'அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்'!


இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.

தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார். கூடவே கிசுகிசுக்களும் படையெடுத்துக் கிளம்பின.

ஆனால் கஜினிக்குப் பிறகு ஆசினுக்கு இந்தியில் பெரியஅளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இடையில் விஜய் கூப்பிட்டார் என்பதற்காக காவலன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

காவலன் படம் வெற்றிகரமாக ஓடியதால், ஆசினைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ பிரஸ்டிஜ் பார்க்க ஆரம்பித்தார். இந்திக்குப் போய் விட்ட பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தால் தனது கெளரவம் என்னாகும் என்ற ரீதியில் பேசி வருகிறாராம் ஆசின்.

இதனால் தன்னைத் தேடி வருகிற தமிழ்ப் பட வாய்ப்புகளை அவர் தட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியிலும் பெருமளவில் வாய்ப்புகள் வராததால் சற்றே டென்ஷனாக இருக்கிறாராம் ஆசின்.

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமெரிக்காவில் கூப்பிட்டாக, ஆப்பிரிக்காவில் கூப்பிட்டாக என்ற ரீதியில் பந்தாவாக பேசி வருகிறாராம். தமிழில் நல்ல கதைகள் வந்தால்தான் நடிப்பேன் என்றும் கூறி வருகிறாராம்.

‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’- இந்தப் பழமொழி ஆசினுக்கு பொருத்தமாக இருக்கும்!

 

மகளின் பாலிவுட் ஆசைக்கு சஞ்சய் தத் 'தடா'!


சஞ்சய் தத் தனது மகள் த்ரிஷாலாவை பாலிவுட்டில் நடிக்க வைக்க விருப்பப்படவில்லை.

சஞ்சய் தத்துக்கும், அவரது முதல் மனைவி ரிச்சா ஷர்மாவுக்கும் பிறந்த மகள் த்ரிஷாலா(22). தந்தை வழியில் பாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் உனக்கு நடிப்பெல்லாம் வேண்டாம் ஒழுங்காகப் படித்த படிப்பை வைத்து முன்னேறப் பாரு என்று கூறிவிட்டாராம்.

இது குறித்து சஞ்சய் ஒரு நாளிதழுக்கு கூறியதாவது,

எனது மகளை படங்களில் நடிக்க ஊக்குவிக்க மாட்டேன். இது தத் குடும்பத்தில் நடக்காது. எனது சகோதரிகள், அவர்களது பிள்ளைகள் படத்தில் நடிக்கலாம். ஆனால் எனது தந்தை எதிர்பார்த்தது இதுவல்ல. எனது மகள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாள். அவள் தடயவியல் படித்திருக்கிறாள். அதிலே அவளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

உங்கள் கருத்தை த்ரிஷாலா ஏற்கவில்லை என்றால் என்று கேட்டதற்கு, அவள் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இதற்கு முன்பு பொதுவில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே பிரச்சனை வந்தது. முதலில் த்ரிஷாலாவுக்கு சஞ்சயின் 2-வது மனைவி மான்யதாவை பிடிக்கவில்லை.

ஒரு பேட்டியின்போது த்ரிஷாலா கூறுகையில், இறுதி முடிவு எடுக்க வேண்டியது நான் தான். எனக்கு எது சிறந்தது, மகிழ்ச்சியளிகக் கூடியது என்று நான் நினைக்கிறேனோ, அதைத் தான் செய்வேன் என்றார்.

சஞ்சய் வீட்டில் விரைவில் பிரச்சனை வரும்போல் இருக்கிறதே...!
 

சினிமாவுக்கு குட்பை சொன்ன "தூத்துக்குடி" நாயகி கார்த்திகா


தூத்துக்குடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா. தற்போது சினிமா சங்காத்தமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம்.

தூத்துக்குடி படத்தில் பாவாடை, தாவணியில் அழகாய் வலம் வந்தவர் கார்த்திகா. அந்த படத்தில் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு அத்தனை பிரபலம். அதைத்தொடர்ந்து நாளைய பொழுதும் உன்னோடு, மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.

கொஞ்ச நாளாக கார்த்திகாவை ஆளையே காணோமே என்று நினைத்து தேடிய போது தான் அவர் சினிமாவுக்குக் குட்பை சொல்லிய தகவல் கிடைத்தது. அம்மணி சினிமாவே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம். சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்ட அவர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டாராம். சினிமா சம்பந்தப்பட்ட யாருடனும் அவருக்கு பேச விருப்பமில்லையாம்.

ஏன் இந்த திடீர் முடிவு? அப்படி என்ன கசப்பான அனுபவத்தை சந்தித்தார் கார்த்திகா??
 

இயக்குநர் ராம. நாராயணனின் மனைவி மரணம்-கருணாநிதி அஞ்சலி


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவரான ராம.நாராயணனின் மனைவி இராம. ஆச்சி திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது மனைவி இராம. ஆச்சி. அவருக்கு வயது 52. இந்த நிலையில் இராம. ஆச்சி இன்று சென்னையில் மரணமடைந்தார்.

இதையடுத்து ராம.நாராயணன் வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி விரைந்து வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உதயநிதி ஸ்டாலின், திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

 

தனுஷுக்கு ஆடுகளம்- சிம்புவுக்கு 'தாதா' களம்!


இயக்குநர் வெற்றி மாறன் அடுத்து சிம்புவை இயக்கப் போகிறார். தனுஷை வைத்து ஆடுகளம் கொடுத்த அவர் சிம்புவை வைத்து ஒரு தாதா கதையை படமாக்கவுள்ளார்.

தனுஷ் நடித்த படம் ஆடுகளம். தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதை தனுஷுக்கு வாங்கிக் கொடுத்த படம் இது. மேலும் பல விருதுகளையும் அள்ளியது.

இந்த நிலையில் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் வெற்றிமாறன். இது ஒரு தாதா கதையாம். வடசென்னைப் பின்னணியில் படத்தை உருவாக்குகிறார் வெற்றி மாறன்.

வட சென்னையை மையமாக வைத்து பெரும்பாலும் தாதா டைப் படங்கள்தானன் வருகிறது. வட சென்னை என்றாலே ரவுடிகள்தான் தெருக்களில் அதிகம் நடமாடுவது போல சித்தரித்து விட்டது தமிழ் சினிமா. அந்தவரிசையில் இப்போது வெற்றிமாறன், சிம்பு கூட்டணியும் ஒரு தாதா கதையை கையி்ல் எடுத்துள்ளதாம்.
 

சிறுநீரகக் கோளாறால் பழம்பெறும் பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் மரணம்


பிரபல பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

1950, 60 களில் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகர் ஷம்மி கபூர். அவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி பஞ்சாபி கத்ரி குடும்பத்தில் பிறந்தார். அவர் நடிப்பு தவிர்த்து இயக்குனராகவும் இருந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதையடுத்து மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.15 மணிக்கு உயிர் இழந்தார்.

ஷம்மி கபூரின் தந்தை பிரபல நடிகர் பிரித்விராஜ். ஷம்மி கபூரின் சகோதரர்கள் பிரபல பாலிவுட் நடிகர்கள் ராஜ் கபூர் மற்றும் சசி கபூர். ஜீவன் ஜோதி படம் மூலம் கடந்த 1953-ம் ஆண்டு ஷம்மி கபூர் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அவர் தும்சா நஹின் தேகா, தில் தேகே தேகோ, ஜங்க்ளீ, தில் தேரா தீவானா, சைனா டவுன், ராஜ்குமார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

1955-ம் ஆண்டி ரங்கீன் ராதேன் படபிடிப்பில் கீதா பாலியை சந்தித்தார் ஷம்மி கபூர். கீதா பாலி ஷம்மி கபூரை விட 1 வயது மூத்தவர். மேலும், ஷம்மி கபூரின் தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் நடித்திருக்கிறார். கீதா பாலி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் ஷம்மி கபூர். 1 மகனும், மகளும் பெற்றெடுத்த கீதா பெரியம்மையால் உயிர் இழந்தார்.

இதையடுத்து ஷம்மி கபூர் குஜராத் ராஜ பரபம்பரையைச் சேர்ந்த நீலா தேவி கோஹியைத் திருமணம் செய்தார்.
 

இயக்குனராகும் பாக்யராஜ் சிஷ்யன்!


பாக்யராஜ், வசந்த் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த கோ. ஆனந்தசிவா பரிதி என்னும் படம் மூலம் இயக்குனராகிறார்.

பாக்யராஜ், வசந்த் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த கோ. ஆனந்தசிவா இயக்கும் படம் பரிதி. இதில் ஆனந்த தாண்டவம், மந்திரப் புன்னகை, பயணம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த டீலா நோ டீலா புகழ் ரிஷி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மும்பை மாடல் அழகி கரீனா ஷா நாயகியாக அறிமுகமாகிறார். சிங்கமுத்து, ஆதேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நிலா படைப்புலகம் சார்பில் டாக்டர். பி. ஆனந்தன் தயாரிக்கிறார். இது ஒரு முக்கோண காதல் கதை கொண்ட படம். இதற்கு இலக்கியன் சாரு இசையமைத்திருக்கிறார். இறையன்பு ஐஏஎஸ், தமிழ் முருகன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கின்றனர்.

இதன் படபிடிப்பு முழுக்க முழுக்க தஞ்சையிலும், காவிரிக்கரையோர கிராமங்களிலும் நடந்தது. பாடல் காட்சிகளும், சில காட்சிகளும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமானது.

ஆயிரக்கணக்கான கள்ளிச் செடிகள் மட்டுமே நிறைந்த பகுதியில் கதாநாயகன், கதாநாயகி வரும் காட்சிகள் படமாக்கப்பட்டன.