கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்து மார்க் போட்ட குஷ்புவை இந்த வாரம் பார்க்க முடியவில்லை. நிகழ்ச்சியின் இயக்குநர் கலா, மற்றொரு நடுவர் பிரசாந்ந் உடன் இணைந்து நடனக்கலைஞர்களுக்கு மார்க் போட்டனர்.
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்தே அதில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ மானாட மயிலாட. இதுவரை 7 சீசன்களை கடந்து 8 வது சீசன்வரை வந்துள்ளது.
கலா மாஸ்டர் இயக்கியுள்ள இந்த நடனநிகழ்ச்சியில் சின்னத்திரைக் கலைஞர்களின் நடனம்தான் முக்கிய அம்சம். இதனை திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக அமர்ந்து மதிப்பெண் போடுவார்கள். வெற்றி பெரும் நடன ஜோடிக்கு பட்டமும், பல லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலா, பிருந்தா, ரம்பா, சிம்ரன், குஷ்பு, நமீதா என பலரும் நடுவர்களாக வந்துள்ளனர். 8 வது சீசனில் நடுவராக முதன் முறையாக பிரசாந்த் வந்தார். குஷ்பு, கலா, பிரசாந்த் ஆகியோர் அமர்ந்து மதிப்பெண் போட்டு வந்த நிலையில் இந்த வாரம் குஷ்பு இடம் பெறவில்லை.
கலா மாஸ்டரும், பிரசாந்தும் மட்டுமே நடுவர்களாக இருந்தனர். அதுவும் சிறைச்சாலை செட் நடனம் என்பதால் கலா மாஸ்டர் வழக்கறிஞர் போலவும், பிரசாந்த் சிறை அதிகாரி போலவும் உடை அணிந்திருந்தனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கீர்த்தி, ரியாஸ்கான் ஆகியோர் சிறை அதிகாரி போல உடை அணிந்திருந்தனர்.
சினிமாக்களிலும் சீரியல்களிலும்தான் மது அருந்துவது, புகைப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது ரியாலிட்டி ஷோக்களிலும் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற ஆரம்பித்துவிட்டன. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கவனிக்கலாமே?