என் அம்மாவுக்கு உட்கார இடம் கொடுக்காமல் 20 நிமிடம் நிற்கவிட்டார் நடிகை ப்ரீத்தி: நெஸ் வாடியா

மும்பை: தான் நடிகையும், முன்னாள் காதலியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா மீது கோபப்பட்டதற்கான காரணத்தை தொழில் அதிபர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், அவரது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள். 5 ஆண்டுகளாக காதலர்களாக சுற்றி வந்த பிரீத்தியும், நெஸ் வாடியாவும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது நெஸ் வாடியா பார்வையாளர்கள் முன்பு தன்னை மிரட்டி, தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்ததாக ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.

என் அம்மாவுக்கு உட்கார இடம் கொடுக்காமல் 20 நிமிடம் நிற்கவிட்டார் நடிகை ப்ரீத்தி: நெஸ் வாடியா

இது குறித்து நெஸ் வாடியா கூறுகையில்,

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. நான் மே 30ம் தேதி நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வாங்கடே ஸ்டேடியத்தின் கர்வாரே பெவிலியனில் 14 சீட்கள் முன்பதிவு செய்தேன். அத்தனை சீட்கள் முன்பதிவு செய்த போதிலும் என் வயதான தாய் மவ்ரீன் வாடியா உட்கார இருக்கை இன்றி 20 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தார்.

காரணம் அந்த இருக்கைகளில் ப்ரீத்தி மற்றும் அவரது விருந்தாளிகள் அமர்ந்து கொண்டது தான். ஒரு வயதான தாயை கொஞ்சம் கூட இரக்கமின்றி நிற்க வைத்ததால் தான் ப்ரீத்தி மீது கோபம் வந்தது. ஆனால் அவரோ இதை திசை திருப்பி பாலியல் தொந்தரவு கொடுத்தேன் என்று புகார் கொடுத்துள்ளார் என்றார்.

 

நான்தான் பாலா - விமர்சனம்

Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விவேக், ஸ்வேதா, செல் முருகன், மயில்சாமி, வெங்கடராஜ், தென்னவன்

ஒளிப்பதிவு: மணவாளன்

இசை: வெங்கட் க்ருஷி

தயாரிப்பு: ஜே ஏ லாரன்ஸ்

இயக்கம்: கண்ணன்

எப்போதோ ஹீரோவாகியிருக்க வேண்டிய விவேக், இத்தனை ஆண்டுகள் கழித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா. வாழ்த்தி வரவேற்போம்!

கிட்டத்தட்ட கர்ணன் - துரியோதனன் கதைதான்.

நான்தான் பாலா - விமர்சனம்

கும்பகோணம் அக்ரஹாரத்தில் தன் வயசான பெற்றோருடன் வசிக்கும் பாலா (விவேக்) ஒரு நேர்மையான பெருமாள் கோயில் பூசாரி. வீட்டில் அம்பேத்கர் படம் மாட்டி வைத்து, கோயிலில் தட்டில் விழும் காணிக்கையைக் கூட உண்டியலில் போடச் சொல்லும் அளவுக்கு நேர்மையாளர்.

பாலாவின் தந்தையை ஒரு கொலை வழக்கில் தவறாக சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவரை வெளியில் கொண்டுவர பாலாவுக்கு யாரும் உதவாத நேரத்தில், பணம் கொடுக்கிறான் பூச்சி (வெங்கட்ராஜ்) என்ற கூலிக் கொலையாளி! இருவரும் நண்பர்களாகிறார்கள்.

கொலைப்பழி அவமானத்தில் விவேக்கின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள, யாருமற்ற நிலையில் பூச்சியைத் தேடி அவன் இருக்கும் காஞ்சிபுரம் வருகிறான் பாலா. வந்த இடத்தில் தன்னுடனே இருக்குமாறு பூச்சி கேட்டுக்கொள்ள பாலாவும் சம்மதிக்கிறான். பாலாவின் நிலையைப் பார்த்து பரிதாபம் கொள்ளும் சவுராஷ்ட்ரப் பெண் வைஷாலி (ஸ்வேதா), அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

நான்தான் பாலா - விமர்சனம்

இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பூச்சியே முடிவு செய்கிறான். அந்த நேரத்தில்தான், அவன் முன்பு கும்பகோணத்தில் செய்த ஒரு கொலை வழக்கில் அவனையும் அவனுக்கு தலைவனாக இருக்கும் தென்னவனையும் போலீஸ் தேடுகிறது. அதற்கு, பூச்சியின் நெருங்கிய நண்பன் பாலாவின் உதவியை நாடுகிறது போலீஸ்.

போலீசுக்கு பாலா உதவினானா... அந்தப் பெண்ணை மணந்தானா என்பதெல்லாம் க்ளைமாக்ஸ்.

சுவாரஸ்யமான கதைதான். ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யமாகத் தராமல், கொஞ்சம் நாடகத்தனமாக்கியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

நான்தான் பாலா - விமர்சனம்

ஹீரோவாக டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் விவேக். சிரத்தையெடுத்து நடித்திருக்கிறார் பல காட்சிகளில். எப்போதும் சிரிப்பும் ஆர்ப்பாட்டமுமாகவே பார்த்த நமக்கு, இத்தனை சீரியஸான விவேக்கைப் பார்ப்பது புதுசாகத்தான் உள்ளது. காதல் காட்சிகளிலும் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். அதற்காக காமெடியை விட்டுவிடாதீர்கள் விவேக்!

ஹீரோயினாக வரும் ஸ்வேதா கொழுக் மொழுக்கென்று தெரிகிறார். விவேக்குக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

பூச்சியாக வரும் வெங்கட்ராஜூ, கூலிக் கொலையாளி தென்னவன், லாவண்யா, சுஜாதா என எல்லோருமே தங்கள் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

நான்தான் பாலா - விமர்சனம்

செல்முருகனுக்கு இதில் தனி காமெடியனாகப் புரமோஷன்... இனி அவர் தனியாகவேகூட காமெடி செய்யலாம். அந்த அளவு சரக்கு இருக்கிறது மனிதரிடம். மயில்சாமியும் கிச்சு கிச்சு மூட்டத் தவறவில்லை.

மணவாளனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. வெங்கட் க்ருஷியின் இசையில் அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.

இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் தெரியும் தொய்வை கவனித்திருக்கலாம். எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்த இயக்குநர், அவற்றை எப்படி கச்சிதமாக வைக்க வேண்டும் என்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

விவேக், நல்ல கதைக்காக ஒருமுறை பார்க்கலாம்!

 

தமிழகத்தில் மேலும் ஒரு தொலைக்காட்சி சேனல்

தூத்துக்குடி: தமிழகத்தில் தொழில் அதிபர் வைகுண்டராஜன் விரைவில் ஒரு தொலைக்காட்சி சேனலை துவங்க உள்ளாராம்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர் வைகுண்டராஜன். இந்த மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில் உள்ளன. இருந்தாலும் வி.வி. மினரல்ஸ் தான் முதலிடம் வகிக்கின்றது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை, கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டராஜன் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்ப காலத்தில் அரிசி ஆலை, லாரிகள் வைத்து சாதாரணமாகத் தொழில் செய்து வந்தார். பின்பு கனிமவள தொழிலில் கால் பதித்தார். அதன் பின்பு தான் இந்திய பணக்காரர்களில் ஒருவர் ஆனார்.

இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வைகுண்டராஜன் மிகவும் எளிமையானவர், காலில் செருப்புக்கூட அணிய மாட்டார். அவரை அணுகி செல்பவர்களுக்கு தேவையான உதவிகளை தாராளமாக செய்வாராம்.

இப்படி பன்முகம் கொண்ட தொழில் அதிபர் வைகுண்டராஜன் முன்பு தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் பின்புலம் கொண்ட தொலைக்காட்சியின் பங்குகளை அதிக அளவில் வைத்திருந்தாராம். மேலும் அந்த தொலைக்காட்சியும், அதனை சார்ந்த அரசியல் கட்சியும் வைகுண்டராஜனுக்கு முன்னுரிமை கொடுத்ததாம்.

இந்த நிலையில் வைகுண்டராஜன் விரைவில் வி.வி. என்ற தொலைக்காட்சி சேனலை துவங்க உள்ளாராம். இதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நிகழ்ச்சிகள், தொடர்கள், செய்திகள், சமையல், கேள்வி பதில், மருத்துவம், ஆன்மீகம் என பல நிகழ்ச்சிகள் வருமாம்.

இந்த சேனல் துவங்குவதற்கான பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம். விரைவில் அரசியல் பெரும் பலம் கொண்ட ஒருவர் இந்த தொலைக்காட்சி சேனலை நல்ல நாளில் துவக்கி வைக்கப் போகின்றாராம். மேலும், இந்த தொலைக்காட்சி சேனல் தனது தொழிலுக்கும் பின்பலமாக இருக்கும் என்று வைகுண்டராஜன் நினைக்கின்றாரம்.