"சாட்டை 2" வைக் கையிலெடுக்கும் சமுத்திரக்கனி

சென்னை: இயக்குநர் சமுத்திரக்கனி சாட்டை படத்தின் 2ம் பாகத்தை விரைவில் எடுக்கப்போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - மாணவன் இடையே உள்ள உறவை வெளிபடுத்தும் விதமாக 2012 ம்ஆண்டு சாட்டை திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஆசிரியராக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.

Director Samudrakani's Next, 'Saatai 2'

தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கத்துக்கு தற்காலிகமாக இடைவெளி விட்டிருக்கிறார். இந்நிலையில் சாட்டை 2 படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்துக்கு திரும்பவிருக்கிறார் சமுத்திரக்கனி.

"நான் நடித்து இயக்கி வந்த கிட்னா திரைப்படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடன் நடித்து வந்த தன்ஷிகாவிற்கு தற்போது கபாலி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதால் கிட்னா படத்தை தற்போது தள்ளி வைத்திருக்கிறேன். மேலும் சாட்டை படத்தின் 2ம் பாகத்தை விரைவில் இயக்கப் போகிறேன்.

முதல் பாகத்தில் ஆசிரியர் - மாணவன் இடையேயான உறவை சொன்னது போல இந்தப் பாகத்தில் தந்தை - மகன் இடையேயான உறவை சொல்லவிருக்கிறேன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிக - நடிகையரைத் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

படத்தில் அவரின் கதாபாத்திரம் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியிருக்கிறார். விரைவில் சாட்டை 2 படத்தைப் பற்றி முறையான அறிவிப்புகள் வெளியாகலாம்.

 

2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்தது... கமலின் தூங்காவனம் "டிரெய்லர்"

சென்னை: நேற்று முன்தினம் வெளியான கமலின் தூங்காவனம் டிரெய்லர் இதுவரை சுமார் 10 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தூங்காவனம். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் இப்படம் உருவாகியிருக்கிறது.

தூங்காவனம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லர் வெளியானது முதல் தற்போது வரை சமூக வலைதளங்கள் அனைத்திலும் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது தூங்காவனம்.


இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி இன்னும் முழுமையாக 2 தினங்கள் முடிவடையாத நிலையில் முழுதாக 10 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது தூங்காவனம்.

கமலின் நடிப்பு மற்றும் ஆக்க்ஷன் காட்சிகள் ஆகியவற்றை திரும்பத்திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் இந்த டிரெய்லர் படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படியே போனால் வெடிச்சுரும்.. பிரகாஷ் ராஜ் எச்சரிக்கை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிபடுத்தியிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

நடிகர் ரஜினிகாந்த் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று வெளியான தகவலையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக இந்து முன்னணி அமைப்பு மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Actor Prakash Raj's Fierce Reaction Over Threats to Rajinikanth, Rahman

அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா' எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.

அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களும் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

சமீபத்தில் முன்னணி ஆங்கில நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் " நமது நாடு சகிப்புத்தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்.

தற்போது இந்த விவகாரங்களிலும் தடை விதிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள், ஓட்டுப் போட்டவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லையா?

இப்படியே சென்றால் விரைவில் நீர்க்குமிழி வெடித்து விடும்" என்று பொங்கியெழுந்து இருக்கிறார். வேறு எந்த சக நடிகர்களும் இவ்விரு விவகாரங்களிலும் கருத்துக்கள் எதையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஷால்- பாண்டிராஜின் 'கதகளி' ஆரம்பம்!

பாயும் புலி படம் வெளியான கையோடு தனது சொந்தப் பட வேலையைத் தொடங்கிவிட்டார் விஷால்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் பாண்டிராஜ்.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கதகளி என்று தலைப்பிட்டுள்ளனர். மெட்ராஸ் படத்தில் நாயகியாக நடித்த கேதரைன் தெரசா இந்தப் படத்தில் விஷாலின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

Vishal - Pandiraj film titled as Kathakali

படத்தின் முதல் நாள் ஷூட்டிங் இன்று சென்னையில் ஆரம்பமானது. விஷால் - கேதரைன் தெரசா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தை விஷாலுடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ் என்பது கூடுதல் தகவல்.

 

ஒரு நொடியில்... சிருஷ்டி டாங்கே நடிக்கும் பேய்ப் படம்!

முன்பெல்லாம் மாதத்துக்கு ஓரிரு பேய்ப் படங்கள்தான் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது வாரம் இரண்டு என்கிற ரேஞ்சுக்குப் போய்விட்டது.

கோடம்பாக்கம் முழுவதும் நல்ல, கெட்ட பேய்கள் அத்தனை ஸ்டுடியோக்கள், எடிட்டிங் ரூம்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

Oru Nodiyil... another horror film is on the way

இந்தப் பட்டியலில் சேர வருகிறது இன்னொரு பேய்ப் படம். படத்துக்கு ஒரு நொடியில் என தலைப்பிட்டுள்ளனர்.

நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படம் இது.

இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர் மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

சாய் பர்வேஷ் இசையமைக்க, மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார். எழுதி இயக்குபவர்
எம்ஏ சௌத்ரி.

Oru Nodiyil... another horror film is on the way

படம் பற்றி இயக்குனர் சௌத்ரியிடம் கேட்டோம்...

"இது திகில் மற்றும் ஹாரர் சமந்தப்பட்ட படம்.. அதாவது பேய்ப் படம்.

பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு தீய சக்தி. ஐந்நூறு (500) ஆண்டுகளாக அந்த ஊருக்குள் யார் வந்தாலும் அவர்களை பலி வாங்கி விடுகிறது. அந்த கிராமத்துக்குள் நுழைய குழந்தைகளை பலி கொடுத்து தனக்கு மாபெரும் சக்தி வரவேண்டும் என்று நினைக்கிறான் மந்திரவாதி ஒருவன்.

Oru Nodiyil... another horror film is on the way

அவனது என்னத்தை முறியடித்து டிவி சேனல் நிருபர் மதன் குழந்தைகளை காப்பாற்றுவதுடன் பார்வதிபுர மர்ம முடுச்சை விடுவிப்பதுதான் ஒரு நொடியில் படத்தின் கதை. ஐந்நூறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இதே கதை தற்பொழுது குஜராத்தில் நிகழ்ந்ததாக சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளிவந்துள்ளது.

சுவாரஸ்யமான திரைக்கதையாக ஒரு நொடியில் உருவாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது," என்றார்.

 

தாரை தப்பட்டை முடிந்த கையோடு வெற்றிவேல்... சசிகுமாரின் புதிய படம்!

சசிகுமார்... வித்தியாசமான களங்களைத் தேர்ந்தெடுத்து சொல்லியடித்து வந்த சூப்பர் ஹிட் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், சுந்தர பாண்டியனுக்குப் பிறகு கொஞ்சம் சுணங்கிப் போனார்.

பிரம்மன் கவிழ்த்துவிட, தலைமுறைகள் அவார்டு மட்டும் பெற்றுத் தந்தது.

பாலாவின் தாரை தப்பட்டையில் நடிக்கப் போனவர், கிட்டத்தட்ட முழுசாக ஒரு ஆண்டை அதிலேயே செலவிட வேண்டியதாகிவிட்டது.

Sasikumar launches new movie Vetrivel

தாரை தப்பட்டை முடிந்ததும், இப்போது தன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார்.

ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை வசந்தமணி இயக்குகிறார்.

வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் புதுமுகம் ஒருவர் நாயகியாக நடிக்கிறார். உடன் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டி இமான் படத்திற்கு இசையமைக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தஞ்சாவூரில் இப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

 

தயாரிப்பில் ஒரு கை பாத்தாச்சு... அடுத்து டைரக்ஷன்... தேறுவாரா சீவீ குமார்?

சினிமாவில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் ரேஞ்சுக்குப் பேசுபவர் சீவீ குமார். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்.

பல புதிய இயக்குநர்களை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய குமார், இப்போது தானே இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.

இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

Producer CV Kumar turns director

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால் மற்றும் கலை இயக்கம் கோபி ஆனந்த்.

அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது.

 

பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் கபாலி படப்பிடிப்பு!

கடந்த இரு தினங்களாக ரஜினியின் கபாலி பெயரும், புதிய டிசைன்களும்தான் இன்று இணையத்திலும் மீடியாவிலும் நாளிதழ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றன.

நேற்று காலை எளிய முறையில் படத்தின் பூஜை சென்னை ரஷ்ய கலை பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் நீல நிற ஜீன்ஸ், கரு நீல நிற சட்டை அணிந்து, கபாலி கெட்டப்பிலேயே வந்திருந்தார் ரஜினி.

Rajini's Kabali shooting starts with simple pooja

அவர் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்து வணங்கினார்.

இயக்குநர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

மீடியாக்காரர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை. படத்தின் பூஜை ஸ்டில்கள் உடனுக்குடன் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

Rajini's Kabali shooting starts with simple pooja

சென்னை நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் இன்று காலை முதலே கபாலி ஸ்டில்கள்தான் அலங்கரித்துக் கொண்டுள்ளன.

முதல் நாளான நேற்று பூஜை முடிந்ததும், ரஜினியை வைத்து சில காட்சிகளை இயக்கினார் ரஞ்சித். படப்பிடிப்பு நடக்கும் இடத்தை படு ரகசியமாகவே வைத்துள்ளனர்.

 

கபாலி ஃபர்ஸ்ட் லுக்... வரலாறு காணாத வரவேற்பு... அதிர்ந்தது வலையுலகம்!

கபாலி படத்தின் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும், அதற்கான விடையையும் தாங்களே தேடி திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர், படம் அறிவித்த நாளிலிருந்து.

இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்துக்கும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டிசைன்கள் வெளியானதில்லை. ஒவ்வொரு போஸ்டருமே அத்தனை தொழில்முறை நேர்த்தியுடன் வந்தன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டிசைன்களை ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.

Rajinikanth's Kabali first look stuns fans worldwide

இந்த நிலையில் புதன்கிழமை மாலையே கபாலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகிவிட்டன. பத்திரிகைளுக்கும் அனுப்பப்பட்டன. ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர்கள் வெளியான அடுத்த நொடியே திரையுலகம் காணாத அளவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றன. ரசிகர்கள் யாரும் யோசிக்காத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இந்த போஸ்டர்கள் அமைந்துவிட்டன.

Rajinikanth's Kabali first look stuns fans worldwide

இந்த போஸ்டர்கள் சமூக வலைத் தளங்களையும், பொது ஊடகங்களையும் கலக்கி வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பலரும் கபாலி ரஜினி போஸ்டரையே தங்கள் அடையாளப் படங்களாக மாற்றிக் கொண்டனர்.

ட்விட்டரில் தொடர்ந்து இரு தினங்கள் உலகளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது கபாலி பெயர். டிசைன்கள் வெளியான இரண்டாம் நாளில் கூட 33.5 ஆயிரம் ட்வீட்கள் கபாலி பற்றியே இருந்தன. இதுவரை எந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கும் கிடைக்காத வரவேற்பு இது. சர்வதேச அளவில் எந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படி ட்ரெண்டிங் ஆனதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

தன்னந்தனியாக 'நயன்தாரா பேயை' பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு! ஒரு புது சவால்!!

நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன்.

ஆனால் இந்த சவால் பேயுடன் மகா நட்பாகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு இல்லையாம்... தெலுங்கு ரசிகர்களுக்குத்தானாம்.

மாயா படம் நேற்று தமிழில் வெளியானது. இன்று தெலுங்கிலும் ரிலீஸாகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு மயூரி என்று தலைப்பிட்டுள்ளனர்.

This is Maaya's challenge!

தமிழில் ஓரளவு பரபரப்பு கிளப்பியுள்ள லஇந்தப் படத்துக்கு, தெலுங்கில் அவ்வளவு பப்ளிசிட்டி இல்லை.

எனவே மயூரியை தனியாக தியேட்டரில் பார்க்கும் ரசிகருக்கு ஒரு பெரிய வாய்ப்பைத் தந்துள்ளனர்.

இப்படத்தை தனியாக, தனது பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி, பயப்படாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும். அதிலும் இந்த 5 லட்சத்தை நயன்தாரா அவரது கைகளால் வழங்குவார் என தயாரிப்பாளர் சி கல்யாண் அறிவித்துள்ளார்.

This is Maaya's challenge!

இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா...

படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி உள்ளது. ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாக தியேட்டரில் பார்க்கும் தைரியசாலிக்கு ரூ 5 லட்சம் பரிசு என ஒரு இயக்குநர் அறிவிக்க, அதை ஏற்று படம் பார்க்கும் ஒரு தயாரிப்பாளர் செத்துப் போவார். ஆனால் நயன்தாரா தைரியமாகப் பார்த்து பரிசை வெல்வார்!

 

ஒரே நாளில் கபாலி ஸ்க்ரிப்டை 'கரைத்து குடித்து' ரஞ்சித்தை ஆச்சர்யப்படுத்திய ரஜினி!

கபாலி படத்துக்காக ரஞ்சித் உருவாக்கி 220 பக்க முழு ஸ்க்ரிப்டையும் ஒரே நாளில் படித்து, அதிலிருந்த வசனங்களையும் சொல்லிக் காட்டி இயக்குநர் ரஞ்சித்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினி சார்கிட்ட கபாலி படத்தின் திரைக்கதை,வசனத்தின் தொகுப்பைக் கொடுத்தேன்.

Rajini stunned his Kabali director

'சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து நான் ஸ்கிரிப்ட் படிச்சதே இல்லை. ப்ளட் ஸ்டோன் படத்துக்கு மட்டும்தான் படிச்ச ஞாபகம்.அதுக்குப் பிறகு இப்போதான் ‪‎கபாலி‬ ஸ்கிரிப்ட் படிக்கப்போறேன்'னு சொன்னார்.

220 பக்கங்களையும் படிச்சு முடிக்க ஒரு வாரத்துக்கும் மேல ஆகுமேன்னு நான் நினைக்க, மறுநாளே என்னை வரச்சொன்னார்.

'ரஞ்சித்... அந்த இன்டர்வெல் ப்ளாக்குக்கு முன்னாடி வர டயலாக்கை இப்படிப் பேசலாமானு பாருங்கனு சொல்லி, படத்தின் பல சூழ்நிலைகளுக்கான வசனம், ரியாக்க்ஷன்களை நடிச்சுக் காண்பிச்சார்.

ஒரே நாளில் மொத்த ஸ்கிரிப்ட்டையும் கரைச்சுக் குடிச்சு,அதுக்கு ஹோம்வொர்க்கும் பண்ணிட்டார்னு நினைச்சாலே ஆச்சரியமா இருந்தது. சில முக்கியமான திருப்புமுனைக் காட்சிகளில் அவர் இப்படி எல்லாம் நடிச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சிருந்தேன். அதை அப்படியே நடிச்சுக் காண்பிச்சார். நான் அசந்துட்டேன். 'கபாலி'யை அந்த அளவுக்கு மனசுக்குள் உள்வாங்கிட்டார்," என்று கூறியுள்ளார்.

 

49 ஓ விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கவுண்டமணி, திருமுருகன், ராஜேந்திரன், சாம்ஸ், பாலாசிங்

ஒளிப்பதிவு: ஆதி கருப்பையா

இசை: கே

தயாரிப்பு: டாக்டர் சிவபாலன்

எழுத்து - இயக்கம்: பி ஆரோக்கியதாஸ்

கொஞ்சம் லேட்தான் என்றாலும் ரொம்பவே லேட்டஸ்டாக வந்திருக்கிறார் கவுண்டமணி, 49ஓ மூலம்.

படத்தின் கதை.. காதல், அடிதடி குத்துவெட்டு, விரச நகைச்சுவை போன்ற எதுவுமில்லாத ஒன்று. பல கிராமத்து விவசாயிகளின் இன்றைய யதார்த்தம்.

49 O Review

'இங்கே நான்கு வழிச் சாலை வருது, மேம்பாலம் வருது, பேக்டரி வருது' என அரசுத் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் எம்எல்ஏ மகன், ஆண்டுக்கு முப்போகம் விளையும் வளமான வயல்களை வளைத்துப் போட்டு, வீட்டு மனைகளாக்கி விற்கிறான். பணத்துக்கு ஆசைப்பட்டு விளைநிலங்களை விற்றுவிடும் விவசாயிகள், அதற்கான பணத்தையும் முழுசாகப் பெறாமல், வேறு வேலையும் தெரியாமல் தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் கவுண்டமணி, இனி ஒரு விவசாயியும் சாகக் கூடாது என்று முடிவெடுத்து இரு வழிகளைக் கையாள்கிறார். ஒன்று, எம்எல்ஏ மகன் செய்த அதே ரியல் எஸ்டேட் வழி. இன்னொன்று தேர்தல் பிஸினஸ்... இந்த இரண்டின் மூலமும் எப்படி இழந்த நிலங்களைப் மீட்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக அடிக்கடி கவுண்டமணியை நடக்கவிட்டு, அவர் பின்னாள் நூறுபேர் போவது, தேர்தல் பிரச்சாரத்தை மகா நீளமாகக் காட்டுவதைக் குறைத்திருக்கலாம்.

49 O Review

கவுண்டமணி யார், அவருக்கு ஊரில் ஏன் இந்த முக்கியத்துவம் என்பதைச் சொல்லியிருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

இன்னொன்று அந்த இடைத் தேர்தல் என்பது ஒரு கிராமத்துக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புற ஊர்களையும் கவுண்டமணியின் பிரச்சாரம் எந்த அளவு தாக்கத்துக்குள்ளாக்கியது என்று காட்டியிருக்க வேண்டும்.

அந்த ஆறடி தாய்மடி திட்டத்தை அம்போவென்று விட்டுவிட்டு தேர்தல் பக்கம் திரும்பிவிடுகிறது திரைக்கதை.

ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு படத்தை தனி ஆளாக இழுத்துச் செல்கிறார் கவுண்டமணி.

49 O Review

ஒவ்வொரு வசனமும் நெத்தியடி. அந்த வசனங்களில் உள்ள உண்மை புரிந்ததால்தானோ என்னமோ, மவுனமாக அவற்றை அனுமதித்திருக்கிறது சென்சார் சென்சார்.

'அரை டஜன் படம் நடிச்சவன் எல்லாம் சிஎம்-மாகி நாட்டை ஆளணும்னு நினைக்கிறான்...'

'49 ஓ -க்கு எதுக்கு நான் ஓட்டுப் போடணும்... அதுக்கு ஓட்டுப் போட்டா என்ன பலன்?'

'கையிலிருக்கிற மண்ணுதான்யா ஒவ்வொரு விவசாயிக்கும் மானம்.. அதையும் வித்து திண்ணுபுட்டா வாழ்றதுல அர்த்தம் என்னய்யா...'

இப்படி நச் வசனங்கள் படம் முழுக்க...

காமெடி என எந்தக் காட்சியையும் திணிக்காமல், கவுண்டரை அவர் இயல்புக்கேற்ப 'ஆட' விட்டிருக்கிறார்கள். கலக்கிவிட்டார் மனிதர். என்னவொரு எள்ளல், எகத்தாளம். சவுண்டு!

குறிப்பாக 49-ஓவுக்கு அவர் தரும் விளக்கம், இனி யாராவது 'என் ஓட்டு 49-ஓவுக்கு' என்று சொல்வார்களா என்பது சந்தேகம்தான்!

பெரிய பெரிய ஹீரோக்கள் செய்திருந்தால் கூட எடுபடாமல் போயிருக்கக் கூடிய கதை இது. கவுண்டரின் இமேஜால் கவனிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஒளிப்பதிவு மிக இயல்பாக உள்ளது. எந்த மிகைப்படுத்தலும் இல்லாத எளிமையான கிராமத்து வாழ்க்கையை, விவசாயத்தைப் படம் பிடித்திருக்கிறார் ஆதி கருப்பையா.

கே இசையில் அம்மா போல அள்ளித் தரும் மழைதான்... பாடல் பிரமாதம். தேனிசை செல்லப்பா குரலில் இன்னும் எத்தனை காலம்... நன்றாக உள்ளது. ஆனால் ஒலித் தரத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பின்னணி இசை காதுகளைப் பதம் பார்க்கிறது.

முதல் படத்திலேயே நாட்டின் ஜீவாதாரமான விவசாயப் பிரச்சினையை கையிலெடுத்த, அதை யார் சொன்னால் மக்களிடம் சரியாகப் போய்ச் சேரும் என்று கணித்ததற்காக இயக்குநர் ஆரோக்கியதாசுக்கு ஒரு சபாஷ். ஆனால் கிடைத்த பெரும் வாய்ப்பை அவர் இன்னும் நன்றாகப் பயபடுத்தியிருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட், உருவாக்கத்துக்கு 2 ஸ்டார்தான்... கவுண்டருக்காக அந்த மூன்றாவது ஸ்டார்!

 

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் சுருதிஹாசன்?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க நடிகை சுருதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிமுருகன் படத்திற்குப் பின் இயக்குநர் அட்லீயின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Shruti approached for Sivakarthikeyan’s next Movie?

சில மாதங்களுக்கு முன் சொந்தப் படநிறுவனம் தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பெரியளவில் வரவேண்டும் என்று பார்த்துப் பார்த்து தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார்.

இந்தப் படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இணைந்து பணியாற்றவிருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் இசைக்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகையாக சுருதிஹாசனை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சுருதி முன்னணி நடிகையாகத் திகழ்வதால் அவரையே நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம்.

சுருதியின் நடிப்பில் புலி மற்றும் தல 56 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன, மேலும் சூர்யாவின் சிங்கம் 3 படத்திலும் சுருதி தற்போது நடிக்கவிருக்கிறார்.

3 மொழிகளிலும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் சுருதி சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க சம்மதம் சொல்வாரா? என்பது தெரியவில்லை.

முன்னதாக நடிகைகள் சமந்தா மற்றும் ஷாம்லி ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

வெளியானது "அரண்மனை 2" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடிப்பில் உருவாகி வந்த அரண்மனை 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான அரண்மனை படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

Aranmanai 2 first look Poster Revealed

இந்தப் படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, நாயகிகளாக த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா போன்றோர் நடித்திருக்கின்றனர். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

ஒரு பெரிய அரண்மனை ஒன்றின் முன்பு இரு நாயகிகள் நிற்பது போன்று இந்தப் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. சிகப்பு மற்றும் ஊதா கலர்களில் புடைவை அணிந்து தலை நிறைய மல்லிகைப்பூவை வைத்துக் கொண்டு இருவரும் அரண்மனையைப் பார்த்தது போன்று நின்று கொண்டிருக்கின்றனர்.

இரு நாயகியரில் ஒருவர் த்ரிஷா என்பது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது மற்றொருவர் ஹன்சிகாவா அல்லது பூனம் பஜ்வாவா என்பது தெரியவில்லை.

நேற்று வெளியான இந்தப் போஸ்டர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் போஸ்டர் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் அனைவரிடமும் தற்போது உருவாக்கியுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, சூரியின் காமெடியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கின்றது அரண்மனை 2.