இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் சிப்களை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்தி இசையமையுங்கள் என்றார் இளையராஜா.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரத்யேகமாக இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த இசை கச்சேரி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. அரங்குக்கு வெளியிலும் பல நூறு ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் காத்திருந்தனர்.
மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்' உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இளையராஜா பேசுகையில், "உலக மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன், என் இளமை காலம் அவர் பாடல்களோடுதான் கழிந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் என்று தெரியாத பருவத்தில் அவரது பாடல்களில் ஈர்க்கப்பட்டேன்.
தேவதாஸ் படத்தில் "உலகே மாயம் வாழ்வே மாயம் நிலையேது நாம் காணும் சுகமே மாயம்" என்ற பாடலைத் தந்தார். ஆனால் அவர் பெயரைக் கூடப் போட்டுக் கொள்ளவில்லை.
‘குலே பகாவலி' படத்தில் அவர் போட்ட "மயக்கும் மாலை பொழுதே நீ போபோ" பாட்டை இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு போட முடியாது. இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டமாக அது இருந்தது. அந்த காலத்துப் பாடல்களை இப்போதும் பாடலாம். ஆனால் இன்றைய பாடல்களை பாட முடியாது.
இளம் இசையமைப்பாளர்கள் கம்ப்யூட்டர் இசையைப் பயன்படுத்தாதீர்கள், தூக்கி எறியுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்.
அண்ணன் எம்எஸ்வி இசையில் என் இளம் வயதில் நான் கேட்ட பாடல் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி.." என்ன ஒரு அற்புதமான பாட்டு அது. புத்தகப்பையை தூக்கிக் கொண்டு கோம்பை பள்ளிக் கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்தப் பாடலைக் கேட்டேன். என்னை அறியாமல் அந்த பாடலுக்குள் போய்விட்டேன்.
அந்தப் பாடலில் வரும் 'தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்' என்ற வரிகள் என் எதிர்காலம் பற்றி அந்த வயதிலேயே யோசிக்க வைத்தன. ஒரு சமூகத்தையே யோசிக்க வைக்கும் அந்த வரிகளும் இசையும்தான் உண்மையான கலைவடிவம்.
ஆனால் அண்ணனும் கவிஞரும் அடுத்த ஒரு படத்தில் இன்னொரு பாடல் தந்தனர்.
எதிர்காலத்தை நினைத்து கலங்காதே என்பதை உணர்த்தும்படியான பாடல் அது..
"மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா..."
இந்தப் பாடலில் வரும், "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்...
...உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" என்ற இந்த வரிகள்தான் கஷ்டப்படும் போது எனக்கு நம்பிக்கை ஊட்டின என்று கவிஞர் வாலி என்னிடம் சொல்லி இருக்கிறார்.
"மாடிமேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே", "பால் இருக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது", "நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை", "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" போன்ற அற்புதமான பாடல்களைக் கொடுத்தார் அண்ணன் எம்எஸ்வி.
தனா, தனா, தனா என்ற சந்தத்தை மட்டுமே பயன்படுத்தி "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா" பாடலை கொடுத்தார். அவர் இசையில் ஒழுக்கம் இருந்தது. இப்போதைய இசையில் ஒழுக்கம் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது," என்றார்.
நிகழ்ச்சியில் விஸ்வநாதன் வேலை வேணும், பாலிருக்கும் பழமிருக்கும் போன்ற பாடலின் மெட்டுகளுக்கு, தன் அண்ணன் பாவலர் வரதராஜன் எழுதிய பாடல் வரிகளையும் பாடிக் காட்டினார். அப்போது கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.