'என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும்... ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டு பேச முடியாது!' - மணிவண்ணன்

சென்னை: அமைதிப் படையின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல. இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம். இப்படிப் படம் எடுத்ததால் தாக்குதல் நடத்துவார்களோ என நான் பயப்படவில்லை. என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேச முடியாது," என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

manivannan warns politicians

ஐம்பதாவது படம்

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிப்பட இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். 1994-ல் அவர் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது.

இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு. இதுவரை இப்படியொரு பேச்சைக் கேட்டதில்லை எனும் அளவுக்கு அரசியல் நையாண்டியும் உணர்ச்சிமயமானதாகவும் அமைந்தது அவரது பேச்சு.

மணிவண்ணன் பேசியதாவது:

"நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்...

இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்...

அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.

ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல, ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். இந்த 20 ஆண்டுகளில் சத்யராஜ் முகத்திலும், நடையிலும் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் இரண்டு பேருக்குதான் நன்றாகத் தெரியும். ஒன்று அவர் துணைவியாருக்கு. இன்னொன்று எனக்கு!

நாங்கள் இருவருமே கணவன் - மனைவி மாதிரிதான். படப்பிடிப்பின்போது, அவர் நடித்துக் கொண்டிருப்பார். நான் கட் சொல்ல மறந்து அவர் நடிப்பையே ரசித்துக் கொண்டிருப்பேன். அவரே, 'தலைவரே.. கட் சொல்லுங்க' என்பார்.

யாருக்கும் பயப்படவில்லை

அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை.

அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால்... மவனே... என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும்.

50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்...

சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம்.

நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை!

என்னைப் பத்தியும் ஏதாவது எழுதுங்கப்பா!

இன்றைக்கு ஊடகங்கள் பெருகிவிட்டன. பல முகங்கள் எனக்குத் தெரியவே இல்லை. தினமும் பேப்பர்ல பேரு வரலேன்னா அரியல்வாதிகளுக்கு அடுத்த வேளை சோறு இறங்காது. அதிலும் அந்தக் கட்சிக்கு பெரிசாவும், இந்தக் கட்சிக்கு சின்னதாவும் செய்தி வந்தா அன்னிக்கு தூக்கமே போயிரும் அவங்களுக்கு.

நாம அப்படியெல்லாம் கேக்கல. ஆனாலும் எதாவது எழுதுங்கப்பா... என்னைப் பத்தியும் ஏதாவது பிட்டு போடுங்க அப்பப்ப... என்ன.. என்னைப் பத்தி எதுவும் கிசுகிசு எழுதினா யாரும் நம்ப மாட்டாங்க...!

-இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

 

'மாற்றத்தைப் பற்றிப் பேசவேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம்'- லதா ரஜினிகாந்த்

Latha Rajini Launches I M India

மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்... அந்த மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிறார் லதா ரஜினிகாந்த்.

சமூக மாற்றத்துக்காக இந்தியாவிற்காக நான் (I Am For India) என்ற அமைப்பை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.

இதன் தொடக்கவிழா நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. அதையொட்டி வைபவ் என்ற இரண்டு நாள் கண்காட்சியும் மண்டபத்தில் நடந்தது.

ரஜினி பற்றிய புத்தகங்கள்

நிகழ்ச்சியை லதா ரஜினி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி வெளியாகியுள்ள புத்தகங்கள், அவரது உருவம் பொறித்து வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் ஒரு தனி பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐ ஆம் பார் இந்தியா குறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், "மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிற வரிகளில் அதிக நம்பிக்கை கொண்டவள் நான். அந்த நம்பிக்கையில்தான் இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும் இருந்து, பலதரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறேன்.

"கல்வி, ஆரோக்கியம்-உடல் நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்," ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையைத் திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்கிற தாகம் எனக்கு உண்டு.

தனி நபர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் மேலும் தனது வாழ்க்கையிலும் அதன் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் ஆகியோரின் நலன் கருதி நமது பாரம்பரிய உணவுகள், தொழில்கள் மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்ட வைபவ் மேளா மற்றும் வைபவ் உணவுத் திருவிழா ஆகியவை நடத்தப்படுகிறது.

என் கணவர் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியான அனைத்துப் புத்தகங்கள், அவரைச் சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் இங்கே பார்வைக்கு வைத்துள்ளோம்..." என்றார்.

 

மீண்டும் ஷங்கர் - ஐஸ்வர்யா காம்பினேஷனில்... உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார்!

Rajini Sing Duet With Aishwarya Rai

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு இதைவிட பெரிய செய்தி வேறொன்றுமிருக்காது... ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஷங்கரும் கைகோர்க்கிறார்கள். குழந்தைப் பெற்ற பிறகு குண்டான உடம்பை மீண்டும் ஸ்லிம்மாக்கிக் கொண்டுள்ள உலக அழகி ஐஸ்வர்யாதான் இதில் ரஜினிக்கு ஜோடி.

இந்தத் தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினியே உறுதி செய்திருப்பதுதான் ஹைலைட்!

ரஜினி, ஷங்கர் காம்பினேஷனில் இதுவரை சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்கள் வந்தன. இவை இரண்டுமே இந்திய சினிமா வர்த்தகத்தை உலக அளவுக்கு கொண்டு போய் வரலாறு படைத்தன.

எந்திரனுக்குப் பிறகு இரண்டு மூன்று படங்களை ரஜினி அறிவித்து, அதில் கோச்சடையான் மட்டும் ரிலீஸை நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அதுவும் முழுமையான படம் அல்ல. எனவே ரஜினியை பாட்ஷா, முத்து, படையப்பா மாதிரி முழுநீள ஆக்ஷன் பொழுதுபோக்குப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

இதுபுரிந்த ரஜினி, தனது அடுத்த படம் எது என்பது குறித்து தீவிர யோசனையில் இருந்தார். கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ, மீண்டும் ஷங்கரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு ஜோடியாகிறார். அவருடன் மேலும் ஒரு இளம் கதாநாயகி நடிக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய ஈராஸ் நிறுவனத்தின் நிதி அலுவலர் கமல் ஜெயின், "இந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை ரஜினியே முடிவு செய்தார். கோச்சடையானுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கும். அதற்குப் பிறகுதான் ராணா," என்றார்.

குறிப்பு: ஏங்க... ஏப்ரல் ஒண்ணாந்தேதியும் அதுவுமா எத்தனையோ பேர்கிட்ட ஏமாந்துகிட்டேதான் இருக்கீங்க... அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டுப் போகட்டுமே.. ஹிஹிஹி!

 

35 வயசாச்சு, இனி காதல் செய்ய மாட்டேன் - வித்யாபாலன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்

Dirty Picture Icon Vidya Balan Turns 35   

மும்பை: 'நான் 35 வயதை கடந்து விட்டேன்' என வித்யாபாலன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பொதுவாக, சினிமா நடிகைகளைப்பொறுத்தவரை தங்களது வயதை ரொம்ப சீக்ரெட்டாகவே வைத்திருப்பார்கள். குறிப்பாக 19 வயதிலிருந்து 20 வயதை தொடவே அவர்களைப்பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகளாவது பிடிக்கும்.

அந்த அளவுக்கு வயதை குறைத்தே சொல்லி வருவார்கள். ஆனால் பாலிவுட் நடிகை வித்யாபாலன் அப்படியல்ல. இப்போது நான் 35 வயதை கடந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

மேலும் ‘அதனால், இனிமேல் நான் காதல் செய்வது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். நான் அப்படி நடித்தால் இப்போதைய ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதனால் இனி அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லப்போகிறேன்.

அதாவது, சமீபத்தில் நான் நடித்து வெளியான தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களில் நடித்தது போன்று மாறுபட்ட கதைகளில் நடிக்கப்போகிறேன். அதுபோன்ற மெச்சூரிட்டியான கதைகளில் நடிப்பதுதான் எனது மெச்சூரிட்டிக்கு மேட்சாக இருக்கும். மேலும், மேற்கண்ட இரண்டு படங்களுமே என்னை இந்திய அளவில் பேச வைத்தன. அதிலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தேசிய விருதும் பெற்றுத்தந்தது. அதனால் இப்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட விருதுகள் மீதுதான் எனது ஆர்வம் அதிகமாகி உள்ளது' , என்கிறார் வித்யாபாலன்.

ஹாலிவுட்டில் எல்லாம் 35 வயதில்தான் இளமை திரும்பும் என்பார்கள்.. இங்கு தலைகீழாக இருக்கிறதே.

 

ஓ மை காட்... அந்தமானுக்கு ஓடி விட்டாரா 'பவர் ஸ்டார்'?

Namakkal Police On The Lookout Power Star Srinivasan

சென்னை: செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தப்பி தலைமறைவாகி விட்டார். அவர் தற்போது அந்தமான் பக்கம் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில்தான் வசித்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமி என்பவரிடம் 2008ம் ஆண்டு ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். ஒரு ஆண்டுக்கு பின்னர் பொன்னுசாமிக்கு அவர் செக் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பி வந்து விட்டது.

இது தொடர்பாக நாமக்கல் கோர்ட்டில் பொன்னுசாமியின், மேலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் 2009ம் ஆண்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீனில் வெளி வர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் ஜோதி உத்தரவு பிறப்பித்ததுடன், மார்ச் 26ம் தேதிக்குள் அவர் கோர்ட்டில் ஆஜராகா விட்டால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக கருதப்படுவார் என உத்தரவிட்டார்.

கோர்ட் உத்தரவை தொடர்ந்து நாமக்கல் போலீசார் சென்னை சென்று சீனிவாசனை தேடிய போது, அவர் அந்தமானுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் போலீசார் கூறுகையில், நடிகர் பவர் ஸ்டார் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. செக் மோசடி தொடர்பாக அவர் மீது பிரைவேட் கேஸ் கோர்ட்டில் பதிவு செய்துள்ளனர். தற்போது கோர்ட்டில் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர், போலீசாரிடம் வந்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

பவர் ஸ்டார் தலைமறைவாகி விட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஓவர் பில்டப்புடன் பெரும் பரபரப்பான நபராக கோலிவுட்டில் வலம் வருபவர் இந்த பவர்ஸ்டார். தற்போது இவர் மிகவும் குறுகிய காலத்திதற்குள்ளாகவே செக் மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதை விட பேராச்சரியம், யார் கேட்டாலும் அள்ளி அள்ளி பணம் தரக் கூடிய வள்ளல் என்று இவரைப் போற்றுகிறார்கள்.. அப்படிப்பட்டவரா 2 லட்சம் பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டார் என்றும் கேட்கிறார்கள்.

என்ன செய்வது, வழக்கம் போல காலம்தான் பதில் சொல்ல வேண்டும்...!