'ஹம்'மில் நான் பிரமித்துப் பார்த்த ரஜினி சாருடன் ரா ஒன்னில் நடித்துவிட்டேன்! - ஷாரூக் பெருமிதம்


சென்னை: ஹம் படத்தின் ஷூட்டிங்கில் நான் பிரமித்துப் பார்த்த ரஜினி சாருடன் இணைந்து இன்று ரா ஒன் நடித்துவிட்டேன். இதை விடப் பெருமை எனக்கு வேறொன்றும் இல்லை, என்றார் இந்திப் படவுலகின் முன்னணி நாயகன் ஷாரூக்கான்.

சென்னையில் இன்று ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஷாரூக், தானே நிகழ்ச்சின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார்.

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மணிரத்னம், சந்தோஷ் சிவன், அபிராமி ராமநாதன், செளந்தர்யா ரஜினிகாந்த், சுஹாசினி மணிரத்னம் என அனைவரையும் தானே மேடைக்கு அழைத்து கவுரவித்ததோடு, ஒவ்வொருவரிடமும் இந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன, ட்ரெயிலர் எப்படி என்று கருத்துக்களைக் கேட்டார்.

பின்னர் தனது பேச்சின்போது, "சென்னையில் இருப்பதை மிக சந்தோஷமாக கருதுகிறேன். இந்தியாவில் தற்போது நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் இருந்து தான் வெளிவருகின்றன. இதை தான் நிறைய விழாக்களில் பேசி இருக்கிறேன்.

உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நமது அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முகுல் ஆனந்தின் ஹம் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று தூரத்திலிருந்து ஏங்கியவன் நான். அன்று அவரை பிரமித்துப் பார்த்தவன், இன்று அவரோடு ரா ஒன்னில் நடித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி சார் ஒரு உண்மையான சாதனையாளர். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் அவரது படங்கள் அமையும். அது மிகவும் அபூர்வமானது. எனது பையன் கூட 'சிட்டி' 'சிட்டி' என்று கூறி கொண்டே இருப்பான்.

ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் மட்டுமல்ல, யாராலும் அது முடியாது. ரஜினி ரஜினிதான். அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. என்னைப் போன்ற நடிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அவராகவே நடிக்க முயற்சிக்கக் கூடாது.

ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.

எனது அடுத்த படமான டான் -2 -ஐயும் தமிழில் வெளியிட இருக்கிறோம். இந்தி சினிமாவில் தற்போது தமிழ் படங்கள் பல ரீமேக் செய்யப்படுகின்றன. எனக்கு ஏற்றவாறு கதைகள் இருந்தால் கண்டிப்பாக ரீமேக்கில் நடிப்பேன். ஆனால் ரஜினி படங்களின் ரீமேக்கில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும்.

சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் 35 வயது வரை காதல் கதைகளில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்தேன். தற்போது வேறு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அதே நேரம் 'ரா ஒன்' படத்திலும் காதல் இருக்கும்," என்றார்.

தீபாவளிக்கு உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் ரா ஒன் வெளியாவதாக ஷாரூக் கூறினார்.
 

ஐரோப்பிய நாடுகளில் எல் ஆர் ஈஸ்வரிக்கு கவுரவம்!


திரை இசைத் துறையில் 50 ஆண்டுகளைக் கடந்த பிரபல பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரிக்கு ஐரோப்பிய நாடுகளில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

அக்டோபர் 14-ம் தேதி ஜெர்மனியிலும், 15-ம் தேதி பாரிஸிலும், 16-ம் தேதி சுவிட்சர்லாந்திலும், 21-ம் தேதி டென்மார்க் மற்றும் 22,23 தேதிகளில் நார்வேயில் நடக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளில் அவர் பாராட்டப்படுகிறார்.

வணக்கம் ஐரோப்பா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சிகளை சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர் நடத்துகிறார்கள்.

இந்த விழாக்களில் எல் ஆர் ஈஸ்வரியும் தான் பாடிய மிகப் பிரபலமான பாடல்களை பாடவிருக்கிறார். அவருடன் பாடகர்கள் நவீன், ரெனைனா, பரணி, கவிதா மற்றும் யாழினி பங்கேற்றுப் பாடுகிறார்கள்.

ஹரிஹரன், சங்கர் மகாதேவன்

முன்னதாக சாதகப் பறவைகள் குழு லண்டனில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சிகளை வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடத்தியது. பர்மிங்காமில் உள்ள என்ஐ அரேனா என்ற அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக ரூ 3 கோடிக்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது.

இதில் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர். வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முழுக்க தமிழ்ப் பாடல்களும், சனிக்கிழமை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்களும் பாடப்பட்டன.

தமிழ் திரையுலக இசை மேதைகள் கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா, சாதனையாளர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல்ஹாஸனின் பெருமைகளை எடுத்துக் கூறும் பாடல்களை இந்த கச்சேரியில் பாடி கைத்தட்டல் பெற்றனர்.
 

ரசிகையின் கோபம்... தவறைத் திருத்திக் கொண்ட ஷாரூக்!


சென்னை; ரா ஒன் விழாவில் பேசிய ஷாரூக்கான் deaf and dump என்ற வார்த்தையைப் பிரயோகித்ததற்கு விழாவுக்கு வந்த ரசிகை ஒருவர் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தன் தவறைத் திருத்திக் கொள்வதாகக் கூறினார் ஷாரூக்.

ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம் ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருவதால், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். அந்தப் படமும் தமிழில் வந்தது. இந்த வரிசையில் ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஷாருக்கான், "தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்'' என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை பிரயோகித்தார்).

அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து, ''இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று தொடர்ந்து பேசினார்.

அவரது பேச்சில் குறுக்கிட்ட ஷாருக்கான், ''நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை. இதற்கு வேறு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவது... நீங்கள் சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்,'' என்றார்.

அதற்கு அந்த பெண், 'Mute' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமே என்றார். அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய ஷாரூக்கானிடம், ரஜினியை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "சென்னை வந்து இன்னும் ரஜினி சாரை சந்திக்கவில்லை. இப்போதுதான் சந்திக்கப் போகிறேன்," என்றார்.

விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
 

முடிந்தது ஜெனிலியா - ரிதேஷ் நிச்சயதார்த்தம்... மத்திய அமைச்சர் வீட்டில் நடந்தது!


மும்பை: நடிகை ஜெனிலியாவுக்கும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த வாரம் ரகசியமாக நடந்த இந்த நிச்சயதார்த்தம் குறித்து இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுவரை தங்களுக்கிடையிலான காதல் மற்றும் திருமணம் குறித்து வெளியான அனைத்து செய்திகள் மற்றும் வதந்திகளையும் தொடர்ந்து மறுத்து வந்தனர் ஜெனிலியாவும் ரிதேஷும்.

கடந்த வாரம் கேட்டபோதுகூட, இப்போதைக்கு திருமண திட்டமே இல்லை என்று ஜெனிலியா கூறினார்.

ஆனால் இன்று பத்திரிகைச் செய்திகளே உண்மையாகியுள்ளன.

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டில்தான் இந்த நிச்சதார்த்தம் நடந்துள்ளது.

ஆரம்பத்தில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். ஒரு நடிகையை மருமகளாக ஏற்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

ஆனால் ஜெனிலியா - ரிதேஷ் காதலின் உறுதியைப் பார்த்து இப்போது சமாதானமாகிவிட்டாராம். தானே முன்னின்று தனது அரண்மனை போன்ற வீட்டில் இந்த நிச்சயதார்த்தத்தை நண்பர்கள், உறவினர்கள் சூழ நடத்தியுள்ளார்.

திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வடிவேலுதான் சுந்தர்.சி அழைப்பை நிராகரித்தாரா?


சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதை சுந்தர்.சி மறுத்தார். ஆனால் வடிவேலுதான் இந்தப் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அவரது முக்கிய தாக்குதலாக விஜயகாந்த் அமைந்தார். அதிமுகவை அப்படியே விட்டு விட்டு தேமுதிகவையும், விஜயகாந்த்தையும் போட்டு தாளித்து விட்டார் வடிவேலு.

ஆனால் துரதிரஷ்டவசமாக திமுக பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் வடிவேலு நிலைமை கவலைக்கிடமாகி விட்டது. விஜயகாந்த்தைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வடிவேலுவை தங்களது படங்களில் புக் செய்ய தயங்குவதாக தெரிகிறது. இதனால் விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு போன்றவர்களின் காமெடியை மட்டுமே பார்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடிவேலுவின் காமெடி இல்லாமல் தமிழ்ப் படங்கள் கிட்டத்தட்ட வறட்சியாகவே உள்ளது என்பது வடிவேலு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான தமிழ் திரையுலக ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.

இந்த நிலையில்தான் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை உடனடியாக சுந்தர்.சி மறுத்து விட்டார். அப்படியெல்லாம் திட்டம் ஏதும் இல்லை என்று கூறினார்.

ஆனால் வடிவேலுவை சுந்தர்.சி அணுகியது உண்மைதான் என்கிறார்கள். வடிவேலுதான் இப்படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டாராம். தற்போது பல்வேறு கெட்டப்களில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகி வருகிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள இந்த காலகட்டத்தி்ல் அந்தப் படத்திற்காகத்தான் தயாராகி வருகிறாராம் வடிவேலு. அந்தப் படத்தை முடித்து விட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி விட்டு பின்னர் மீண்டும் காமெடி வேடங்களில் முழு வீச்சில் நடிக்க அவர் தயாராகி வருகிறாராம். இதனால்தான் சுந்தர்.சி படத்தை வேண்டாம் என்று அவர் கூறி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் கோபத்தில், வடிவேலுவை எனது படத்தில் நடிக்க வைக்கும் திட்டம் இல்லை என்று சுந்தர்.சி கூறியதாக கூறப்படுகிறது.
 

சிறுநீரக பாதிப்பு: டிஎம் சௌந்திரராஜனுக்கு தீவிர சிகிச்சை


சென்னை: பிரபல பின்னணி பாடகர் டி.எம். சௌந்திரராஜனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையைச் சேர்ந்தவர் டி.எம். சௌந்திரராஜன். திரையுலக ஜாம்பவான்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல் என பலருக்கும் பின்னணி பாடிய பெருமை கொண்டவர். சமீபத்தில் கூட, ஏஆர் ரஹ்மான் இசையில் செம்மொழி மாநாட்டுக்காக பாடினார்.

அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காளியப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரைச் சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 

சிரஞ்சீவி மகனுக்கு வரதட்சணை ரூ 120 கோடி & ஒரு குட்டிவிமானம்!


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கு வரதட்சணையாக மட்டும் ரூ 120 கோடியும் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட குட்டி விமானமும் வழங்கப்பட உள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தமிழகத்தில்தான்.

1980-ல் தஞ்சாவூரில் பிறந்தார். ஊட்டி கான்வென்ட் மற்றும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்.

2007-ல் சிறுத்த என்ற தெலுங்கு படம் மூலம் ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமானார். 2009-ல் அவர் நடித்த மகதீரா படம் ரிலீசாகி ஆந்திராவில் வசூலை அள்ளியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது.

இப்போது ரச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளும் பார்த்துவிட்டனர். மணமகள் பெயர் உபாசனா கேமினேனி. அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி இவர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், பி பாஸிடிவ் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார். இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியுள்ளது.

திருமண பரிசாக ஜெர்மனியில் தயாரான நவீன ரக குட்டி விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

வடிவேலு ராசிதான் திமுகவை அழிக்கிறது! - சிங்கமுத்து


அன்னூர்: வடிவேலு தி.மு.க.வில் சேர்ந்ததால் அக்கட்சி அழிந்து வருகிறது என்று காமெடி நடிகர் சிங்கமுத்து கூறினார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சிங்கமுத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

கோவை அன்னூரில் அவர் பேசுகையில், "உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போட்டால் நலத்திட்டங்கள் தவறாமல் அனைத்து வீடுகளுக்கும் வந்து சேரும்.

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் தி.மு.க.வினர் பொது மக்களுக்கு நலத் திட்டங்கள் கிடைக்காமல் செய்து விடுவார்கள். தி.மு.க.வினர் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் உலக அளவில் தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியை வடிவேலு 3 முறை சந்தித்ததார். இதனால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிவேலு நடிகர் அல்ல. தி.மு.க.வை அழிக்கவே அங்கு போய் சேர்ந்திருக்கிறார். அவர் ராசி அந்தக் கட்சியை இல்லாமல் செய்யப் போகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள்தான் உள்ளன. ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 250 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பேசியவர் தான் வடிவேலு.

கருணாநிதியை நம்பி ஊர் ஊராக பேசிய வடிவேலு இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கடனாளியாகி உள்ளனர்," என்றார்.
 

'நல்லவேளை... ஓடிப் போகலை'! - அனுஷ்காவின் அதிர்ஷ்டம்


ஹைதராபாத்: சினிமாவை விட்டு ஓடிப் போகலாம்னு நினைச்சேன். ஆனால் நல்ல வேளை அப்படி எதுவும் செய்யவில்லை. இப்போது சந்தோஷமாக உள்ளேன்," என்றார் நடிகை அனுஷ்கா.

நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள்.

இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம் மேல் புதிய மரியாதை ஏற்படுகிறது.

நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை இப்போது புரிந்துகொண்டேன். நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்து இருப்பேன்.

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்," என்றார்.
 

'ஒன்வே'யில் வந்ததால் ரூ 100 அபராதம் செலுத்திய அமீர்கான்!


மும்பை: போக்குவரத்து விதிகளை மீறி ஒன்வேயில் காரை ஓட்டிக் கொண்டு வந்த அமீர்கானுக்கு ரூ 100 அபராதம் விதித்தார் போலீஸ்காரர். இதனை மறுக்காமல் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டார் அமீர்காந்.

பாலிவுட்டின் முதல்நிலை நடிகரான அமீர்கான் தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பஞ்ச்கானியில் இருந்து சதாராவுக்கு மனைவி கிரண் ராவுடன் சென்று கொண்டிருந்தார்.

சதராவில் உள்ள ஒரு சாலையில் ஒருவழிப்பாதை (நோ என்டரி) என்பதைக் கவனிக்காமல் அமீர்கான் காரை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அமீர்கான் காரைத் தடுத்து நிறுத்தினார்.

போக்குவரத்து விதியை மீறியதாக அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். காரில் இருப்பது அமீர்கான் என்பது போலீஸ்காரருக்கு முதலில் தெரியவில்லை.

இதற்கிடையே அவரை அடையாளம் கண்டு ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் அமீர்கானுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அமீர்கான் , "அவர் தன் கடமையை மிகச் சரியாக செய்துள்ளார். அவரை எதுவும் சொல்லாதீர்கள். தவறு என்னுடையது," என்று கூறி தானே முன்வந்து ரூ.100 அபராதம் செலுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தன் அந்தஸ்தைக் காட்டி யாரும் தப்பிக்க முயலக்கூடாது. இதை மக்களும் புரிந்து கொண்டு, போலீசார் மீது ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவேண்டும்," என்றார்.

அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு தான் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று, வேறு பாதையில் தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றார்.
 

ரஜினி- கமல் இருவரும் மிகப் பெரிய ஜாம்பவான்கள்- ஷாருக் கான்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே மிகப் பெரிய ஜாம்பவான்கள் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கும் படம் ரா ஒன். அவர் மட்டுமல்ல கோலிவுட்டும், தமிழக மக்களும் கூட ரான் ஒன் படத்தைப் பார்க்க பேராவலாக உள்ளனர். காரணம் ரா ஒன் படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் வருகிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு ரஜினி நடித்த முதல் படம் ரா ஒன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற ரஜினி ரா ஒன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில் சென்னை வந்த ஷாருக்கான் நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே மிகப் பெரிய ஜாம்பவான்கள் என்று புகழாரம் சூட்டினார்.

ரஜினியுடன், ரா ஒன் படத்தில் நடிப்பதற்கு முன்பே, பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் ஹாசனின் ஹே ராம் படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். கோலிவுட்டின் இரு பெரும் ஜாம்பவான்களுடன் நடித்த பெருமை ஷாருக்கானுக்கு உண்டு.

ரஜினி குறித்து மேலும் அவர் கூறுகையில், ரஜினி காந்த் விரைவில் ராணா படத்தில் நடிப்பார். இதை அவரே என்னிடம் கூறியுள்ளார். அவரது படங்களை யாரும் ரீமேக் செய்ய முடியாது. அதேபோல ரஜினியைப் போன்று நடிக்க யாராலும் முடியாது என்றார் ஷாருக்.
 

தயாகரிப்பாளர் சங்கத் தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெற்றி- கேயார், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் தோல்வி


சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கேயார் 24 வாக்குகள் வித்தியாசத்திலும், பவர் ஸ்டார் சீனிவாசன் படு தோல்வியும் அடைந்தனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஜாம்பவான்களான எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டியிட்டனர். இவர்களுடன் டாக்டர் கே.சீனிவாசன் என்பவரும் போட்டியில் குதித்தார். இதனால் திரையுலக தயாரிப்பாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'பவர் ஸ்டார்' என்ற அடை மொழியுடன் தமிழ்த் திரையுலகில் நடமாடி வரும் சீனிவாசன், லத்திகா என்ற 'பிரமாண்ட வெற்றிப் படத்தை' எடுத்து, ஹீரோவாகவும் நடித்தவர். இவரும் போட்டியில் குதித்ததால் போட்டி களை கட்டியது.

நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை நடந்த விறுவிறுப்பான வாக்குப் பதிவில் கலந்து கொண்டு பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 68 சதவீத வாக்குகள் வரை பதிவாகின.

பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தேர்தல் அதிகாரியாக இப்ராகிம் ராவுத்தர் செயல்பட்டார்.

மொத்த ஓட்டுக்களில் பதிவான 641 ஓட்டுக்களில் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு 324 வாக்குகள் கிடைத்தன. கேயாருக்கு 300 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் 24 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

50 ஓட்டுக்களைக் கூட முழுமையாக பெற முடியாமல் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு 'பவர் ஸ்டார்' சீனிவாசன் படு தோல்வியைச் சந்தித்தார்.

பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ.சி அணியைச் சேர்ந்த கலைப்புலி தாணு தேர்வு பெற்றார். இவருக்கு 349 வாக்குகளும், அன்பாலயா பிரபாகரனுக்கு 256 வாக்குகளும் கிடைத்தன.

வெற்றிக்குப் பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது அரசியல் கட்சித் தேர்தல் அல்ல. சங்கத் தேர்தல். இங்குவெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களுடன் இணைந்து செயல்பட்டு, நல்லது நடக்க பாடுபடுவோம் என்றார்.
 

பிரபல பாடகர் ஜக்ஜித் சிங் மரணம்!


மும்பை: பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். 70 வயதான அவர் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

'கஜல் கிங்' என்று போற்றப்பட்டவர் ஜக்ஜித் சிங். இந்தி, உருது, பஞ்சாபி மற்றும் நேபாளி மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

பொதுவாக கஜல் பாடுவதில் பாகிஸ்தான் பாடகர்களே முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய கஜல் பாடகர்கள் ஒரு மாற்றுக் குறைவாகவே கருதப்பட்டனர். மேலும் பாரசீக, உருது மொழிக்காரர்களால் மட்டுமே பாடப்படும் ஒரு உயர்தர இசை கஜல் என்ற மரபை வைத்திருந்தனர்.

ஆனால் இதனை தகர்த்தவர் ஜகஜித் சிங்தான். கஜல் என்றாலே ஜக்ஜித் என்று சொல்லும் நிலையை உருவாக்கினார் அவர். கஜல் இசையை நவீனமாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. முதன்முதலில் மல்டி ட்ராக்கில் கஜலை பதிவு செய்தவர் ஜக்ஜித் சிங்தான்.

சினிமா இசையிலும் தனி முத்திரை படைத்தவர் ஜக்ஜித் சிங். பிரேம் கீத், சாத் சாத், அர்த் என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் பாடியுள்ளார்.

இவரது இசைத் துறை சாதனைக்காக மத்திய அரசு பத்மபூஷன் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஜக்ஜித் சிங்கின் மனைவி பெயர் சித்ரா சிங். இவரும் ஒரு பாடகிதான். இருவரும் இணைந்து பல அற்புதமான ஆல்பங்களைக் கொடுத்துள்ளனர்.

ஜக்ஜித் சிங்கின் ஒரே மகன் 1990-ல் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.