அரசு கல்லூரிகளில் சரியான பாத்ரூம், குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் நாங்கள் தடுமாறுகிறோம் என்று நீயா நானா நிகழ்ச்சியில் ஆதங்கப்பட்டனர் அரசு கல்லூரி மாணவிகள்.
விஜய் டிவியில் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவிகளும், அரசுக் கல்லூரி மாணவிகளும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
வசதியானவர்கள்தான் அதிக பணம் செலவு செய்து தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். ஏழ்மையான நிலையில் இருக்கும் மாணவிகள் டிகிரி படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அரசுக் கல்லூரிக்குப் போகின்றனர்.
இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி பற்றி முதலில் பேசப்பட்டது. தனியார் கல்லூரி மாணவிகளின் நடை உடை பாவனைகள் அலாதியானது. அதே சமயம் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் எந்த வித அடிப்படை வசதியும் இன்றி தினமும் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர்.
தனியார் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் லேப், கேண்டீன், நெட் வசதி போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன. ஆனால் 3000 மாணவிகள் படிக்கும் கல்லூரிகளில் அடிப்படை வசதியான பாத்ரூம் வசதிகள் கூட இல்லை. குடிநீர் இல்லை, கேண்டீன் வசதியில்லை. சரியான கட்டிட வசதியில்லை என இன்னும் பல இல்லைகள்தான் அரசுக் கல்லூரி மாணவிகளின் புகாராக இருந்தது. இந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் படித்து முன்னேறி சமூகத்தில் பட்டதாரிகளாக உயர்கின்றனர்.
அரசுக் கல்லூரி மாணவிகள் பேசியதைக் கேட்ட தனியார் கல்லூரி மாணவிகள், இவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் இவர்கள் படித்து முன்னேறுகின்றனர் என்பதை நினைக்கும் போது அவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது என்றனர்.
அதிக அளவில் டொனேசன் கொடுத்து தனியார் கல்லூரிகளில் மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் பணம் செலவு செய்ய முடியாதவர்கள்தான் அரசுக் கல்லூரிகளில் படிக்கின்றனர். எனினும் அவர்களுக்கு சாதாரண அடிப்படை வசதி கூட கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
கல்லூரிக்கு அருகில் மதுபானக்கடை இருக்கிறது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு மாணவி கூறினார். அரசுக் கல்லூரி மாணவிகளின் புகார்களுக்கு ஆள்பவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
அரசுக் கல்லூரிகள் மட்டுமல்ல, பிஞ்சுக்குழந்தைகள் வளரும் அங்கன்வாடிகள் முதல் அரசு பள்ளிகளிலும் இந்த சூழ்நிலைதான் உள்ளது. அதனால்தான் வியர்வையை ரத்தமாக சிந்தி உழைத்து ஏழைகளும் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
இனியாவது அரசு கல்வி நிலையங்களின் தரம் உயருமா? என்ற கேள்வியோடு முடிந்தது நீயா? நானா? நிகழ்ச்சி.