பிரபுதேவா, ரமலத் விவாகரத்து வழக்கில் ஜூலை 7ம் தேதி தீர்ப்பு


சென்னை: நடிகர் பிரபுதேவா மற்றும் அவரது மனைவி ரமலத் ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் ஜூலை 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் டான்ஸ் ஆடும் பெண்ணாக இருந்து வந்தவர் ரமலத் என்கிற லதா. இவரை தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 1995ம் ஆண்டு ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. இந்தத் திருமணத்தை அவர் வெகு காலம் வரை பகிரங்கப்படுத்தவே இல்லை. ரகசிய மனைவியாகவே ரமலத்தை வைத்திருந்தார்.

இந்தத் தம்பதிக்கு மொத்தம் 3 குழந்தைகள். அதில் ஒரு பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. இந்த சோகத்தில் இருந்தபோதுதான் பிரபுதேவா- ரமலத் வாழ்க்கையில் நயனதாரா ரூபத்தில் சூறாவளி புகுந்தது.

நயனதாரா உள்ளே வந்ததும், ரமலத்திடமிருந்து விலக ஆரம்பித்தார் பிரபுதேவா. பிரபுதேவா, நயனதாரா நட்பு கள்ளக் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக சுற்றி வர ஆரம்பித்தனர். கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

இதை அறிந்த ரமலத் பொங்கினார். தனது கணவரும், நடிகை நயனதாராவும், நடிகர்கள் என்ற போர்வையில் தம்பதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். பொது இடங்களில் சுற்றுகின்றனர். இதை தடுக்க வேண்டும். தனது கணவரை நயனதாராவிடமிருந்து மீட்டு தன்னிடம் சேர்க்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ரஜினி தொடங்கி பல தரப்பினரும் பஞ்சாயத்துப் பேசிப் பார்த்தனர். பிரபுதேவா தனது நிலையிலிருந்து இறங்கவில்லை. நயனதாராவும் விலகிச் செல்வதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் பெருமளவிலான சொத்துக்களை தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் மாற்றித் தர பிரபுதேவா முன்வந்தார். இதற்கு ரமலத் சம்மதித்தார். இதையடுத்து 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்தனர்.

அவர்களுக்கு சட்டப்படி 6 மாத கால அவகாசம் தரப்பட்டது. ஜூன் 30ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் 30ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரமலத்தும், பிரபுதேவாவும் வரவில்லை. பிரபுதேவா எழுதி வைப்பதாக சொன்ன சொத்துக்களை சரிவர எழுதித் தராமல் இருந்ததால்தான் ரமலத் வரவில்லை என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஜூலை 10ம் தேதிக்கு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் வழக்கை தள்ளி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று திடீரென குடும்ப கோர்ட்டுக்கு வந்து மனு தாக்கல் செய்தார் பிரபுதேவா. அதில் வெளிநாட்டில் படப்பிடிப்புக்குப் போக வேண்டியிருப்பதால் உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு அதில் கோரியிருந்தார். ஆனால் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விடுமுறையில் இருந்ததால் நீதிபதி பாண்டியன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

பிரபுதேவா வந்த சிறிது நேரத்தில் ரமலத்தும் கோர்ட்டுக்கு வந்தார். இருவரும் நீதிபதி பாண்டியன் முன்பு ஆஜரானார்கள்.

விவாகரத்து மனுவில் கூறப்பட்ட விவரங்களையும், பிரபுதேவா தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு உதவும் வகையில் மனைவியிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்திருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களை நீதிபதி பாண்டியன் சரிபார்த்தார்.

பின்னர் பிரபுதேவாவும், ரமலத்தும் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் ஒப்புதல் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் ஜூலை 7 தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ரமலத்தும், பிரபுதேவாவும் தனித் தனியாக வெளியே வந்து கார்களில் ஏறிக் கிளம்பிச் சென்றனர்.

முன்னதாக கோர்ட்டுக்குள் பிரபுதேவாவும், ரமலத்தும் நிரந்தரமாக பிரியரப் போகிறோமே என்ற வருத்தமோ, கவலையோ கொஞ்சம் கூட இல்லாமல் படு கேஷுவலாக பேசிக் கொண்டிருந்தனராம். இருவரும் சிரித்துப் பேசியபடி இருந்ததைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டனராம். கோர்ட்டிலிருந்து கிளம்ப லேட் ஆகிறதே என்ற கவலை மட்டுமே அவர்களிடம் இருந்ததே தவிர வாழ்க்கையில் நிரந்தரமாக பிரியப் போகிறோமே என்ற கவலை சற்றும் இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
 

விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் அர்னால்ட் மனைவி!


கலிபோர்னியா முன்னாள் கவர்னர், கவுரவமான வாழ்க்கை, உலக சினிமா சூப்பர் ஸ்டார் என்ற பெருமை... எல்லாமே சட்டென்று மாறிப் போனது அர்னால்ட் ஸ்வார்ஷ்நேகரின் வாழ்க்கையில்.

காரணம்... பணிப்பெண்ணுடன் வைத்துக் கொண்ட கள்ள உறவும், அந்த உறவுக்கு சாட்சியாக பிறந்த குழந்தையும்.

அர்னால்ட் மனைவி மரியா ஷ்ரிவர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அர்னால்டுக்கு வீட்டு வேலைக்கார பெண்ணுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஒரு குழந்தை பிறந்தது.

இந்த விஷயத்தை அர்னால்டே ஒப்புக் கொண்டு மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி மரியா ஷ்ரிவரால் அதை ஏற்க முடியவில்லை.

அர்னால்டை கைவிட்டு தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்வது எனமுடிவெடுத்தார். இதன் மூலம் அவர்களது 25 வருட தாம்பத்திய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தற்போது தனது குழந்தைகளுடன் வாழும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் தனது 17 வயது மற்றும் 13 வயது குழந்தைகளை தனது பாதுகாப்பில் வைத்து கொள்ள அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் அர்னால்டு சொத்து குறித்தும், திருமணத்தின் போது அவர்களுக்கு இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் குறித்தும் தெரிவிக்கப் படவில்லை. விவாகரத்து வழங்கப்படும் தருவாயில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் அர்னால்டு சம்பாதித்த சொத்துக்களில் சரிபாதி மரியா ஷ்ரிவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

நடிக்கத் தெரியாமலா 15 விருது வாங்கியிருக்கேன்? - சீறும் ஹன்ஸிகா


தெலுங்கில் நடிப்புக்காக விருது வாங்கியவள் நான். வெறும் கவர்ச்சியை மட்டுமே நான் நம்பியிருப்பதாகச் சொல்வதை மறுக்கிறேன். நடிக்கத் தெரியாமலா விருது வாங்கினேன், என சீறியுள்ளார் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.

தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்தாலும், ஹன்ஸிகா காட்டில் வாய்ப்பு மழை பலமாகவே உள்ளது.

இதற்குக் காரணம் அம்மணியின் அமோகக் கவர்ச்சிதான் என யாரோ சொல்லிவிட, கோபத்தில் கொந்தளித்துள்ளார் ஒரு பேட்டியில்.

அவர் கூறுகையில், "எனக்கு நடிக்க தெரியவில்லை என்று விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. இந்தியில் ஒரு சீரியலுக்காக 14 விருதுகள் வாங்கியவள் நான். தெலுங்கில் நான் நடித்த தேசமுத்ரா படத்துக்கும் விருது வாங்கியுள்ளேன்.

நடிக்கத் தெரியாமலா இந்த விருதுகளை வாங்கினேன். சினிமாவுக்கு நான் விருப்பப்பட்டுதான் வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்து விட்டேன். நடிப்பதற்கு நான் கஷ்டப்படவில்லை. விஜய்யுடனும் உதய நிதி ஸ்டாலினுடனும் நடித்து வரும் படங்கள் வந்தால், எனது அடுத்த பரிமாணம் தெரியவரும்," என்றார்.
 

ஆயிரம் தாமரை மொட்டுக்களால் பாரதிராஜாவுக்கு மரியாதை செய்த பாண்டியராஜன்!


இதற்கு முன் பாரதிராஜாவை இப்படி ஒரு நெகிழ்வான மனநிலையில் பார்த்ததில்லை. அந்த அளவு உணர்ச்சிப் பிழம்பாக மாறிப் போயிருந்தார் மனிதர். அவர் பங்கேற்றது ஒரு வழக்கமான இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் என்றாலும், விழாவுக்கு வந்த அவரது சிஷ்யப் பிள்ளைகளும், அபிமானிகளும் அவரது பெருமையை இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் உரத்துச் சொல்ல... இயக்குநர் இமயம் பனியாய் உருகிப் போனதில் ஆச்சர்யமில்லைதான்!

பதினெட்டாம் குடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினராக பாரதி ராஜா. படத்தின் ஹீரோ, இயக்குநர் - நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி. ஏ ஆர் முருகதாஸ், சிங்கம்புலி, சினேகன், ஜெயம் ரவி என திரையுலகின் இன்றைய தலைமுறைக் கலைஞர்கள் நிறைந்திருந்தனர்.

பாண்டியராஜன் மைக் பிடித்ததுமே மகனைக் கூட மறந்துவிட்டு, பாரதிராஜா என்ற கலைஞனின் திரையுலக பங்களிப்பை பேச ஆரம்பித்தார்.

"என்னைப் போன்றவர்கள் இந்த சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக தாக்குப் பிடிக்க முடிகிறதென்றால் அதற்கு காரணம் பாரதிராஜாதான் என்து நூறு சதவீதம் மிகைப்படுத்தப்படாத உண்மை. இந்த சினிமாவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை, 'சினிமாவை நாமும் ஒரு பார்க்கலாம்' என தைரியமாக புறப்பட்டு வர வைத்தவர் இந்த மனிதர்தான். சிலருக்கு மட்டுமே சொந்தமானது இந்த திரையுலகம் என்ற நியதியை உடைத்துத் தூள் தூளாக்கியவர் இந்த இமயம்தான்," என்றார்.

அடுத்து பேசிய சிங்கம்புலி, சினிமா என்றை கோட்டையைத் தகர்த்து, என்னைப் போன்ற சாமானியர்களையும் விளைச்சல் பார்க்க வைத்தவர் பாரதிராஜா, என்றார்.

ஏ ஆர் முருகதாஸ் கூறுகையில், "பாரதி ராஜாதான் இன்றைய சினிமாவின் அஸ்திவாரம். அவர் போட்ட பாதையில்தான் இன்று நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவர் எங்களுக்கெல்லாம் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர். அப்பாவை அடித்து விளையாட பிள்ளைகளுக்கு உரிமையுள்ளது. அந்த பிள்ளைகளை கண்டிக்கும் உரிமை இந்த அப்பாவுக்குத்தான் உள்ளது," என்று கூற, பாரதிராஜாவின் நெகிழ்ச்சி கண்களில் தெரிந்தது.

அடுத்து பேச வந்த அவர், "இனி எந்த மேடையிலும் பேசவே கூடாது என நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் பாண்டியராஜனுக்காக அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். நான் ரொம்ப உணர்ச்சி வசப்படுவேன். அதுதான் என் பலமும் பலவீனமும்.

இந்த பாரதசிராஜாவுக்கு தொழில்நுட்பம் தெரியாது. இன்றைய இளைஞர்கள் மாதிரி பிரமாண்டம் காட்டத் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்த வித்தையை வைத்துக் கொண்டு சினிமாவில் மனித உறவுகளை, உணர்வுகளைக் காட்டினேன். அந்தப் பாதையை வைத்துக் கொண்டு பயணித்த நீங்கள் நல்ல விதைகளாய் இந்த நிலத்தில் விழுந்து விளைந்தீர்கள். எனவே இதில் என் சாதனை ஒன்றுமில்லை. உங்கள் முயற்சி, உங்கள் வேட்கை உங்களை உயரத்துக்கு கொண்டுசேர்த்துள்ளது.

பாண்டியராஜன் மீது எனக்கு எப்போதும் அக்கறையுண்டு. சினிமாவில் எப்போதும் தன் இயல்பைத் தொலைத்துக் கொள்ளாதவன். பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து பெயரெடுத்தவன். இந்தப் படத்தில் அவன் பிள்ளை ப்ருத்வி நடித்துள்ளான். நன்றாக வருவான். வாழ்த்துக்கள்.

ஒரு உண்மையைச் சொல்றேன். இந்த பாரதிராஜாவுக்கு இப்போது வயசு 70. ஆமா.. எழுபது வயசு. ஆனாலும் இந்த இளைஞர்களின் மேடையில் எனக்கும் இடம் தரப்படுகிறது.

இப்போது சொல்கிறேன், இந்த பாரதிராஜாவின் படம் இன்று வரை தங்களை வழிநடத்துவதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். இனி வரும் தலைமுறையினர் பாடமாக நினைக்கும் அளவுக்கு நான் ஒரு படம் எடுக்கிறேன். அந்தப் படம் இந்த பாரதிராஜாவின் இன்னொரு பரிமாணம்...," என்றார்.

விழாவில் பாரதி ராஜாவுக்கு ஆயிரம் தாமரை மொட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து மரியாதை செய்தார் பாண்டியராஜன்.
 

4000 ரசிகர்களுக்கு கார்த்தி வைத்த திருமண விருந்து!!


திருமணத்தையொட்டி தனது ரசிகர்கள் 4000 பேருக்கு திருமண விருந்து கொடுத்து அசத்தினார் நடிகர் கார்த்தி.

கார்த்தி - ரஞ்சனி திருமணம் இன்று கோவை கொடிசியா அரங்கில் கோலாகலமாக நடந்தது. திருமணத்த்துக்கு கோவை நகரமே திரண்டு வந்ததைப் போல திரளான கூட்டம்.

முன்னதாக, நேற்று மாலை கார்த்தி - ரஞ்சனி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான விஐபிக்கள் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு அம்சமாக, திருமணத்துக்கு வந்த கார்த்தியின் ரசிகர்கள் 4000 பேருக்கு சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தை மாதம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி கேட்டரிங் நிறுவனத்தினர் செய்திருந்தார்கள்.

ஏராளமான பொதுமக்களும் திருமண விருந்தை சுவைத்து கார்த்தி - ரஞ்சனி ஜோடியை வாழ்த்திச் சென்றனர்.

இதுகுறித்து கார்த்தி கூறுகையில், "எனக்கு எப்போதும் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் முக்கியம். இவர்கள் என்னோடு எப்போதும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் சென்னையில் வைக்காமல் இங்கே திருமணத்தை வைத்துக் கொண்டேன். ரசிகர்கள் திருப்தியாக சாப்பிட்டுச் சென்றது எனக்கு உண்மையிலேயே நிறைவாக உள்ளது," என்றார்.
 

திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம்!


கோவை: நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் முன்னணி நடிகருமான கார்த்தியின் திருமணம் இன்று கோவையில் சிறப்பாக நடந்தது.

தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் முழங்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார் கார்த்தி.

நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்திரலோகம் போல அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிசியா அரங்கில் திரைப்பட கலை இயக்குநர் சந்திரசேகர் திருமணத்துக்கென ஸ்பெஷல் மேடை அமைத்திருருந்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.35 மணிக்கு நடிகர் கார்த்தி மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்தில் பங்கேற்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கே உறவினர்கள் கொடிசியா அரங்கிற்கு வரத் தொடங்கினார்கள். காலை 5 மணிக்கு மணமகனின் தந்தை நடிகர் சிவகுமார் வந்தார். அவர் உறவினர்களை வரவேற்று அரங்கிற்கு அழைத்து சென்றார்.

5.20 மணிக்கு மணமகன் நடிகர் கார்த்தி திருமண மண்டபத்திற்கு வந்தார். சற்று நேரத்தில் மணமகள் ரஞ்சனி வந்தார். அவர்கள் இருவரும் மேடை அருகே தனி தனியாக அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நலுங்கு வைக்கப்பட்டது.

காலை 5.40 மணிக்கு மணமக்கள் தனித்தனியாக குடை பிடித்தபடி மணமேடையை சுற்றி வந்தனர். மண மேடையில் 2 கலசங்கள் வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது. மணமக்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். காலை 6.35 மணிக்கு மணமகனின் தந்தை நடிகர் சிவகுமார் தாலியை மணமகன் கார்த்தி கையில் எடுத்துக் கொடுத்தார். அவர் மணமகள் ரஞ்சனி கழுத்தில் அணிவித்தார்.

திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் ஓத தமிழர் மரபுப்படி திருமணத்தை பழ. குமரலிங்கம் நடத்தி வைத்தார்.

மணமகள் கழுத்தில் நடிகர் கார்த்தி தாலி கட்டியதும் அங்கு குவிந்திருந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

குவிந்த நட்சத்திரங்கள்...

நடிகர்கள் பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன், நடிகைகள் ராதிகா,நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி . உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்கள்.

வாகை, செண்பகம், துளசி கன்றுகள் பரிசு

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பலத்துடன் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. வாகை, செண்பகம், துளசி ஆகிய மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

திருமணத்துக்கு வந்தவர்களை நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மற்றும் மணமகள் ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பு

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமக்களை நடிகர் சத்யராஜ், அவரது மகன் நடிகர் சிபி, நடிகை நக்மாவின் தங்கை ரோஷினி, டைரக்டர் சுராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளர் ஈஸ்வரன், சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ., பனப்பட்டி தினகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள்.

7-ம் தேதி சென்னையில் வரவேற்பு

கார்த்தி - ரஞ்சனி தம்பதிகளுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் சிறப்பு வரவேற்பு நடத்தப்படுகிறது.

இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

குரோவர் உடலை 300 துண்டுகளாக வெட்டவில்லை, 4 துண்டுகளாகத்தான் வெட்டினோம்-மரியா சூசைராஜ்


மும்பை: டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரின் உடலை 300 துண்டுகளாக நாங்கள் வெட்டியதாக கூறப்படுவது தவறான தகவல். நான்கு துண்டுகளாகத்தான் வெட்டினோம் என்று கூறியுள்ளார் நடிகை மரியா சூசைராஜ்.

மைசூரைச் சேர்ந்தவர் நடிகை மரியா சூசைராஜ். இவரது காதலர் ஜெரோம். இவர் கடற்படையில் பணியாற்றி வந்தார். மும்பையில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்த மரியாவுக்கு, டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரின் பழக்கம் கிடைத்தது. தனது தொழில் முன்னேற்றத்துக்காக குரோவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் மரியா. இது குரோவர், மரியாவின் பெட்ரூம் வரை வந்து போகும் அளவுக்கு நெருக்கமானது.

2008ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவில் மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு காதலர் ஜெரோம் வந்துள்ளார். அப்போது மரியாவும், குரோவரும் பெட்ரூமில் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடும் வாக்குவாதம் மூண்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெரோம், குரோவரைக் கொலை செய்தார். இதைத் தடுக்க மரியா முன்வரவில்லை.

கொலை செய்த பின்னர் இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி, தானே அருகில் ஒரு காட்டுப் பகுதியில் போட்டு விட்டனர். இந்த வழக்கில் பின்னர் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். கடந்த 3 வருடங்களாக விசாரணை நடந்தது. இருவரும் சிறையில் இருந்தனர்.

விசாரணை இறுதியில் சமீபத்தில் தீர்ப்பளித்த கோர்ட், இருவர் மீதான திட்டமிட்ட கொலை என்ற குற்றச்சாட்டைக் கைவிட்டது. எதிர்பாராமால் ஏற்பட்ட ஆத்திரத்தால் நடந்த கொலை என்று கூறியது. இதையடுத்து ஜெரோமுக்கு 10 வருட சிறைத் தண்டனையும், மரியாவுக்கு 3 வருட சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மரியா ஏற்கனவே 3 ஆண்டு சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டார். அதன்படி மரியா விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான மரியா மாஹிம் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கேல் சர்ச்சுக்கு சென்று வழிபட்டார். பின்னர் மாஹிம் தர்கா மற்றும் சித்திவிநாயக் கோவிலுக்கும் செல்ல அவர் திட்டமிட்டார். ஆனால் மீடியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வந்ததால் தனது திட்டத்தை அவர் கைவிட்டார்.

அதன் பின்னர் மரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் அவரது வழக்கறிஞர் ஷெரீப் ஷேக்கும் உடன் இருந்தார். தெற்கு மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் மரியா. ஆனால் அங்கு குரோவரின் ஆதரவாளர்களும், நண்பர்களும் பெருமளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பை நாடினார் மரியா. போலீஸார் வந்து பாதுகாப்பு அளிக்கவே பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்தது.

செய்தியாளர்கள் குரோவர் கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு மரியா சுயமாகவும், தனது வக்கீலின் உதவியுடனும் பதிலளித்தார்.

மரியா பேசுகையில், குரோவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தில் ஒருவரை இழப்பது என்பது சாதாரணமானதல்ல. அந்த துயரத்தை நான் உணர்கிறேன். அந்த சம்பவமே பெரும் சோகமயமானது.

குரோவருடனான எனது உறவு குறித்து நான் விவரிக்க விரும்பவில்லை. அதேசமயம், ஜெரோமுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்ததில்லை என்பதை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். குரோவர் சம்பவத்திற்குப் பின்னர் நான் ஜெரோமுடன் பேசவே இல்லை. எங்களுக்குள் எந்த நட்பும் இல்லை.

(இப்படி இவர் கூறியபோது வெளியில் குழுமியிருந்த குரோவரின் நண்பர்கள் கொலைகாரி மரியா என்று கூறி கூச்சலிட்டனர். அப்போது ஒருவர் மரியாவை நோக்கி வேகமாக நகர்ந்தார். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், போலீஸாரும் அவரை அங்கிருந்து போகுமாறு கூறி அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மரியா தொடர்ந்து பேசினார்.)

கடந்த மூன்று வருடமாக நான் சிறையில் இருந்தபோது அதிகமாக யாரையும் பார்க்கவில்லை. என்னால் சிறை வாழ்க்கையை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை.

நான் ஒரு அப்பாவி என்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். அதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை. கடந்த காலத்தை நான் மறக்க விரும்புகிறேன். என்ன நடந்தது என்பதை இன்னும் கூட என்னால் உணர முடியவில்லை. நான் அனுபவித்த தண்டனையின் வலியிலிருந்து இன்னும் கூட என்னால் வெளிவர முடியவில்லை.

அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இனி முடிவு செய்யப் போவதில்லை. அதை எனது குடும்பத்தினரிடமே விடப் போகிறேன். சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த 3 ஆண்டு காலமும் நான் கடவுளிடம் மிகவும் நெருங்கியிருந்தேன். ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தேன். பெயின்டிங் போன்றவற்றில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்றார் மரியா.

பேட்டியின்போது குரோவர் உடலை 300 துண்டுகளாக வெட்டியது எப்படி என்று செய்தியாளர்கள் கேட்டபோது அப்படியெல்லாம் செய்யவில்லை. நான்கு துண்டுகளாகத்தான் வெட்டினோம் என்றார் மரியா.

மரியாவின் வழக்கறிஞர் ஷெரீப் அப்போது குறுக்கிட்டு, மரியாவும், ஜெரோமும் குரோவர் உடலை 300 துண்டுகளாக வெட்டியதாக அரசுத் தரப்பு கூறியிருந்தது. ஆனால் புலனாய்வு அதிகாரி சதீஷ் ராவ்ரானே எடுத்த புகைப்படத்தின்படி, குரோவர் உடலில் இடுப்புப் பகுதி, தலை, கால்கள் போன்றவை உரிய இடத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே 300 துண்டுகளாக வெட்டப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியது சரியில்ல என்பது நிரூபணமானது என்றார் அவர்.
 

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!


சென்னை: இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8.30 மணிக்கு கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்.

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவருக்கும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.

இன்று காலை சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அரங்கம் முழுவதும் தாமரை மலர்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே அரங்குக்கு வந்துவிட்ட செல்வராகவன் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி, தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர், திருமணத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர்.

பின்னர் திருமண சடங்குகள் தொடங்கின. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வேதம் ஓதப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு கீதாஞ்சலி கழுத்தில் தாலி கட்டினார் செல்வராகவன். வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.

இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் திரண்டு வந்திருந்தனர்.

தொழிலதிபர் எம்ஏஎம் ராமசாமி செட்டியார், ஏசி சண்முகம், தயாரிப்பாளர்கள் ஏவி எம் சரவணன், எம்எஸ் குகன், ஏஎம் ரத்னம், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், பிரபு, இயக்குநர் மணிரத்னம், சுகாசினி, நடிகர்கள் அரவிந்தசாமி, ஷோபனா, இசையமைப்பாளரம் ஜிவி பிரகாஷ்குமார், முன்னாள் கமிஷனர் ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண வரவேற்பு நாளை மாலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடக்கிறது.

இந்தத் திருமணத்தில் ரஜினியின் மருமகனும் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷ், பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.