என்னால் அஜீத்தை கலாய்க்க முடியாது: வீரம் படத்தில் நடிக்க மறுத்த சூரி

சென்னை: அஜீத்தை கலாய்க்கும் காட்சி இருந்ததாலேயே சூரி வீரம் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த படம் வீரம். இந்த படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பரோட்டா சூரியை தான் அணுகினார்களாம். ஆனால் கதைப்படி சூரி அஜீத்தை கலாய்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சூரி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

படத்திற்காக கூட என்னால் அஜீத்தை கலாய்க்க முடியாது: சூரி

இது குறித்து சூரி கூறுகையில்,

நான் அஜீத்தின் தீவிர ரசிகன். என்னால் அவரை ரசிக்க மட்டுமே முடியும். படத்திற்காக கூட கலாய்க்க முடியாது. அதனால் தான் வீரம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால் நிச்சயம் நான் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிப்பேன் என்றார்.

நான் அஜீத்தின் தீவிர ரசிகன் என்று அடிக்கடி தெரிவிக்கும் சூரி அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையையும் பல முறை தெரிவித்துள்ளார். சூரி தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை ஜெனிலியாவின் குழந்தைக்கு பெயர் வச்சாச்சு: ரியான் ரித்தேஷ் தேஷ்முக்

மும்பை: நடிகை ஜெனிலியா, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தங்களின் குழந்தைக்கு ரியான் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஜெனிலியா டிசோசா. அவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை பல ஆண்டு காலமாக காதலித்து வந்தார். பின்னர் அவரை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் கணவருடன் வசித்து வரும் அவர் கடந்த 25ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது.

நடிகை ஜெனிலியாவின் குழந்தைக்கு பெயர் வச்சாச்சு: ரியான்

குழந்தைக்கு ரியான் ரித்தேஷ் தேஷ்முக் என்று பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்து ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜெனிலியா- எங்கள் மகன் ரியான் ரித்தேஷ் தேஷ்முக்.

ரித்தேஷ்- ரியான், தேஷ்முக் குடும்பத்தின் இளம் வாரிசு என்று தெரிவித்துள்ளனர்.

 

விபத்தில் பாதிக்கப்பட்டு வீல்சேரில் நடமாடும் நடிகர் ஜெகதிக்கு ரூ. 5.9 கோடி இழப்பீடு

திருவனந்தபுரம் : விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருக்கு, ரூ.5 கோடியே 90 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் (63). சுமார் 1100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெகதி, இதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு மட்டும் 70 படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, கோழிக்கோடு அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்டு வீல்சேரில் நடமாடும் நடிகர் ஜெகதிக்கு ரூ. 5.9 கோடி இழப்பீடு

கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட ஜெகதி, பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். சுமார் ஓராண்டு காலம் வேலூர் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற ஜெகதி, கடந்தாண்டு திருவனந்தபுரம் திரும்பினார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும், இன்னும் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளாத ஜெகதி, வீல்சேரில் வாழ்ந்து வருகிறார்.

ஜெகதிக்கு ஏற்பட்ட விபத் துக்கு இழப்பீடு கோரி கடந்த 2013 ஏப்ரலில் மோட்டார் வாகன விபத்து முறையீட்டு தீர்ப்பாயத்தில் அவரது மனைவி ஷோபா வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான தீர்ப்பாய விசாரணையில் இன்சூரன்ஸ் நிறு வனத்துக்கும் ஸ்ரீகுமார் தரப்புக்கும் இடையே நீண்ட வாதம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடை பெற்ற மெகா லோக் அதாலத்தில் இருதரப்புக்கும் இடையே சுமுக தீர்வு எட்டப்பட்டது. அதன்படி, ஜெகதிக்கு ரூ.5 கோடியே 90 லட்சத்தை இழப்பீடாக வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

முதல்கட்டமாக ரூ.2.50 கோடி ரொக்கத்தை ஜெகதிக்கு வழங்கியுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம், மீதமுள்ள தொகையை வங்கியில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப் பட்டு அதில் கிடைக்கும் வட்டியை 3 மாதங்களுக்கு ஒருமுறை அவரிடம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

ஜெகதி வருமானத்தைக் கணக்கிட்டு அவருக்கான இழப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பரட்டையை நினைவூட்டிய ‘ஜிகிர்தண்டா’ சேது... கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய ரஜினி!

சென்னை: லிங்கா படப்பிடிப்பின் போது ரஜினியை சந்தித்ததை தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

பீட்சா, ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர், லிங்கா படப்பிடிப்பு சிமோகாவில் நடைபெற்ற போது நடிகர் கருணாகரன் உதவியோடு ரஜினியைச் சந்தித்து பேசினாராம்.

லிங்கா படம் வரும் 12ம் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினியுடனான தனது சந்திப்பை பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பரட்டையை நினைவூட்டிய ‘ஜிகிர்தண்டா’ சேது... கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய ரஜினி!

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

"'லிங்கா' படம் வெளியாக இருப்பதால், எனது வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது தலைவரை சந்தித்து பேசினேன்.

'ஜிகர்தண்டா' படத்தை வெகுவாக பாராட்டினார். ஓட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மகத்தான பாராட்டு, "நான் சேது பாத்திரத்தை செய்ய விரும்பினேன்" என்று தெரிவித்தார். அதுமட்டுமன்றி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

'முள்ளும் மலரும்', 'பாட்ஷா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி தலைவா! இது போதும்.

இச்சந்திப்பிற்கு உதவிய கருணாகரன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத 2 மணி நேரமாக அமைந்தது" என இவ்வாறு அதில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

 

சட்டவிரோதமாக எனது பாடல் பதிவுகளை விற்கிறார்கள்... போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்

சென்னை: சட்டவிரோதமாக தனது பாடல் பதிவுகளை விற்பனை செய்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் பிரதீப் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சட்டவிரோதமாக எனது பாடல் பதிவுகளை விற்கிறார்கள்... போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

நான் தியாகராயநகர் முருகேசன் தெருவில் வசித்து வருகிறேன். நான் தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.

இந்த நிலையில் நான் இசையமைத்து பதிவு செய்கின்ற பாடல்களை எனது அனுமதியின்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும், சி.டி.க்களாகவோ, இதர பதிவுகளாகவோ வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளேன். அது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

பி.நரசிம்மன், ‘அகி மியூசிக் பிரைவேட் லிமிடெட்' அகிலன் லட்சுமண் கிரி டிரேடிங் கம்பெனி, அபிஷேக் ரங்கநாதன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் கடைகளிலும், இணையதளங்கள் மூலமாகவும் பாடல் பதிவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

மலேசியாவிலிருந்து இந்தியா வந்து தங்கி இருந்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட அகிலன் லட்சுமண் மற்றும் அவருக்கு உறுதுணையாக மேற்கண்ட மற்ற நபர்களும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் மூலம் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இது சம்பந்தமாக செயல்பட்டு வரும் மேற்கண்ட நபர்கள் மீது கடந்த 22.5.2014 அன்று எனது ரசிகர்கள் கிளப் மூலமாக தங்களிடம் புகார் அளித்தும் மேல் நடவடிக்கை இல்லை.
ஆகவே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், எனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக எனது பாடல்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்க எடுக்குமாறு ஜார்ஜ் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

உதயநிதிக்காக கதை ரெடி... கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் நடிகர் சந்தானம்!

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதிக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளாராம் காமெடி நடிகர் சந்தானம். உதயநிதியின் கால்ஷீட் கிடைத்ததும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக சந்தானம் அறிவிப்பாராம்.

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலிருந்தே அவருடன் இணைந்து நடித்து வருகிறார் சந்தானம். இருவரும் சேர்ந்து அடிக்கும் காமெடி லூட்டிகளுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.

உதயநிதிக்காக கதை ரெடி... கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் நடிகர் சந்தானம்!

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஜெகதீஷ் இயக்கத்தில் நண்பேண்டா படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதில், அவர் நடிகர் சந்தானம் தனக்காக கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்து விட்டு, சந்தானத்திடம் கதை கேட்பதாக உறுதி அளித்துள்ளாராம் உதயநிதி.

உதயநிதியின் அடுத்தபடமான இதயம் முரளியில் சந்தானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.