சென்னை: நடிகர் விஜய் எனக்கு இளைய தளபதி.. தம்பி என்று பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார்.
லத்திகா என்ற படத்தை பணம் கொடுத்து 200 நாட்கள் ஓட்டி கோலிவுட்டுக்கு வந்தவர் பவர் ஸ்டார். தனக்குத் தானே பவர்ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்டு, கட்-அவுட், பேனர், ஹோர்டிங் என வைத்து புகழைப் பரப்பிக் கொண்டவர்.
இவரை வைத்து விழா நடத்தினால், அந்த விழா செலவு முழுவதையும் பார்த்துக் கொள்வார். அந்த அளவு இன்வெஸ்ட் பண்ணி சினிமாவுக்கு வந்தவர் இவர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இந்த சீனிவாசனை வேறு ரேஞ்சுக்குக் கொண்டுபோய்விட்டது.
சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க சீனிவாசன் பிரயோகித்த தந்திரத்தையும் பயன்படுத்தலாம் என்ற நினைப்பை பலருக்கும் உண்டாக்கியிருக்கிறது.
இயக்குநர் ஷங்கராக இருந்தாலும் சரி, நடிகர் விஜய்யாக இருந்தாலும் சரி... சகட்டுமேனிக்கு எல்லோரும் என் தம்பிகள் என்று கூறிவருகிறார்.
நேற்று நடந்த ஒன்பதுல குரு பட இசை வெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் பேசினார்.
நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பி.ஆர்.ஓவாக வேலை பார்த்து வரும் பி.டி.செல்வக்குமார் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் இது.
விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.செளத்ரி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, சீனு ராமசாமி என கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சீனிவாசன் காசு கொடுத்து அழைத்து வந்திருந்த பல நூறு ரசிகர்கள், அவர் கையாட்டினாலும், யாரையாவது பார்த்து தனது பெரிய பற்கள் தெரிய சிரித்தாலும் கைத்தட்டி, விசிலடித்துக் கொண்டே இருந்தனர்.
ஏகக் குஷியாக இருந்த சீனிவாசன் பேசுகையில், "ஒன்பதுல குரு படத்தில் நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறேன். இந்த விழாவுக்கு இளையதளபதி விஜய் வந்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் அவர் இளையதளபதி. ஆனால் எனக்கு மட்டும் அவர் இளைய தம்பி.
லட்டு படத்தின் மூலம் எனக்கு சந்தானம் என்ற அருமைத் தம்பி கிடைத்தது போல இப்போது தம்பி விஜய்யும் எனக்கு அருமைத் தம்பியாக கிடைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே தியேட்டரில்தான் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்தப்படம் இப்போது சூப்பர்ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ‘லட்டு' விழாவுக்கு அடுத்த படியாக இதே தியேட்டரில் இப்போது இந்த படத்தின் ஆடியோ விழா நடக்கிறது. அந்தப்படம் போலவே இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றி பெரும். அவ்வளவு ராசியான தியேட்டர் இது.
இந்தப்படத்தின் ஒரு பாடல்காட்சியில் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும் என்று டைரக்டர் பி.டி.செல்வக்குமாரும், பி.ஆர்.ஓ நிகில்குமாரும் (?) என்னை வந்து கேட்டர்கள். நான் டான்ஸ் ஆடலாமா வேண்டாமா..? என்று யோசித்தேன், அப்போது தான் அந்த பி.ஆர்.ஓ சார் இவர் யார் தெரியுமா..? இவர்தான் விஜய்யோட பி.ஆர்.ஓ என்று சொன்னார். விஜய் என்று சொன்னதும் நான் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்.
முதல் நாள் பேசி அன்று இரவே எனக்கான எல்லா காஸ்ட்யூம்களையும் ரெடி செய்து மறுநாள் காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் பாடலை எடுத்து என்ன அனுப்பி வைத்து விட்டார்.
அந்த வகையில் இந்த ‘ஒன்பதுல குரு' படம் வெற்றிபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக என் ரசிகப் பெருமக்களுக்கும், என் வளர்ச்சியில் எப்போதுமே எனக்கு இரண்டு கண்களாக இருக்கும் எனதருமை பத்திரிகை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர்.