தீபாவளிக்கு தள்ளிப் போனது ஷங்கரின் ஐ!

மெகா இயக்குநர் ஷங்கரின் தீபாவளிக்கு தள்ளிப் போனது ஷங்கரின் ஐ!  

உண்மையில் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகிவிடும் என்று கூறி வந்தனர். ஆனால் அப்போது படப்பிடிப்பே முடியாமல் நீண்டு கொண்டிருந்தது.

அடுத்த மாதம், அடுத்த மாதம் என தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தப் படம் தொடர்பான நிதிப் பிரச்சினைகளை ஓரளவுக்கு சமாளித்துவிட்டதால், ரிலீஸ் தேதியை விரைவிலேயே அறிவிக்கவிருக்கிறார்களாம்.

தீபாவளிக்கு ஏற்கெனவே விஷால், விஜய் படங்கள் மோதுகின்றன. அதற்கு முன் கமலின் உத்தம வில்லன் வருகிறது.

இப்போது ஐயும் தீபாவளி ரிலீஸ் என்றால் தியேட்டர்கள் கிடைப்பது பெரும் திண்டாடட்டமாகிவிடுமே என யோசிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

 

'சாதிப் பெயர் மேனன் வேண்டாம்... பார்வதி என்றே அழையுங்கள்!'

திரையுலகினர் பலர் தங்கள் பெயர்களுக்கு முன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வது இப்போது சாதாரணமாகிவிட்டது.

அதுவும் சாதாரண சாதிக்காரர்கள் யாரும் அப்படி போட்டுக் கொள்வதில்லை. சிலர் நரேஷ் அய்யர், மகாலட்சுமி அய்யர், ஜனனி அய்யர், பல்ராம் அய்யர் என வெளிப்படையாகப் போட்டுக் கொள்கின்றனர். அதை பெருமையாக மேடைகளில் சொல்லிக் கொள்ளத் தவறுவதில்லை.

ஒரு முறை ஜனனி அய்யர் என்ற நடிகையிடம், ஏன் இந்த அய்யர் என்ற சாதி அடையாளத்தை விடாமல் தொடர்கிறீர்கள் என்ற கேட்டதற்கு, அது என் பெருமை. நீக்க முடியாது என்றார் திமிருடன்.

'சாதிப் பெயர் மேனன் வேண்டாம்... பார்வதி என்றே அழையுங்கள்!'

இப்படிப்பட்ட சினிமாக்காரர்களுக்கு மத்தியில் ஒரு நடிகை தன் பெயருடன் சாதியை சேர்த்து அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர்தான் பார்வதி.

தமிழில் ‘பூ' படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் வெளியான ‘பூ' படம் இவருக்கு நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளார்.

பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்', தனுஷுடன் இணைந்து ‘மரியான்' படங்களில் நடித்தார். தற்போது கமல் ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார்.

தன் பெயரை பார்வதி மேனன் என்று அழைப்பதைத் அடியோடு தவிர்க்குமாறு அவர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "என் பெயரை பார்வதி மேனன் என்று அழைக்கிறார்கள். அப்படி என்னை அழைக்காதீர்கள். என் பெயர் பார்வதி என்பது மட்டுமே. பாஸ்போர்ட்டில் கூட பார்வதி என்றுதான் இருக்கிறது. அப்படி என்னைக் கூப்பிட்டால் மட்டும் போதும்.

ஒரு கன்னட படத்தில் என் பெயரை பார்வதி மேனன் என்று போட்டார்கள். அதிலிருந்து அனைவரும் என்னை அப்படியே கூப்பிடுகிறார்கள். ஆதலால் என் பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டு பார்வதி என்றே அழையுங்கள். நானாக இருந்தால் போதும்.. சாதி அடையாளம் வேண்டாம்," என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாவதாக இருந்த ஆர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தள்ளிப் போய்விட்டது. அந்தத் தேதியில் சில பெரிய படங்கள் வரவிருப்பதால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப் போகிறார்களாம்.

வித்தகன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குநர் பொறுப்போடு நிறுத்திக் கொண்டார்.

ஆனால் ஆர்யா, அமலா பால், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்தப் படத்தில்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

இந்தப் படத்தை பார்த்திபன் மிக முக்கியப் படைப்பாகக் கருதுவதால், அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வகையில் படத்தை வெளியிட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

படத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தேதியில் ஜிகிர்தண்டா, சரபம், சண்டியர் போன்ற படங்கள் வெளியாகின்றன.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!  

இத்தனை படங்களுக்கு மத்தியில் தன் படத்தை வெளியிட்டால், திரையரங்குகள் கிடைப்பது கடினம், சரியாக மக்களைப் போய்ச் சேர்வதும் சந்தேகம் என்பதை உணர்ந்ததால், கதை திரைக்கதை வசனம் இயக்கத்தை வேறு தேதிக்கு மாற்ற பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.

புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் பார்த்திபன்.

 

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: ஜெய், நஸ்ரியா, பாண்டியராஜன், மயில்சாமி
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன்
இயக்கம்: அனீஸ்

திருமணம் எனும் நிக்காஹ்... என்ன நினைத்து இந்தத் திரைக்கதையை உருவாக்கினாரோ இயக்குநர் அனீஸ்... எல்லாமே அரைவேக்காட்டு பிரியாணி மாதிரியாகி பார்வையாளர்களைப் படுத்தி எடுத்துவிட்டது.

ஜெய்யும் நஸ்ரியாவும் பக்கா பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் இருவருமே முஸ்லிம் பெயர் கொண்ட பயணச்சீட்டுகளில் பயணிக்கிறார்கள். ஒருவரையொருவர் முஸ்லீம் என நம்பி, அந்த சுவாரஸ்யம் தந்த ஈர்ப்பில் காதலில் விழுகிறார்கள்.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

பரஸ்பரம் இஸ்லாத்தைப் படிக்க, அங்கு நிலவும் பழக்க வழக்கங்களைக் கற்க முயல்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவருமே முஸ்லீம் இல்லை என்பது அம்பலமாகிறது. அத்துடன் அந்த காதலில் இருந்த ஈர்ப்பு போய்விடுகிறது. இருவருக்கும் நிச்சயமான திருமணம் நின்று போகிறது.

இறுதியில் இருவரும் இணைகிறார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஏதோ சின்னபுள்ள விளையாட்டு மாதிரி ஒரு திரைக்கதை. அழுத்தமான காரணங்கள் இல்லாமல் இலக்கின்றிப் போகின்றன காட்சிகள். இடைவேளைக்குப் பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல், இயக்குநர் குழம்பிப் போனது தெரிகிறது.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

ஜெய் - நஸ்ரியா இருவருக்கும் பிராமண வேஷம். சுத்தமாகப் பொருந்தவே இல்லை. அதைவிட இருவரும் முஸ்லிம்களாக வரும்போது நம்பும்படி இருக்கிறது.

நீங்க சொன்ன மாதிரி பத்து நிமிடத்தில் வருகிறேன், என அண்ணா சாலை காபி ஷாப்பில் நஸ்ரியாவைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கேளம்பாக்கத்திலிருந்து புறப்படும் காட்சியில் மட்டும் ஜெய்யிடம் தனித்துவ நடிப்பு தெரிகிறது.

அழகு, குறும்பு கொப்பளிக்கும் அந்த முகம், இஸ்லாமிய தோழியிடம் அவர்கள் வழக்கங்களை அறிந்து கொள்ளும் துடிப்பு.. என வரும் காட்சிகளிலெல்லாம் அள்ளுகிறார் நஸ்ரியா.

ஜெய்க்காக பிரியாணியை வாங்கிக் கொண்டு கடற்கரைக்கு வரும் நஸ்ரியாவிடம், ஜெய் சிக்கிக் கொண்டு தவிப்பதும், கடைசியில் அதை அல்லாவின் பெயரில் சமாளிப்பதும் சுவாரஸ்யமான காட்சி.

ஜெய்யிடம் வில்லன் பகைமை கொள்வதற்கான காரணம் மகா சொதப்பல். அது மட்டுமல்ல, ஜெய் முதல் முதலாக வீட்டுக்குள் வரும்போதே, அவருடன் பார்வையாலேயே மல்லுக்கட்டுவது ஏன் என்று புரியவில்லை. அப்புறம் அந்த முஸ்லிம் பெரியவர்... அத்தனை பெருந்தன்மையான மனிதர், உண்மை தெரியும் போது வில்லத்தனம் காட்டுவாதக் காட்சி வைத்திருப்பது பொருத்தமாகவே இல்லை.

கடைசியில் வழக்கம்போல ஜெய்யை ஆக்ஷன் ஹீரோவாக்கியிருப்பது சரியான காமெடி.

திருமணம் எனும் நிக்காஹ்- விமர்சனம்

அவசரத்துக்கு ரயில் டிக்கெட்டை மாற்றித் தரும் கேரக்டரில் மயில்சாமி (இப்படியெல்லாம் கூட ஒரு சேவை இருக்கிறதா..?!), கட்டப்புலி பாண்டியராஜன் ஆகியோர் கொஞ்ச நேரம் வந்து கிச்சுகிச்சு மூட்டப் பார்க்கிறார்கள்.

படத்தின் இசை மகா சொதப்பல். ஆணா பெண்ணா என்றே யூகிக்க முடியாத, பொருத்தமில்லாத குரல்களில் கர்ண கடூரமாக ஒலிக்கின்றன பாடல்கள். ஒளிப்பதிவு பரவாயில்லை.

இயக்குநர் அனீஸுக்கு, எண்பது - தொன்னூறுகளில் வந்த சில இந்திப் படங்கள் மாதிரி எடுக்க ஆசை போலிருக்கிறது. ஆசை தப்பில்லை. அதற்கான திரைக்கதையை உருவாக்கும்போது, காட்சிகள் அமைக்கும்போது இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்!

 

நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்

மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, அணியின் உரிமையாளரான நெஸ் வாடியாவை கடுமையாக திட்டினார் என்று பிரீத்தி ஜிந்தா மானபங்க வழக்கில் தொழிலதிபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா, அவருடைய முன்னாள் காதலர் மற்றும் பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா மீது கடந்த ஜூன் மாதத்தில் மானபங்க புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அப்புகாரில், மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின்போது தன்னை நெஸ் வாடியா பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்து, மிரட்டியதாக பிரீத்தி தெரிவித்திருந்தார்.

நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்

இது தொடர்பாக மும்பை மெரின் டிரைவ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நெஸ் வாடியா மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இரு தரப்பு சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெஸ் வாடியா தரப்பு சாட்சியான தொழில் அதிபர் சவன் தரு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பிரீத்தி மற்றும் நெஸ் வாடியா பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் நெஸ் வாடியா புறப்பட்ட போது, நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினார். கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சீனுராமசாமியா.. அது யாருன்னே தெரியாது!- கடும் கோபத்தில் இளையராஜா

சீனு ராமசாமி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் என்னைச் சந்தித்ததாகவும், அவர் குறிப்பிடும் ஒருவர் எழுதிய பாடலை நான் பாடப் போவதாகவும் கூறுவது வேடிக்கையானது, என்று கேள்வி எழுப்பியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற படங்களைத் தொடர்ந்து, இப்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இவரது படத்துக்கு முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சீனுராமசாமியா.. அது யாருன்னே தெரியாது!- கடும் கோபத்தில் இளையராஜா

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். வைரமுத்துவுடன் யுவன் சங்கர் ராஜா இணைவது இதுவே முதல் முறை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இளையராஜா பெயரையும் தேவையில்லாமல் இழுத்து, விளம்பரம் தேடப் பார்க்கிறார் சீனு ராமசாமி என்ற குற்றச்சாட்டு பகிரங்கமாகவே எழுந்துள்ளது.

ஏற்கெனவே இந்தப் படத்தின் கதாநாயகி மனீஷா விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார் சீனு ராமசாமி.

இப்போது இடம் பொருள் ஏவல் படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடப் போகிறார் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதனை இளையராஜா தரப்பு மறுத்துவிட்டது. இதுகுறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் பிரபல நாளிதழ் ஒன்றில் இன்று பேட்டியளித்துள்ள சீனு ராமசாமி, தான் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, வைரமுத்து எழுதிய ஒரு அம்மா பாடலைப் பாட இளையராஜா சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா ஏற்பாடு செய்ததாகவும், விரைவில் இந்தப் பாடல் பதிவு நடக்கவிருக்கிறது என்றும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

சீனு ராமசாமியா? அது யாரு?

சீனு ராமசாமியின் இந்தப் பேட்டிக்கு இளையராஜா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சீனு ராமசாமியை யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒருவர் என்னைச் சந்திக்கவும் இல்லை..," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இளையராஜா தரப்பில் மேலும் விசாரித்த போது, "எப்படியாவது இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் வைரமுத்து. அதற்கு இயக்குநர் பாலாவைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் ராஜா சார் தன் முடிவிலிருந்து மாறவில்லை. துரோகங்களை அவ்வளவு சுலபத்தில் அவரால் மறக்க முடியாது. இப்போது, ராஜா சாரின் மகனை வைத்து எப்படியாவது மீண்டும் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் பக்கம் வர முயற்சிக்கிறார் வைரமுத்து. அதை ராஜா சார் ஒருபோதும் விரும்பவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை.

இசைஞானியைச் சந்திக்காமலே, அவரைச் சந்தித்ததாகவும் வைரமுத்துவின் பாடலைப் பாட ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் சீனு ராமசாமி கூறிக் கொண்டு திரிவதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது? இது வைரமுத்துவின் வேலை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? இத்தனை காலம் ராஜா சாருக்கு எதிராக தான் கூட்டணி போட்டு செய்த குழிப் பறிப்பு வேலைகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிடச் சொல்கிறாரா வைரமுத்து?," என்றனர் கொந்தளிப்புடன்.

இதுகுறித்து சீனுராமசாமியின் விளக்கத்தைக் கேட்க முயன்றோம். ஆனால் அவர் நமது தொடர்பு எல்லைக்கு இன்னும் வரவில்லை!

 

இப்படி குப் குப்னு புகை விடுறது சரியா தனுஷ்?- புகையிலை எதிர்ப்பு அமைப்பு கண்டனம்

சென்னை: வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பது போன்ற சுவரொட்டிகள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படம் கடந்த வாரம் வெளியானது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

இப்படி குப் குப்னு புகை விடுறது சரியா தனுஷ்?- புகையிலை எதிர்ப்பு அமைப்பு கண்டனம்

இதனை தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. மாநில சுகாதார துறையிடமும் மத்திய தணிக்கை குழுவிடமும் இது குறித்து புகார் அளித்துள்ளது.

புகையிலை எதிர்ப்பு இயக்கத்தின் அமைப்பாளர் சிரில் அலெக்சாண்டர் இதுபற்றிக் கூறுகையில், "வேலையில்லா பட்டதாரி படத்துக்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் அளித்துள்ளது.

இதில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. படத்தை விளம்பரபடுத்துவதற்காக தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை சுவரொட்டிகளாக அச்சிட்டுள்ளனர். இது புகையிலை தடுப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

தனுஷ் பிரபலமான நடிகர். சுகாதார கொள்கைகளை உள்ளடக்கிய புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை அவர் மீறி இருக்கிறார். தனுஷ் புகை பிடிப்பது போல் ஒட்டப்பட்டுள்ள அனைத்து போஸ்டர்களையும் அகற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும்," என்றார்.