ரஜினியைத் தேடி வந்து சந்தித்த மோடிக்கே ஓட்டு - இது சென்னை ரஜினி ரசிகர்கள்

சென்னை: எங்கள் தலைவர் ரஜினியை அவர் வீட்டுக்கே தேடி வந்து கவுரவப்படுத்திய நரேந்திர மோடிக்குதான் எங்கள் வாக்கு என்று சென்னை ரஜினி மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் ரஜினி எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ரசிகர்களும் எந்த கட்சிக்கும் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களுக்கு ஓட்டளித்தனர்.

ரஜினியைத் தேடி வந்து சந்தித்த மோடிக்கே ஓட்டு - இது சென்னை ரஜினி ரசிகர்கள்

தேர்தலில் ரஜினி படத்தை, மன்றக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீறியவர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது நரேந்திர மோடி ரஜினி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார்.

நரேந்திர மோடி பற்றி ரஜினி கூறிய வரிகள் வேறு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளன.

"நரேந்திரமோடி உறுதியான தலைவர், தகுதியான நிர்வாகி வருங்காலத்தில் அவர் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்", என்று ரஜினி சொன்னதை, அவரது ஆதரவு என்றே நினைத்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

"எங்கள் தலைவர் ரஜினியை நரேந்திர மோடி சந்தித்து பேசியதால் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட முடிவு செய்திருக்கிறோம்," என்று இணையதளத்தில் இயங்கும் ரசிகர்கள் குழுக்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சைதை ரவி கூறுகையில், "நரேந்திரமோடி எங்கள் தலைவர் ரஜினியை வீட்டில் வந்து சந்தித்தது ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது. எனவே தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளோம்," என்றார்.

மன்றத்தின் மாவட்ட தலைமைப் பொறுப்பிலிருக்கும் மற்றொரு நிர்வாகி கூறுகையில், "ரஜினி எல்லா தலைவர்களுடனும் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறார். நரேந்திர மோடியை சந்தித்ததில் கூட அரசியல் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திரமோடி ரஜினியை சந்தித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனசளவில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கத் தயாராகியுள்ளோம்," என்றார்.

சில ரசிகர்கள், பாமக இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அவர்களை மட்டும் ஆதரிக்க மாட்டோம் என்றும், மதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற ஆதரவளிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

 

இளையராஜா இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் இந்திப் படத்துக்காக பாடினார் ஸ்ருதி ஹாஸன்.

பிரபல இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது படம் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இளையராஜா இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை அக்ஷராவின் அக்காவும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இப்பாடலை பாடிக் கொடுக்கும்படி ஸ்ருதி ஹாசனிடம் தனுஷ்தான் கேட்டுக்கொண்டாராம். அதனால் தனுஷுக்காகவும், தனது தங்கை அக்ஷராவுக்காகவும் பிரசாத் ஸ்டுடியோவில் பாடிக் கொடுத்தாராம் ஸ்ருதி.

ஸ்ருதியின் முதல் பாடல் அரங்கேறியதும் இளையராஜா இசையில்தான். 'தேவர்மகன்', 'ஹேராம்', 'என் மன வானில்' ஆகிய படங்களில் இளையராஜா இசையில் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் மீண்டும் பாடியுள்ளார் ஸ்ருதி.

 

சந்தானத்தின் ப்யூஸைப் பிடுங்கிய அதிகாரிகள்... முறைகேடு செய்ததாகப் புகார்!

சென்னை: நடிகர் சந்தானத்தின் வீட்டு மின் இணைப்பை இன்று துண்டித்தனர் மின் வாரிய அதிகாரிகள்.

வீட்டு உபயோகத்துக்கென தரப்படும் மின்சாரத்தை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தனர் அதிகாரிகள்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது சந்தானம் வீடு. இந்த வீட்டுக்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சந்தானத்தின் ப்யூஸைப் பிடுங்கிய அதிகாரிகள்... முறைகேடு செய்ததாகப் புகார்!

உடனடியாக இன்று மின்வாரிய அதிகாரிகள் குழுவாகச் சென்று சந்தானம் வீட்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். மேலும் இந்த துண்டிப்பாக விளக்கத்தையும் சந்தானம் வீட்டிலிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தனர்.

முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதற்கான அபராதம் செலுத்திய பிறகே மின் இணைப்பு திரும்பத் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

காமெடி சூப்பர் ஸ்டாருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போமா?!

காமெடி சூப்பர் ஸ்டாருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுப்போமா?!

காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட காமெடிப் பார்ட்டி, இனி நடித்தால் ஸ்ட்ரெயிட்டா ஹீரோதான்... மற்ற ஹீரோக்களுக்கு தோழனாக நடிப்பதாக இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

ஆளும் முன்பு மாதிரி இல்லாமல், ஹீரோ கணக்கா பாலிஷ் போட்ட மாதிரிதான் செட்டுக்குள் வருகிறாராம். இப்போது காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களிலும், தன் கெட்டப்பை மாற்ற ஒப்புக் கொள்வதில்லையாம். இதனால் படத்தில் யார் காமெடியன் என்ற குழப்பம் வேறு வருகிறதாம். விட்டால் தனக்கும் கட்டாயமாக ஒரு ஹீரோயின் கேட்கும் அளவுக்கு காமெடியின் 'ரோதனை' தாங்க முடியவில்லையாம்.

இவரது பேச்சும் நடவடிக்கையும் இயக்குநர்களையும் ஹீரோக்களையும் கடுப்பேற்றி வருவதால், காமெடிக்கு இனி வேறு யாரையாவது பார்க்கலாம் என்ற முடிவுக்கு வரவழைத்திருக்கிறதாம், இவரை தவறாமல் பயன்படுத்தி வந்த நான்கு முன்னணி இயக்குநர்களை!

 

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரத் துடிக்கும் 'தாராபுரம்' ராஜா!

சென்னை: தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ள ராஜா, எப்படியாவது தமிழில் தன்னை நிலைநிறுத்துக் கொள்வதே லட்சியம் என்று கூறியுள்ளார்.

ராஜாவின் பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். ஆந்திரா போய் தெலுங்கில் 32 படங்கள் நடித்துள்ளார். அவற்றில் பல வெற்றிப் படங்கள். இவர் நடித்த ஐந்து படங்கள் மாநில அரசின் விருதுகளைக் குவித்தவை.

'ஆனந்த்' படவெற்றிக்குப் பின் 'ஆனந்த்' ராஜா என்றே அழைக்கப்பட்டார். அந்த ராஜா தமிழ்நாட்டு 'ரோஜாவை' மணக்கப் போகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகள் அம்ரிதாவை மணக்கிறார். அம்ரிதா தகவல் தொடர்பு பட்டம் முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரத் துடிக்கும் 'தாராபுரம்' ராஜா!

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ராஜாவை சித்தப்பா சந்திரமௌலி பெற்றோர் பொறுப்பை ஏற்று வழிநடத்தி வருகிறார்.

இது இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். 25-4-2014 மாலை 5 மணிக்கு நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் திருமணமும் சென்னை-28,எம்.ஆர்.சி.நகர்,லீலா பேலஸ், ராயல் பால்ரூமில் மாலை7.30மணி முதல் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

மூன்று விஷயங்கள்

திருமணத்தை ஒட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ராஜா. அவர் பேசும்போது, ''நான் இப்போது மூன்று விஷயத்துக்காக பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் தமிழ்நாட்டு பத்திரிகை மீடியாவினரை இன்றுதான் நேரில் சந்திக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரத் துடிக்கும் 'தாராபுரம்' ராஜா!

திருமணம்

இன்னொன்று என் திருமணம் நிச்சயமாகி உள்ளது. எனக்கான சரியான வாழ்க்கைத் துணை கிடைத்துள்ளது. அந்தச் செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்ப் படங்களில்...

மூன்றாவதாக தமிழ்ப் படங்களில் நடிக்க நான் பெரிதும் ஆவலாக இருக்கிறேன். நிறைய நிறைவான படங்கள் தமிழில் செய்ய விரும்புகிறேன். இந்த மூன்று விஷயத்துக்காக இன்று நான் ரொம்ப சந்தோஷப் படுகிறேன்,'' என்றவர், தொடர்ந்து பேசும்போது, "எனக்கு பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். அப்பா சிறுவயதிலேயே ஆந்திராவில் செட்டிலானதால் என்படிப்பு அங்குதான் முடிந்தது. நான் எம் பி.ஏ. படித்தேன்.

32 படங்கள்

தெலுங்கில் அறிமுகமாகி இதுவரை 32 படங்கள் நடித்துள்ளேன். 10 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். அதில் 5 படங்கள் மாநில அரசு விருது பெற்றுள்ளன. எனக்கு அன்பான இடத்தை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்து ள்ளார்கள்.

ஜகன்மோகினி

நான் மீடியா மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானேன். மீடியா இல்லை என்றால் நான் இல்லை. நான் மீடியாவின் நடிகன். இதை சொல்வதில் எனக்குப் பெருமைதான்.
நான் தமிழில் 'கண்ணா' 'ஜகன்மோகினி' படங்களில் நடித்திருக்கிறேன்.

என் திருமணம் தாமதமானாலும் சரியான வாழ்க்கைத் துணை கிடைத்துள்ளது கடவுள்செயல்,'' என்றார்.

ரஜினியைச் சந்தித்த அனுபவம்

ரஜினியைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்து பெற்றிருக்கிறார். ராஜா அந்த அனுபவம் பற்றிக் கூறும் போது, ''என் மாமனார் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் குடும்பத்துக்கு பல ஆண்டுகள் பழக்கமானவர்கள். அந்த வகையில் ரஜினி சாரைச் சந்தித்தேன். ஆசீர்வாதம் செய்தார்.

நான் அவரைச் சந்தித்தபோது என்னையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு பேச்சே வரலை, அவர்தான் பேசி ஊக்க மூட்டினார். சிறுவயதில் போயஸ் கார்டனில் நடந்து கொண்டு 'இதுதான் ரஜினிசார் வீடு' என்று ஏக்கத்துடன் பார்த்ததுண்டு.

நீ நல்லா வருவ...

அப்படிப்பட்ட ரஜினிசார் என்னை வரவேற்று அன்புடன் பேசி அக்கறையுடன் விசாரித்து நீ நல்லா வருவே என்று வாழ்த்தியது மறக்க முடியாது,'' என்றவரிடம் மனைவி சொல்லே மந்திரமாக திருமணத்துக்கு பிந்தைய திட்டம் உண்டா எனக் கேட்ட போது, ''ஹைதராபாத்தைப் போல சென்னையிலும் ஒரு அடித்தளம் அமைக்க வேண்டும். அதற்கு தமிழில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும். நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும்,'' என்றார் ராஜா என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தி.

 

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

பூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் 'ரேஸ் குர்ரம்' ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

வெற்றி வசூல் செய்திகளின் கதகதப்பிலிருக்கும் ஷாமுடன் பேசியபோது.

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

தெலுங்கில் வெற்றி அனுபவம் எப்படி உணர முடிகிறது?

" தெலுங்கில் என்னை 'கிக்' படத்தில் அறிமுகம் படுத்தியவர் சுரேந்தர் ரெட்டி. வெற்றிப் பட டைரக்டர்.அந்த'கிக்' படம் சூப்பர் ஹிட். டைரக்டர் சுரேந்தர் என் மீது அன்பு கொண்டவர். அவரது அடுத்த படமான 'ஊசுற வல்லி' படத்தில் எனக்கு ஒரு சிறு ரோல் கொடுத்திருந்தார். அது என் மேல் வைத்துள்ள அன்புக்காகக் கொடுத்த வாய்ப்பு. அடுத்து அவர் கொடுத்த அர்த்தமுள்ள வாய்ப்புதான் 'ரேஸ் குர்ரம்'. அப்படி என்றால் வேகமாக ஓடும் குதிரை என்று அர்த்தம். இன்று பாக்ஸ் ஆபிஸில் வேகம்' எடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ".

அந்தப் படம் பற்றி..?

''இது அண்ணன் தம்பி பற்றிய கதைதான். நான் அண்ணன். என் தம்பியாக அல்லு அர்ஜுன் நடித்திருப்பார். ஏற்கெனவே 'கிக்' படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்த நான், இதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்திருக்கிறேன். இப்படி இரண்டு பேர் நடிக்கும் போது இருவருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்படி கதாபாத்திரங்கள் உருவாக்குவதில் சுரேந்தர் ரெட்டி திறமைசாலி.

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

இதில் நாங்கள் அண்ணன் தம்பிகள் என்றாலும் படத்தின் முதல் பாதியில் எங்கள் உறவு அக்னி நட்சத்திரம் போல் சுட்டெரிக்கும். ஆம், நாங்கள் இருவரும் நேரெதிராக இருப்போம் மறுபாதியில்தான் எங்களுக்குள் இருக்கும் பாச வுணர்வு வெளிப்படும்.

திரைக்கதையை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கமர்ஷியலாகவும் சுரேந்தர் உருவாக்கி யிருப்பார். அதற்கான பலனாக படம் வெற்றி பெற்றிருக்கிறது.

படத்தில் எனக்கு ஜோடி தலோனி. அல்லு அர்ஜுனுக்கு ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அண்ணன் தம்பி கதையில் இப்படி வித்தியாசமாக காட்ட முடியுமா என்று எல்லாரையும் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார் டைரக்டர். "

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

பொதுவாக தெலுங்கு திரையுலக அனுபவம் எப்படி உள்ளது?

''தெலுங்கில் எனக்கு இது 3 வது படம். இரண்டாவது ஹிட்படம். அங்கு தமிழ் நடிகர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதற்கான அடித்தளம் கமல், விக்ரம் ஆகியோரால் போடப்பட்டு இருக்கிறது. அவர்கள் போட்டுக் கொடுத்துள்ள பாதையில் என்னைப் போன்றவர்கள் சுலபமாக நடக்க முடிகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் பாணி அங்கும் தொடங்கியுள்ளது. இது ஆரோக்யமான அறிகுறி. ரவி தேஜாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி இணைந்து நடித்த போது ஈகோ பார்க்காமல் பேசிப் பழகி அன்பு காட்டினார்கள்.

தமிழில் கூட ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளீர்களே?

''ஆம். 'புறம் போக்கு' படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கிறேன்.எனக்கு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் 'இயற்கை'. அதை இயக்கிய எஸ். பி. ஜனநாதன் என்கிற திறமைசாலியின் படம்தான் 'புறம்போக்கு'. இதில் நாங்கள் மூன்று பேரும் இணைந்திருக்கிறோம். ''

"புறம்போக்கில் உங்கள் பாத்திரம் எப்படி?"

''புறம்போக்கில் என் பாத்திரத்தின் பெயர் மெக்காலே. பெயர் வரும்போதே 'மெக்காலே; சட்டத்தின் ஆட்சி' என்று வரும். அந்த அளவுக்கு சட்டத்தை மதிக்கும் போலீஸ் அதிகாரி. சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று நம்புகிறவர். அதன்படி நடக்கிறவர். ஒரு வெளிநாட்டுப் பெண்தான் எனக்கு ஜோடி.

போலீஸ் கனவில் மெக்காலே லண்டன் போய் படித்து வந்தவர். எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிற பிடிவாதம் உள்ளவர். எத்தனையோ போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருப்போம். இதுவழக்கம் போலில்லை. இதை புதிய பரிமாணத்தில் ஜனநாதன் உருவாக்கியிருக்கிறார். ஸ்டைலிஷாக இருக்கும்.

நான் சட்டத்தை மதிக்கிற பாத்திரம் என்றால் ஆர்யா சட்டத்தை மிதிக்கிறவர். விஜய் சேதுபதி இன்னொரு பக்கம். எங்கள் இரண்டு பேருடனும் அவர் தொடர்பில் இருப்பவர். படத்தில் எங்கள் 3 பேரின் பாத்திரங்களும் 3 மாதிரியாக இருக்கும். ஒன்றுக் கொன்று பொருந்தாத தனியான குணம் கொண்டவை. இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று பாத்திரங்களுமே தனித்தனி ஐடியாலஜி கொண்டவை. தான் நினைப்பதே சரி, செய்வதே சரி என்று இருப்பவர்கள்.''

உங்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?

''மூவருக்கும் பேலன்ஸ் செய்துதான் காட்சிகள் வைத்திருக்கிறார்.''

ஆர்யா, விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி..?

'உள்ளம் கேட்குமே' படம் முதல் ஆர்யா எனக்கு பழக்கம். ஆர்யா என் தம்பி மாதிரி, அவன் வீட்டில் இல்லை என்றாலும் அவன் அம்மாவிடம் உரிமையுடன் சாப்பிடும் அளவுக்கு குடும்ப நண்பன்.

ஆர்யாவின் வளர்ச்சி எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாலா படத்துக்கு காட்டிய 3 வருட உழைப்பு சாதாரணமல்ல. 'மதராசபட்டினம்' 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ராஜாராணி' என அவனது வளர்ச்சிகள்,வெற்றிகள் சந்தோஷமாக இருக்கிறது.

ஈகோ இல்லை...

விஜய் சேதுபதியின் வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கிறது. அவரும் பலவருடம் போராடி இருக்கிறார். தனக்கென ஒரு இடத்தை 'பீட்சா' 'சூதுகவ்வும்' படங்கள் மூலம் பிடித்துள்ளார். எப்போதும் அவர் ஜாலி சந்தோஷ மூடில் இருப்பவர். இப்போது இனிய நண்பராகி விட்டார். எங்களுக்குள் எவ்வித ஈகோவும் கிடையாது. ஆரோக்கியமான நட்பு மட்டுமே இருக்கிறது.

எங்களுக்குள் எவ்வித போட்டி பொறாமை.. எதுவுமே இல்லை. இயல்பாக சௌகரியமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. 'புறம்போக்கில்' ஆர்யாவும் நானும் நடித்த காட்சிகள் பெங்களூரில் படமானவை. ஏப்ரல் 16 முதல் விஜய் சேதுபதியுடன் சென்னையில் நடிக்கப் போகிறேன்.

ஜூன் மாதம் முதல் நாங்கள் மூன்று பேரும் 44 நாட்கள் இணைந்து நடிக்க இருக்கிறோம். புறம்போக்கு ஒரு பொலிடிக்கல் த்ரில்லராக இருக்கும்.''

'6 மெழுகு வர்த்திகள்' படத்தில் உழைப்புக் கேற்ற பலன் கிடைத்ததா?

''சில சூழ்நிலைகளால் தப்பான மாதிரி சில படங்கள் அமைந்தன. '6' படத்துக்கு முன் என்னைப் பற்றி மாறுபட்ட அபிப்ராயங்கள் இருந்தன. ஆனால் இப் படத்துக்குப் பிறகு ஷாம் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்கிற பெயர் வந்திருக்கிறது

பலவிதங்களில் திறமை காட்ட முடிகிற நடிகர் என்கிற பெயரை '6' படம் எனக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. முன்பெல்லாம் கண்ணில் படும் 10 பேரில் 2 பேர் என்னைக் கண்டு கொள்வார்கள். இப்போது 8 பேர் பேசுகிறார்கள். ஊக்கம் தருகிறார்கள். மரியாதை தருகிறார்கள் எனக்கு புது உற்சாகம் தருகிறார்கள். கௌரவம் கூடி இருப்பதாக உணர முடிகிறது. ஷாம் விளையாட்டுத்தனமான நடிகரல்ல. அவருக்கும் முயற்சி செய்கிற ஆர்வம் இருக்கிறது வாய்ப்பு கொடுத்தால் வெளிப்படுத்தும் திறமை இருக்கிறது என்று '6' படம் பேச வைத்திருக்கிறது. அதற்கான வணிகரீதியிலான பலனை இனிதான் அடைய வேண்டும்.''

புறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி!

சொந்தமாக '6' படம் தயாரித்ததில் சிரமங்களை உணர்ந்தீர்களா?

''படம் பெரிதாக வசூல் இல்லை என்றாலும் திட்டமிட்டு எடுத்ததால் அனாவசிய செலவுகள் இல்லை. எனவே கையைக் கடிக்க வில்லை என்கிற அளவுக்கு வசூல் செய்தது. இழப்புகள் இல்லை.''

சரியான வாய்ப்புகள் அமையாத போது நடிகர்கள் சொந்தமாக படமெடுக்கத் தொடங்குவது பற்றி...?

''அப்படி ஒரு சூழல் வரும் போது நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும். சரியான படங்கள் கதைகள் அமையாத போது நம்மை நாமே நிரூபித்துதான் ஆகவேண்டும்.''

மீண்டும் சொந்தப் படம் எடுப்பீர்களா?

''தேவைப் பட்டால் எடுக்கத்தான் செய்வேன். சரியான திரைக்கதை, படப்பிடிப்பு செலவுத் திட்டத்துடன் வந்தால் செய்வேன். ராம் கோபால் வர்மாவிடம் இருந்த சுரேஷ் நல்ல கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அதை தயாரிக்கும் எண்ணம் உள்ளது.''

சிசிஎல் கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம்.. பற்றி?

உண்மையிலேயே சிசிஎல்லால் பல நன்மைகள் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. விஷால், ஸ்ரீகாந்த், பரத், ஜீவா, ரமணா எல்லாரும் நல்ல நண்பர்களாகி இருக்கிறார்கள். தமிழ்மொழி கடந்து சுதீப் அண்ணன், வெங்கடேஷ்அண்ணன், தருண் மட்டுமல்ல சலமான்கான் நட்பும் எனக்கு கிடைத்துள்ளது. சினிமா.

நடிகர்களை தமிழ்மொழி கடந்து தென்னிந்தியா கடந்து இந்திய அளவில் ஒருங்கிணைத்துள்ளது சிசி.எல். அண்மையில் வட இந்தியாவில் ராஞ்சியில் போய் ஆடியது மறக்க முடியாது. ''

இயற்கை 2, கிக் 2 எடுக்கப் படவுள்ளதாமே?

''எஸ். பி. ஜனநாதன் சமீபத்தில் நார்வே போய் வந்திருக்கிறார். அங்குள்ள துறைமுகம் அத்தனை அழகாக இருந்ததாகக் கூறினார். நிச்சயம் 'இயற்கை 2ட ம் பாகம்'.. மட்டுமல்ல 'கிக். 2' ம்பாகமும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.''
.
நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக இருக்க விருப்பம்?

''இது ஸ்கிரிப்ட் வெற்றி பெறும் காலம். ஸ்கிரிப்ட்தான் கதாநாயகன் என்று கடந்த 2 ஆண்டுகளாக அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் என்றும் ஒரு டைரக்டரின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.

எது உங்களுக்கான இடம்?

''யார் யார் எங்கே எப்போது இருப்பது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. காலம்தான் முடிவு செய்யும். ஆனால் காலத்தின் மீது பழிபோட்டு விட்டு சும்மா இருக்கக் கூடாது. நம் கடமையை, முயற்சியை, முன்னோக்கி வைக்கும் அடியை, சிறப்பாகச் செய்ய முடிந்ததை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலன் நிச்சயம் உண்டு.எனக்கான இடம் எது என்பது பற்றி ஆராய்ச்சி செய்து யாரையும் குற்றம் சொல்வதில் பயனில்லை. அது வேண்டாத வேலை.இப்போது தேவை உழைப்பு,உற்சாகம், ஊக்கம், ஓட்டம்.''

தெளிவாகத்தான் இருக்கிறார் ஷாம்!

 

ராசா மட்டும் ஹிட்டாகட்டும் சம்பளத்தை ஏத்திடுவோம்: நடிகை திட்டம்

சென்னை: சிங் நடிகை தான் மோக்கியாவுடன் மீண்டும் நடித்துள்ள ராசா படம் ஹிட்டாகிவிட்டால் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம்.

சிங் நடிகை மோக்கியா, பவர் நடித்த லட்டு படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து அவர் லட்டு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த இரண்டு எழுத்து நடிகர், மோக்கியாவுடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ரிலீஸாகி ஹிட்டாகிவிட்டால் தனது சம்பளத்தை உயர்த்திவிட வேண்டும் என்று தீர்மானித்துள்ளாராம். இதற்கிடையே மோக்கியா சோலோ ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அவர் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளது பல இளம் ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

அந்தமானில் இருந்து தனுஷ் வாங்கி வந்தது என்ன?

சென்னை: நடிகர் தனுஷ் அனேகன் படப்பிடிப்புக்காக அந்தமான் சென்றபோது அங்கிருந்து அபூர்வ விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

அந்தமானில் இருந்து தனுஷ் வாங்கி வந்தது என்ன?

நடிகர் தனுஷ் அனேகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அவர் அந்தமான் சென்றார். அங்கு அவர் அபூர்வ விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்துள்ளாராம்.

தனுஷ் தனது வீட்டில் வகை, வகையான விநாயகர் சிலைகளை சேகரித்து வைத்துள்ளார்.

தனுஷ் பால்கியின் இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிக்கிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் உள்ளார்.

அமிதாப் பச்சன் ஏற்கனவே பால்கியின் இயக்கத்தில் சீனி கம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: நா முத்துக்குமார்

சென்னை: எனக்குக் கிடைத்த தேசிய விருதினை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலு மகேந்திராவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கவிஞர் நா முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகளுக்காக கவிஞர் நா முத்துக்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நா முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: நா முத்துக்குமார்

அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள்.

"தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: நா முத்துக்குமார்

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.

தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.

மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.

-இவ்வாறு நா முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.