விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் லிஸி!

விக்ரம் படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமாகி, தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் லிஸி. மலையாளத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகு பிரபல இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்துகொண்டார்.

Actress Lissy coming back to Malayalam

திருமணத்துக்குப் பிறகு, 80களில் நடித்த ஹீரோ ஹீரோயின்களை ஒருங்கிணைத்து அவர்களின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

திருமண வாழ்க்கை கசந்ததால் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்ற லிஸி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

'இட்வெலக்கு ஷேஷம்' என்னும் மலையாள படத்தில் ஹோமியோபதி மருத்துவராக நடிக்க இருக்கிறார் லிஸி. திலக் ராஜ் என்னும் புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

எர்ணாகுளத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.

 

வாலு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: சிம்பு, ஹன்சிகா, சந்தானம்

Vaalu (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: சக்தி

இசை: எஸ்எஸ் தமன்

தயாரிப்பு: நிக் ஆர்ட்ஸ்

வெளியீடு: சிம்பு சினி ஆர்ட்ஸ்

இயக்கம்: விஜய் சந்தர்

சிம்பு நடித்து கிட்டத்தட்ட நான்காண்டுகள் இழுத்துக் கொண்டிருந்து, ஒருவழியாக இப்போது வெளியாகியுள்ள படம் வாலு.

வேலை தேடி அலையும் நடுத்தர வர்க்க பையன் சிம்பு. பணக்காரப் பெண் ஹன்சிகா.
ஒரு எதிர்பாராத நேரத்தில் மழைநாளில் ஹன்சிகாவைப் பார்க்கும் வாலு சிம்புவுக்கு, பார்த்த நொடியில் காதல் பிறந்துவிடுகிறது. ஹன்சியிடம் காதலைச் சொல்ல, அவள் மறுத்துவிடுகிறாள். தன் முறை மாமனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் திருமணம் என்றும் கூற, அடுத்த இரண்டு ஆண்டுகளால் எப்படியும் வீழ்த்திவிடலாம் என்ற நினைப்போடு நண்பர்களாகப் பழகுவோம் என்கிறார் சிம்பு. ஹன்சியும் ஒப்புக் கொள்கிறாள்.

Vaalu Review

ஹன்சிகாவின் முறைமாமன் பெரிய தாதா. இரண்டு ஆண்டுகளில் தன் காதலைப் புரிய வைத்து, இந்த தாதாவை மீறி ஹன்சியை அடைந்தானா வாலு என்பது எல்லாரும் எளிதில் யூகிக்கக் கூடிய மீதிக் கதை.

படம் முழுக்க சிம்பு வருகிறார். பேசிக் கொண்டே இருக்கிறார். ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக புரட்டிப் போடுகிறார். ஆனால் எல்லாவற்றிலுமே ஒரு ரெடிமேட்தனம் தெரிகிறது. வார்த்தைகளைக் கடித்துக் கடித்துப் பேசும் அந்த மேனரிசம் மாறினால் இன்னும் ரசிக்க முடியும்.

ஹன்சிகாவின் அழகும் நடிப்பும் ஈர்க்கிறது.

Vaalu Review

சந்தானத்தின் பேச்சுக் கச்சேரி இதில் குறைவு. அதனால்தானோ என்னமோ, இந்தப் படத்தில் அவரது காமெடி எடுபட்டுள்ளது. இவரும் விடிவி கணேஷும் சிம்புவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் மற்றும் பிரமானந்தம் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

சிம்புவின் பெற்றோராக வரும் நரேன், ஸ்ரீரஞ்சனி, வில்லன் ஆதித்யா ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர். குறிப்பாக நரேன் பாராட்டுக்குரியவர்.

ஒரேயொரு பாட்டைத் தவிர, மீதியெல்லாம் வேகமாக வசனம் பேசுவது மாதிரியே இருப்பதால் ரசிக்க முடியவில்லை. சக்தியின் ஒளிப்பதிவு பிரமாதம்.

வழக்கமான காதல் - ஆக்ஷன் கதையை, விறுவிறுப்பான திரைக்கதையால் போரடிக்காமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். சிம்பு ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்!

 

ரஜினி 40... சிதம்பரத்தில் பிரமாண்டமாய் விழா எடுத்த முரட்டு பக்தர்கள்!

ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 41வது ஆண்டில் கால் பதிக்கிறார் ரஜினி.

திரையுலக சரித்திரத்தில் முக்கியமான இந்த நிகழ்வை அவரது ரசிகர்கள் இரண்டு நாட்கள் முன்கூட்டியே சிதம்பரத்தில் விழா எடுத்துக் கொண்டாடிவிட்டனர்.

Fans celebrate Rajini's 40th year at Chidambaram

சிதம்பரம் நகரில் உள்ள ஜிஎம் திருமண மண்டப வளாகத்தில் இந்த விழா மாலை 4 மணிக்கு நடந்தது.

ரஜினியின் முரட்டு பக்தர்கள் என்ற குழு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Fans celebrate Rajini's 40th year at Chidambaram

ஏராளமான ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இந்த குழுவினர். ஆனால் அதனை மேடையில் வைத்துச் செய்யவில்லை.

Fans celebrate Rajini's 40th year at Chidambaram

"இடது கை தருவது வலது கைக்கு தெரியக்கூடாது' என்பார் தலைவர் ரஜினி. அதற்கேற்ப, நாங்கள் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு கல்வி, தொழில் உதவிகளைச் செய்தோம். ஆனால் அதை விளம்பரப்படுத்தாமல் செய்துள்ளோம்," என்று மேடையில் அறிவித்தனர்.

Fans celebrate Rajini's 40th year at Chidambaram

இந்த விழாவில் ரஜினி குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில் கல்லூரிப் பேராசியர்கள் பங்கேற்று ரஜினியின் சிறப்புக்களை எடுத்துரைத்தனர். ரசிகர் மன்ற விழா ஒன்றில் இப்படி ஒரு கருத்தரங்கம் நடப்பது இதுவே முதல் முறை.

Fans celebrate Rajini's 40th year at Chidambaram

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். நடிகர் ஜீவா (லொள்ளு சபா)வும் இந்த விழாவில் பங்கேற்றார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விழாவுக்கு வந்து கலந்து கொண்டனர்.

 

ரஜினி 40... அடையாளமில்லாமல் நுழைந்து இந்திய சினிமாவின் அடையாளமாய் மாறியவரின் கதை இது!

சூப்பர் ஸ்டார்...

1978-க்கு முன்பு வரை இப்படி ஒரு வார்த்தை இந்திய சினிமாவில் பயன்படுத்தப்பட்டதில்லை. உலக சினிமா எதிலும் எந்த பெரிய நடிகருக்கும் இப்படி ஒரு அடைமொழியும் கொடுக்கப்பட்டதுமில்லை.

சிலர் தியாகராஜ பாகவதர், ராஜேஷ் கன்னாவையெல்லாம் சொல்லக் கூடும். அவர்களை சூப்பர் ஸ்டார்கள் என அழைக்க ஆரம்பித்ததே தொன்னூறுகளுக்குப் பிறகுதான். அவர்கள் கோலோச்சிய காலங்களில் பாகவதர் ஏழிசை மன்னர் என்றுதான் அழைக்கப்பட்டார். ராஜேஷ் கன்னா இந்தியின் நம்பர் ஒன் நடிகர் என்றே அழைக்கப்பட்டார். இது சினிமா வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

Rajini 40: How an ordinary man becomes the Icon of Indian Cinema?

சினிமா வரலாற்றில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட முதல் நடிகர் ரஜினிகாந்த். அதுவும் 1975-லிருந்து வில்லனாக, துணை நாயகனாக நடித்துக் கொண்டிருந்தவர், முதல் முறையாக பைரவியில் நாயகனாக நடிக்கிறார். அந்த முதல் படத்திலேயே அவரை சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

அந்த சூப்பர் ஸ்டார் திரையுலகில் தடம் பதித்து இன்றோடு நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.

1975-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 18-ம் தேதிதான் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற 24 வயது இளைஞர், ரஜினிகாந்த் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த வித்தியாசமான உடல் மொழி, வாய் மொழி காரணமாக அவரை தமிழ் ரசிகர்களுக்கு சட்டென்று பிடித்துப் போனது. அடுத்த படம் மூன்று முடிச்சு. அவர்தான் வில்லன் கம் கதாநாயகன். இதெப்டி இருக்கு? என்ற அந்த ஒற்றை பஞ்ச்... தமிழ் திரையுலகையே புரட்டிப் போட்டது.

ஆரம்ப நாட்களில் ரஜினி ஒரு மொழியோடு நிற்கவில்லை. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் சமமாகவே நடித்து வந்தார். வெற்றியும் கண்டார். 1977-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் அவர் நடித்தவை 15 படங்கள். 1978-ல் 20 படங்கள். 1979-ல் 13 படங்கள்!

மூன்றே ஆண்டுகளில் 43 படங்கள்! இரவு பகல் தூக்கமின்றி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 21 மணி நேரம் நடித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் தமிழில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தார். எண்பதுகளுக்குப் பிறகு சராசரியாக ஆண்டுக்கு எட்டுப் படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்தவர், 1983-ல் இந்தியில் அந்தாகானூன் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்திப் படங்களில் வெற்றிகரமான தென்னிந்திய ஹீரோவாக வலம் வந்தார்.

1987-க்குப் பிறகு ஆண்டுக்கு நான்கைந்து படங்களாகக் குறைத்துக் கொண்டார்.

1990-லிருந்து ஆண்டுக்கு மூன்று படங்களாகக் குறைத்தவர், 1993-க்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு படம் என்று அறிவித்தேவிட்டார்.

2000- ஆண்டுக்குப் பிறகு இந்தியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் (புலந்தி) ரஜினி.

தமிழில் அவர் நடிக்கும் படங்களே தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகி பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் சிவாஜி த பாஸ் பெரும் சாதனைப் படைத்தது வட மாநிலங்களில். கிபி 2000 தொடங்கி இந்த 2015 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் ரஜினி வெறும் 7 படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். பாபா, சந்திரமுகி, சிவாஜி த பாஸ், குசேலன், எந்திரன், கோச்சடையான், லிங்கா என ஏழு படங்கள்தான்.

ஆனால் இந்தப் படங்கள்தான் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை உலகளவிய எல்லைக்குள் இட்டுச் சென்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூரைத் தாண்டாத இந்திய சினிமாக்கள் இன்று ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, வட தென் அமெரிக்க கண்டங்கள், ஐரோப்பா, சீனா என வலம் வரக் காரணம், ரஜினியின் பாட்ஷாவும், முத்துவும் படையப்பாவும், சந்திரமுகியும், சிவாஜியும்தான். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரஜினியின் எந்திரன், சிவாஜி, லிங்கா வசூல்தான் இன்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபீசில் முதலிடத்தில் உள்ளன.

வெற்றிப் படங்கள் என்பதைத் தாண்டி, சினிமாவில் ரஜினி ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளமானவை. ஒரு கூலித் தொழிலாளி, முன்னாள் பஸ் கண்டக்டர், சினிமாவுக்கான அழகியல் ஏதுமற்ற மனிதன் கூட மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் ரஜினி.

வயது வித்தியாசம் தாண்டி அனைத்து மட்டங்களிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது ரஜினி செய்த இன்னொரு மாயாஜாலம். அதற்கு காரணம், சினிமாவின் போக்கை உணர்ந்து அதற்கேற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் அவரது தன்மை.

இன்றைய சினிமா ஹீரோக்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் நிச்சயம் ரஜினியின் தாக்கம் இருக்கும். இன்று முன்னணி ஹீரோக்களாக உள்ள அஜீத்தும் விஜய்யும் தங்களை ரஜினியின் ரசிகர்களாக முன்னிறுத்தி வந்தவர்கள்தான்.

பலருக்கும் தெரியாத ஒரு உண்மை... விஜயகாந்தே ரஜினியின் ரசிகர் மன்ற செயலாளராக இருந்து, விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரைக்கு வந்தவர்தான்.

இந்த நாற்பது ஆண்டுகளில் 37 ஆண்டுகள் ரஜினிகாந்த் அசைக்க முடியாத ஒரு சூப்பர் ஸ்டாராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் எத்தனையோ ஹீரோக்கள் ஏற்ற இறக்கங்கள் கண்டாலும், இவர் மட்டும் அதே முதலிடத்தில் வீற்றிருக்கிறார்.

ரஜினி தோல்வியே கண்டதில்லையா?

கண்டிருக்கிறார். ஆனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவரான தாணு அந்த தோல்வி குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா?

"ரஜினியின் தோல்விப் பட வசூலில் நான்கில் ஒரு பங்கைக் கூட, மற்ற பெரிய வெற்றிப் படங்கள் வசூலாகப் பெற்றதில்லை.. இதை இத்தனை காலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் ரஜினியின் திரையுலக ஆளுமை. அவர் படங்களால் யாரும் நஷ்டமடைந்ததில்லை. நஷ்டமடையவும் ரஜினி விட்டதில்லை. நஷ்டம் என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்!"

 

"பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்"... அடம் பிடிக்கும் நடிகர்... யோசனையில் நடிகை!

சென்னை: நான் எல்லாருக்கும் நண்பேன்டா என வெளியில் பாலீஷாகக் கூறினாலும், பெரிய நம்பர் நடிகை மீது உள்ளுக்குள் காதல் வளர்த்து வருகிறாராம் கடவுள் நடிகர்.

ஏற்கனவே நடிகை இரண்டு முறை காதலில் கையை சுட்டுக் கொண்டவர். சமீபகாலமாக இயக்குநர் ஒருவரோடு இணைத்துப் பேசப்பட்டு வருகிறார் நடிகை.

இந்நிலையில், தனது விருப்பத்தை சமீபத்தில் தனது படத்தில் ஓப்பனாக டயலாக்குகள் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர். படத்தைப் போலவே நிஜத்திலும், ‘பெட்ரோமாஸ்' லைட்டே தான் வேணும் என அடம் பிடிக்கிறாராம். இதனால், வீட்டில் பெண் பார்க்கும் படலத்தையும் தள்ளிப் போடச் சொல்லி இருக்கிறாராம்.

நடிகரின் விருப்பம் தற்போது நாயகியின் காதுகளையும் எட்டியுள்ளதாம். இதுவரை நல்ல நண்பராக இருந்து வந்த நடிகரின் திடீர் காதல் தூது குறித்து நாயகியும் சிந்தித்து வருகிறாராம். நாயகியிடம் இருந்து பாசிடிவ் பதில் வந்தால் விரைவில் டும் டும் டும் அறிவிப்பு வெளியாகலாம் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஸ் பண்ணிருவிங்களா பாஸ்...?