காரைக்குடி: ஒரு கட்சி தலைவர் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதிலாக வாக்காளர் யார் என்று கேட்கிறார் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து காரைக்குடியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, சாலை இல்லை என்று கூறுவதற்கு இது நேரம் இல்லை. தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தல் இது. ஊடகங்களின் தெளிவால் மக்கள் தெளிவாக உள்ளார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் தான் குழப்புகிறார்கள்.
போதிய உறுப்பினர்கள் இல்லாதபோதே முதல்வர் ஜெயலலிதா காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் மேலும் பல உரிமைகளை நமக்கு வாங்கிக் கொடுப்பார்.
எதிர்கட்சி வேட்பாளர்களை மக்களே எதிர்ப்பார்கள். நான் தனியாக எதிர்த்து பேச வேண்டியது இல்லை. ஒரு கட்சி தலைவர் என்னவென்றால் உங்கள் வேட்பாளர் யார் என கேட்பதற்கு பதில் வாக்காளர் யார் என்று கேட்கிறார். அவர் தேர்வு செய்யும் ஆட்களும் நிற்க முடியாமல் தான் இருப்பார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கும். வாக்கு வங்கி என்று கூறும் சிறிய கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார்.