தமிழ் சினிமாவில் இப்போது ரொம்ப சகஜமாக நடக்கும் சமாச்சாரம் நட்புக்காக நடிப்பது. முன்பும் கூட இந்த 'நட்புக்காக' சமாச்சாரம் இருந்தது. ஆனால் அது மிக அரிதாகவே நடக்கும். இப்போது அடிக்கடி!
சரி, நட்புக்காகத்தானே... சம்பளமே வாங்கமாட்டாங்களோ என்றுதானே கேட்கிறீர்கள்?
அதான் இல்லை.. நட்புக்காக நடிக்கவே பல லட்சங்களை கொட்டிக் கொடுக்கிறார்கள். சிலருக்கு கோடிகளில் கூட கொடுப்பதுண்டு!
முன்பு வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு குத்தாட்டம் போட மட்டும் ஸ்ரேயாவுக்கு ரூ 60 லட்சத்தை கொட்டிக் கொடுத்தது நினைவிருக்கலாம் (ஆனால் அந்த ஒரு பாட்டுதான் அவருக்கு வில்லனாக மாறியது தனிக்கதை!).
ஆல்தோட்ட பூபதி பாட்டுக்கு சிம்ரனும், சிவகாசி படப் பாட்டுக்கு நயன்தாராவும் போட்ட குத்தாட்டத்துக்கு, அவர்கள் அன்றைக்கு ஒரு படத்துக்கு வாங்கிய மொத்த சம்பளத்தை கிஃப்டாக தர வேண்டியிருந்ததாம்!
சகுனி படத்திலும், ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் ஜஸ்ட் தலையைக் காட்டிய ஆன்ட்ரியாவுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளது.
அட, சத்யராஜை ஒரு விழிப்புணர்வு -கம் - தமிழுணர்வுப் படத்தில் நடிக்க அழைத்தார்கள், நட்புக்காக. அவரது நட்புக்கு கொடுக்கப்பட்ட விலை ரூ 18 லட்சமாம்! (அவர் கேரக்டரையே புரிஞ்சிக்காம நட்பு பாராட்டினா இப்படித்தான்!)
ராஜபாட்டையில் ஒரு பாடல் காட்சியில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் விக்ரமுடன் ஆட ஆன செலவு முக்கால்கோடி. இதில் முக்கால்வாசி இந்த நடிகைகளுக்கு சம்பளம். மீதி அவர்களை இத்தாலிக்கு கூட்டிப் போய் பராமரித்த செலவு!
கெஸ்ட் ரோல் என்று கூறி நடிகைகளுக்கு சில கோடிகளை இறைத்தவர் என்ற வகையில் இப்போதும் முதலிடம் சிம்புவுக்குதானாம். தன் ஆசைக்காக மந்த்ரா பேடி, யானா குப்தா என்ற கைக்கடங்காத ஐட்டம்களை மன்மதன் படத்துக்காக மும்பையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு வரவழைத்த இவர், அவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு, ஏகத்துக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளார். குறிப்பாக யானா குப்தா அன்றைக்கு டாப் லெவலில் இருந்ததால், கிட்டத்தட்ட கோடியில் செலவானதாம் அம்மணிக்கு.
ஆனால் முன்பெல்லாம் ரஜினி, கமல் போன்றவர்கள் ஜஸ்ட் ஒரு காட்சியில் வந்து போவார்கள். அவர்கள் உண்மையிலேயே நட்புக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் அந்தக் காட்சிகளில் தோன்றியிருப்பார்கள்.
கமலின் தாயில்லாமல் நானில்லை படத்தில் ரஜினி ஒரு ஸ்டன்ட் காட்சியில் வந்து போவார். அதேபோல தில்லுமுல்லு க்ளைமாக்ஸில் கமல் வருவார். இதற்காக ஒரு நயா பைசா அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
அவ்வளவு ஏன், நாலு பேருக்கு நன்றி என்ற படத்திலும், கோடை மழையிலும் ரஜினி ரஜினியாகவே வந்து சின்ன அட்வைஸ் பண்ணிவிட்டுப் போவார். ஆனால் அதற்கும் கூட ஒரு பைசா சம்பளமாகப் பெற்றதில்லையாம்.
கே பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு மூன்று ஹீரோக்கள் ஆட வேண்டும். விஜயகாந்தும், சத்யராஜும் ஓரளவு மார்க்கெட் உள்ள நடிகர்களாக இருந்ததால் அவர்களிடம் கேட்டாராம் கேபி. இருவரும் ஒப்புக் கொண்டாலும் சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அன்று ஆண்டுக்கு மூன்று படங்கள் என மகா பரபரப்பாக இருந்த சூப்பர் ஸ்டார் சம்பளம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் செலவில் சாப்பாடு கூட சாப்பிடாமல் ஜஸ்ட் அரை நாளில் பாட்டை முடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம். அந்தப் பாட்டுதான் 'வங்காளக் கடலே...'!
'அதற்காக எல்லோரும் ரஜினியாக கமலாக இருந்துவிட முடியுமா... எங்களை எதற்காக கெஸ்ட் ரோலுக்கு அழைக்கிறார்கள்? எங்களுக்கு மார்க்கெட் இருப்பதால்தானே... இதைக் காட்டித்தானே வியாபாரம் பண்ணுகிறார்கள்? கொடுத்தா என்ன தப்பு?' என்பது, நட்புக்கான ரோலுக்கு எக்கச்சக்க சம்பளம் பேசும் நடிகர்களின் வாதம்...
காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதுதானே சினிமா!