கமல் ஹாஸனை இயக்குகிறார் வெங்கட் பிரபு?


மங்காத்தாவில் ஜாக்பாட் அடித்தாலும் சோனா விவகாரத்தில் மங்கிப் போயிருந்த வெங்கட் பிரபுவின் கேரியரில் இப்போது மீண்டும் பளிச் வெளிச்சம்.

காரணம்... சமீபத்தில் இவர் கமல்ஹாஸனை சந்தித்துப் பேசியுள்ளதுதான். ஒரு வயிறு குலுங்க வைக்கும் காமெடிப் படத்துக்காக இருவரும் இணைகிறார்கள் என்பதுதான் இப்போதைய 'ஹாட் டாக்'!

இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது கமலின் ஆசை. இளம் தலைமுறை ப்ளஸ் விறுவிறு காமெடி... இதற்கு வெங்கட் பிரபு - பிரேம்ஜி டீம் பக்காவாக பொருந்தும் என்பதால், வெங்கட்டை அழைத்துப் பேசினார் கமல் என்கிறார்கள்.

சூர்யா வைத்து தன் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட், அந்தப் படம் முடிந்ததும் கமல் படத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
 

அஜீத் படம் கிடைச்சா சந்தோஷப்படுவேன் - ஜெயம் ராஜா


அஜீத்தை ஒரு படத்தில் இயக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றார் இயக்குநர் ஜெயம் எம் ராஜா.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார் ராஜா. தமிழில் முதல் முறையாக தன் தம்பி ஜெயம் ரவி இல்லாமல் அவர் இயக்கியுள்ள படம் வேலாயுதம்.

இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில். விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்ல பேச்சு நிலவுவதால் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ராஜா.

வேலாயுதம் பட அனுபவம் குறித்து நேற்று நிருபர்களிடம் ராஜா கூறுகையில், "வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். ஆனால் வேலாயுதம் படத்தை ஆசாத் என்ற படத்தின் மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன்.

என் தம்பி ஜெயம் ரவியை வைத்து மட்டும் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். இது எனது ஒன்றரை வருட கனவு படம் என்றாலும் மிகையல்ல.

விஜய் என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றதும் இந்த கதையை உருவாக்கினேன். கமர்சியல் படங்களுக்கான வீரியத்தோடு புது பரிமாணத்தில் இப்படம் இருக்கும்.

இதுவரை நான் எடுத்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன. அதில் எனக்கு சந்தோஷம். எங்க வீட்டு பிள்ளை, பாட்ஷா, அந்நியன் போன்றவை நான் ரசித்த படங்கள். தனித்தனி பார்முலாக்களை அதில் பார்க்கலாம்.

இப்போது வேலாயுதம் படத்தில் வேறொரு பார்முலாவைப் பார்க்கலாம். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். டான்ஸ், வசனம் எல்லாவற்றிலும் அசத்தி உள்ளார். நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும். அந்த கதைக்காகத்தான் மெனக்கெடுகிறேன். வேலாயுதம், நல்ல கதை, அருமையான பொழுதுபோக்கு நிறைந்த படம்.

தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக இன்னும் உழைப்பேன். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக வேலாயுதம் இருக்கும். அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை. வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்," என்றார்.
 

தீபாவளி ஸ்பெஷல்: ஒரு வாரத்துக்கு தமிழக திரையரங்குகளில் தினசரி 5 காட்சி


சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு வார காலத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாக உள்ளது. அவர்கள் எளிதாக படம் பார்க்க வசதியாக கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படடு இருந்தது.

அதை ஏற்று முதல்வர் அனுமதி வழங்கியமைக்கு நன்றி.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
 

அமெரிக்கா போகும் அமலா பால்!


முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக அமெரிக்கா செல்கிறார் அமலா பால்.

அதர்வா - அமலா பால் நடிக்கும் இந்தப் படம், பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை அமெரிக்காவில் படமாக்குகிறார்கள். லாஸ் வேகாஸ், கிராண்ட் கேன்யன், நியூயார்க் நகரங்களில் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத லொகேஷன்களில் இந்தப் பாடல்கள் படமாகின்றன.

இவற்றில் 'ஒரு முறை...' என்ற பாடலில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தோன்றுகிறாராம்.

இந்தப் பாடல்களில் நடிக்க அமலா பால் மற்றும் படக்குழுவினர் வரும் 28-ம் தேதி அமெரிக்காவுக்குப் பறக்கிறார்கள்.

கடந்த ஆண்டு தமிழில் அறிமுகமான அமலா பால், படப்பிடிப்புக்காக அமெரிக்கா போவது இதுவே முதல் முறையாம். ஆர் எஸ் இன்போடைன்மெண்டின் இந்தப் படத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறார் அமலா.
 

பாலிவுட் இயக்குநரிடம் ரூ.3கோடி கேட்டு கொலை மிரட்டல் - என்ஆர்ஐ பார்ட்னர்கள் மீது வழக்கு


மும்பை: ரூ.3 கோடி பணம் கேட்டு பிரபல இயக்குநர் பிரகாஷ் ஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது முன்னாள் பார்ட்னர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்திப்பட இயக்குநர் பிரகாஷ் ஜா. சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான 'ஆரக்ஷான்' படம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியது.

இந்த நிலையில் பிரகாஷ் ஜா மும்பையில் உள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "கடந்த 2004-ம் ஆண்டில் நானும், அமெரிக்காவின் நிïயார்க் நகரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோரும் இணைந்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டோம்.

அந்தப் படத்துக்காக நான் கதை கூட தயாரித்து விட்டேன். ஆனால் சில பிரச்சினைகளால் படத்தை எடுக்க முடியாமல் போய் விட்டது.

அந்த படத்துக்காக எனக்கு 50,000 டாலர்கள் (ரூ.24.5 லட்சம்) தந்தனர். படம் எடுக்க முடியாததால் பணத்தை நான் திருப்பி கொடுத்து விட்டேன்.

இந்தநிலையில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோரிடம் இருந்து எனக்கு இ-மெயில் மற்றும் போனில் கொலை மிரட்டல்கள் வருகிறது.

எங்களுக்கு நீங்கள் 2 முதல் 3 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என்று அவர்கள் மிரட்டுகின்றனர். மேலும் இது தொடர்பாக நிïயார்க்கில் வசிக்கும் என்னுடைய நண்பர் ஒருவரையும் அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள்.

எனவே பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

அவருடைய புகாரின் பேரில் வெளிநாடு வாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி, தேவேந்திர சிங் ஆகியோருக்கு எதிராக அம்போலி உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர கானே வழக்குப்பதிவு செய்தார்.
 

நேரம் பார்த்து சம்பளத்தை உயர்த்திய காஜல்!


தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர் திடீரென கழன்று கொண்டார் ஸ்ருதி. காரணம், அவருக்கு வந்த இந்திப்பட வாய்ப்பு.

விஷயம் வெளியான உடனே, ஜூனியர் என்டிஆரை பல நடிகைகளும் மொய்க்க ஆரம்பித்தனராம். இவர்களில் தமன்னா, த்ரிஷா என டாப் ஸ்டார்களும் உண்டாம்.

ஆனால் எந்டிஆரோ, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார். உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் காஜல்.

காரணம், ஏற்கெனவே நான் வட இந்தியப் பெண் என்று பேசி தெலுங்கு நடிகர்-இயக்குநர்களிடம் கெட்டப் பெயர் சம்பாதித்துள்ளார் காஜல்.

இந்த நிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், மீண்டும் தெலுங்கில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்திருந்தபோது, இந்த லட்டு வாய்ப்பு வந்தது.

விடுவாரா... அதே நேரம் தனக்கு சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல். வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்டிஆர்.