தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

ஹைதராபாத்: தமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு.. அதான் தமிழில் இப்போதைக்கு நடிக்க முடியாத சூழல் உள்ளது, என்று நடிகை அஞ்சலி கூறினார்.

தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்திராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

ஹைதராபாதில் நடந்த இதன் வெற்றி விழாவில் பங்கேற்ற அஞ்சலி தமிழ் படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் எனக்குக் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, அதான் நடிக்கல!- அஞ்சலி

விழாவில் அவர் பேசுகையில், "ஆதலால் காதல் செய்வீர்' படம் தயாரான போது அதில் கதாநாயகியாக நடிக்க என்னைத்தான் அழைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது எல்லோருக்கும் தெரியும்.

எனவேதான் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளேன். ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்திலும் இதனால்தான் நடிக்க முடியவில்லை.

இந்த படம் ஆந்திராவில் ரிலீசாகி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்," என்றார்.

 

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா!

பெங்களூர்: முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் பிடதி ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன், என்று மா ஆனந்தமயியாக மாறியுள்ள நடிகை ரஞ்சிதா கூறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர் சினிமாவில் இருந்து விலகி நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா!

இதையடுத்து நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. நித்யானந்தாவின் மடாலயங்கள் தாக்கப்பட்டது. ரஞ்சிதா தலைமறைவானார். நித்யானந்தா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். ரஞ்சிதாவும் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல என்று அறிவித்தார். தன் மீது அவதூறு பரப்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது சன்னியாசியாகியுள்ளார். நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூர் அருகே உள்ள பிடதி ஆசிரமத்தில் நடந்தது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சன்னியாசியாக விரும்புகிறவர்களுக்கு நித்யானந்தா தீட்சை வழங்குவது உண்டு. இந்த பிறந்த நாளிலும் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தீட்சை பெற்றனர். அதில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. இதனால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆபாச வீடியோ சர்ச்சைக்கு பின்னரும் நித்யானந்தா ஆசிரமத்திலேயே ரஞ்சிதா தங்கி இருந்தார். ஆன்மீக சுற்றுப் பயணங்கள், தியான கூட்டங்களில், குண்டலினி எழுப்புதல் என அனைத்து நிகழ்வுகளிலும் நித்யானந்தாவுடனே காணப்பட்டார்.

தற்போது சன்னியாசியாகி உள்ளார். பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் குளித்து ருத்ராட்சை மாலைகள், மற்றும் காவி உடை அணிந்து சன்னியாசியாக தீட்சை பெற்றார்.

பின்னர் மேடையில் அவர் பேசும்போது, "உண்மை, அமைதி, அகிம்சை போன்றவற்றை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலமே சன்னியாசி ஆகி இருக்கிறேன். இனி எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை.

முழுமையான பிரம்மச்சாரியத்தை உணர்ந்து அதன்படி வாழ்வேன். இனிமேல் எப்போதும் ஆசிரமத்திலேயே தங்கி இருப்பேன்," என்றார்.

ஏற்கெனவே நடிகை ராகசுதாவும் இதே நித்யானந்தா மூலம் சன்னியாசம் பெற்றது நினைவிருக்கலாம்.

 

பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயரம் ரவியின் நிமிர்ந்து நில்!

சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படம் பெர்லின் சர்வதேச பட விழாவில் பங்கேற்கிறது.

ஜெயம் படத்தில் தொடங்கி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜெயம் ரவி.

இப்போது நிமிர்ந்து நில், பூலோகம், மற்றும் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!

நிமிர்ந்து நில் படம் விரைவில் வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படம் பிப்ரவரி 14- ம் தேதி தொடங்கும் பெர்லின் சர்வதேச பட விழாவில் கலந்து கொள்கிறது.

இன்று ஜெயம்ரவி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு எனக்கு இனிமையாக அமையப் போகிறது.

"நிமிர்ந்து நில்' என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம். அந்த படத்தின் தரத்துக்கு ஏற்ப, படத்துக்கு இத்தகைய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த ஆண்டு மேலும் பல நல்ல சேதிகள் வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

விஜய்யின் ஜில்லா.. வரணும் நல்லா... என்பதுதான் நமது ஆசையும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் 'தலைவா ரிடர்ன்ஸ்' ஆகிவிடுமோ என்ற கவலை விஜய்யின் ரசிகர்கள் - அவரைக் கிண்டலடிப்போர் என அத்தனைப் பேருக்கும் வந்துவிடும் போலிருக்கிறது!

பின்னே... போட்டியாளரான அஜீத்தின் வீரம் பட ட்ரெயிலர், இசை... அட சென்சார் சான்றிதழ் கூட வெளியாகிவிட.. விஜய்யின் ஜில்லாவுக்கு இன்னும் டீசர் கூட வெளியாகவில்லை.

ஜில்லா டிலே... டென்ஷன் ஏறுது... குழப்பத்தில் தியேட்டர்கள்!

இசை வெளியீடு என ஒப்புக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்துக்கு இப்படியா இசை வெளியீட்டு விழா நடத்துவார்கள் என்ற கேள்வி கோடம்பாக்கத்தில்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஜில்லா பட முன்னோட்டம் வெளியாகும் என விஜய் மற்றும் ஆர்பி சவுத்ரி இருவருமே அறிவித்திருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் வெளியாகவில்லை. டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என மீண்டும் அறிவித்திருந்தனர். ஆனால் இன்று வரை அதுகுறித்த உறுதியான தகவல் ஏதுமில்லை.

இப்படித்தான் தலைவா விஷயத்திலும் நடந்தது. அப்படி ஏதும் ஆகிவிடக் கூடாதே என இப்போது ரசிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வேண்டுகிறார்கள் (பின்னே... எத்தனை முறைதான் இந்த செய்தியையே எழுதிக் கொண்டிருப்பது!!).

 

நிச்சயமான ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி: தந்தி டிவியின் கல்யாணம்

தந்தி டி.வி.யில் "கல்யாணம்" என்ற புத்தம் புதிய கேம் ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக இருவீட்டாரையும் அழைத்து, ஜாலியான விளையாட்டுகளை அரங்கேற்றுகிறார்கள். இதில் வெற்றி பெறும் குடும்பத்திற்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.

நிச்சயமான ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி: தந்தி டிவியின் கல்யாணம்

நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்காக காத்திருக்கும் இளம் ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாகவே, இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணமான தம்பதிகளை அழைத்து விஜய் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சி நம்ம வீட்டுக் கல்யாணம். இது திருமணத்தை மறுபடியும் நினைவூட்டுகின்றனர்.

ஆனால் திருமணத்திற்குப் முன்பாகவே நிச்சயிக்கப்பட்ட புதுமணப்பெண், மணமகனை அழைத்து நடத்தப்படும் கேம்ஷோ இது. மணநாளுக்கு முன்பாகவே இருவருக்குள்ளும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் இந்த கல்யாணம் நிகழ்ச்சி, தந்தி டி.வி-யில் விரைவில் களைகட்டும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!

சென்னை: இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா.

சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன.

இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார்.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார்.

மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

 

'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ

'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ

சினிமா தலைப்புகளுக்கு பாடல் வரிகளைத் தேடிய காலம் போய் இப்போது டிவி கேம் ஷோக்களுக்கும் சினிமா பாடல்வரிகளை வைக்கின்றனர்.

ஜீ தமிழ் டிவியில் கடந்த சிலவாரங்களாக புதிய கேம் ஷோ ஒன்று தொடங்கியுள்ளது. பெயர் ‘ஒய் திஸ் கொலவெறி?'

3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ‘ஒய் திஸ் கொலை வெறி டி' இந்த ஒரு பாடலின் மூலம் பிரபலமான அனிருத் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இசை, வீரம் மற்றும் திறமை இம்மூன்றையும் பங்கேற்பாளர்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகின்றனர்.

பொதுவாக இசை நிகழ்ச்சிகளில் பாடகர்கள் தமக்கு பிடித்த பாடலை பாடி மகிழ்விப்பர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பாடலுக்கிடையே தொகுப்பாளர் தரும் சவால்களை மீறி பாடுகின்றனர்.

பிரபல பாடகர்களுடன், சின்னத்திரை நட்சத்திரங்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதியநிகழ்ச்சியை வானொலி தொகுப்பாளர் பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.