'பப்' போகணும்... ஆனா எல்லை மீறக் கூடாது! - ஜெனிலியா ஆசை


பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் எல்லை மீறக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன், என்கிறார் நடிகை ஜெனிலியா.

விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறார் ஜெனிலியா. காரணம் இந்தப் படத்துடன் அவர் தமிழில் நடிக்க மாட்டார் என்றும் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது.

படம் வெளியாவதையொட்டி பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஜெனிலியா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நான் நடித்துள்ள படங்களில் முதல் மாஸ் படம் என்றால் அது வேலாயுதம்தான். விஜய்யுடன் சச்சினில் நடித்திருக்கிறேன். இப்போது வேலாயுதம். ரொம்பப் பெருமையாக உள்ளது.

நான் ரொம்ப சிம்பிளான பொண்ணு. நிறைய பேர் பப், பார்ட்டிகளுக்கு போகிறார்கள். எனக்கும் அங்கெல்லாம் போக பிடிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயங்குவதில்லை. ஆனால் எல்லை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

என் தோழி நயன்தாரா

சினிமாவில் நிறைய சினேகிதிகள் உள்ளனர். ஆனால் எனக்கு நெருங்கிய தோழியாக இருப்பவர் நயன்தாரா. சொந்த விஷயங்களை மனம்விட்டு இருவரும் பேசிக் கொள்வோம். ரகசிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். திரையுலக உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். எங்களுக்குள் ஒளிவு மறைவில்லை.

நான் கிறிஸ்தவ பெண். ஞாயிற்றுக்கிழமைதோறும் தவறாமல் சர்ச்சுக்கு போகிறேன். அங்கு மன அமைதி கிடைக்கிறது.

இண்டர்நெட், ட்விட்டரில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பிருதிவிராஜூம் டுவிட்டரில் எனக்கு நண்பராக இருக்கிறார்.

திருமணம்...ம்ம்... அதெல்லாம் அப்புறமா விரிவா பேச வேண்டிய விஷயம்," என்றார்.
 

சாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'!


நடிகை சாயா சிங்கிற்கு பள்ளித் தோழிகள், கல்லூரித் தோழிகள் தவிர செல்போன் தோழி ஒருவரும் இருக்கிறார்.

திருடா திருடி படம் மூலம் பிரபலமானவர் சாயா சிங். அவர் ஆடிய மன்மத ராசா பாடலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காதல் கோட்டை படத்தில் அஜீத்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இது நமக்கெல்லாம் தெரிந்த கதை.

அதே ஸ்டைலில் சாயாவும் ஒருவரை பார்க்காமலேயே அவருடன் நட்பாக உள்ளார் என்று உங்களுக்குத் தெரியுமா. திருடா திருடியில் சாயாவுக்கு குரல் கொடுத்தவர் மகா. அவர் குரல் மிகவும் பிடித்துப் போக சாயா அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்து பேசியுள்ளார். இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர்.

இருவரும் தினமும் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள் என்றால் பாருங்களேன். இதில் விந்தை என்னவென்றால் சாயாவும், மகாவும் இதுவரை ஒருவரையொருவர் பார்த்ததேயில்லை. மகாவுக்கு சாயாவைத் தெரியும். ஆனால் மகாவே நேரில் வந்து நின்றாலும் அவரை சாயாவால் கண்டுபிடிக்க முடியாது.

நாம் ஏன் சந்திக்கக் கூடாது என்று சாயா கேட்டதற்கு பார்க்காமலேயே காதலிக்கும்போது நட்பை வளர்க்க முடியாதா என்று மகா கேட்டுள்ளார். டீலிங் பிடித்துப் போக சாயாவும் அதையே தொடர்கிறார்.

இந்த சாயா நட்பு நீடிக்கட்டும்...!
 

ஆர்யாவை இயக்கும் 'எங்கேயும் எப்போதும்' சரவணன்!


குரு ஏ ஆர் முருகதாஸ் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட், பெரிய லாபம் என்று போனாலும், சின்ன பட்ஜெட் - பெரிய வெற்றி என்பது அவரது சிஷ்யரான சரவணனின் பாணி. அதற்கு சாட்சி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அவரது முதல் படம் 'எங்கேயும் எப்போதும்'.

இந்தப் படத்துக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும், நிதானமாக ஒரு படத்தை மட்டும் இயக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரவணன்.

இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். சரவணன் சொன்ன ஒன்லைனைக் கேட்டு ஈர்ப்பாகிப் போன ஆர்யா, லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை படம் முடிந்த பிறகு, இந்தப் படத்தில்தான் நடிக்க விரும்புவதாகக் கூறி கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்.

இந்தப் புதிய படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமே தயாரிக்கப் போகிறது.

டிசம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்தப் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மங்காத்தாவை 'திருட்டு' டிவிடியில் பார்த்து அசந்த சல்மான் கான்!


நடிகர் சல்மான் கான் தல அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை திருட்டி டிவிடியில் பார்த்துள்ளார்.

நடிகர் சல்மான் தமிழில் ஹிட்டாகும் படங்களை உடனே பார்த்துவிடுவார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா ஹிட்டானதும் அதை பார்த்துவிட வேண்டும் என்று சல்மான் நினைத்துள்ளார். ஆனால் அவர் அவசரத்திற்கு மங்காத்தா டிவிடி கிடைக்கவில்லை.

எப்படியாவது படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று நினைத்த சல்லு திருட்டு டிவிடி வாங்கிப் பார்த்துள்ளார். படத்தை பார்த்து முடித்த உடனேயே வெங்கட் பிரபுவை செல்போனில் அழைத்துள்ளார். அடடா சல்மான் கூப்பிடுகிறாரே என்ன விஷயமோ என்று போனை எடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

உங்கள் படம் மங்காத்தாவை பார்த்தேன். படம் சூப்பராக உள்ளது. ஆனால் நான் திருட்டி டிவிடியில் பார்த்ததால் பிரிண்ட் நன்றாகவே இல்லை. ஒரு ஒரிஜினல் டிவிடி அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனே வெங்கட் பிரவு அடுத்த பிளைட்டில் ஒரு மங்காத்தா டிவிடியை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த ஒரிஜினல் டிவிடியை வைத்து யாராவது சூப்பர் பிரிண்ட் போட்டுடப் போறாங்க, கவனம்!
 

பட்ஜெட் தகராறு: ஆஸ்கருக்கு கைமாறிய தனுஷ் படம்!


அதிக பட்ஜெட் காரணமாக, யுடிவி தயாரிக்கவிருந்த தனுஷ் படமான மாரீசன் கைமாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் நடிக்க, சிம்பு தேவன் இயக்கும் புதிய படம் மாரீசன். ரூ 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சரித்திரப் படம் இது.

யுடிவி இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை மற்றும் நட்சத்திரங்கள் தேர்வுக்கு முதலில் திருப்தி தெரிவித்த யுடிவி, சிம்பு தேவன் கேட்ட பட்ஜெட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் தனுஷுக்கு இருக்கும் ஓபனிங் மற்றும் இந்தப் படம் நீண்ட நாள் ஓட்டத்தில் பெறும் வருவாய் போன்றவற்றைக் கணக்கிட்டு, 'இது ஓவர் பட்ஜெட்... கொஞ்சம் குறைச்சுக்கங்க," இயக்குநரிடம் கூறியுள்ளனர். மேலும் தனுஷின் சம்பளத்திலும் ஓரளவு குறைக்குமாறு கேட்டார்களாம்.

ஆனால் இதற்கு இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பிலிருந்து யுடிவி விலக, இப்போது படத்தை அண்டர்டேக் பண்ணிக் கொண்டுள்ளதாம் ஆஸ்கர் பிலிம்ஸ்!

ஏற்கெனவே ஆஸ்கர் பிலிம்ஸுக்கு ஒரு படம் நடித்துத் தர தனுஷ் ஒப்பந்தமாகியிருந்தார். மாரீசனை ஆஸ்கர் தயாரித்தால், கணக்கு சரியாகிவிடும் அல்லவா!
 

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!


பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர்.

குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

ஏற்கெனவே சினிமா மற்றும் விளம்பரங்களில் தோன்றியுள்ளார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஐஸ்வர்யா ராய்க்கு வளைகாப்பு... பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு!


காலங்கள் கடந்தாலும் இன்றும் உலக அழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு இன்று மாலை மும்பையில், அவரது மாமியார் வீட்டில் வளைகாப்பு நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகைகள் திரளாக பங்கேற்கின்றனர்.

எட்டு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய் வளைகாப்புக்காக அமிதாப்பச்சனின் இல்லம் இன்று வண்ணமயமாக ஜொலிக்கிறது. ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஜெயா பச்சன் இந்த விழாவை நடத்துகிறார். மும்பை கலாச்சாரப்படி இந்த விழா நடக்கிறது.

ஐஸ்வர்யா ராய் நவம்பரில் குழந்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் கூறுகையில், "குழந்தை பிறக்கும் தேதி இன்னும் எங்களுக்கு கூறப்படவில்லை. எனினும் அது நவம்பர் மாத குழந்தையாக இருக்கும்.

இந்தக் குழந்தை மூலம் எங்கள் குடும்பத்தில் நவம்பர் மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6-ஆக உயரப் போகிறது," என்ரார். குழந்தை பிறக்கும்போது ஐஸ்வர்யாவுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என வெளியான செய்திகளை மறுத்தார் அபிஷேக்.

2007-ல் அபி - ஐஸ் திருமணம் விமரிசையாக நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கிறது!

இன்று நடக்கும் சீமந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் கஜோல், ஷாரூக்கான் மனைவி கௌரி கான் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.
 

இசையமைத்து, பாட்டுப்பாடி, நடிக்க ஸ்ருதிக்கு ஆசை!


கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிக்கு ஒரு ஆசை உள்ளது. அது, 'தானே இசையமைத்து, தானே பாடி, தானே நடிக்க' வேண்டுமாம். அந்த ஆசை நிறைவேறுமா என்ற ஏக்கத்துடன் கேட்கிறார் ஸ்ருதி!

இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தின் மூலம் நடிகையானார் ஸ்ருதி ஹாசன். தற்போது சூர்யா ஜோடியாக ஏழாம் அறிவு படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

நடிப்பைத் தவிர ஸ்ருதிக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு என்பது ஏற்கெனவே தெரிந்த சமாச்சாரம். அவர் ஏற்கனவே தனது தந்தையின் படமான உன்னைப் போல் ஒருவனில் இசையமைத்துள்ளார். ஒரு சில பாடல்களும் பாடியுள்ளார்.

இந்நிலையில் தான் கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்றுக்கு தானே இசையமைத்து அதில் குறைந்தது ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று ஸ்ருதிக்கு ஆசை. அந்த ஆசை எப்பொழுது நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தானே இசைத்து, தானே பாடி, தானே கேட்கும் நிலையில் இல்லாமல் இருந்தால் கோலிவுட் நிச்சயம் வரவேற்கும்!
 

ரூ 25 கோடி பட்ஜெட்... சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி!


தனுஷின் ஆஸ்தான இயக்குநர் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

அடுத்து அவர் இயக்கப் போவது சிம்புவை. இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிக்கிறது.

பெரும் அரசியல் நெருக்கடிகள், கடைசி நேர இழுபறிகளுக்கிடையிலும் மங்காத்தா பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தயாநிதி அழகிரி இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தின் பட்ஜெட் ரூ 25 கோடி என்கிறார்கள். சிம்பு படம் ஒன்று இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாராவது இதுதான் முதல்முறை.

படத்தின் கதை சரித்திரப் பின்னணி கொண்டது என்கிறார்கள். இந்தக் கதையை தனுஷுக்காகத்தான் வெற்றிமாறன் முதலில் தயார் செய்திருந்தாராம். இப்போது சிம்புவுக்கு அந்த 'சட்டை'யை மாட்டிப் பார்க்கிறார்!
 

ஃபரா கானை கடுப்பேற்றிய இலியானா


நடிகை இலியானா நண்பன் படப்பிடிப்பில் போட்ட நாடகத்தால் படக்குழுவினர் கடுப்பாகிவிட்டனர்.

நடிகை இலியானா மீது ஏற்கனவே தெலுங்கு திரையுலகினர் கடுப்பில் உள்ளனர். அம்மணி பண்ணும் அலும்புக்கு அளவேயில்லையாம். இந்த நிலையில் ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வரும் அவர் இங்கும் வேலையைக் காட்டியுள்ளார்.

3 இடியட்ஸ் படத்தில் வரும் ஜூபி, டூபி பாடல் போன்று தமிழிலும் படமாக்குகின்றனர். அதற்காக ஷங்கர் மும்பையில் இருந்து நடன இயக்குனர் ஃபரா கானை வரவழைத்துள்ளார். படப்பிடிப்புக்கு வந்த இலியானா நடன ஒத்திகையில் கலந்துகொள்ள மறுத்துள்ளார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, வயிறு வலிக்குது என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஃபரா கான். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இலியானாவுக்கு ஒன்றுமில்லை புழுகிறார் என்று குட்டை உடைத்துவிட்டனர். என்ன இந்த நடிகை இப்படி சில்லறைத் தனமாக இருக்கிறாரே என்று கடுப்பாகிய ஃபரா மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

ஆனால் இலியானா தனது வேனில் சென்று உட்கார்ந்து கொண்டு வெளியே வரவேயில்லையாம். கடைசியில் இலியானா இல்லாமலே அந்தப் பாடலை படமாக்கியுள்ளனர்.

'இலி'க்கு ஏன் இந்தப் பாடலுக்கு ஆட 'கிலி'யோ...?
 

டாக்டர்கள் அறிவுரையால் ஓட்டுப் போடுவதைத் தவிர்த்த ரஜினி!


சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நனைந்தபடி, நடிகர்-நடிகைகள் ஓட்டுப் போட்டார்கள்.

வழக்கமாக அனைத்துத் தேர்தல்களிலும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டுவிடும் ரஜினி, இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் வாக்குச் சாவடிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

ரஜினி வருவார் என்பதால் காலையிலிருந்தே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாசலில் காத்திருந்த ஏராளமான புகைப்படக்காரர்கள் இதில் ஏமாற்றமடைந்தனர்.

ரஜினி மட்டுமல்ல, பெரும்பாலான நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டதால், இந்த முறை வாக்களிக்கவில்லை.

கமல்ஹாசன், 'விஸ்வரூபம்' படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றதால், ஓட்டுப்போடவில்லை.

ஊரில் இருந்த சில நடிகர்-நடிகைகள் மட்டும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்கள்.

நடிகர் விஜய், சென்னை அடையார் காமராஜர் அவன்யூவில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும், நகைச்சுவை நடிகர் விவேக், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், நடிகை குஷ்பு, சென்னை சாந்தோமில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

சினேகா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், காலை 10.45 மணிக்கு வாக்குப்பதிவு செய்தார்.

நடிகர் சிவகுமார், காலை 10.30 மணிக்கு தியாகராயநகரில் உள்ள இந்தி பிரசார சபாவுக்கு வந்து வாக்களித்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் லட்சிய தி.மு.க. தலைவரும் நடிகர்-இயக்குநருமான டி.ராஜேந்தரும் அதே சாவடியில் ஓட்டுப்போட்டார்.

கொஞ்சம் வெோயில், கொஞ்சம் வெயில், கொஞ்சம் இருட்டு என மாறி மாறி கண்ணாமூச்சி காட்டிய வானிலைக்கு நடுவில், நட்சத்திரங்கள் தொடர்ந்து வாக்களித்தபடி இருந்ததால், கோடம்பாக்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் புகைப்படக்காரர்கள் ரவுண்ட் வந்தபடி இருந்தனர்!
 

சென்னையில் சர்வதேச பட விழா - ரஷ்ய பெண் இயக்குநர் பங்கேற்பு!


சென்னை: இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

செவன்த் சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து, சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

தொடக்க விழா 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடக்கிறது. விழாவை, இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைக்கிறார். அதே தியேட்டரில், தினமும் 3 காட்சிகள் வீதம் சர்வதேச படங்கள் திரையிடப்படுகின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 20 படங்கள், இந்த பட விழாவில் திரையிடப்படுகின்றன.

விழாவில் ரஷ்யாவை சேர்ந்த லாரிகா டெலிகாட் என்ற பெண் இயக்குநரும் சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் குளோரியானாவும் கலந்துகொள்கிறார்கள்.

நிறைவு விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.
 

நாங்கள் பார்க்காத கிசுகிசுவா? - நயன்தாரா


"பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்குப் பிரச்சினையாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர்கள் இருப்பது எனக்கு முதலிலேயே தெரியுமே. எனவே அதற்காக, அவரை விட்டு பிரிவது என்ற எண்ணத்துக்கே இடமில்லை," என்று நடிகை நயன்தாரா கூறினார்.

நயன்தாரா மீதுள்ள காதலால் மனைவியை திட்டமிட்டு விவாகரத்து செய்துவிட்டவர் பிரபு தேவா. ஆனால் இப்போது நயன்தாரா - பிரபு தேவா இருவருக்குமே பிரச்சினை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் ரகசியமாக பார்த்ததால் கோபித்துக் கொண்ட நயன்தாரா, பிரபு தேவாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இதை மறுத்து நயன்தாரா மட்டும் கடந்த இரு தினங்களாக பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் பிரபு தேவா செல்போனைக் கூட அணைத்துவிட்டு, மும்பையில் ஷூட்டிங்கில் மூழ்கிவிட்டாராம்.

இந்த நிலையில், பிரபு தேவா தன் குழந்தைகளை முழுமையாக விலகி வந்தால்தான் திருமணம் என்று நயன்தாரா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் அதையும் நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.

அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.

எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதிது அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.
 

'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!


பொதுவாக தனது பெரும்பாலான படங்களில் கமல் பற்றி ஏதாவது ஒரு வசனம் மிக உயர்வாக வைத்திருப்பார் சூப்பர் ஸ்டார். அது ரசிகர்களுக்கு பிடிக்கிறதா இல்லையா என்று அவர் பார்ப்பதில்லை.

ஆனால் கமலுக்கும் அவருக்கும் உள்ள நட்பின் வெளிப்பாடாக இதை ரசிகர்கள் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு கைத்தட்டி மகிழ்வது தில்லுமுல்லு தொடங்கி எந்திரன் (கமல்ஹாஸன் போன் நம்பரை சிட்டி குறிப்பிடுவது) வரை தொடர்கிறது. அதேநேரம் மற்ற எந்த தலைவர் பெயரையும் தனது படங்களில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்.

ஆனால் கமல் தன் படங்களில் பொதுவாக ரஜினி பெயரைச் சொல்வதில்லை (ஆனால் பொதுவான பேட்டிகளில் ரஜினி பற்றி அதிகம் பேசுவது கமல் வழக்கம்!). முதல் முறையாக ஒரு படத்தில் ரஜினியைப் பற்றிய தனது கருத்தை ஒற்றை வரியில் சொல்லியிருக்கிறார் கமல்.

சமீபத்தில் தமிழில் வெளியான அன்புள்ள கமல் (ஒரிஜினல் மலையாளம் - பெயர்: ஃபோர் ப்ரண்ட்ஸ்-2010-ல் வெளிவந்தது) படத்தில் தன்னை உருவாக்கிய - பக்கபலமாக இருந்தவர்கள் யார் யார் என்று கூறும்போது, எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்த இடத்தில் ரஜினி என்று குறிப்பிடுகிறார் கமல்!

அன்புள்ள கமல் தமிழ்ப் படத்தில் அவரது அனுமதியோடு எழுதப்பட்ட வசனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமலுக்கு டப்பிங் குரல் வேறு (மலையாளத்தில் இந்த வசனம் வேறு மாதிரி இருக்கும்).