ஆம்பள படப்பிடிப்பு முடிந்தது... பொங்கலுக்கு தயார்! - விஷால்

ஆம்பள படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் பொங்கலுக்குத் தயார் என விஷால் அறிவித்துள்ளார்.

விஷால், ஹன்சிகா நடித்துள்ள புதிய படம் ஆம்பள. சுந்தர் சி இயக்கியுள்ளார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ளார் விஷால்.

ஆம்பள படப்பிடிப்பு  முடிந்தது... பொங்கலுக்கு தயார்! - விஷால்  

இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி.

படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வந்தது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது.

பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டுத்தான் தொடங்கினார் விஷால். அதன்படி படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி முடித்துள்ளார். நேற்று படப்பிடிப்பின் கடைசி நாள்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், "ஆம்பள படப்பிடிப்பு முடிந்தது. பொங்கலுக்கு படம் தயார்" என்று கூறியுள்ளார்.

 

புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி

ஹைதராபாத்: தன்னுடன் புகைப்படம் எடுக்கவும், நடனமாடவும் ஆசைபட்ட புற்று நோய் பாதித்த சிறுவனின் ஆசையை நடிகர் சிரஞ்சீவி நிறைவேற்றியுள்ளார். அந்த சிறுவனுக்கு தனது 150வது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் சிரஞ்சீவி.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்-பத்மா தம்பதி மகன் பாலு பத்து வயதாகும் இந்த சிறுவன், புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி

மரணத்தின் வாசலில் இருக்கும் அந்த சிறுவனுக்கு தனது அபிமான நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்பது ஆசை. தனது ஆசையை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறான் இந்த சிறுவன்.

இதை அறிந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, சிறுவன் பாலு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேற்று வந்து சந்தித்தார்.

சிறுவன் பாலுவுக்கு பழங்கள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்த சிரஞ்சீவி, ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட கயிறை அவன் கையில் கட்டி விரைவில் பூரண குணம் அடைந்து வீடுதிரும்புவாய் என்று ஆசி வழங்கினார்.

சிரஞ்சீவியை நேரில் பார்த்த சிறுவன் பாலு, மகிழ்ச்சியில் அவருடன் ஆடிப்பாட விரும்புவதாக கூறினான். இதை கேட்ட சிரஞ்சீவி, தனது 150வது படத்தில் அவனுக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

இதை கேட்டு பாலு மகிழ்ச்சி அடைந்தான்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, சிறுவன் பாலு பூரண குணமடைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு பிரபலங்கள் பலர் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி

மும்பை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் பிணையாக கொடுத்திருந்த ரூ. 22 கோடி சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது. வங்கியின் அனுமதி இல்லாமல் அந்தச் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்து அவரது இளைய மகள் சௌந்தர்யா மோஷன் கேப்சர் முறையில் இயக்கிய அனிமேஷன் படம் கோச்சடையான். இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படம் தொடர்பாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி தனக்கு சொந்தமான சொத்தை பிணையாக கொடுத்திருந்தார்.

கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி

இந்த நிலையில், மும்பையில் உள்ள ரூ. 22 கோடி மதிப்புள்ள இந்த சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியதாக பத்திரிக்கை மூலம் அறிவித்துள்ளது. அதில், வங்கிக்கு தெரியாமல் இந்த சொத்தை யாரும் வாங்கவோ , விற்கவோ கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் இயக்குநர் முரளி மனோகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான்கு நாட்களுக்குள் கடன் தொகைக்கு ஈடான வங்கி உத்தரவாதம் அளிக்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.

 

அலை நடிகையின் எதிர்பார்ப்பு பலிக்குமா?

சகோதரி புண்ணியத்தால் சினிமாவிற்கு வந்த அந்த நடிகை ஒரு காலத்தில் ஓகோ என்று நடித்தார். ரசிகர்கள் கூட்டம் அவரை மொய்த்தது. உச்ச நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் நடித்தார்.

அதே சூட்டோடு சூட்டாக திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆனார். பத்து, பதினைந்து ஆண்டுகள் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று தெரியாமலேயே இருந்த அந்த நடிகையின் மகள் ஒருநாள் நடிக்க வந்தார். முதல் படம் வெற்றி பெற்றது. அடுத்தடுத்த படங்களில் ஜொலிக்கவில்லை நடிகை.

அவருக்கு துணையாக வந்த நடிகை டிவி நிகழ்க்சிகளில் தலைகாட்டினார். அவரின் அடுத்த மகளும் மணியான படத்தில் நடிக்க வந்தார். ஆனால் முதல் படவே ஊத்தி மூடியது. மனதைரியத்துடன் அடுத்த படத்தில் நடிக்க வைத்தார் நடிகை. அது சுத்தமாக சங்கு ஊதியது.

ஆனாலும் டிவி நிகழ்ச்சிகளில் ஆடி உற்சாகமூட்டினார் நடிகை. இரண்டு மகள்களையும் சினிமாவில் கரை சேர்க்காமல் ஓயப்போவதில்லை என்று காத்திருக்கிறார். அலையின் ஆசை நிறைவேறுமா காலம்தான் பதில் சொல்லும்.

 

நஸ்ரியா கணவர் பகத் பாஸில் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்

திருவனந்தபுரம்: அட்வான்ஸ் வாங்கிய பிறகு படத்தில் நடிக்க மறுப்பதாக நடிகர் பகத் பாஸில் மீது பிரபல தயாரிப்பாளர் மணி புகார் கொடுத்துள்ளார்.

பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில்தான் சக நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்தார்.

நஸ்ரியா கணவர் பகத் பாஸில் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்

இப்போது பகத்பாசில் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் பிரபல தயாரிப்பாளர் எம்.மணி புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில், "பகத் பாசிலை எனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். அந்த படத்துக்கு ஐயர் இன் பாகிஸ்தான் என பெயரிடப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக பகத் பாசிலுக்கு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக கொடுத்தேன். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து பகத்பாசில் திடீரென விலகிவிட்டார். கதை எனக்கு பிடிக்கவில்லை எனவே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் இன்று இந்தியில் வெளியாகிறது லிங்கா

ரஜினிகாந்தின் லிங்கா படத்தை இன்று இந்தியில் வெளியிடுகிறது ஈராஸ் நிறுவனம். ஆனால் பெரிய விளம்பரங்கள், புரமோஷனல் நிகழ்ச்சிகள் இல்லாமல் இந்தப் படம் வெளியாகிறது.

லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் தமிழ், தெலுங்கில் மட்டுமே அன்றைக்கு வெளியிட்டனர். இந்தி வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் இன்று இந்தியில் வெளியாகிறது லிங்கா

இன்று இந்திப் பதிப்பு வெளியாகிறது. ஆனால் இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் எதுவுமே இல்லை. இந்திப் பதிப்புக்கு இசை வெளியீட்டு விழா கூட நடத்தப்படவில்லை. ஏஆர் ரஹ்மான் இசையமைத்தும் கூட இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கில் மூன்று மணி நேரம் ஓடிய இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவான படமாக ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. பாடல்கள் குறைக்கப்பட்டு, தேவையற்ற பல காட்சிகள் தூக்கப்பட்டுள்ளன.

இந்தியின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவும், தென் இந்தியாவின் முன்னணி நடிகை அனுஷ்காவும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

மும்பையில் மட்டும் 65 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

 

பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் குவிக்கிறது ஆமீர்கானின் பிகே.. ஒரு வாரத்தில் ரூ 150 கோடி!

ஆமீர்கானின் பிகே படம் வட இந்தியாவில் தொடர்ந்து நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

ஒரு வாரத்தில் மொத்தம் ரூ 150 கோடியை இந்தப் படம் குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான் நடித்த இந்திப் படம் பிகே. கடந்த வாரம் வெளியான இந்தப் படம் உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது.

பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் குவிக்கிறது ஆமீர்கானின் பிகே.. ஒரு வாரத்தில் ரூ 150 கோடி!

இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் ரூ 100 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. ரூ 94 கோடியை வசூலித்தது. ஆனால் அதற்கடுத்து வந்த நாட்களில் வசூல் ஸ்டெடியாக இருந்ததால், முதல் வாரத்தில் ரூ 150 கோடியைக் குவித்துள்ளது பிகே.

பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் குவிக்கிறது ஆமீர்கானின் பிகே.. ஒரு வாரத்தில் ரூ 150 கோடி!

வெளியான முதல் நாளில் ரூ 26.63 கோடியை வசூலித்த பிகே, இரண்டாம் நாளில் ரூ 30.34 கோடியை ஈட்டியது. அடுத்த நாளில் ரூ 38.44 கோடியைக் குவித்து சாதனைப் படைத்தது. முதல் ஞாயிற்றுக்கிழமையில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றது.

நான்காம் நாளில் ரூ நூறு கோடியைத் தாண்டியது. வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் இந்தப் படம் ரூ 150 கோடியைத் தொட்டிப்பதாகவும், இன்றும் வசூல் நிலையாக உள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மீகாமன் விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஆர்யா, ஹன்சிகா, அஷுதோஷ் ராணா, அனுபமா குமார், ரமணா

இசை: எஸ் எஸ் தமன்

ஒளிப்பதிவு: சதீஷ்குமார்

தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்

இயக்கம்: மகிழ் திருமேனி

போதைக் கும்பல், தாதாக்கள், போலீசாரின் மறைந்து தாக்கும் உத்தி, கொஞ்சம் காதல் என முழு ஆக்ஷன் படத்துக்குரிய அம்சங்களோடு வந்திருக்கிறது மீகாமன்.

கோவாவில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் பெரிய தாதாவான, ஆனால் வெளியுலகுக்கு யாரென்றே தெரிந்திராத ராணாவைப் பிடிக்க போலீசார் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி தாதாவின் கோஷ்டியில் ஒருவராகப் போய்ச் சேருகிறார் ஆர்யா.

ராணாவை வெளியில் கொண்டு வருவதற்காக ஆயிரம் கிலோ கொக்கைன் டீல் என்ற தூண்டிலைப் போடுகிறார் ஆர்யா. அதில் ராணா சிக்கினானா... என்பது க்ளைமாக்ஸ்.

மீகாமன் விமர்சனம்  

கொஞ்சம் போக்கிரி, க்ளைமாக்ஸில் கொஞ்சம் துப்பாக்கியின் சாயல் இருந்தாலும், இந்தப் படத்தை ரொம்ப ஸ்டைலிஷாகத் தந்திருக்கிறார் மகிழ் திருமேனி.

காட்சிகளைப் படமாக்கிய விதம் லாஜிக்கை மறக்கடித்து, நம்பகத் தன்மையைத் தருகிறது. ஆனால் கதையின் போக்கு பிடிபட்டதுமே, இந்தப் படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை யூகிக்க முடிவது, இதுபோன்ற கதைகளுக்கென்றே இருக்கும் மைனஸ்.

மீகாமன் விமர்சனம்

ஆர்யாவுக்கு இதில் அண்டர்கவர் ஆபரேஷன் போலீஸ் அதிகாரி வேடம். உணர்ச்சிகளைக் காட்டி பெரிதாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கச்சிதமாக நடித்திருக்கிறார். அந்த க்ளைமாக்ஸ் சண்டையை லாஜிக்கை மறந்து ரசிக்க வைக்கிறார். ஹன்சிகாவுடன் ரொமான்ஸ் செய்ய அவருக்குக் கிடைக்கிற நேரம் ஐந்து நிமிடம் என்றாலும், ஏகத்துக்கும் நெருக்கம் காட்டியிருக்கிறார்.

நாயகி ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் வேடம். புத்திசாலி ஆக்ஷன் ஹீரோக்களுக்கு லூசுப் பெண்கள்தான் பிடிக்கும் போலிருக்கிறது. நல்ல தாராளம் காட்டியிருக்கிறார் அந்த ஒரு பாடல் காட்சியில். ரொம்ப க்ளோசப்பில் மேக்கப் மிரட்டுகிறது!

மீகாமன் விமர்சனம்

தாதா ஜோதியாக வரும் அசுதோஷ் ராணா அலட்டாமல் மிரட்டுகிறார். ஆனால் அவரது வசன உச்சரிப்பு அநியாயத்துக்கு ஸ்லோமோஷன். அது அவர் வரும் காட்சிகளை ரொம்பவே ஜவ்வாக்குவது போலாகிவிடுகிறது.

ரமணாவுக்கு சின்ன வேடம். நன்றாக நடித்திருக்கிறார். ஆசிஷ் வித்யார்த்தி, அனுபமா குமார், அவினாஷ், மகாதேவன், உத்தமன், மகா காந்தி என பலரும் ஏற்ற வேடத்தை பக்காவாகச் செய்துள்ளனர். இந்த துணைப் பாத்திரங்களை இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதத்தால், ஒரு நிஜமான அன்டர்கவர் ஆபரேஷனை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

மீகாமன் விமர்சனம்

அநாவசியமான பாடல் காட்சிகள் இல்லாதது படத்துக்கு இன்னொரு ப்ளஸ். தமனின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு துணையாக நிற்கிறது.

இந்த மாதிரி படங்களுக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியம். அதை உணர்ந்து படம்பிடித்திருக்கிறார் சதீஷ்குமார்.

மீகாமன் என்ற தலைப்பு காரணமாக, வேறு ஒரு எதிர்ப்பார்ப்புடன் படத்துக்கு சென்றால், பழகிப் போன தாதா - போதைப் பொருள் கடத்தல் கதையைக் காட்டியதுதான் மகிழ் திருமேனி தந்த ஏமாற்றம். ஆனால் கையிலெடுத்த கதையை விறு விறுப்பாகச் சொல்லியிருப்பதால், அலுப்பின்றி பார்க்க முடிகிறது. குறிப்பாக படத்தை அவர் முடித்த ஸ்டைல் ரசிக்க வைக்கிறது.

 

சன்னி லியோனுக்கு கணவர் கொடுத்த கிருஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா?

கவர்ச்சியினாலும் அழகினாலும், பல இளைஞர்களின் மனதை கட்டிப்போட்ட பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு அவரது கணவர் சாண்டா டேனியல் வெப்பர் அழகான கார் ஒன்றினை கிருஸ்துமஸ் பரிசாக அளித்திருக்கிறாராம்.

இதனை பெருமிதத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற அந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்த கணவருக்கு நன்றி கூறியுள்ள லியோன், கிருஸ்துமஸ் நாளில் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்.

பாலிவுட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் அறிமுகமானவர் சன்னிலியோன். கனடாவில் போர்ன் படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகமே அரவணைத்துக் கொண்டது.

சன்னி லியோனுக்கு கணவர் கொடுத்த கிருஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா?  

கோலிவுட்டிலும் வடகறி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார் சன்னிலியோன். 2014ஆம் ஆண்டில் இணையத்தில் பிரதமர் மோடியை விட அதிகம் தேடப்பட்ட நபராக புகழ் பெற்றுள்ள சன்னிலியோனை அவரது கணவர் அடிக்கடி கார் பரிசளித்து திக்கு முக்காடச் செய்கிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டே டேனியல் வெப்பர் என்பவருடன் சன்னிலியோனுக்கு திருமணமாகிவிட்டது. பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெசார்டி காரை பரிசளித்தார். கருப்பு நிறமுள்ள அழகான ஆடம்பரமான அந்த காரை பார்த்து அசந்து போனாராம். இப்போது கிருஸ்துமஸ் பரிசாக வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்துள்ளார் சன்னியின் கணவர் டேனியல்.

கிடைச்சா சன்னிலியோனுக்கு கிடைச்ச மாதிரி கணவர் கிடைக்கணும் என்று பொறாமைபடுகின்றனர் பாலிவுட் உலகில்.

 

கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!

திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்பட்ட கே பாலச்சந்தரின் உடலுக்கு திரையுலகமே ஒட்டு மொத்தமாகத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஆனால் இந்த நிகழ்வுக்கு நடிகர் அஜீத் வராதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார் என இன்றைய, நேற்றைய தலைமுறை கலைஞர்கள் அத்தனை பேரும் பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்தினர். மின் மயானத்துக்கும் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான அஜீத் இந்த நிகழ்வு எதிலுமே கலந்து கொள்ளவில்லை.

கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!

பொதுவாகவே அஜீத் தனது படங்களின் நிகழ்ச்சிகள், திரையுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதை ஒரு கொள்கையாகவும் வைத்திருக்கிறார்.

அதே நேரம் ஒரு சாமானிய ரசிகன் வீட்டுத் துயரம், நிகழ்ச்சி என்றாலும் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய் நிற்பது அவரது வழக்கம்.

கே பாலச்சந்தர் நிகழ்வுக்கு அஜீத் வரமுடியாமல் போனதன் காரணம் தெரியவில்லை. அதே நேரம் இதுபற்றி திரையுலகம் பேசுவதையும் வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

 

மாஸ் படத்தில் வித்தியாச நயன்தாரா... புகழும் சூர்யா

மாஸ் படத்தில் தன் நாயகியான நயன்தாராவை வாயாரப் புகழ்கிறார் நடிகர் சூர்யா.

ஆதவன் படத்துக்குப் பிறகு, சூர்யாவும் நயன்தாராவும் இணைந்துள்ள படம் மாஸ். வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

மாஸ் படத்தில் வித்தியாச நயன்தாரா... புகழும் சூர்யா

படத்தில் தன்னுடன் நடிக்கும் நயன்தாராவின் நடிப்புத் திறமையை வெகுவாக மெச்சியுள்ளார் சூர்யா.

சமீபத்தில் நடந்த நண்பேன்டா பட விழாவில் அவர் நயன்தாரா பற்றி கூறுகையில், "மாஸ் படத்தில் வித்தியாசமான நயன்தாராவைப் பார்க்கலாம். இதற்கு முன் ஆதவனின் என்னுடன் நடித்தபோது இருந்த நயன்தாராவை விட இன்னும் எனர்ஜியுடன் அவர் நடித்துள்ளார். அவரது முற்றுலும் மாறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்," என்றார்.

நயன்தாரா அடுத்து கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.