கோலிவுட்டில் பாஸ்.. ஆனாலும் பரீட்சைக்குப் படிக்கும் லட்சுமி மேனன்!

Lakshmi Menon Prepares Exam

ஆரம்பமே அதிரடி வெற்றி எனும் அளவுக்கு சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி எனும் இரண்டு அசத்தலான வெற்றிகளோடு வந்திருக்கும் லட்சுமி மேனன், அடுத்த 6 மாதங்களுக்கு யாருக்கும் கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.

காரணம்....

பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதுதான். சென்னையில் இருந்தால் படிக்க முடியாது என்பதாலோ என்னமோ... சொந்த ஊரான கொச்சிக்கே போய்விட்டாராம்.

பிப்ரவரி இறுதியில் பரீட்சை. இந்தத் தேர்வுக்குப் பிறகுதான் படங்களில் நடிப்பே என்று கூறிவிட்டதால், சற்குணம் உள்ள இயக்குநர்கள் லட்சுமி மேனனின் பரீட்சை முடிய காத்திருக்கிறார்களாம்.

'என்னதான் நடித்து லட்ச லட்சமாக சம்பாதித்தாலும், படிப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது. அதனால் படிப்புதான் முதலில்... சினிமா அப்புறம்,' என்று தெளிவாகக் கூறிவிட்டாராம் லட்சுமி.

பரவால்லயே... பெயரில் லட்சுமியாக இருந்தாலும் குணத்தில் சரஸ்வதியாக இருக்காரே!

 

வெறிச்சோடிய திரையரங்குகள்... விரட்டப்பட்ட கடல்!

Manirathnam S Kadal Is Now Running

மோசமான கதை, உணர்வற்ற படமாக்கம், பொருத்தமற்ற நடிகர்கள், செயற்கையான வசன உச்சரிப்பு போன்ற சொதப்பல்களால் படுதோல்வியைத் தழுவிய மணிரத்னத்தின் கடல் படம் கிட்டத்தட்ட வெளியான அனைத்து அரங்குகளிலுமிருந்து ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற சில நகரங்களில் மட்டும் பெயருக்கு சில அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவு பார்வையாளர்களே வந்திருந்தனர்.

சில தியேட்டர்களில் காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளை ரத்து செய்யும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், மறுநாள் வேறு படங்களை திரையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விநியோகஸ்தர்கள் மத்தியில் மணிரத்னம் மீது கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டுள்ளது.

'பணம் தருவேன்.. தரமாட்டேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, படத்தை உருவாக்கியது மட்டும்தான் நான்... மற்ற எதுவும் எனக்குத் தெரியாது. அதையெல்லாம் ஜெமினி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு படத்தை நான் விற்றுவிட்டேன்', என்று கூறியிருப்பதால், அடுத்து அவரோ அவரது மனைவியோ தொடர்புடைய எந்தப் படத்தையும் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளனர்.

அடுத்த சில தினங்களில் மணிரத்னத்துக்கு கடல் தொடர்பாக மேலும் நெருக்கடி உருவாகும சூழல் ஏற்பட்டுள்ளது.

 

பாரதிராஜா தலைமையில் ராஜ் டிவியின் 'முதல் மூவர்' விருது

சென்னை: சிறந்த புதுமுக திரை கலைஞர்களுக்கான முதல் மூவர் விருது வழங்கும் விழா வரும் 23ம் தேதி சென்னையில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடைபெறுகிறது.

திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை தேர்வு செய்து ராஜ் டிவி முதல் மூவர் என்ற விருதை வழங்கவிருக்கிறது. இந்த ஆண்டு துவங்கப்பட்டுள்ள இந்த புதிய விருது இனி ஆண்டுதோறும் வழங்கப்படும். 2012ம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்த கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகைகள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், சிறந்த தயாரிப்பு நிறுவனங்கள் என மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 6 பேரை தேர்வு செய்து அதில் முதல் மூவரை ரசிகர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு முழுக்க வாக்கு சேகரிக்கும் பிரச்சார வேன் செல்ல உள்ளது. இந்த வாகனத்தில் வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். ரசிகர்கள் அதிகமாக வாக்களிக்கும் கலைஞர்களின் பெயர்களும் தேர்வுக் குழு தேர்வு செய்யும் பெயர்களும் ஒத்துப் போனால் முதல் மூவரில் முதலமாவருக்கு ரூ. 1 லட்சம், இரண்டாமவருக்கு ரூ.50,000 மற்றும் மூன்றாமவருக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர் பார்த்திபன், தம்பி ராமையா, சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்வுக் குழுத் தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 23ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதல் மூவர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

 

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு போகிறது பாலாவின் பரதேசி!

Paradesi Be Screened Cannes   

பாலாவின் பெருமைக்குரிய படமாக வரும் பரதேசி, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போகிறது.

இந்தப் படத்தை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுவதாக முதலில் கூறியிருந்தனர். பின்னர் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போடப்பட்டது.

ஆனால் இப்போது பரதேசி படம் கேன்ஸ் விழாவுக்கு அனுப்பபடுகிறது. இதனால் படம் வெளியாகும் தேதி குறித்து பாலா எதையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இந்தப் படத்தை கேன்ஸில் பிரிமியர் காட்சியாக திரையிட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் அதர்வா நாயகனாகவும், வேதிகா - தன்ஷிகா நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

பாலை படங்களிலேயே 90 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது என்ற பெருமை பரதேசிக்கு உண்டு.

 

ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டதா விஸ்வரூபம் வசூல்?

Is Viswaroopam Crosses Rs 100 Cr Bo

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் ரூ 100 கோடியைத் தாண்டி வசூலித்துவிட்டதாக சிலர் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால் இதனை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

முஸ்லிம்கள் எதிர்ப்பு, பல்வேறு தடைகள், பிரச்சினைகள் காரணமாக விஸ்வரூபம் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டும் வெளியானது. வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்கள் சிலவற்றிலும் மட்டும் தமிழில் வெளியானது.

இதில் வெளிநாடுகளில் இதுவரை கமல் படம் எதுவும் வசூலிக்காத அளவுக்கு நல்ல வசூல் பார்த்துள்ளது விஸ்வரூபம். பிரிட்டனில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியில் இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிக் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை ரூ 11 கோடியை இந்தியில் வசூலித்துள்ளது விஸ்வரூபம். இது பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் படு சுமாரான தொகைதான். ஆனால் கமல் பட வரலாற்றில் அதிகபட்ச கலெக்ஷன் எனலாம்.

தடைகளைக் கடந்து தமிழகத்தில் வெளியான விஸ்வரூபத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நகரப் பகுதிகளில் நல்ல கூட்டம். கிராமம் சார்ந்த திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தின் வசூல் ரூ 120 கோடியைத் தாண்டிவிட்டதாக சிலரும், ரூ 100 கோடியை எட்டிவிட்டதாக சிலரும் செய்தி பரப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக கமல் சமீபத்தில் பேசுகையில், "விஸ்வரூபம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் இன்னும் சில தினங்கள் போன பிறகுதான், நான் என்னுடைய ரூ 100 கோடியை எடுக்க முடியும் என நினைக்கிறேன்," என்றார்.

 

மதுபாலா… பாலிமர் டிவியில் புதிய தொடர்…

Polimer Tv New Serial Madhubala

சினிமா படப்பிடிப்புத் தளத்தில் பிறக்கும் ஒரு பெண்ணின் கதையை மையப்படுத்தி உருவான தொடர் பாலிமர் டிவியில் பிப்ரவரி 18 முதல் தொடங்க உள்ளது.

இன்றைய சினிமா நூற்றாண்டுகால வரலாற்றினை உடையது. இதனை நினைவு கூறும் விதமாக கலர்ஸ் டிவியில் மதுபாலா என்ற டிவி தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மக்களின் அதிக வரவேற்பினை பெற்ற இந்த தொடர் பாலிமர் டிவி மூலம் தமிழ் பேச வருகிறது.

சினிமா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த அழகான குழந்தை மதுபாலா. அவள் வளர வளர சினிமா பற்றி ஒரு அச்சம்தான் உருவாகிறது. அவளது கனவுகள் வேறு. கவர்ச்சிகரமான திரை உலகில் இருக்க அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அங்குதான் இருந்தாகவேண்டும் என்ற நிர்பந்தம்.

மதுபாலாவிற்கு ஒவ்வொன்றுமே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் திரை உலகம் அவளை ஆச்சரியமாக பார்க்கிறது. நடுத்தர வர்க்க பெண்ணின் ஆசைகளை - மதிப்பீடுகளை சினிமா படப்பிடிப்புத் தள பின்னணியில் விளக்குகிறது மதுபாலா கதை.

பாலிமர் தொலைக்காட்சியில் பிப்ரவரி 18 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 மணிக்கு மதுபாலா தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

 

ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா?... நீயா நானாவில் கேள்வி

Vijay Tv Neeya Naana College Students Vs Social Worker

இட ஒதுக்கீடு கொடுப்பதனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர்தான் மேலே வருகின்றனர். மற்றவர்கள் எல்லாம் கீழான நிலைக்கு செல்கின்றனர் என்பது இட ஒதுக்கீடு பற்றி இன்றைய இளைய சமூகத்தினரின் பார்வையாக இருக்கிறது.

இன்றைய இளைய சமூதாயத்தினருக்கும், சமூகம், அரசியல் குறித்த விழிப்புணர்வும், சமூகம் பற்றிய பார்வையும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பற்றி இந்த வார நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் ஒரு பக்கமும். மற்றொரு பக்கம், சமூக ஊடக அரசியல் களப்பணியாளர்களும் பேசினர்.

காலம் காலமாக பொருளாதார நிலையில் தாழ்ந்து உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிறைய மாணவர்களுக்கு புரிதல் இல்லை. இட ஒதுக்கீடு தேவையில்லை என்பது போலவே பேசினார்கள்.

அதுபோலத்தான் கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாகத்தான் மாணவர்கள் வாக்களித்தனர்.

அதுபோல மீனவர்கள் பிரச்சினைப் பற்றியோ, இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி மாணவர்களுக்கு தெரிவதில்லை. இன்றைய கல்வி அமைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெளிவாக புரியவைத்தது இளைய தலைமுறையினரின் பேச்சு.

அடக்கப்பட்ட தலைமுறைகள் மேலெழுந்து வரவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. எல்லா சமூகமும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களை கைதூக்கி விடுவதில் தவறேதும் இல்லை என்றனர் களப்பணியாளர்கள்.

ஆனால் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தவர்கள் ஒருவித குற்றஉணர்வுடன் பேசினார்கள். தனக்கான உரிமை என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் குற்ற உணர்வோட வாழ்கின்றனர் இது புரிதல் இல்லாத காரணமாக இருக்கலாம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.

எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு இட ஒதுக்கீடு என்பது இன்றைய மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் வரலாறு மாணவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை என்று கூறிய சமூக ஆர்வலர்கள், இன்றைக்கு சென்சிடிவ் பிரச்சினை என்பதை விட சென்சேசனல் பிரச்சினைக்களின் பின்னால் போகின்றனர் என்ற ஊடகவியாலாளர்கள், இட ஒதுக்கீடு என்பது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த போராட்டம் என்று கூறினர்.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணம் இன்றைக்கு எழுகிறது. இதன் காரணமாக நகரங்களில் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. பெரு நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை. இது அநேகம் பேருக்கு தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். இடஒதுக்கீடு பிரச்சினையும், இஸ்லாமியர் பிரச்சினையும் நிறைய பேருக்கு புரிதல் இன்றி இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்னென்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லஞ்சம், பாலியல் பிரச்சினை என்பது பற்றி பேசிய சமூகம் மதுக்கடைகளைப் பற்றி ஒருவர் கூட கூறவில்லை. இது சகஜம் என்பது போல இன்றைய இளையதலைமுறையினர் எடுத்துக்கொண்டு விட்டதுதான்.

மீனவர் பிரச்சினைப் பற்றி ஒரு பார்வை இல்லை, புரிதல் இல்லை. மீன் வாங்குறோம் சாப்பிடுறோம் அவ்வளவுதான் என்பது போல பேசினார் ஒரு மாணவி.

கூடங்குளம் பற்றி சரியான புரிதலே இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே இல்லை. மது ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினை என்பது பற்றி ஒரு மாணவர்கூட தெரியவில்லை.

இதைப்பற்றி யாருமே தெரிவிக்கவில்லை. ஈவ் டீசிங், சட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு மதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று கூறினார் ஒரு சமூக ஆர்வலர்.

இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைவரின் நலனுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எதையும் சுயநலத்தோடு யோசிக்காமல் சமூக உணர்வோடு யோசிக்கவேண்டும் என்றார் பாலை செந்தமிழன்.

தமிழ்நாட்டில் தமிழ் பேப்பர் படிப்பதில்லை, தமிழ் வார இதழ்கள் படிப்பதில்லை. அதே சமயம் ஃபேஸ்புக், டுவிட்டரில் பொழுது போக்காக கமெண்ட் செய்வதில் ஆர்வம் காட்டுவது ஏன் கோபத்தோடு கேட்டார் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத். தமிழ்பேப்பர்களில் சமூக பிரச்சினைகள் எதுவும் போடப்படுவதில்லை, தமிழ் பேப்பர் படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கின்றனர் என்று என்ற கருத்துக்களை முன்வைத்தனர் மாணவர்கள்.

அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு வார்த்தையில் கமெண்ட் செய்த மாணவர்கள், அரசியல் நிலைப் பற்றி குறைவாகவே கூறினார்கள். நிறைய பேருக்கு அரசியல் பற்றி ஆர்வம் இல்லை.

இதற்குக் காரணம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் குறைவாக இருப்பதனால்தான் அவர்களின் கருத்துக்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேர்வதில்லை. மாணவர்களை நேரடியாக சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கவேண்டும் என்றார் செந்தமிழன்.

இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறையும், பிரச்சினையின் மீது கோபமும் இருப்பதில்லை. பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். கோபமான இளைஞனை விட மொக்கையான இளைஞர்களைத்தான் கார்ப்பரேட் உலகம் தேடுகிறது. எனவே குழந்தைப் பருவத்தில் இருந்தே எந்த பிரச்சினையிலும் தலையிடாதே என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர்.

இன்றைய கல்வி முறையும் இப்படித்தான் இருக்கிறது. எனவே இளைய தலைமுறையினரையேயான மாற்றம் மெதுவாகத்தான் நிகழும் என்றனர் சமூக ஆர்வலர்கள். பாடப்புத்தகங்கள் தவிர என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்பதையும் பரிந்துரைத்தனர்.

இன்றைய தலைமுறையினர் நம் சமூகத்தில் இன்னும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நியூட்ரினோ தொடர்பான ஆய்வு நடக்கும் தேனி மாவட்டத்தில் சென்று ஆய்வு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் கழிப்பறை இல்லாமல் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு சென்று வரவேண்டும். தீண்டாமை பற்றி தெரிவதில்லை. அதே போல் குறைந்த பட்சம் அருகில் உள்ள குடிசைகளைப் பற்றி பார்க்கவேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கவேண்டும் என்றனர்.

எதுபற்றிமே ஒருவித தெளிவற்ற பார்வை இருக்கிறது. இதற்கு காரணம் களப்பணியாளர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். எனவே இந்த இடைவெளி குறைய வேண்டும் என்றார் கோபிநாத்.

 

வட இந்தியாவிலும் வெளியாகிறது பாலாவின் பரதேசி!

Paradesi Be Released North India Anurag Kashyap   

சென்னை: பாலாவின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பரதேசி படத்தில் வட இந்தியாவில் வெளியிடும் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பெற்றுள்ளார்.

பாலாவின் படங்களுக்கு பெரிய விசிறி இந்த அனுராக் காஷ்யப். பாலாவின் நான் கடவுளைப் பார்த்து, பிரமித்துப் பாராட்டினார். பாலாவின் படங்களை இந்தியில் ரீமேக் செய்தால், சினிமாவுக்கு வேறு பரிமாணம் கிடைக்கும் என்றவர் அனுராக்.

இவர் 'பிளேக் பிரைடே','தேவ் டி' போன்ற படங்களை இயக்கி, முன்னணி இயக்குநராகத் திகழ்பவர்.

சமீபத்தில் பரதேசி படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, பாலாவின் பெஸ்ட் படம் இதுதான் என்று பாராட்டியிருந்தார் அனுராக்.

இப்போது அந்தப் படத்தை தனது பான்டம் மூவீஸ் சார்பில் இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டில்களோடு வட இந்தியா முழுவதும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

"ஒரு சிறந்த படைப்பை மொழிகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் ரசித்துப் பாராட்ட வேண்டும். பாலா மாதிரி கலைஞர்களுக்கு அதுதான் சிறந்த மரியாதை," என்று கூறியுள்ளார் அனுராக் காஷ்யப்.