கமலின் விஸ்வரூபம் மே மாதம் வெளியாகிறது?

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படம் வரும் மே முதல் வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் இந்தப் பொங்கலுக்கு படம் நிச்சயம் என கமலும் தெரிவித்திருந்தார். ஆனால் வீரம், ஜில்லா படங்கள் பொங்கலை பங்கு போட்டுக் கொண்டன.

கமலின் விஸ்வரூபம் மே மாதம் வெளியாகிறது?

வரும் ஏப்ரல் 14-ம் தேதியையொட்டி படத்தை வெளியிடலாம் என யோசித்துபோது, தன் நண்பர் ரஜினியின் கோச்சடையான் அதே தேதியில் வெளியாவது தெரிய வந்தது.

எனவே, போட்டியின்றி வரும் மே மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிட கமல்ஹாஸன் முடிவு செய்துள்ளார்.

அதன்படி மே 9-ம் தேதி வெள்ளிக்கிழமை விஸ்வரூபம் 2 உலகமெங்கும் வெளியாகிறது. இந்தி, தெலுங்கிலும் இந்தப் படம் வெளியாகிறது.

விஸ்வரூபம் 2 படத்தில் கமல்ஹாஸன், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்பட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். கமல் ஹாஸன் எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

 

தம்பி அஜீத், விஜய்.. குடிக்காதீங்கப்பா! - கே ராஜன்

சென்னை: அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் குடிப்பது மாதிரி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே ராஜன் கேட்டுக் கொண்டார்.

கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் "வீரன் முத்துராக்கு".

இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

தம்பி அஜீத், விஜய்.. குடிக்காதீங்கப்பா! - கே ராஜன்

கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார். ஷண்முகராஜன், ஆடுகளம் நரேன், நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், அஜீத் - விஜய் இருவருக்கும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் பேசுகையில், "இப்போதெல்லாம் படங்களின் வெற்றி என்பது குறுகி விட்டது. சென்ற வருடம் 175 படங்கள் ரிலீஸானது அதில் 12 படங்கள் தான் வெற்றி பெற்றது. சினிமாவில் எப்பொழுதுமே நல்ல கதையுள்ள படங்கள் மட்டும்தான் வெற்றி பெறும்.

நட்சத்திர நடிகர்களுக்காக படங்கள் ஓடுவதில்லை இந்த வருட ஆரம்பத்தில் கூட நட்சத்திர அந்தஸ்து இல்லாத சின்ன பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கிறது.

இப்போது ஒரு படம் வெற்றி பெற்றவுடன் அந்த கதாநாயகன் கேட்கிற சம்பளம்... அப்பாடா.. மூன்று கோடி நான்கு கோடி... என்கிறார்.

தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தும்படியான சம்பளத்தை கேட்காதீங்கப்பா... நியாயமாக சம்பளம் கேளுங்க.

கோடிக்கணக்கில் சம்பளம் யாருக்காக வாங்குகிறீர்கள் வயதான காலத்தில் பணத்தை சாப்பிட முடியாது. மூன்று வேளை கூட சாப்பிட முடியாது ஒரு வேளை மாத்திரைதான் சாப்பாடாகி விடுகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் சம்பாதித்ததை தானம் செய்தார். ரசிகர்கள் அதிகமானார்கள். மேலும் சம்பாதித்தார்...மேலும் தானம் செய்தார். இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பேசும் தெய்வம் என்ற படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் 'படம் தான் சூப்பர் ஹிட் ஆக ஓடுதே... 25000 ரூபாய் அதிகமாக தரக்கூடாதா?' என்று அன்பான வேண்டுகோள்தான் வைத்தார்.

இன்று உள்ள ஹீரோக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயாரிப்பாளரை வாழ வைத்து நீங்களும் வாழுங்கள்.

அதே மாதிரி அஜீத் - விஜய் இருவருக்கும் ஒரு வேண்டுகோள். சமீபத்திய உங்கள் படங்களில் நீங்கள் மது குடிப்பது மாதிரி காட்சிகளில் நடிக்கிறீர்கள் நம்ம தல, தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க... நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும்.

அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள்.
அடுத்தவங்களை அழித்துத்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? யோசியுங்கள்," என்று வேண்டுகோள் வைத்தார்.

 

விமல்- சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா!

விமல்- சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா!

விமல்- சூரி மீண்டும் இணைந்து கலக்க வருகிறார்கள், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக.

‘ஜெயம்கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘சேட்டை' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் (விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ!) படத்தை தயாரிக்கிறார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் கண்ணன்.

முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம் என ஆக்ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில், இயக்குனர் கண்ணன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை வரும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விமல் - சூரி ஏற்கெனவே இணைந்த களவாணி, தேசிங்கு ராஜா படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நம்பர் நடிகைக்கு விரல் தந்த மேரேஜ் ப்ராமிஸ்!

ஹீரோயின் யாரால் கெடுக்கப்பட்டாரோ அவரையே திருமணம் செய்து கொள்வது தமிழ் சினிமா பஞ்சாயத்து தீர்ப்பு.

கிட்டத்தட்ட அப்படியொரு செட்டில்மெண்டுக்கு வந்திருக்கிறார்களாம் நம்பர் நடிகையும் விரல் நடிகரும்.

யாரால் தன் பெயர் முதன் முதலில் கோடம்பாக்கத்தில் சிரிப்பாய் சிரித்ததோ அவரே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்... - புதுப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன் நடிகை போட்ட கண்டிஷனாம் இது.

இதனை நடிகரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். அணில் கடித்த பழமாக இருந்தாலும் பழைய காதலிதான் வேண்டும் என்று காத்திருந்தவருக்கு, நடிகையின் இந்த புது கண்டிஷன் ரொம்பப் பிடித்துப் போனதாம்.

சரி.. தாலியா, மோதிரமா.. எதுவாக இருந்தாலும் தயார் என்று கூறிவிட்டுத்தான் நடிக்க ஆரம்பித்தாராம்.

படம் முடிந்து வெளிவருவதற்குள், திருமண சேதி வந்துவிடும் என்கிறார்கள்!

 

மீண்டும் மலையாளத்தில் லட்சுமி மேனன்!

தமிழில் முன்னணி நடிகையாகத் திகழும் லட்சுமி மேனன், மீண்டும் தன் தாய்மொழியான மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

லட்சுமி மேனன் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். வினயன் இயக்கிய ரகுவின்டே ஸ்வாந்தம் ரஸியா படம்தான் அவர் நடித்த முதல் படம்.

ஆனால் தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி படங்கள்தான் அவருக்கு பெரிய புகழைப் பெற்றுத் தந்தன.

மீண்டும் மலையாளத்தில் லட்சுமி மேனன்!

இதுவரை அவர் நான்கு தமிழ்ப் படங்கள் நடித்துள்ளார். நான்குமே பெரிய வெற்றிப்படங்கள் என்பதால், நல்ல சம்பளம்.. கை நிறைய வாய்ப்புகள் என தமிழில் அவர் ஏக பிஸி. மஞ்சப் பை, சிப்பாய், நான் சிவப்பு மனிதன், ஜிகிர்தண்டா, வசந்தகுமாரன் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு தன் தாய்மொழியில் நடிக்கும் ஆர்வம் வந்துவிட்டதாம்.

ஜோஷி இயக்கும் புதிய படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடிக்கிறார் லட்சுமி மேனன். தமிழில் வெற்றிப் பட நாயகி என்ற பெயர் இருந்தாலும், மலையாளத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் இல்லாததால், இந்த வாய்ப்பை ஏற்றாராம் லட்சுமி மேனன்.

 

கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன்

சென்னை:கானக் குரல் வேந்தன் மலேசியா வாசுதேவன் அவர்களது நினைவு தினம் இன்று.அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு உங்களுக்காக...

10000க்குஅதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்து வந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதிக்கு 8ஆவது மகனாய் பிறந்தவர் இவர்.

 கானக் குரல் வேந்தன்  மலேசியா வாசுதேவன்

மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கி வந்தார்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு, சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.

ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்று அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.

அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன.

அதன் பிறகு பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள அவர் ‘சிலந்தி வலை' என்ற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார்.அவருடைய மகன் யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் உள்ளார். அவரது மகள் பிரசாந்தினியும் இப்போது பின்னணி பாடி வருவது குறிப்பிடத்தக்கது.