்களில் நடிக்கும் ஆசை எல்லா நாயகிகளுக்கும் உண்டு.

சினேகா கூட பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும்.

அதிரடி ஆக்ஷன்: அடுத்த விஜயசாந்தியாக மாறும் நயன்தாரா!

அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டை போட்டு நடித்தார். ருத்ரமாதேவி சரித்திர படத்திலும் ஆக்ஷன் நடிகையாக வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார்.

தற்போது நயன்தாராவும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் படத்தில் ஆக்ஷன் நாயகியாக அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஜெயம்ரவி ஹாக்கி விளையாட்டு வீரராக வருகிறார். நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறார். இதற்காக நயன்தாரா கராத்தே பயிற்சியெல்லாம் எடுத்துள்ளாராம்.

காதல் காட்சிகளில் ஜெயம் ரவியுடன் புரள்வதோடு, ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களைப் புரட்டி எடுக்கிறாராம்.

 

சென்னையில் பெட்னாவின் '2013 தமிழிசை விழா', 'மாவீரன் தீரன் சின்னமலை' நாட்டிய நாடகம்!

சென்னையில் பெட்னாவின் '2013 தமிழிசை விழா', 'மாவீரன் தீரன் சின்னமலை' நாட்டிய நாடகம்!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை", தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை"யுடன் இணைந்து முதன்முறையாக தமிழிசை மற்றும் நாட்டிய நாடகம் நடத்துகிறது.

‘2013 தமிழிசை விழா" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 29ம் தேதி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 நடக்கிறது.

சென்னை தி நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த ‘2013 தமிழிசை விழா'வில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமனியம் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள்.

அதன்பிறகு, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் பேசுகிறார்கள்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தர வடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் என்.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள்.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கேபிகே செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்கள். ஜெம் தொழிற் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் ஆர் வீரமணி, வேலூர் விஐடி பல்கலைக்கழகதின் நிறுவனர் கல்வியாளர் ஜி விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலான் இயக்குநர் சகாயம் ஐஏஎஸ், மற்றும் விஜிபி தொழில் குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

பிறகு, தமிழிசை விழாவின் முக்கிய நிகழ்வாக 'நடராஜ் நாட்டிய வித்யாலயா' வழங்கும் ‘மாவீரன் தீரன் சின்னமை நாட்டிய நாடகம்' அரங்கேற இருகிறது.

இந்த நாட்டியத்துக்கு குரு: நாகை. என்.பாலகுமார், பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருஷ்ணன்.

நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த 'இன்னிசை ஏந்தல்' திருபுவனம் ஆத்மநாதன் நன்றி கூறுகிறார். ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை'யைச் சேர்ந்த கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை", முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தாய்த் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்த பேரவை விருப்பம் கொண்டுள்ளது.

 

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

விஜய் சேதுபதிதான் கடந்த இரு ஆண்டுகளாக கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார்.

இந்த இரு ஆண்டுகளிலும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி மட்டும்தான்.

இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு ஹீரோவுக்கு பெரிய சவால்.

ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு!

அந்த சவாலை இதுவரை தனியாகச் சமாளித்து வந்த விஜய் சேதுபதி, இப்போது ஒரு புதிய செட்டப்பை உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவரை படங்களுக்கு தான் மட்டும் நகதை கேட்டு, தேர்வு செய்து நடித்து வந்தவர், இனி கதை கேட்பதற்கென்றே ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த ஐந்து பேருடன் சேர்ந்து கதை கேட்கும் விஜய் சேதுபதி, கதை சொன்னவர் போன பிறகு, தன் குழுவினர் கருத்தையெல்லாம் கேட்ட பிறகே கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.

'சங்குதேவன்' 'வன்மம்', சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், புறம்போக்கு" போன்ற படங்களில் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

2015-க்குப் பிறகு தான் நடிக்கப் போகும் படங்களுக்கு கதை கேட்கத்தான் இந்த புதிய 'நிபுணர் குழு'வை நியமித்திருக்கிறார்!!

 

கேவி ஆனந்த் படத்தில் நடிக்கிறாராமே அஜீத்..!

சினிமா செய்தி என்ற பெயரில் நம்பகத்தன்மை, உறுதிப்படுத்துதல் என எந்த வரையறையும் இல்லாமல், செவி வழிச் செய்திகள்தான் இப்போது மீடியாவை ஆக்கிரமித்து வருகின்றன.

அப்படி வெளியாகியுள்ள ஒரு செய்தி இது.

'கேவி ஆனந்த் படத்தில் அஜீத் நடிக்கிறார்'.

கேவி ஆனந்த் படத்தில் நடிக்கிறாராமே அஜீத்..!

இது சாத்தியம்தானா? இப்போதைய நிலையில் நிச்சயம் வாய்ப்பில்லை (அஜீத் திடீரென மனசு மாறினால் தவிர!).

வீரம் பட ரிலீசுக்குப் பிறகு, இரண்டு மாத விடுமுறை முடிந்து, அஜீத் கையிலெடுக்கும் படம் கவுதம் மேனனுடையதுதான். அந்தப் படம் முடிய எத்தனை மாதங்களாகும் என தெரியாது. ஒரு ஆண்டு கூட ஆகலாம். ஆனால் படத்தின் வசனப் பகுதி காட்சிகள் முடிந்ததுமே, வெங்கட் பிரபு படத்துக்குப் போய்விடுவதாகத்தான் ஒப்பந்தம்.

வெங்கட் பிரபு படம் 2015-ல்தான் முடியும். அதன் பிறகே அவர் வேறு படங்களில் நடிக்க முடியும் என்பதே நிலைமை.

இதற்கிடையில் கேவி ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்புக்கு புதுப்பட டிஸ்கஷன் தவிர வேறு காரணம் எதுவும் இருவருக்கும் இல்லை. விஜய்யை இயக்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார் கேவி ஆனந்தும்.

எனவே அஜீத் - கேவி ஆனந்த் காம்பினேஷனுக்கு வாய்ப்பு குறைவு என்பதே உண்மை என்கிறார்கள்.

 

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்

பெங்களூர்: ஒரு தமிழ் திரைப்படத்தைக் கூட திரையிடத் தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்ற கேள்வி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

கர்நாடக அரசின் செய்தித்துறை, கர்நாடக சலனசித்ரா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் புறக்கணிப்பு: சர்ச்சையில் கமல்

இந்த நிகழ்ச்சியில் நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், நடிகர் சுதீப், நடிகையும் எம்.பி.யுமான ரம்யா, ராதிகா பண்டிட் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரானிய திரைப்பட இயக்குநர் பௌரான் டேரக்ஷன்டே, ஜெர்மன் திரைப்பட இயக்குநர் ஹெயின்ஸ் ஜார்ஜ் பெட்வீடஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். விழாவின் முதல் நாளில் குர்தீஷ் இயக்குநர் கர்ஷன் கடர் இயக்கிய 'பெகாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது.

சமீப காலமாக இந்திய அளவில் பெரிதாக கவனத்தை ஈர்த்துவரும் தமிழ் திரைப்படம் ஒன்று கூட இவ்விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களிடம் கேட்டபோது, "கர்நாடகாவை சேர்ந்த 12 பேர் கொண்ட குழு தேர்வு செய்த திரைப்படங்களையே திரையிடுகிறோம்'' என்றனர்.

இதனிடையே தமிழ் திரைப்படங்களை புறக்கணித்த பெங்களூர் திரைப்படவிழாவை கமல்ஹாசன் தொடங்கி வைக்கலாமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவிற்கு மொழி இல்லை; மதமில்லை; ஜாதியில்லை எனக் கூறிவரும் வேளையில், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இவ்விழாவிற்கு வந்துள்ள தமிழக திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

நடிகை காயத்ரியுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து, புதிய கிசுகிசுகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார் முன்னணி ஹீரோ விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி இப்போது மெல்லிசை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்குகிறார். கடந்த டிசம்பர் 17ம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. படத்தில் மொத்தம் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் காயத்ரி.

இவர், ஏற்கெனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அடுத்து வரவிருக்கும் ரம்மி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

காயத்ரியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் விஜய் சேதுபதி!

தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி-காயத்ரி மெல்லிசை படத்தில் இணைகிறார்கள். ‘பீட்சா' படத்தைப் போன்றே 'மெல்லிசை' படமும் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, "உண்மைதான். காயத்ரி இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் நான் தொடர்ந்து நடிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. திறமையான நடிகை என இயக்குநர்கள் நம்பி ஒப்பந்தம் செய்கிறார்கள்," என்றார்.

 

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா

ஒளிப்பதிவு: ஆர் மதி

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு: தமிழ்க்குமரன்

வெளியீடு: ரெட் ஜெயன்ட்

இயக்கம்: அகமது


நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

நாசர் மகன் ஜீவா சின்ன வயசாக இருக்கும்போதே, அவர் அம்மா வேறொருவருடன் ஓடிப் போகிறார். இதை தந்தை சொல்லக் கேட்டு பெண்கள் மீதே வெறுப்பு கொள்கிறார் ஜீவா. வேறு பெண்ணை இரண்டாவதாக நாசர் மணந்து கொள்ள, தந்தை மீதும் மகா வெறுப்பு. அந்த வெறுப்புக்கு பயந்து மனைவியை பிரிந்து மகனே உலகம் என நாசர் வாழ்ந்தாலும், அவருடன் பேச மறுக்கிறார் ஜீவா. பள்ளியில் நண்பர்களாக அறிமுகமாகும் சந்தானம் மற்றும் வினய்தான் ஜீவாவின் உலகம். மூவரும் திருமணமே செய்து கொள்ளாமல் 'மொட்டப் பசங்களாகவே' இருப்போம் என சத்தியம் செய்து கொண்டு, கூடிக் குடித்து மகிழ்கிறார்கள்.

அப்போதுதான் த்ரிஷா வருகிறார் அவர்கள் வாழ்க்கையில். செய்த சத்தியத்தை மீறி சந்தானமும் வினய்யும் வீட்டில் பார்க்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள, ஜீவா நண்பர்களை வெறுத்து தனி மரமாகிறார்.

இவர் வாழ்க்கையில் காதலும், நட்பும் எப்போது எப்படி நுழைகிறது, தந்தை மீதான வெறுப்பு எப்படி மறைகிறது என்பது க்ளைமாக்ஸ்.

அதிரடித் திருப்பங்கள், ஆக்ஷன் காட்சிகள், கொப்பளிக்கும் ரத்தக் குழம்புகள் என எதுவும் இல்லாத படம் இது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

ஆனால் காட்சிகளின் அழகும், வண்ணமும் - அவற்றின் செயற்கைத் தன்மையை மீறி - ரசிக்க வைக்கின்றன. தாங்க்ஸ் டு ஒளிப்பதிவாளர் ஆர் மதி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!

இந்த இருவரும் இல்லாவிட்டால், நிச்சயம் இந்தப் படம் தேறியிருக்காது. மதி படம் பிடித்திருப்பது நம்ம சென்னையைத்தானா என்ற சந்தேகம், நிகழ்வுகள் சுவிட்சர்லாந்துக்கு மாறும் வரையிலும் தொடர்கின்றன. எப்போதும் மழையில் குளித்து வந்த மாதிரியே தெரிகிறது சென்னை. அதேபோல சுவிட்சர்லாந்து காட்சிகளில், நிஜமாகவே பனிக்குளிரை அனுபவிக்கிறது மனசு.

படம் நெடுக ஒரு அழகிய நாயகியைப் போல நம்மை தொட்டும், இறுகத் தழுவியும் இனிமைப்படுத்துகிறது ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் பாடல்களும். காட்சிகளின் நேர்த்தியைப் பார்த்ததும் ஹாரிஸின் கற்பனை துள்ளிக் குதித்திருப்பதை உணர முடிகிறது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

படத்தில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா, நாசர் என ஆறு பேருக்குமே கிட்டத்தட்ட சம வாய்ப்புகள்தான். அத்தனை பேரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அநாவசிய நட்பு அல்லது காதல் தத்துவங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்.

ஜீவா பெண்கள் மீது வெறுப்பைக் கக்கும் போதெல்லாம், எதுக்கு இவ்ளோ டென்ஷனாகிறார் என பார்வையாளர்களே கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெரிய வரும்போது, கன்வின்ஸ் ஆக வைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்திய திரைக்கதை.

ஏக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சந்தானத்துக்கு இது மறுபிறவி எனலாம். படத்தில் எங்குமே ஆயாசம் தெரியாமல் இருக்க முக்கிய காரணம் சந்தானம்தான். அந்த சர்ச்சைக்குரிய அஞ்சு பத்து வசனக் காட்சியை அழகாக மாற்றியிருக்கிறார். வெல்டன்.

வினய் ஒரு நடிகர் மாதிரி இல்லாமல், அந்தக் கதைக்கான ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இதற்கு முன் வந்த படங்களில் இருந்ததைவிட இயல்பான நடிப்பு.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

த்ரிஷா பிரமிக்க வைக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஒரு நடிகை தன் அழகைப் பாதுகாப்பது பெரும் சவால்தான். அதில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக அந்த சுவிட்சர்லாந்து காட்சியில், பனியில் மிதந்து வரும் தேவதை போல அத்தனை அழகு.

ஜீவா - த்ரிஷா காட்சிகளில் அபார ரசாயன மாற்றம் (அதாங்க கெமிஸ்ட்ரி!)

இத்தனை சிறப்புகள் இருந்தாலும் படத்தில் எதற்காக தடுக்கினால் ஒரு சரக்குப் பார்ட்டி அல்லது குடி காட்சி? அதிலும் ஒருபடி மேலே போய், டாஸ்மாக் பாருக்குப் பதில், வீட்டுக்குள்ளேயே, தந்தை முன்னிலையில் அல்லது அவருடன் சேர்ந்தே சரக்கடிப்பது சகஜமான சமாச்சரம் என காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இனி 'மது நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது... அனைவரும் சேர்ந்து சரக்கடிப்போம்' என முன்குறிப்பு போட்டே படத்தைத் தொடங்குவார்கள் போலிருக்கிறது.

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

படம் முழுக்க நண்பர்கள் மூவரும் சேர்ந்தால் ஒன்று சரக்கடிக்கிறார்கள்... அல்லது கழிவறையில் கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல அந்த க்ளைமாக்ஸ் காட்சியில், ஜீவா த்ரிஷாவிடம் பேசும்போதி ஒரு இயல்புத்தன்மையோ, உணர்ச்சியோ.. தன் கைவிட்டுப் போகவிருந்த அரிய உறவு கிடைத்ததே என்ற குறைந்தபட்ச மகிழ்ச்சி கூட இல்லாமல், ஏதோ சடங்குக்குப் பேசுகிறார். படத்தின் முக்கிய காட்சியை இப்படி ஏனோ தானோ என்றா எடுப்பார்கள்.

கடற்கரையில் வைத்து ஜீவாவை த்ரிஷா கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியானவை. ஒரு பெண்ணின் நியாயமான உணர்வும்கூட. ஆனால் அதை மதிக்கும்படியான, தன்னைப் போன்ற சக மனுஷியான அவளை சமாதானப்படுத்தும்படியான எந்த பதிலையும் ஜீவா சொல்லவே இல்லை. மாறாக ஐ லவ் யூ என்கிறார். ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டால், பெண் எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிடுவாள் என்று அர்த்தமா?

என்றென்றும் புன்னகை- விமர்சனம்

ஆனால் படத்தை ரசிக்க இவை எதுவுமே தடையாக இல்லை என்பது பார்வையாளர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், அதுவும் அப்பாவுடன் குடிக்கிற காட்சிகளை கைத்தட்டி ரசிக்கும்போது, நாம் என்ன சொல்லி என்ன பயன்?

இந்த வார இறுதியை என்றென்றும் புன்னகையுடன் கொண்டாடலாம்!