இதனையடுத்து பாடல் வெளியீட்டு விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தார். உலக நாயகன் மற்றும் சூப்பர் ஸ்டார் வருகையால் விழா களைக்கட்டியது. விழாவில் ரஜினி பேசியது பின்வருமாறு
'நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.'
கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன்
'என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன்.
சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...' என்றார் ரஜினி.