என் படத்தைப் பார்க்க எனக்கே வெட்கமா இருக்கு-ஹன்சிகா


என் படங்களைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஹன்சிகா மோத்வானி பேசியுள்ளார்.

மும்பையிலிருந்து வந்த புது வரவுகளில் ஹன்சிகாவும் ஒருவர். இதுவரை இவரால் ஒரு படம் ஓடியது என்று கூற முடியாத அளவுக்கு இவரது 'ராசி சிறப்பாக' உள்ளது. இருந்தும் இவரைத் தேடி நிறையப் படங்கள் வந்தவண்ணம் உள்ளதுதான் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம். இப்போது வேலாயுதம் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாளிதழுக்கு மனம் விட்டு கருத்துகளை தெரிவித்துள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியிருப்பதாவது...

எனது குடும்பத்தில் எப்போதுமே என்னை நடிகையாக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. எனது தாயார் ஒரு சருமவியல் மருத்துவர். நான் பள்ளியில் படித்தபோது பள்ளிக்கூடம் முடிந்ததும், அவரது கிளினிக்குக்குப் போய் விடுவேன். அங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் சரும நோய்கள் தொடர்பாக எனது தாயாரைப் பார்க்க வருவர். அப்போது என்னைப் பார்க்கும் பலரும், இவள் அழகாக இருக்கிறாள், விளம்பரங்களில் நடிக்க வையுங்கள், சினிமாவில் சேர்ந்தால் பெரிய ஆளாக வருவாள் என்றனர். ஆனால் எனது தாயாரோ அதை உடனே மறுத்து விடுவார்.

இருப்பினும் பின்னர் நானும் குழந்தை நட்சத்திரமாகி விட்டேன்.அதற்கு காரணம் அருணா இரானிதான். பிறகு அப்படியே இந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். அப்படியே தமிழுக்கும் வந்தேன்.

தமிழில் எனக்கு தனுஷுடன்தான் முதல் படம். அப்போது அவர்தான் எனக்கு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார். பினனர் ஜெயம் ரவியுடன் நடித்தபோது அவர் என்னை தமிழில் கலாய்ப்பார். அதற்கு நான் எனக்குத் தெரிந்த தமிழில் பதிலளித்து மேலும் காமெடியாக்குவேன்.

நிறையப் படங்களில் நடித்து விட்டேன். ஆனால் எனது படங்களை நான் பார்க்கும்போது எனக்கே வெட்கமாக, அவமானமாக உள்ளது. இதை விட சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று தோன்றும். இதனால் ஒவ்வொரு படத்திலும் மேலும் மேலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன் என்றார் ஹன்சிகா.

ஹன்சிகா தனது தாயார் மீது மிகவும் மரியாதை வைத்திருக்கிறார். எனக்காக தனது தொழில், தூக்கம், கனவுகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டார் அவர். அவர் தான் எனது முழு பலமும் என்கிறார் ஹன்சிகா.
 

மனைவியை துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்


மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார் எழுந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்புதான் கன்னட நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தனது மனைவியை அடித்துக் காயப்படுத்தியதாக தர்ஷன் மீது விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை நிகிதாவுக்கும், தர்ஷனுக்கும் இடையே இருந்த நட்பு காரணமாகவே இந்த மோதல் மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட தர்ஷன் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான பிரஷாந்த் என்பவர் சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டுதான் இக்குழந்தை பிறந்தது.

ஒரட்டா ஐ லவ் யூ உள்ளிட் சில படங்களில் நடித்துள்ளார் பிரஷாந்த். இவர் அவ்வளவு பிரபலமில்லாத நடிகர் ஆவார். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதில் நஷ்டமே ஏற்பட்டது. இதனால் மனைவியிடம் ரூ. 10லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் கன்னடப் படவுலகம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
 

'கருவாச்சி'க்காக காத்திருக்கும் பூர்ணா!


பூர்ணா புதுப் பூரிப்புடன் புதுப் பாய்ச்சல் காட்டத் தயாராகி வருகிறாராம். தற்போது கன்னடத்தில் நடித்து வரும் அவர் விரைவில் தமிழில் ஒரே சமயத்தில் 2 படங்களில் நடிக்கப் போகிறார்.

தமிழில் அறிமுகமான பூர்ணா இன்னும் பெரிய ஸ்டார் ரேஞ்சைப் பெறாமலேயே உள்ளார். அதற்கான முயற்சிகளை அவர் எடுப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அங்கும் இங்குமாக அவருக்கும் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.

இப்போது ராதிகாஜி கண்டா (ராதிகா மேடத்தின் புருஷன்) என்ற கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா விரைவில் தமிழுக்கு வருகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் நான் தமிழுக்கு வருகிறேன். கருவாச்சி, என்ன சொல்லப் போகிறாய் ஆகிய படங்கள்தான் அவை.

கருவாச்சியில் எனக்கு அருமையான கேரக்டர். கிராமத்துப் பெண்ணாக இதில் நடிக்கிறேன். அகில்தான் இதில் நாயகன். எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இதில். எனவே இந்தப் படம் எனக்கு பெரிய பிரேக்காக இருக்கும் என நம்புகிறேன்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தில் சக்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இதிலும் எனக்கு முக்கியமான பாத்திரம்தான். அழகிய படம் இது. ரசிகர்கள் இப்படத்தை மட்டுமல்லாமல் என்னையும் வெகுவாக ரசிப்பார்கள்.

இதுவரை நான் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் வரப் போகிற இந்த இரண்டு படங்கள் மூலம் அதை நான் செய்வேன் என்றார் பூர்ணா.
 

ராமநாதபுரத்தில் திமுக எம்.பி. ஜே.கே.ரித்திஷ் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான நடிகர் ஜே.கே.ரித்திஷ் வீடு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நகர்மன்ற செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம் என்பவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் திமுக மேலிடம் இவருக்கு சீட் வழங்கவில்லை.

இவருக்கு பதிலாக, திமுக சார்பில் நாகநாத சேதுபதி என்பவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் போட்டியிடுகிறார். இதனால் ரத்தினம் கடும் அதிருப்தியில் இருந்தார்.

மேலும், ரத்தினத்திற்கும், திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலனுக்கும் இடையே ஏற்கனவே, கோஷ்டி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் பகுதியில் உள்ள குருவிக்காரன் ‌சாலையில் தி.மு,.க. வேட்பாளர் நாகநாத சேதுபதிக்கு ஆதரவாக தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கவேலன், எம்.பி. ரித்திஷ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ரத்தினம் வீடு அருகே திமுகவினர் வந்த போது ரத்தினத்தின் தங்கை கலா, பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் இரு தரப்பினர் இடையே கல்வீச்சு, சோடா பாட்டீல் வீச்சு நடைபெற்றது. இந்த கலவரதில் கலா, சரவணன், செல்லபாண்டி ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மூன்று பேரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், இந்த கலவரத்தில், திமுக எம்.பி.ரித்தீஷ் -ன் மூன்று கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அரிவாள், உருட்டுக் கட்டைகளுடன் நுழைந்த கும்பல் அவரது வீடு மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகின்றது.

திமுகவினரின் இந்த மோதல் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ரகசியமாக மனைவியைப் பார்த்த பிரபுதேவா- நயனதாரா கொதிப்பு- தடுமாறிப் புலம்பும் பிரபுதேவா!


சென்னை: நயனதாராவை நம்பி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்த பிரபுதேவா, மனைவியையும், குழந்தைகளையும் மறக்க முடியாமல் நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக அவர்களைப் பார்த்து வருகிறார். இதை அறிந்த நயனதாரா கடும் கோபமடைந்து மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். அங்கு விரைந்த பிரபுதேவாவை அவர் வீட்டுக்குள்ளேயே விடவில்லை. இதனால் பிரபுதேவா பெரும் அதிர்ச்சியுடன் சென்னை திரும்பியுள்ளாராம்.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே ஒரு பெரும் சினிமா மாதிரிதான் இருக்கிறது. நடனத்திலும், நடிப்பிலும், உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், அதிரடியாக ரமலத்தை ரகசியமாக மணம் புரிந்தார் பிரபுதேவா. இதை பல ஆண்டுகள் வரை ரகசியமாகவே வைத்திருந்தார். ரமலத்துடன் நிழல் உலக வாழ்க்கை நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நீண்ட காலமாகவே ரமலத் தனது மனைவி என்ற அங்கீகாரத்தை வெளியுலகுக்குக் காட்டாமலேயே வாழ்ந்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதை பகிரங்கப்படுத்தினார்.

ரமலத்தை, பிரபுதேவாவின் வீட்டில் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பிரபுதேவாவின் குழந்தை இறந்தது. இதனால் ஏற்பட்ட சோகத்தில் அவர் இருந்தபோதுதான் நயனதாரா குறுக்கிட்டார்.

நயனதாராவின் ஆறுதல் பின்னர் காதலாக மாறி இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். இதனால் ரமலத் விஸ்வரூபம் எடுத்தார். என்னை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார் நயனதாரா. அவரிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இரு தரப்பிலும் முட்டல் மோதல் தொடங்கியது. பெரும் புயலும், சூறாவளியுமாக போய்க் கொண்டிருந்த இந்த விவகாரம் இறுதியில் பரஸ்பர விவகாரத்து என்ற நிலைக்கு வந்தது. பெரும் தொகையும், சொத்துக்களையும் கொடுத்து ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

அதன் பின்னர் மும்பையில் நயனதாராவுடன் வாழத் தொடங்கினார். இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாக ஒரு தகவலும், இல்லை என்ற தகவலும் பரவியது. நடந்தால் சொல்வேன் என்று பிரபுதேவாவே விளக்கினார். இருப்பினும் பிரபுதேவாவும், நயனதாராவும் மும்பையில் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து விட்டாலும் கூட அவர்களை மறக்க முடியவில்லையாம் பிரபுதேவாவால். இதனால் நயனதாராவுக்குத் தெரியாமல் அவர் தொடர்ந்து ரமலத், அவரது இரு குழந்தைகளையும் சென்னைக்கு வந்து பார்த்துப் பேசி வருகிறாராம். குழந்தைகளை வெளியில் கூட்டிச் சென்று வருகிறாராம்.

இது நயனதாராவுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தாராம். அதுதான் எல்லாத்தையும் கணக்குத் தீர்த்து விட்டாயிற்றே, இன்னும் என்ன பாசம் என்ற ரீதியில் அவர் பிரபுதேவாவை போனில் பிடித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது மும்பை வீட்டை விட்டு கேரளாவுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். இதை அறிந்த பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சென்னையிலிருந்து கேரளாவுக்கு ஓடியுள்ளார். நயனதாரா வீட்டை அடைந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே விட மறுத்து விட்டார் நயனதாரா. இதனால் தெருவிலேயே நின்றிருந்தாராம் பிரபுதேவா. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தெருவில் நிற்க வைத்து விட்டார் நயனதாரா. இதனால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரபுதேவா அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் நயனதாரா பேசவில்லையாம். போனை ஆப் செய்து விட்டாராம்.

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா, நயனதாரா குடும்ப வாழ்க்கை தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.