வைஷ்ணவி தற்கொலை வழக்கு- நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு


டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதற்காக 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இன்னொரு டிவி நடிகர் தேவ் ஆனந்த் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் துணை கேரக்டர்களில் நடித்திருந்தார். இவரும், டிவி நடிகர் தேவ் ஆனந்த்தும் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு, வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது தன்னை 2வதாக கல்யாணம் செய்து கொள்ளும்படி தேவ் ஆனந்த் தொந்தரவு செய்தார், மிரட்டினார். இதனால்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீஸில் தெரிவித்தனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக தேவ் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தேவ் ஆனந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு ரூ. 10,000 அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தேவ் ஆனந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

வேலாயுதம் வெள்ளி விழா காண மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்!


விஜய் நடித்த வேலாயுதம் வெள்ளி விழா காண அவரது ரசிகர்களும் ரசிகைகளும் நேற்று மொட்டை போட்டுக் கொண்டு வடபழனியில் ஊர்வலம் போனார்கள்.

தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம், கூடுதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருவதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றியை பார்ட்டி கொடுத்து கொண்டாடி வருகிறார் விஜய். இந்த நிலையில், அவரது ரசிகர்களோ இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாட மொட்டை போட்டு, ஊர்வலம் போகத் தொடங்கியுள்ளனர்.

சென்னை வட பழனி முருகன் கோயிலில் மொட்டை போட்டுக் கொண்ட இந்த ரசிக ரசிகைகள், அங்கிருந்து கமலா திரையரங்கம் வரை ஆட்டம் பாட்டம் என ஊர்வலமாக நடந்து வந்தனர்.

இந்த மொட்டைக்கு இன்னொரு பின்னணியும் உள்ளது. வழக்கமாக விஜய் படம் வெளியாகும் அரங்கம் கமலா. ஆனால் தீபாவளிக்கு இங்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இப்போது, வேலாயுதத்தை கூடுதலாக வெளியிட்டுள்ளது அந்த அரங்கம். அதைக் கொண்டாடவs இப்படி ஊர்வலம் போனார்களாம்!
 

'தலவலி' - அஜீத், விஜய்யை நக்கலடிக்க வரும் புதிய படம்!!


தமிழ்ப் படம்.... இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள்.

ரஜினி, கமல், அஜீத், ராமராஜன் என சகட்டுமேனிக்கு அனைவரின் படங்களையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப் படம் இது (Spoof). 2010-ம் ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தை சி எஸ் அமுதன் எடுத்திருந்தார்.

மக்கள் இந்தப் படத்தை ரசித்தாலும் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் கடுப்பிலிருந்தார்கள்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு மகா நக்கலான திரைக்கதையுடன் அடுத்த படத்தை ஆரம்பிக்கிறார் சிஎஸ் அமுதன்.

இந்தப் புதிய படத்துக்கு அவர் வைத்துள்ள பெயர் 'தலவலி'!

இந்தப் படத்தின் நாயகர்கள் அஜீத் - விஜய். அதாவது இந்த இருவரைப் போன்ற தோற்றம் உடைய இருவர் நடிக்கப் போகிறார்கள். படம் முழுக்க அஜீத் - விஜய் பற்றிய நக்கல்தான் பிரதானமாக இருக்குமாம்.

அதை சிம்பாலிக்காக சொல்வதுபோலத்தான் தலவலி என்று தலைப்பிட்டுள்ளாராம் அமுதன்.

ரசிகர்கள் தங்கள் அபிமான நாயகன் அஜீத்தை 'தல' என்றும், விஜய்யை இளைய'தளபதி' என்றும் அழைத்து மகிழ்வது தெரிந்ததுதானே!
 

காகாவை காக்க வைத்த 'ஷா கா'?


நடிகர் ஷாருக் கானை சந்திக்க பிரபல பாப் பாடகி லேடி காகா ஒரு மணி நேரம் காத்திருந்திருக்கிறார்.

முதன்முதலாக இந்தியா வந்த பிரபல பாப் பாடகி லேடி காகாவும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானும் யுடிவியின் பிந்தாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஷூட்டிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடந்தது.

லேடி காகா சொன்ன நேரத்திற்கு ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார். ஆனால் ஷாருக் கான் வழக்கம் போல தாமதாக வந்தார் அதுவும் ஒரு மணி நேரம். ஆனாலும் காகா எதுவும் சொல்லாமல் ஷாருக் கானுடன் சிரித்துப் பேசினார்.

ஷாருக்கின் மகள் சுஹானா தனது தீவிர ரசிகை என்பதால் தனது கூலிங் கிளாசை அன்பளிப்பாக கொடுத்தார் காகா. ஷாருக் லேட்டாக வந்ததால் திட்டமிடப்பட்ட நேரத்தை விட குறைவான நேரம் தான் ஷூட்டிங் நடந்தது.

அதன் பிறகு காகா ஃபார்முலா 1 பந்தயம் முடிந்ததும் நடந்த பார்ட்டியில் ஆடிப்பாட ஒத்திகை செய்ய கிளம்பிவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த எஃப் 1 பார்டிக்கும் ஷாருக் லேட்டாகத் தான் வந்தார். பார்ட்டியில் காகாவை சந்தித்த அவர் மீண்டும் அவருடன் சகஜமாகப் பேசினார்.
 

விஜய் வீட்டில் கொண்டாட்டம்... வேலாயுதம் குழுவினருக்கு விருந்து!


வேலாயுதம் படக்குழுவினருக்கு நேற்று இரவு தனது வீட்டில் விருந்து கொடுத்தார் நடிகர் விஜய்.

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்த வேலாயுதம் படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றிகரமாக ஓடுவதாக விஜய் தெரிவித்தார். கூடுதல் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாகவும், வசூல் அதிகரித்துள்ளதாகவும் இந்தப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், வேலாயுதம் பட இயக்குநர் ராஜா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட குழுவினர் மற்றும் நண்பர்களுக்கு தனது நீலாங்கரை வீட்டில் பெரும் விருந்து அளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம்ரவியும் விருந்துக்கு வந்திருந்தார்.

படத்தின் உதவி இயக்குநர்கள் அத்தனை பேருடனும் நெருக்கமாகப் பழகிய விஜய், தானே அவர்களுக்குப் பரிமாறினாராம்.
 

விதார்த் தொடங்கி வைத்த 'தொழில் நண்பன்'!


சென்னை: தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய பத்திரிகையான 'தொழில் நண்பனை' நடிகர் விதார்த், எஸ்வி சேகர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

தொழில் நண்பன் ஒரு மாதப் பத்திரிகை. முழுக்க முழுக்க தொழில் உலகம் சார்ந்த செய்திகள், தகவல்களை இது தாங்கி வருகிறது.

இந்த இதழை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை விஜய் பார்க் ஓட்டலில் வெளியிட்டனர்.

இதழின் முதல் பிரதியை தர்மா குரூப் நிறுவனங்களின் தலைவர் தர்மலிங்க முதலியார் வெளியிட்டார்.

நடிகர்கள் விதார்த், எஸ்வி சேகர், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, பத்திரிகையை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழில் நண்பன் மாத இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான வி.சிவக்குமார் பேசுகையில், "தமிழகத்தில் ஏற்கெனவே பல தொழில் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தொழில் துறைக்கு ஒரு கையேடு என்று கூறும் வகையில் தொழில் நண்பன் இருக்கும்.

எல்லாத் தொழிலுக்கும் ஏற்ற இறக்கம், லாபநட்டம் என்கிற இரு கோணங்களும் உண்டு. இந்த இருகோணங்களையும் தெளிவாக அலசும் இதழாக தொழில் நண்பன் விளங்கும்.

தொழில் செய்பவர்கள், செய்ய முனைபவர்களுக்கும் நல் ஆலோசகனாக தொழில் நண்பன் செயல்படும். இதற்காக மிகத் திறமையான ஆசிரியர் குழுவையும் தொழில் நண்பன் உருவாக்கியுள்ளது.

இன்றைய நாளில் ஒரு பத்திரிகையை புதிதாக ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது சவாலுக்குரிய விஷயம்தான். ஆனால் சூழ்நிலை புரிந்து, வாசகர்களின் தேவை அறிந்து நடத்தினார் வெற்றிகரமாக செயல்படமுடியும்," என்றார்.
 

தமிழ்ப் பட கதைகளை பிறமொழியில் திருடுகிறார்கள்! - கே எஸ் ரவிக்குமார் குற்றச்சாட்டு


தமிழ் சினிமாக்காரர்கள், பிற மொழிக் கதைகளை உல்டா செய்து படமெடுக்கிறார்கள் என்று பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழ் திரைப்படங்களின் கதைகளை மற்றவர்கள் திருடுவதாக புகார் கூறியுள்ளார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

அவர் பேசியது விளையாட வா படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.

கே.விஜயநந்தா இயக்கத்தில் விஸ்வநாத் பாலாஜி, திவ்யா பத்மினி ஜோடியாக நடிக்கும் படம் 'விளையாடவா'. கேரம் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கதை வருவது தமிழில் இதுவே முதல் முறை.

இந்தப் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்ட கே.எஸ்.ரவிக்குமார், பேசியதாவது:

கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லாத நிலைமை இப்போது உள்ளது. இப்படத்துக்கு கதை, வசனம் எழுதிய கமலேஷ்குமார் என்னுடன் பத்து வருடங்களுக்கு மேல் திரைக்கதை விவாதத்தில் பங்கேற்றவர். நிறைய கதைகளும் எழுதி உள்ளார். ஆனாலும் இன்னும் அவர் திறமைகள் வெளிப்படாமல் உள்ளது.

கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும்.

அந்த கதையை தெலுங்கில் திருடி படம் எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில் வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வருவது போல் காட்சி இருந்தது. இது 'எதிரி' படத்தின் கதை.

இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர்," என்றார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் குறிப்பிட இரண்டு படங்களுமே தனுஷ் நடித்தவை.

சமீபத்தில் வெளியான 'உத்தம புத்திரன்' படத்தில், மணமகளை மண்டபத்திலிருந்து கடத்தும் காட்சியும், பொல்லாதவன் படத்தில் பைக் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தான் கே.எஸ்.ரவிக்குமார் திருட்டு கதை என்று பேசியதாக விழாவில் சலசலப்பு எழுந்தது.

விளையாடவா பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா, திரிபுரசுந்தரி, நடிகர் பொன்வண்ணன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

ரஜினியுடன் நடிப்பேன் - அசின் அபார நம்பிக்கை


ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று சொல்லாத நடிகைகள் அநேகமாக யாருமே கிடையாது.

தன்னுடன் நடிக்க ஆரம்பித்த நயன்தாரா, ஸ்ரேயா போன்றவர்களுக்கெல்லாம் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அசினுக்கு மட்டும் அந்த வாய்ப்பு அமையவில்லை.

இதுகுறித்து அசின் கூறுகையில், "ரஜினியுடன் நடிக்க இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. அவர் திரையுலகில் ஒரு லெஜன்ட். பல்வேறு படவிழாக்களில் ரஜினியை சந்தித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறுவார். விரைவில் அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.

நிறைய சொத்து சேர்த்திருப்பதாகவும், புதிய வீடுகள் பல வாங்கியிருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த பதில், "நான் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்வதில் எனக்கு ஆர்வம் கிடையாது.

ஆனாலும் ஒரு சராசரி மனிதனுக்கு தன் பெயரில் சொத்துக்கள் வாங்கம்போது ஏற்படும் மகிழ்ச்சி எனக்கும் ஏற்படுகிறது.

சமீபத்தில் கொச்சியில் 6 பெட்ரூம் அபர்ட்மென்ட் ஒன்றை விலைக்கு வாங்கியது உண்மைதான். அங்கு ஏற்கனவே அங்கு எனக்கு இன்னொரு வீடும் இருக்கிறது. இந்த 6 பெட்ரூம் அபார்ட்மென்ட் வீடு கடற்கரை அருகில் உள்ளது. வீட்டில் இருந்து வெளியே பார்த்ததால் ரம்மியமான அழகை ரசிக்கலாம்.

எனது பெற்றோர் மும்பையில் என்னுடனேயே வசிக்கின்றனர். அவர்கள் மாதந்தோறும் கொச்சி வீட்டுக்கு சென்று வருகிறார்கள். நானும் படப்பிடிப்பில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டில் சென்று தங்கிவிடுவேன்.

சினிமாவிலும் வெளியேயும் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களையும் கொச்சியில் புதிதாக வாங்கிற அபார்ட்மென்ட் வீட்டுக்கு அழைத்து செல்ல ஆர்வமாக உள்ளது.

தமிழில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன்," என்றார்.
 

ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்


தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர்.

இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான முறையில் கழித்துவருகிறார். குடும்பத்தார் அவரை அன்பு மழையில் நனைத்து வருகின்றனர். பிரசவ தேதி நெருங்குவதால் அவர் பதற்றமாக இல்லை மாறாக சந்தோஷமாக உள்ளார் என்று அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்தார்.

ஐஸ்வர்யாவுக்கு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இன்றைக்கே குழந்தை பிறந்துவிட்டால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே பிறந்த நாளாக இருக்குமே என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.

அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு...!
 

பட்டோடியின் 10வது நவாபாக முடி சூட்டப்பட்ட சைப் அலி கான்


பாலிவுட் நடிகர் சைப் அலி கான் பட்டோடியின் 10வது நவாபாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ளது பட்டோடி கிராமம். அதன் நவாப் வம்சத்தில் வந்தவர் மன்சூர் அலிகான் பட்டோடி. இவர் 9வது பட்டோடி நவாப் ஆவார். மன்சூர் அலி கான் பட்டோடி கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகன் சைப் அலி கான் தான், பட்டோடியின் அடுத்த நவாப் என்று முடிவானது.

இந்நிலையில் நவாப் பட்டம் அளிக்கும் விழா நேற்று பட்டோடியில் உள்ள பாரம்பரிய மாளிகையான இப்ராஹிம் மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் சைப் அலி கானின் தாயார் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் சபா மற்றும் சோஹா அலி கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கலந்து கொண்டார். பின்னர் பாரம்பரிய முறைப்படி, பட்டோடி கிராமத் தலைவர்கள் சைப் அலி கானுக்கு தலைப்பாகை கட்டிவிட்டு நவாப் பட்டம் சூட்டினர்.

ஏற்கனவே, ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகித்து வரும் அவ்காப் இ ஷாஹி வக்பு அமைப்பின் காப்பாளராக சைப் அலி கானின் சகோதரி சபா அலிகான் பட்டோடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்..
 

விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!


சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பண்ணைப்புரம் தோட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா உடல் அடக்கம்


தேனி: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் இன்று அவரது பாட்டியும், இளையராஜாவின் தாயாருமான சின்னத்தாயின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், மலையாளத் திரையுலகினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று நள்ளிரவைத் தாண்டி பண்ணைப்புரத்திற்கு உடல் வந்து சேர்ந்தது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை உடல் அடக்கம் நடைபெற்றது. பண்ணைப்புரம் அருகே உள்ள லோயல் கேம்ப்பில் உள்ள தோட்டத்தில், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இளையராஜாவின் சிறு பிராயத்து நண்பரான பாரதிராஜவும் உடன் இருந்தார். இளையராஜா குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் எனபலரும் கலந்து கொண்டனர். பின்னர் ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.

இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே இருந்தார்.
 

'ப்ராப்பர்ட்டி' சேர்ப்பதில் மீரா ஜாஸ்மின் கெட்டி!


நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார்.

ரன் படம் மூலம் மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடைத்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துவிட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு சொத்து சேர்ப்பதிலும் கெட்டிக்காரியாக உள்ளார்.

சொந்தமாக தொழில் செய்தால் கூட முதலீடு போட வேண்டும் அதில் லாபம் வருமா, வராதா என்று சொல்ல முடியாது. அதனால் மீரா ஜாஸ்மின் நிலையான வருமானம் வரும் வழியைத் தேர்வு செய்துள்ளார்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பங்களாக்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். மாதம் பிறந்தால் கைநிறைய வாடகைப் பணம் வருகிறது.

பார்க்க சாதுவா இருந்தாலும் பிழைக்கத் தெரிந்தவர் தான்!
 

என் சொந்தக் கதையை படமாக்குவதில்தான் விருப்பம் அதிகம்! - இயக்குநர் சுசீந்திரன் பேட்டி


மற்றவர் எழுதித் தரும் கதைகளை விட, நானே உருவாக்கும் கதைகளைப் படமாக்குவதுதான் வசதியாக உள்ளது. அதுவே என் விருப்பமும் கூட, என்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு என்ற தனது முதல் படத்திலேயே பலரையும் புருவம் உயர்த்த வைத்தவர்.

அடுத்து நான் மகான் அல்ல படத்தில் வேறு பரிமாணம் காட்டி வியக்க வைத்தார். அழகர்சாமியின் குதிரை என்ற க்ளாஸிக் படத்தை, இளையராஜா கூட்டணியோடு தந்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

இப்போது விக்ரம் நடிக்க ராஜபாட்டை என்ற பொழுதுபோக்கு ஆக்ஷன் படத்தை உருவாக்கி வருகிறார்.

பொழுதுபோக்கு சினிமாக்களில் இன்னொரு ரசனைக்குரிய படமாக ராஜபாட்டை அமையும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சுசீந்திரன் தனது படங்கள், அடுத்து செய்யவிருக்கும் படைப்புகள், தமிழ் சினிமாவின் போக்கு குறித்த தனது பார்வைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவரது பேட்டி:

பொதுவாக இந்த இயக்குநர் இப்படித்தான் படம் இயக்குவார் என ஒரு இமேஜ் இருக்கும். ஆனால் உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் உள்ளன. நமக்கென ஒரு பாணி வேண்டும் என நினைக்கவில்லையா?

நிச்சயம் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. மணிரத்னத்தின் அஞ்சலி வேறு, தளபதி வேறு. ஷங்கர் சார் இயக்கும் படங்களும் அப்படித்தான். என் படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

என்படம் இந்த ரகம் என்ற முத்திரையை நான் விரும்பவில்லை.

புதுமுகங்களை இயக்குவது, அனுபவமிக்க நடிகர்களை இயக்குவது... எது பெஸ்ட்?

நிச்சயம் அனுபவமிக்கவர்களை இயக்குவதுதான் வசதியானது. சுலபத்தில் வேலை வாங்க முடியும். புதுமுகங்கள் என்றால், அவர்களை முதலில் இந்த கதைக்குள் கொண்டு வரவேண்டும், நிறைய முன்தயாரிப்பு ஒத்திகைகள் தேவை.

விஷ்ணு என்ற புதுமுகத்தை இயக்குவதைவிட, விக்ரமை இயக்கும் போது சிரமம் குறைவு என்பது உண்மைதானே.

அப்படியெனில், இனி வசதிக்காக அனுபவப்பட்ட பெரிய நடிகர்களைத்தான் இயக்குவீர்களா?

அது எப்படி... ஆரம்பத்தில் எல்லாருமே புதுசுதானே... போகப்போகத்தான் எல்லோரும் கற்றுக் கொள்கிறார்கள். என் ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பது என்பதில் உறுதியோடு இருக்கிறேன்.

ராஜபாட்டை எப்படி வந்திருக்கிறது?

விக்ரமின் கலர்ஃபுல் படமாக வந்துள்ளது. 14 கெட்டப்புகளில் வருகிறார். அவர் நடிப்புக்கு நல்ல தீனி. எனக்கும் பெரிய வேலைதான். பெரும்பகுதி முடிந்துவிட்டது. 4 பாடல்கள். அவற்றில் ஒன்றில் ஸ்ரேயாவும் ரீமா சென்னும் ஆடுகிறார்கள். இந்தப் பாடலை இத்தாலியிலும், ஹீரோயின் தீக்ஷாவுடன் விக்ரம் ஆடும் இன்னொரு பாடலை ஆஸ்திரியாவிலும் எடுக்கிறோம். டிசம்பரில் ராஜபாட்டை வெளியாகும்.

அடுத்த படம் பற்றி...

உங்கள் அடுத்த படம் குறித்து...

இந்தப் படத்துக்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைத்திருக்கிறோம். விஷ்ணு நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தப் படம் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ. மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. முழுக்க முழுக்க காமெடி கதை இது. நானே எழுதிய கதை. மற்ற விவரங்களை பின்னர் சொல்கிறேன். இப்போதைக்கு முழு கவனமும் ராஜபாட்டையில்தான்.

நீங்களே எழுதும் சொந்தக் கதை, அடுத்தவர் எழுதித் தரும் கதை எது உங்களுக்கு வசதியானது?

நிச்சயம் சொந்தக் கதைதான் வசதியானது. நம் கதை என்றால் அதன் முழு விவரம், எழுதப்பட்ட மனநிலை எல்லாம் நமக்குத் தெரியும். ஆழ பயணிக்கலாம். அடுத்தவர் கதையில் இந்த வசதி இல்லை. எனது முதல் இரு படங்கள் என் சொந்தக் கதை. அடுத்த இரண்டும் மற்றவர்கள் கதை. அடுத்து வீர தீர சூரன் என் கதைதான்.

உங்கள் படங்களுக்கு இசை பிரமாதமாக அமைந்துவிடுகிறது. ஆனால் குறிப்பிட்ட இசையமைப்பாளருடன் பணியாற்றுவதில்லையே ஏன்?

கதையை முதலில் இசையமைப்பாளர்களிடம் சொல்லி, அதற்குத் தேவையான இசையை கேட்டு வாங்கிக் கொள்வேன். முதல் படத்துக்குதான் வேறு ஒருவர் இசை. அடுத்தது யுவனுடன் சேர்ந்தேன். மூன்றாவது படம் இசைஞானியுடன். இப்போது மீண்டும் யுவனுடன். அடுத்த படமும் யுவன்தான்.

உங்கள் படம் எப்படி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயக்குகிறீர்கள்?

என் படம் போரடிக்கக் கூடாது. நல்ல ஜாலியாக, பொழுதுபோக்குப் படமாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு தேடி வரும் மக்களை ஏமாற்றக் கூடாது, எந்த வகையிலும்.
 

தலையில் காயம்பட்டுள்ள நடிகை மனோரமாவுக்கு இன்று ஆபரேஷன்


குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ள பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.

மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் நடிகை மனோரமா சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு குளியலறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு விட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அது உறைந்து போயிருந்தது. இதையடுத்து அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் தீர்மானித்தனர். அதன்படி இன்று அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது.

மனோரமா நல்ல சுய நினைவுடன் இருப்பதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்பி விடலாம் என்று டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் மனோரமாவின் மகன் பூபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனோரமாவை நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
 

'சென்ட்' போட்டு ஆளைத் தூக்கும் அனுஷ்கா


நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறார்.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைhdபிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும் ரொமான்டிக் மூடு வந்து, தனக்கும் நல்ல மூட் வந்து காட்சி சூப்பராக வரும் என்பது அவரது ஐடியா.

அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு செய்வதால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தனக்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமாறு கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறாராம்.

பரவாயில்லையே, 'கஷ்டப்படாமல்' நடிப்பைக் கற்று வைத்திருக்கிறாரே அனுஷ்கா...!
 

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பால் மரணம்


சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. ஜீவாவின் உடல் அவர் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

இளையராஜாவின் உயிர் நாடியாக திகழ்ந்தவர் ஜீவா. அவரது இசைப் பயணத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான பாலமாக விளங்கியவர். இளையராஜாவின் ஜீவனாக வாழ்ந்து வந்த ஜீவா, இளையராஜாவின் உற்ற துணையாக விளங்கினார் - நேற்று அவர் மறைந்து விட்டார்.

ஜீவாவுக்கு நேற்று இரவு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு இளையராஜாவின் குடும்பம் அதிர்ந்து உடைந்து போனது.

மறைந்த ஜீவாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஜீவா. அதிலும் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது முதல் கல்யாணம் தோல்வியில் முடிந்ததால் அவர் பெரும் வருத்தத்திலும், வேதனையிலும் இருந்து வந்தார். சமீபத்தில்தான் யுவனுக்கு 2வது கல்யாணம் நடந்தது. இதனால் பெரும் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தார். தான் அதிகம் பாசம் வைத்த 2வது மகனின் வாழ்க்கை பூர்த்தி ஆனதைப் பார்த்து விட்டு அவர் கண் மூடியிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

ஜீவாவின் மரணத்தின்போது இளையராஜா அருகில் இல்லை. அவர் திரைப்படப் பாடல் பதிவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். தகவல் அறிந்ததும் அவர் இன்று காலை சென்னை விரைந்து வந்தார். அவரைப் பார்த்ததும் அவரது குழந்தைகள் கதறியழுதனர்.

ஜீவாவின் மரணச் செய்தி திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜாவைப் பார்த்ததும் இளையராஜாவின் மகள் பவதாரணி கட்டிப் பிடித்து கதறி அழுதார். அவரைப் பார்த்தி பாரதிராஜாவும் கண்ணீர் விட்டு அழுதார். வீடே பெரும் சோகமாக காணப்படுகிறது.

பண்ணைப்புரம் செல்கிறது உடல்

இளையராஜா, ஜீவா ஆகியோருக்கு சொந்த ஊர் தேனிமாவட்டம் பண்ணைப்புரம் ஆகும். அங்கு ஜீவாவின் உடல் இன்று பிற்பகலுக்கு மேல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
 

தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது நேற்றோடு...


தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.

டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம்.

இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை.

இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார்.

தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.
 

இசைஞானி இளையராஜா மனைவி ஜீவா காலமானார்!

 
இசைஞானி இளையராஜாவின் மனைவி திருமதி ஜீவா இளையராஜா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இளையராஜா பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ஆனந்தக் கும்மி  உள்ளிட்ட  படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்தார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் மறைவு இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
மனைவியை இழந்து தவிக்கும் இசைஞானிக்கு நமது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.