விஜய் ஏன் இப்படி ஆகிவிட்டார்? ஆனா நல்லாருக்கு

What Happened Vijay Fans Wonder

சென்னை: இளைய தளபதி விஜய்க்கு திடீர் என்று என்ன ஆகிவிட்டது இப்படி மாறிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் வியக்கின்றனர்.

விஜய் அழகான கலர்களில் ஆடை அணிந்து நடித்து வந்தார். அவருக்கு அது அழகாகத் தான் இருந்தது. யார் ஐடியா கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை மனிதர் திடீர் என்று சிங்குச்சா, சிங்குச்சான்னு டிரஸ் போட ஆரம்பித்துவிட்டார். சிவப்பு கலர் சிங்குச்சா, மஞ்சள் கலரு சிங்குச்சான்னு அவர் அணிந்து வரும் சட்டைகளைப் பார்த்தாலே ஐயோ என்றிருக்கும்.

நல்லா இருந்த மனுஷன் ஏன் இப்படி ஆயிட்டாரு என்று பலர் கேட்டனர். அதிலும் வேட்டைக்காரன் படத்தில் பட்டுச்சேலையை கிழித்து சட்டை தைத்து போட்டிருப்பார் பார்க்கணும். அந்த படத்தைப் பார்த்தும் விஜய் முதலில் உங்கள் காஸ்ட்யூம் டிசைனரை மாற்றிவிடுங்கள் என்று சொல்லத் தோன்றியது. இந்நிலையில் நண்பன், துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார்.

விஜய் பழையபடி ஒழுங்கான கலர்களில் டிரஸ் போட்டு நடித்துள்ளார். விஜயைப் பார்த்து சிங்குச்சா டிரஸ் போட்டு சுற்றிய அவரது ரசிகர்கள் தற்போது விஜயக்கு என்ன ஆச்சு கலர்புல்லா டிரஸ் போட மாட்டேன் என்கிறார் என பேசுகிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதீர்கள் விஜய். இப்பொழுது தான் பார்க்க லட்சணமாக டிரஸ் போடுகிறீர்கள். அதையே தொடரவும்.

குறிப்பு: விஜயின் தீவிர ரசிகரான அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட்டும், மஞ்சள் நிற ஷூவும் போட்டு பார்ப்பவர்களை மிரள வைக்கிறார்.

 

தயாரிப்பாளர் ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கமல் ரசிகர்கள் மூவர் கைது!

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் கே ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கமல் ரசிகர்கள் மூவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கமல் நடித்த ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச்சில் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தனர் தங்களை கமல் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர்.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரில் கமல் ரசிகர்கள் செல்போனில் மிரட்டல் விடுப்பதாகக் கூறியிருந்தார்.

இதுபற்றி மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போனில் மிரட்டியது ஓசூரை சேர்ந்த கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஓசூர் சென்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூர்த்தி, முருகன், சூரிய பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைதான 3 பேரையும் போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அச்சுறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் ரசிகர்கள் 50 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

கோவையில் 23ம் தேதி இளையராஜா ரசிகர்களின் சங்கமம்!

Ilaiyaraaja Yahoo Group S 27th Meet

சென்னை: கோவையில் இசைஞானி இளையராஜாவின் யாஹூ குரூப் ரசிகர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது. இது 27வது ரசிகர் சந்திப்பாகும்.

இளையராஜாவுக்காகவே பிரத்யேகமாக யாஹு ரசிகர் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 26 முறை இந்த குழுமம் சார்பில் ரசிகர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. 25வது கூட்டம் சென்னையிலும், 26வது கூட்டம் சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு நடைபெற்றது. இந்தநிலையில் 2012ம் ஆண்டை வசந்தமான ஆண்டாக முடிக்கும் வகையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்களை விவாதப் பொருளாக வைத்து ஒரு கூட்டத்தை கோவையில் கூட்டியுள்ளனர்.

23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவை, வேலாண்டிப்பாளையத்தில் உள்ள ஓவியா மெட்சேப் பிரைவேட் லிமிட்டெட் என்ற இடத்தில் கூட்டம் நடைபெறும்.

விசேஷம் என்னவென்றால், இளையராஜா கோவையில் அன்றைய தினம் முகாமிடுகிறார் என்பதுதான். 23ம் தேதி மாலை இந்துஸ்தான் கலை, அறி்வியல் கல்லூரியில் இசைமாலை என்ற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளையராஜா கலந்து கொள்கிறார். மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் ஏற்பாடு செய்துள்ள விஷ்ணுபுரம் விருதுகள் -2012 நிகழ்ச்சியிலும் இளையராஜா பங்கேற்கிறார். இதையொட்டி ரசிகர்களின் சந்திப்புக்கு குழும நிர்வாகி டாக்டர் விஜய் வெங்கட்ராமன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் மையப் பொருளாக,விவாதப் பொருளாக நீதானே என் பொன் வசந்தம் படம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள்.

இதுதவிர வேறு துணைப் பொருள் குறித்து விவாதிக்க விரும்புவோர் ilaiyaraajameeting@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விருப்பத்தை ilaiyaraajameeting@gmail.com என்ற முகவரிக்கு டிசம்பர் 21ம் தேதிக்குள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்டம் நடைபெறும் இடத்தின் முகவரி

Oviya MedSafe Pvt. Ltd.,
2nd Floor, KTVR Gardens,
220-a3, Marudha Konar Road,
Velandipalayam,
Coimbatore - 641 025.
Phone: 0422-2444442.

 

டிடிஹெச் குறும்படப்போட்டி கமல் அறிவிப்பு

Dth Contest From Kamal

விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் மூலம் வெளியிட உள்ள நடிகர் கமல்ஹாசன் டிடிஹெச் பற்றிய குறும்படப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தினை தயாரித்து இயக்கி நடித்துள்ள கமல் அதை டிடிஹெச் மூலம் முதலில் வெளியிடுகிறார். இதற்கு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒருபக்கம் கேபிள்டிவியில் இலவசமாக ஒளிபரப்புவோம் என்ற அச்சுறுத்தல் வேறு எழுந்துள்ளது.

இந்த நிலையில் டிடிஹெச் பற்றி மக்களுக்கு தெரிவிக்க குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். 60 நொடி மட்டுமே ( 1 நிமிடம்) ஓடக்கூடிய அளவில் குறும்படம் ஒன்றை தயாரித்து கமல்ஹாசனுக்கு நேரடியாக அனுப்புங்கள். போட்டிக்கான கடைசித் தேதி டிசம்பர் 31. மேலும் இதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ள maiam360degree@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

 

பெங்களூர் பல்லவி தியேட்டருக்குக் 'குட்பை'.. கடைசிப் படம் நீதானே என் பொன்வசந்தம்!

Pallavi Theatre Be Demolished

பெங்களூர்: பெங்களூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பல்லவி தியேட்டர் மூடப்பட்டு விட்டது. நேற்றோடு இந்த தியேட்டர் தனது திரைச் சேவையை நிறுத்திக் கொண்டது. இனி இந்த இடத்தில் பிரமாண்டமான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படவுள்ளது. கடைசியாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான நீதானே என் பொன்வசந்தம் படத்தோடு இந்த தியேட்டர் தனது சேவையை நிறுத்தியது.

36 வருடமாக பெங்களூர் திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வந்த தியேட்டர்களில் ஒன்றுதான் பல்லவி தியேட்டர். இந்தத் தியேட்டரில் பெரும்பாலும் தமிழ்ப் படங்களே திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1976ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி இந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலைமையில் தியேட்டர் திறக்கப்பட்டது. இதுவரை இங்கு தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 400க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்களே.

நல்ல ரசனையான தியேட்டராக பல்லவி தியேட்டர் இருந்து வந்தது. சிறந்த ஆடியோ வசதி, குளிர்சாதன வசதி என நல்லதொரு தியேட்டராக இருந்து வந்தது பல்லவி.

1200 பேர் அமரும் வகையிலான இந்தத் தியேட்டரில் தமிழ்ப் படங்களே அதிகம் போடப்படுவது பலமுறை கன்னட அமைப்புகளின் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் சந்தித்துள்ளது. பலமுறை இந்தத் தியேட்டர் தாக்குதலுக்கும் உள்ளாகியது. இருந்தாலும் தொடர்ந்து இங்கு தமிழ்ப் படங்களையே அதிகம் திரையிட்டு வந்தனர் என்பது முக்கியமானது.

தற்போது இந்தத் தியேட்டரை இடித்து விட்டு அங்கு பிரமாண்டமான மருத்துவமனை ஒன்று இதே பெயரில் உருவாகவுள்ளதாம்.

 

சரித்திர படத்திற்காக வாள் சண்டை கற்கும் அனுஷ்கா

Anushka Learns Sword Fight   

சென்னை: நடிகை அனுஷ்கா தான் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி படத்திற்காக வாள் சண்டை கற்று வருகிறாராம்.

கால்ஷீட் விஷயத்தில் அனுஷ்கா ரொம்பவே கஞ்சம். யாருக்கும் ஒன்று சேர்ந்தால் போல 30 நாட்கள் கால்ஷீட் கொடுக்க மாட்டார். இந்நிலையில் தமிழ்-செலுங்கில் உருவாகும் சரித்திரப் படமான ராணி ருத்ரம்மா தேவி ஷூட்டிங்கிற்காக இந்தாங்க வச்சுக்கோங்க என்று 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ராணியாக நடிக்கும் அனுஷ்காவுக்கு கத்தி பிடிக்கும், வாள் சண்டை போடும் காட்சிகள் உள்ளன. படத்தில் அந்த காட்சிகள் தத்ரூபமாக வர அனுஷ்கா கத்தி பிடிக்கவும், வாள் சண்டை போடவும் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். குணசேகர் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசைமைக்கிறார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை பார்த்துக் கொள்கிறார்.

ராணி ருத்ரம்மா தேவி படம் தனக்கு அருந்ததியை விட பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று அனுஷ்கா நம்புகிறார்.

 

நானும் கமல் ரூட்டை பிடிக்கப் போறேன் - பாரதிராஜா

Bharathiraja Release His Movie Dth

விஸ்வரூபம் படத்தை கமல் டிடிஎச்சில் வெளியிடுவதைப் போல நானும் என் படத்தை டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப் போகிறேன் என்று பாரதி ராஜா கூறியுள்ளார்.

பழனியில் நிருபர்களைச் சந்தித்த பாரதிராஜா கூறுகையில், "நான் இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடி வீரனும் திரைப்படம் விரைவில் முடிந்துவிடும்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளேன். படத்தின் தொடக்க விழாவுக்கு கோடம்பாக்கத்தை அல்லி நகரத்துக்கு அழைத்துவந்தேன். அடுத்து ஆடியோ விழாவுக்கு அவர்களை மதுரைக்கு அழைத்து வரப்போகிறேன்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப கமல் எடுத்து வரும் முயற்சியை வரவேற்கிறேன். அவர் ரூட்டில் நானும் போகத் தயாராகிறேன்.

புதிய தொழில் நுட்பங்களுக்கு நாம் எப்போதும் வரவேற்பு அளிக்க வேண்டும், வரும் காலங்களில் எனது படங்களையும் இதுபோல் வெளியிட முயற்சி மேற்கொள்வேன்," என்றார்.

 

எதுக்கு அஜீத் இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்?

Why Should You Take Risks Ajith

சென்னை: விஷ்ணுவர்தன் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமார் காயம் அடைந்த வீடியோ நேற்று வெளியானது. அதை பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத் நடித்து வருகிறார். அதில் ஒரு சண்டைக் காட்சியில் காரின் முன்பகுதியில் நின்று சென்ற அஜீத்துக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது காலில் பலத்த அடிபட்டது. மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் படம் முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இந்த விபத்து குறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் அஜீத் ஏன்  இவ்வளவு ரிஸ்க் எட க்கிறார், டூப் போட்டுக்கலாமே என்றனர்.

ஆனால் அஜீத்தோ டூப் இன்றி தானே நடித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார். இதற்கு முன்பும் அவர் மங்காத்தா, பில்லா 1 மற்றும் 2, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். எல்லாம் இருக்கட்டும் 'தல்' முதலில் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது தானே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

அஜீத் என்னமோ தைரியமாக ரிஸ்க் எடுத்து காயமடைகிறார். ஆனால் அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் அதே படத்திற்காக இரண்டு நாட்கள் தலை கீழாகத் தொங்கி நடித்துக் கொடுத்துள்ளார். நல்ல வேளை அப்போது எந்த விபத்தும் ஏற்படவில்லை.

தல முதலில் உடம்பை பார்த்துக்கோங்க!

 

நினைத்தாலே இனிக்கும் படத்தை மீண்டும் வெளியிட முயற்சி!

Ninaithale Inikkum Be Rleased Digital

ரஜினி - கமல் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் முக்கியப் படமாகத் திகழும் நினைத்தாலே இனிக்கும் மீண்டும் வெளியாகிறது.

பழைய படங்கள் புதிய மெருகில் வெளிவந்து வெற்றி பெறுவதைப் பார்த்து, இப்போது மேலும் அதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த வரிசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வெயிடப் போகிறார்களாம். கர்ணன் படம் வெளியானபோதே இதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டனர். இப்போது அந்த வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1979-ல் வெளியான படம் இது. பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக ஹிட்டாகின.

இதற்கான பணிகள் மும்பை ஸ்டுடியோக்களில் நடந்து முடிந்துள்ளன. படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிடவிருக்கிறார்களாம்.

இந்தப் படத்தின் குழுவினரை கவுரவிக்கும் வகையில் வரும் ஜனவரி 21-ல் பெரிய விழா ஒன்றை எடுக்க உள்ளார்கள். இதில் பங்கேற்க ரஜினி, கமல், பாலச்சந்தர், எம்எஸ் விஸ்வநாதன் உள்ளிட்டோரை அழைத்துள்ளார்களாம்.