சீமான் - விஜய் 3 மணிநேரம் பேச்சு!


இயக்குநர் சீமானை சமீபத்தில் சந்தித்த நடிகர் விஜய் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க 'பகலவன்' என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கும் மேல் இது வெறும் பத்திரிகைச் செய்தியாகவே இருந்தது. விஜய் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

இடையில் ஜெயம் ராஜா, ஷங்கர், முருகதாஸ், கவுதம் மேனன், ஏ எல் விஜய் என முன்னணி இயக்குநர்கள் அனைவருக்குமே கால்ஷீட் கொடுத்துவிட்டார் விஜய்.

எனவே சீமானின் பகலவன் அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு வந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு தண்டனையை நிறுத்தும் போராட்டங்களில் மும்முரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யைச் சந்தித்தார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.

விஜய்க்குப் பிடித்த மாதிரி பகலவனின் கிளைமாக்ஸ் காட்சியை சீமான் மாற்றி எழுதியதால், அந்தக் கதையை உடனடியாகப் படமாக்குவதில் ஆர்வம் காட்டுகிறாராம் விஜய். தயாரிப்பாளர் தாணுவும் இதில் உறுதியாக இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசவே சீமானும் விஜய்யும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே 'பகலவன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் " என்கிறார்கள் தாணு தரப்பில்.
 

பொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து வந்த ரஜினி! - வைரமுத்து


சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை விஞர் வைரமுத்து சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

ரஜினியின் உறவினர் தவிர்த்து, வெளிநபர்களில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசிய இரண்டாமவர் வைரமுத்து. இவருக்கு முன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ரஜினியுடனான தனது சந்திப்பு குறித்து வைரமுத்து குமுதம் பத்திரிகைக்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் சில பகுதிகள்:

120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.
வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.

எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!

‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’

பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.

மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.

நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.

அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.

வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.

பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.

‘‘ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.’’

‘‘ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.’’

‘‘சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.’’

வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.

‘‘அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?’’

‘‘அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.’’

‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’

‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.’’

மது - புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.

அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.

இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார். பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.

90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.
மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.

‘‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’’

- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.

‘‘விதியை நினைப்பவன் ஏமாளி - அதை
வென்று முடிப்பவன் அறிவாளி’’

ரஜினி அறிவாளி!"

-இவ்வாறு அந்தக் கட்டுரையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவின் மிக உயரமான ஜோக் நீர்வீழ்ச்சியில் 'கும்கி'!


லொக்கேஷன்களுக்காக மெனக்கெடுவதில் இயக்குநர் பிரபு சாலமன் தனி ரகம். இதுவரை சினிமாக்காரர்களின் கால் படாத பகுதிகளைத் தேடிப் பிடித்துப் படமாக்குவதில் வித்தகர்.

வாகனங்களே செல்ல முடியாத அடர்ந்த காடுகளில் வைத்து மைனாவை எடுத்த பிரபு சாலமன், தனது அடுத்த படமான கும்கியை, இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி என்ற பெருமைக்குரிய ஜோக் நீர்வீழ்ச்சியில் வைத்துப் படமாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ளது இந்த ஜோக் நீர்வீழ்ச்சி. இங்கு சில கன்னடப் படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதன் உச்சிப் பகுதிக்குப் போய் படமாக்கும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை.

ஆனால் பிரபு சாலமன், கிட்டத்தட்ட 10 கிமீ பயணித்து நீர்வீழ்ச்சியின் உச்சிப் பகுதியை அடைந்து, வாட்டர்புரூப் லென்ஸ் பயன்படுத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் கும்கியில், நடிகர் பிரபுவின் மன் விக்ரமும், கேரள வரவு லட்சுமி மேனனும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடக்கிறது.
 

விஷாலுக்கு சமீரா கொடுத்த 30 'இச்'!


வெடி படத்தின் பாத்ரூம் காட்சி ஒன்றில் விஷாலுக்கு 30 முறை முத்தம் கொடுத்து நடித்தாராம் சமீரா ரெட்டி.

ஒரு படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்னரும், அந்தப் படத்தைப் பற்றிய ஏகப்பட்ட செய்திகள் புற்றீசல் போல கிளம்பி வரும். படத்தை விட இத்தகைய செய்திகள்தான் படு சுவாரஸ்யமாக இருக்கும்.

கடலில் போனபோது கவிழ்ந்து விட்டோம் என்பார்கள், புயல் வந்து எங்களை அழிக்கப் பார்த்தது என்பார்கள். முத்தக் காட்சியின்போது ஹீரோயின் உதட்டை ஹீரோ கடித்து விட்டார் என்பார்கள். இப்படி ஏகப்பட்ட செய்திகள் வரும். அப்படி ஒரு செய்தி இப்போது வந்திருக்கிறது.

அது பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள வெடி படம் தொடர்பானது. இந்தப் படத்தில் விஷாலும், சமீரா ரெட்டியும் ஒரு பாத்ரூம் காட்சியி்ல படு நெருக்கமாக நடித்துள்ளனராம். அந்தக் காட்சியின்போது விஷாலுக்கு சமீ்ரா ரெட்டி 30 முறை முத்தம் கொடுத்தாராம்.

ஆனால் பதிலுக்கு விஷால், சமீராவுக்கு 10 வாட்டிதான் முத்தம் கொடுத்தாராம்.

இந்தக் காட்சிகள் குறித்து விஷால் கூறுகையில், பொதுவாக மும்பைப் பெண்களுக்கு மொழிப் பிரச்சினை வருவது சகஜம். சமீராவுக்கும் கூட அது வந்தது. ஒரு காட்சியில் நகைச்சுவையாக பேசி விட்டு என்னை முத்தமிட வேண்டும். ஆனால் வசனத்தை மறந்து விட்டு முத்தம் மட்டும் கொடுத்தார் சமீரா.

இதையடுத்து ரீடேக் போனது. ஆனால் கிட்டத்தட்ட 30 முறை செய்த பின்னர்தான் அவரால் வசனத்தைப் பேச முடிந்தது (அட.. அப்புறம்!). ஒரு முறை முத்தம் சரியாக வந்திருக்கும், இன்னொரு முறை வசனம் சரியாக வந்திருக்காது. இப்படியாக 30 முறை டேக் வாங்கி விட்டார் சமீரா.

ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் பத்து முறைதான் ரீடேக் வாங்கினேன். இந்தக் காட்சி ஆபாசமாக இருக்காது. திணிக்கப்பட்ட காட்சியும் அல்ல. கதைக்குத் தேவையானதுதான். எனவேதான் இதை இயக்குநர் வைத்தார் என்றார் விஷால்.

ஒரு முத்தம், ஓரிரு வார்த்தைகளுக்கு 40 டேக்கா, ஓ.கே., ஓ.கே....!!
 

காஜல் டாப்லெஸ்ஸாக தான் போஸ் கொடுத்தார்: எப்ஹெச்எம்


நான் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுக்கவேயில்லை என்று காஜல் கூப்பாடுபோட, இன்னொரு டாப்லெஸ் போட்டோவை போட்டு நாங்கள் ஒன்றும் மார்பிங் செய்யவில்லை என்று எப்ஹெச்எம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

எப்ஹெச்எம் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் காஜல் அகர்வாலின் டாப்லெஸ் போட்டோ வெளியானது. இதைப் பார்த்து அனைவரும் காஜலா இப்படி என்று முகம் சுளிக்க அவரோ அய்யா அது நானே இல்லை மார்பிங் செய்திருக்கிறார்கள் என்றார். நான் டிரஸ் போட்டு தான் போஸ் கொடுத்தேன், ஆனால் பத்திரிக்கையில் இப்படி டாப்லெஸ்ஸா போட்டிருக்காங்க. அவர்களை சும்மாவிடப்போவதில்லை என்றெல்லாம் கூப்பாடுபோட்டார்.

இத்தனையும் பார்த்த அந்த பத்திரிக்கை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் காஜல் டாப்லெஸ்ஸாகத் தான் போஸ் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளது. தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூற காஜலின் இன்னொரு டாப்லெஸ் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிக்கை ஆசிரியர் கூறியதாவது,

எந்த ஒரு பிரபலத்தின் போட்டோவையும் நாங்கள் இதுவரை மார்பிங் செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை. நாங்கள் கடந்த மாதம் 18-ம் தேதி மும்பையில் வைத்து தான் காஜல் அகர்வாலை படம் எடுத்தோம். அப்போது உதவியாளர்கள், ஸ்டைலிஸ்ட்கள், மேக்அப் ஆர்டிஸ்ட்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பலர் அங்கு இருந்தனர். அவர்கள் தான் காஜல் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்ததற்கு சாட்சி. நாங்கள் மார்பிங் செய்யவில்லை என்பதை நிரூபிக்க விரைவில் இணையதளத்தில் அவரது போட்டோவை வெளியிடவிருக்கிறோம்.

இது தவிர போட்டோவை வெளியிட காஜல் கையெழுத்திட்ட ஆவணம் எங்களிடம் உள்ளது. மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது எங்கள் பத்திரிக்கையையும், அவரது ரசிகர்களையும் அவமதிப்பதாகும் என்றார்.

இரண்டு தரப்புமே தாங்கள் சொல்வது தான் உண்மை என்றாலும் காஜலுக்கு என்னவோ பப்ளிசிட்டி தான்.
 

இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை: ரீமா சென்


எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்று நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளார்.

நடிகை ரீமா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனுக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்புகிறது.

ரீமா சென் டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனை காதலிக்கிறார். ஆனால் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் ரீமாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாத யாரோ என்ன ரீமா உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதாமே, வாழ்த்துக்கள் என்று கூற அவர் கடுப்பாகிவிட்டார்.

இவர்களுக்கு எத்தனை தடவை தான் சொல்வதோ எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நொந்து கொள்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனக்கு திருமண வாழ்த்து செய்திகள் வந்து குவிகின்றன. நடக்காத திருமணத்திற்கு வாழ்த்துக்களா? திருமணம் நடந்திருந்தால் நான் ஏன் மறைக்கப் போகிறேன். அது நடக்கும் போது கண்டிப்பாக சொல்வேன். என்னைப் பற்றி 6 மாதத்திற்கு ஒரு முறை இந்த வதந்தி எப்படி வருகிறது என்றே தெரியவில்லை என்றார்.

ஒரு பக்கம் திருமணம் வதந்தி இருக்க மறுபக்கம் ரீமா நடித்த வங்காள மொழிப் படத்தை தமிழில் தவறான வகையில் விளம்பரம் செய்கிறார்களே என்ற ஆதங்கம் அவருக்கு. இளவரசி என்ற பெயரில் வந்துள்ள இந்தப் பட விளம்பரம் தன் இமேஜையே கெடுக்கிறது என்று புலம்புகிறார்.

ரீமா கையில் இப்போது 2 இந்தி படங்கள், 1 தெலுங்கு படம் உள்ளது. தமிழில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் ரீமாவை ஆளையே காணோம்!
 

'பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா'!- ஹஸாரே போராட்டம் பற்றி எஸ்பி ஜனநாதன்


அரசியல், சினிமா இரண்டிலுமே தெளிவான பார்வை கொண்ட மிகச் சில இயக்குநர்களில் ஜனநாதனும் ஒருவர். யாரையும் பொய்யாகப் புகழ்வதும், வீணாகத் திட்டுவதும் இல்லாத படைப்பாளி.

இன்றைக்கு திரைப்படங்களில் பொது உடைமைச் சித்தாந்தத்தை மிக எளிமையாக சொல்ல இவரைவிட்டால் ஆளில்லை.

அவரிடம் அன்னா ஹஸாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது விகடன்.

அதற்கு அவர் அளித்த பதில், இன்னொரு சாளரத்தை திறந்துவிட்டது போலிருந்தது.

''அதில் நல்லெண்ணத்தின் கோஷம் இருந்தது. ஆனால், ஆழமான அரசியல் பார்வைகள் இல்லை. ஹஜாரே எம்.பி-க்களை விமர்சிக்கிறாரே தவிர, நாடாளுமன்றத்தை உருவாக்கும் தேர்தல் முறையை விமர்சிக்க வில்லை. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது நாடாளுமன்ற அமைப்புதான். இங்கு இருக்கும் தேர்தல் முறையிலேயே ஏராளமான கோளாறுகள் உள்ளன.

1961-ல் அண்ணா தலைமையில் நடந்த கோவை தி.மு.க. தேர்தல் மாநாட்டில் 'விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது.

தோழர் லெனின், 'சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற முறை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சம்’ என்றார். அங்கு பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு மக்களிடம்தான் இறையாண்மை இருக்குமே தவிர, ஆளும் அரசிடம் இல்லை.

அமீரும் சீமானும் இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வாதப்படி அண்ணா ஹஸாரேதான் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார். தான் உருவாக்கிய கமிட்டியிலேயே தென்னிந்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காத ஹஸாரேவுக்கு மக்கள் பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அம்பேத்கர் பற்றி இவர் பேசலாமா?

தீப்பந்தம் ஏந்த வேண்டியவர்களை மெழுகுவத்தி ஏந்த வைத்ததுதான் ஹஜாரே செய்த சாதனை. அது மத்தியதர வர்க்கம் கொண்டாடிய தேசிய தீபாவளி.

இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு என்று கணிசமான தொகையைத் தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்குகின்றன. அந்தத் தொகையைக் குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட சினிமாதான் அண்ணா ஹஸாரேவின் போராட்டம்!

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

22-ம் தேதி ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின்


சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஏழாம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி நடக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ், சூர்யா கூட்டணி சேர்ந்தாலே வெற்றி தான். தற்போது இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் ஏழாம் அறிவு. படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன். படத்தை தயாரித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி மாலை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. பாடல்களுக்கு புதுவிதமாக இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஏற்கனவே சூர்யா, முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கஜினி திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. இந்தியிலும் ஆமிர் கான் நடிப்பில் சக்கை போடு போட்டது. தற்போது இந்த வெற்றிக் கூட்டணியின் ஏழாம் அறிவு படமும் சூப்பர் ஹிட்டாகுமா என்பதை தெரிந்து கொள்ள தீபாவளி வரை பொருத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் ஏழாம் அறிவு வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி அதாங்க தீபாவளி அன்று வெளியாகிறது.
 

'60 படங்களில் பழைய சம்பளத்தில்தான் வேலை செய்கிறோம்...' - ஃபெப்சி தொழிலாளர்கள்


சென்னை: சம்பளப் பிரச்சினையில் தொழிலாளர் - தயாரிப்பாளர் தரப்பில் எந்த உடன்பாடும் இன்னும் எட்டப்படாததால் பெரும் தவிப்புடன் உள்ளது திரையுலகம்.

இதற்கிடையே, பழைய சம்பளத்தில்தான் நாங்கள் 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றுகிறோம். எனவே படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என ஃபெப்சி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 24 பிரிவுகள் உள்ளன. சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைவதற்குள் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகளில், தொழிலாளர்கள் சிலர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

புதிய படங்கள் நிறுத்தம்

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த பட அதிபர்களின் கூட்டுக்கூட்டம், சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் நடந்தது. அதில், 7-ந் தேதி (நேற்று) முதல் புதிய படங்களை தொடங்குவதில்லை என்றும், வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் படப்பிடிப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்களின் இந்த திடீர் முடிவு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பழைய சம்பளத்திலேயே....

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறுகையில், "நாங்கள் இன்னும் பழைய சம்பளத்திலேயே வேலை செய்கிறோம். 60 சினிமா படப்பிடிப்புகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணி புரிந்து வருகிறார்கள்,'' என்றார்.

மீண்டும் மாயவரம் ஷூட்டிங் ரத்து

இதற்கிடையில், தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட 'மாயவரம்' படக்குழுவினர், பிரச்சினை காரணமாக மீண்டும் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

இது பற்றி அந்த படத்தின் கதாநாயகன் டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், "ஏற்கனவே மாயவரத்தில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், நாங்கள் அனைவரும் சென்னை திரும்பி விட்டோம். சென்னையில் நேற்று ஒரு பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்தோம். டான்ஸ் மாஸ்டர் தினா மேற்பார்வையில், அந்த பாடல் காட்சி படமாக இருந்தது. நடனக் கலைஞர்கள் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனால், சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டோம். நடனக் கலைஞர்களைப் போலவே சண்டை கலைஞர்களும் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டார்கள். இதனால் சண்டை காட்சியையும் படமாக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்து வருகிறோம்,'' என்றார்.
 

தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி


சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. தமிழக மக்கள் இனி 5 ஆண்டுகளுக்கு கஷ்டப்படப்போகிறார்கள். அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக சேலம் அதிமுக வழக்கறிஞர் அறிவழகன் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், சட்டசபை தேர்தலில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்து கூறுவதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.

நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளேன என்று கூறியிருந்தார்.

தனது புகாரின்பேரில் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரி்த்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.
 

இயக்குநர் சற்குணம் திருமணம்... எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார்!


களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம் - சரண்யா திருமணம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடக்கிறது.

சற்குணத்தின் உறவுக்காரப் பெண்தான் மணமகள் சரண்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. மணப்பெண் சரண்யா எம்பிஏ பட்டதாரி.

சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி வெளியாகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடக்கிறது.

சொந்த ஊரான ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் திருமணத்தை வைத்துள்ளார் சற்குணம். செப்டம்பர் 15-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 -11 மணிக்குள் முகூர்த்தம் நடக்கிறது.

சென்னையில் தனியாக திருமண வரவேற்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஊட்டியில் மோகன்லால் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை!


ஊட்டி: மலையாள நடிகர் மோகன் லாலின் ஊட்டி வீட்டில் வருமான வரித்துறையினரின் மீண்டும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்.

கேரள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் மத்திய வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள். கேரளாவில் உள்ள இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், ஊட்டி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2-வது முறையாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இதேபோல் கேரளாவில் உள்ள மோகன்லால் வீட்டிலும் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள்.

மோகன் லால் மற்றும் மம்முட்டிக்கு நிழல் உலக தாதாக்களுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த சோதனைகள் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.